தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள்

129 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 1, 2022, 3:51:48 PM8/1/22
to மின்தமிழ்
Xavier Thaninayagam.jpg
Xavier Thaninayagam2.jpg
Xavier Thaninayagam3.jpg

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள்: 2.8.1913

சினிமா நடிகர்களைப் பற்றி மட்டுமல்ல- அவர்களது வரலாற்றையே கரைத்துக் குடித்து வைத்திருக்கும் நாம், தனிநாயகம் அடிகளார் என்ற பெயரையாவது அறிந்திருக்கின்றோமா? அவர் என்ன செய்தார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியிருக்கின்றோமா?
அவரைப் பற்றி இதுவரை நாம் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அதற்கு நாம் வெட்கப்படத்தான் வேண்டும். ஆயினும், இப்பதிவின் வழி ஓரளவேனும் அவரது பணிகளை அறிந்து கொண்டு இச்செய்தியை ஏனையோருக்கும் பகிர்ந்து உண்மையான தமிழ்த்தொண்டை ஆற்றுவோமா!

தனிநாயகம் அடிகளார் - தமிழின் இலக்கிய வளத்தை உலகறியச் செய்ய வேண்டும் எனத் தீவிரமாக சிந்தித்தவர்; அதற்காகத் தீவிரமாக உழைத்தவர்; தீவிரமாகப் பயணம் செய்து சாதித்தவர்.
1949 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு வரை ஈராண்டுகளுக்கு அன்றைய மலாயா, சீனா, ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள், தென் அமெரிக்காவில் உள்ள பனாமா, எக்குவடோர், பெரு, சிலி, அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில், மெக்ஸிகோ, மேற்கத்திய தீவுகளான ட்ரினிடாட், ஜமைக்கா, மார்ட்டினிக், நடு ஆப்பிரிக்கா, வட ஆப்பிரிக்கா, இத்தாலி பாலஸ்தீன், எகிப்து ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து பல்வேறு கருத்தரங்குகளிலும் நிகழ்ச்சிகளிலும் தமிழ் மொழி, கலை, வரலாறு பற்றி உரையாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டுமே ஒரு ஆண்டில் 200க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தினார் என்பது வியக்க வைக்கின்றது. அவர் ஏற்படுத்திய தாக்கம் அறிவிப்புலத்தில் அன்று மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது.
ஜப்பானில் தங்கி இருந்த காலத்தில் ஜப்பானிய மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றியும் அறிந்து கொண்டவர் என்பதோடு அவற்றைப் பற்றியும் எழுதியவர்.
1954 ஆம் ஆண்டில் தாய்லாந்துக்குச் சென்றிருந்தபோது அங்கு தாய்லாந்து மன்னரின் முடி சூட்டு விழாவில் கலந்து கொண்ட போது அங்கு அவர்கள் பாடும் பாடல்களுள் திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையிலிருந்து எடுக்கப்பட்டவையும் உள்ளன என்பதை அறிந்து அச்செய்தியைப் பற்றி தமிழ் உலகத்திற்கு முதன் முதலாக தெரிவித்தவர்.

அடிகளாரின் ஆய்வுகளைப் பற்றி சுருங்கக் கூறுவதென்றால்:
1. தமிழ் மொழி, இனம், இலக்கியம், நாகரிகம், வரலாறு ஆகியவை பற்றி எதுவுமே அறியாமல் இந்தியா என்றாலே வடபுலம் தான் என்று மேல் நாட்டவர்கள் நினைத்து வந்த நிலையைத் தம் விரிவுரைகள் மூலமும் வானொலி, தொலைக்காட்சி செய்திகள், நேர்காணல்கள் வழியும் தெரியப்படுத்தியவர். தனிநாயகம் அடிகளாரின் இத்தகைய தீவிர செயல்பாடுகளினால் உலக அரங்கில் தமிழ் இடம் பெற்றது என்பதை நாம் மறுக்க முடியாது.
2. இந்திய மொழிக் குடும்பங்களைப் பற்றியும் வரலாறு பற்றியும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மேலைநாட்டு அறிஞர்களுக்குத் திராவிட மொழிக் குடும்பங்கள் பற்றியும், குறிப்பாகத் தமிழ் பற்றியும் அடிகளார் மூலம் அறிய வந்ததால் அவரது தூண்டுதல் காரணமாகத் திராவிட மொழிகளைப் பற்றிய, குறிப்பாகத் தமிழைப் பற்றிய ஆய்வுகள் மேலை நாடுகளில் பரவலாக்கம் பெற வழி வகுத்தார்.
3. தாய்லாந்து, கம்போடியா போன்ற கிழக்காசிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்துக்கும் இடையே நிலவிய அரசியல், கலை, சமய, உறவுகளைத் தமிழருக்கும் வெளிப்படுத்தி அதன் வழி பல அறிஞர்கள் அத்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள வழி கோலினார்.
4. தமிழைப் பற்றிய ஆய்வுகள் தமிழில் மட்டும் நிகழ்வது தொடர்ந்தால் மேலைநாட்டவர் தமிழைப் பற்றி அறிந்திருக்க முடியாது என்பதால் தமிழைப் பற்றிய ஆய்வுகள் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளிலும் வெளிப்படுதல் வேண்டும் என்பதை வலியுறுத்தி செயல்பட்டார்.

தமது உலக தூதுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய போது அவர் கொண்டிருந்த கருத்து பின்வருமாறு:
"உலகின் மிகப்பெரிய மொழிகளில் ஒன்றும் உயர் தனிச் செம்மொழிகளில் ஒன்றுமாகிய தமிழ் மொழியோடு தொடர்புள்ள செய்திகளும் ஆய்வுக்கட்டுரைகளும் ஆங்கிலத்தில் வெளியிடப்பெற்றால் மட்டுமே உலக அரங்கில் தமிழ் இடம்பெற முடியும் என்பது அவர் கருத்தாக இருந்தது."
ஆகவே தன் பயணத்தை முடித்துக் கொண்டு தூத்துக்குடிக்குத் திரும்பிய தனிநாயகம் அடிகள் ஆங்கில முத்திங்கள் இதழ் ஒன்றினைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு Tamil Culture என்ற பெயரில் அதனைத் தொடங்கினார்.

மலேசியாவின் புகழ்மிக்க மலாயா பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறையில் வடமொழிக்கு முதன்மை வழங்கப்பட வேண்டும் என சிலர் பரிந்துரைத்த போது, திரு.கோ சாரங்கபாணியின் தலைமையில் தமிழர்கள் திரண்டு எழுந்து தமிழை முதன்மை படுத்த முயற்சி செய்த நிகழ்வில் தனிநாயகம் அடிகளாரின் பங்கும் இருந்தது என்பதை வரலாறு மறுக்காது. அதே மலாயா பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவராக தமிழ் வளர்க்கும் பணியை 10 ஆண்டுகள் செய்து இத்துறைக்குப் பெருமை சேர்த்தவர் தனிநாயகம் அடிகள்.

மலாயா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது திருக்குறள் மலாய் மொழியிலும், சீன மொழியிலும் மொழிபெயர்ப்பு நடைபெறுவதற்குத் தூண்டுதலாக இருந்து அதனை சாதித்து முடித்தவர்.
தனிநாயகம் அடிகள் தொடங்கிய Tamil Culture என்ற ஆங்கில ஆய்விதழ் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகியது. 1964 இல் டில்லியில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் பிறந்தது. தனிநாயகம் அடிகளார் அவர்களும் முனைவர் வ.ஐ.சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் 26 பேர் ஒன்று கூடினர். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் பிறந்தது. அதன் தொடக்கம் முதல் தனது மறைவு வரை இந்த மன்றத்தின் தலைவராக இருந்து அளப்பரிய ஆய்வுப்பணிகளைச் செய்தார் தனிநாயக அடிகளார்.

21 உலக நாடுகளில் இருந்து கலந்து கொண்ட தமிழ் அறிஞர்கள் சிறப்பித்த முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற மாநாடு 1966 ஆம் ஆண்டு தனிநாயகம் அடிகளார் அவர்களது முயற்சியில் நடைபெற்றது. இது மாபெரும் சாதனை அல்லவா?
அப்படி என்ன செய்து விட்டார் தனிநாயகம் அடிகளார் எனக் கேட்போருக்கு....
1. முதல் ஐரோப்பிய தமிழ் அறிஞர் எனப் போற்றப்படும் ஹென்றீக்ஸ் ஹென்றீக்ஸ் அடிகளார் 1550 ஆம் ஆண்டில்
எழுதிய Arte de Grammatica da Lingua Malabar (தமிழ் மொழி இலக்கணக் கலை) என்னும் நூலை தனிநாயகம் அடிகளார் போர்த்துகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் உள்ள தேசிய நூலகத்தில் 1954 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
2. தமிழ் மொழியில் எழுதப்படாத, ஆனால் போர்த்துக்கீசிய லத்தின் எழுத்துக்களுடன் கூடிய தமிழ் மொழி ஒலியில் எழுதப்பட்ட முதல் அச்சு நூலான கார்திலா - இதன் கையெழுத்து பிரதி போர்த்துகல் நாட்டு நூலகத்தில் இருந்ததை தனிநாயகம் அடிகளார் குறிப்பிடுகின்றார். இப்போது இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
3. 17-ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தமிழ் போர்த்துகீசிய அகராதியை ஒளிப்பட பதிப்பு முறையில் அச்சிட்டு 1966 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிட்டார் தனிநாயகம் அடிகளார்.
4. தமிழ் மொழியில் கொல்லத்தில் 1578இல் அச்சிடப்பட்ட தம்பிரான் வணக்கம் என்ற நூல். இதுவே அச்சுப் பதிப்பாக வெளிவந்த முதல் தமிழ் நூல் மட்டுமல்ல; முதல் இந்திய நூல் என்பதோடு முதல் ஆசிய மொழிகளில் வெளிவந்த நூல் என்பதும் சிறப்பாகும். இந்த நூலையும் கண்டுபிடித்து இதைப் பற்றிய செய்திகளைத் தமிழ் உலகுக்கு வெளிப்படுத்தியவர் தனிநாயகம் அடிகளார்.
இப்படி ஆரம்பகால அச்சு நூல்கள் பலவற்றைத் தேடி கண்டுபிடித்து அவை பற்றி கட்டுரைகளாகவும், செய்திகளாகவும் மீண்டும் அச்சு பதிப்புகளாகவும் வெளிக் கொண்டு வந்து தமிழ் உலகத்திற்குப் பெருமை சேர்த்தவர் நம் தனிநாயகம் அடிகளார்.

இவ்வளவு பெருமைகளைத் தமிழுக்குச் சேர்த்த தனிநாயகம் அடிகளாரைப் பற்றி சிந்திக்கும் போது பல கேள்விகள் எனக்குள் எழுகின்றன.
1. தனிநாயகம் அடிகளார் பற்றிய செய்திகள் நமது பள்ளிக்கூட, கல்லூரி, பல்கலைக்கழக பாட நூல்களில் இடம்பெறுகின்றனவா?
2.தனிநாயகம் அடிகளாரைப் பற்றி அறிந்த தமிழ் ஆசிரியர்களும் பேராசிரியர்கள் எத்தனை பேர்?
3.தனிநாயகம் அடிகளாருக்கு நாம் சிலை வைத்திருக்கின்றோமா?
4.தனிநாயகம் அடிகளாரருக்கு நாம் கண்காட்சிகளையோ அல்லது நிகழ்ச்சிகளையோ ஏற்பாடு செய்து உலகத் தமிழ் மக்களுக்கு, குறிப்பாகப் புதிய தலைமுறையினருக்கு அவரை அறிமுகம் செய்கின்றோமா?

தனிநாயகம் அடிகளார் செய்த தொண்டை மறந்தால் தமிழை மறந்ததற்கு அது சமமாகும். தனிநாயகம் அடிகளார் அவர்களது பிறந்த நாளான ஆகஸ்டு 2ம் தேதி அவரது சிந்தனைகளை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதோடு நாமும் அவரைப் பற்றி அறிந்து கொண்டு அவர் புகழை உலகெங்கும் கொண்டு சேர்ப்போம்.

அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 2ம் தேதி பள்ளி ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் தனிநாயகம் அடிகள் பற்றிய இப்பதிவை வாசித்துக் கலந்துரையாடுங்கள். பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுக்கு இத்தமிழறிஞரை அறிமுகப்படுத்துங்கள்.
முனைவர் க.சுபாஷினி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை.

குறிப்பு: தனிநாயக அடிகள் தமிழ் ஆராய்ச்சி நிலையம் திருச்சியில் இயங்கி வருகின்றது. இதன் இயக்குநராக அமுதன் அடிகளார் இயங்கி வருகின்றார். இந்த ஆய்வு நிலையத்தைத் தமிழ் மக்கள் உங்கள் ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இப்பதிவில் உள்ள குறிப்புக்கள் சில அமுதன் அடிகள் எழுதிய `தனிநாயகம் என்னும் தமிழ் நாயகம்` என்ற நூலில் இருந்து பதியப்பட்டவையாகும்.

தேமொழி

unread,
Aug 1, 2022, 4:08:06 PM8/1/22
to மின்தமிழ்
2008 ஆம் ஆண்டு  மின்தமிழ் குழுமப் பதிவு ஒன்று; மீள்பதிவாக  . . . 


சேவியர் தனிநாயகம் அடிகளார் அவர்களின் தமிழ் வாழ்க்கை
மு இளங்கோவன்<muela...@gmail.com>

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வடமொழி வால்லாண்மை மேல்நாடுகளிலும்
கொடிகட்டிப் பறந்தது.அதன் பயனாக உலக மொழியியல் அறிஞர்கள் பலரும்
தொடக்கதில் சமற்கிருதப் பட்டம் பெறுவதை இந்திய இலக்கியத்தை அறிவதன் உயர்
தகுதியாக நினைத் திருந்தனர்.இன்று அறியப்பட்டுள்ள அயலகத் தமிழறிஞர்கள்
என்பவர்கள் பெரும்பாலும் சமற்கிருத மொழிப்பயிற்சியுடையவர்களே
ஆவர்.அப்பெரு மக்களைத் தமிழின்பால் ஈடுபாடு கொள்ள அதற்குரிய
வாய்ப்புகளை,சூழல்களை உருவாக்கியவர்களுள் தலைமையானவராகத் தனிநாயகம்
அடிகளாரைக் குறிப்பிடலாம்.

அடிகளார் இளமைக் காலத்தில் ஆங்கிலமொழியில் மிகச்சிறந்த புலமை
பெற்றிருந்தாலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் தமிழ் படிக்க வந்த
பிறகு அவரின் தமிழ்வேட்கை மேம்பட்டது எனலாம்.தெ.பொ.மீனாட்சி
சுந்தரனார்,அ.சிதம்பரநாதனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வழியாகத்
தமிழ் இலக்கியப் பரப்பை உணர்ந்த அடிகளார் பின்னாளில் தமிழ் ஆய்வுகளில்
ஈடுபடவும் தமிழ்வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடவும் அவரின் அண்ணாமலைப்
பல்கலைக்கழகப் படிப்பு பெருந்துணை புரிந்தது.உலகின் 51 நாடுகளுக்குச்
சென்று வந்தவர் அடிகளார்.

"அமெரிக்க ஐக்கியநாட்டுக் கொலம்பியா,ஹார்டுவர்டு,கலிபோர்னியா போன்ற
பல்கலைக் கழகங்களில் கீழ்த்திசை நாடுகளைப் பற்றிய ஆழ்ந்த ஆராய்ச்சி
நடந்துவருகிறது-ஆயினும் தமிழைப் பற்றிய ஆராய்ச்சி மிகக் குறைவேயாம்" என
வருந்திய தனிநாயக அடிகளார் அக்குறையைப் போக்கும் மனவிருப்பம் கொண்டு
உலகத்து அறிஞர்களைத் தமிழின்பக்கம் திருப்பத் தமிழ்குறித்த செய்திகளை
ஆங்கிலத்தில் வெளிப்படுத்தினால்தான் பிறநாட்டார் தமிழின் சிறப்பை
உணர்வார்கள் என நினைத்து Tamil culture என்னும் முத்திங்களிதழை(1952
பெப்ருவரி)த் தொடங்கியும்,உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் கண்டு அதன் வழியாக
உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறக் களம் அமைத்தும் உலகத்து அறிஞர்களின்
ஆய்வுகளைத் தமிழின் பக்கம் திருப்பினார்.அன்னாரின் தமிழ வாழ்வை இங்கு
எண்ணிப் பார்ப்போம்.

இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சார்ந்த என்றி எசுதனிசுலாசு
கணபதிப்பிள்ளை,செசில் இராசம்மா வசுதியாம்பிள்ளை ஆகியோரின் தலைமகனாகப்
பிறந்தவர் நம் தனிநாயக அடிகளார்.இவர் பிறந்த ஊர் கரம்பொன்
ஆகும்.இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சேவியர் என்பதாகும்.தந்தையின்
பெயரை இணைத்துச் சேவியர் எசுதனிசுலாசு என அழைக்கப் பெறலானார்.பின்னாளில்
தம் மரபு வழி முன்னோரான தனிநாயகம் என்பாரின் பெயர் இணைத்துச் சேவியர்
தனிநாயகம் எனப் பெற்றுத் தமிழர்கள் உள்ளத்தில் தனிநாயகமாக ஆட்சி
செலுத்திவருகிறார்.

இளமைக் காலத்தில் ஆங்கில ஆர்வம் மிக்கிருந்த சேவியர் அடிகளார் 1931-34
வரை கொழும்பில் மெய்யியல் பயின்றார்.குருத்துவக் கல்லூரியில் காரணம்
குறிப்பிடாமல் வெளியேற்றப்பட்டார்.1934 இல் கேரள மாநிலம் திருவனந்தபுரம்
சார்ந்த பேராயர் இலங்கை சென்றபொழுது அடிகளாரின் நிலையுணர்ந்து அடிகளாரை
உரோமையில் உள்ள உர்பன் பல்கலைக்கழகத்திற்குப் படிக்க அனுப்பி
வைத்தார்.ஆங்கிலம்,இலத்தீனில் முன்பே புலமைபெற்றிருந்த அடிகளார் அங்கு
இசுபானியம், போர்த்துக்கீசியம், பிரஞ்சு,செர்மன், கிரேக்கம்,எபிரேயம்
உள்ளிட்ட மொழிகளில் பயிற்சிபெற்றார். உர்பன் பல்கலைக்கழகத்தில் 43 நாடு
சார்ந்த 250 மாணவர்கள் கல்வி பயின்றனர்.ஐந்தாண்டுகள் அவர்களுடன் பயின்ற
அடிகளார் உலகு தழுவிய சிந்தனையைப் பெற்றார்.

உரோமாபுரியில் பயின்றபொழுது தமிழார்வம் இவருக்குத் தழைக்கத் தொடங்கியது.
வீரமா முனிவர் கழகம் என்னும் அமைப்பை நிறுவித் தமிழ் பயிலத் தொடங்கினார்.
வாட்டிகன் வானொலியில் பலமுறை தமிழில் உரையாற்றும் பேறு பெற்றார்.1938
மார்ச்சு 19 இல் உரோமையில் கத்தோலிக்க குருவாகத்
திருநிலைப்படுத்தப்பட்டார்.

1939 இல் திருவனந்தபுரம் சமயத் தொண்டிற்கு வந்தவர் அடுத்த ஆண்டு
தூத்துக்குடியில் சமயப்பணிக்கு வந்தார்.194-45 வரை வடக்கன்குளத்தில்
புனித தெரசாள் பள்ளியில் துணைத்தலைமையாசிரியராகப்
பணிபுரிந்தார்.அக்காலத்தில் பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய அய்யர்
என்பவரிடம் தமிழ்கற்றார்.அந்த உந்துதலில் தமிழ் படித்துப் பட்டம்பெற
விரும்பிய அடிகளாருக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆதரவுக்கை நீட்டியது.

அரசர் முத்தையவேள் அவர்களின் பரிந்துரைப்படி விருந்தினர் விடுதியில்
தங்கிப் படித்த பொழுது அவரின் உடன் வகுப்புத் தோழராக விளங்கியவர்
வ.அய்.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார்.1945 இல் தம் முப்பத்தியிரண்டாம்
அகவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்த அடிகளார் முதுகலை வகுப்பை 1947
இல் நிறைவு செய்தார்.1949 இல் "பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை"(Nature
in Ancient Tamil Poetry) என்னும் பொருளில் ஆராய்ந்து மூதறிஞர்(எம்.லிட்)
பட்டம்பெற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழறிவும் அடிகளாரின் பரந்துபட்ட
பன்மொழியறிவும் உலகு தழுவிய சிந்தனையும் அவரை உலகத்தமிழராக
உருமாற்றியது.அதன்பிறகு அடிகளார் ஈராண்டுகள்(1949-50) உலகெங்கும்
தமிழ்ப்பயணம் மேற்கொண்டு தமிழின் சிறப்பு குறித்து உரையாற்றினார்.
அவ்வகையில் மலேசியா,சீனா,சப்பான், அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள்
தொன்னாப்பிரிக்கா,இத்தாலி,எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம்
குறிப்பிடத்தகுந்தது.

அந்த அந்த நாடுகளில் தமிழ் சிறப்பு பற்றி பேசியதுடன் அமையாமல் அங்குத்
தமிழுக்கு,தமிழர்களுக்குத் தொடர்புடைய செய்திகள் உள்ளனவா என்பதையும்
அடிமனத்தில் பதித்துக்கொண்டார். உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில்
தமிழாயுவுகள் நடைபெறாமை அடிகளார்க்குப் பெருங்குறையாக இருந்தது. அவற்றை
மாற்றும் திட்டத்தை அடிமனத்தில் கொண்டவராக அடிகளார் உலகை வலம் வந்தார்.

தனிநாயக அடிகளார் சப்பான் நாட்டில் தங்கியிருந்தபொழுது சப்பான்
மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகளை எண்ணிப்பார்த்தார் தமிழ்
ஒலிகள்,பண்பாட்டுத்தொடர்புகள்,பா அமைப்புகள் பற்றிய ஒற்றுமைகளை எண்ணி
மகிழ்ந்தார்.

அவாய் தீவுகளில் உள்ள மக்கள் பழந்தமிழர்களைப் போல் மலருக்கு முதன்மை
தருவதைக் கண்டு வியந்தார்.தழையுடை உடுத்தி வந்தவர்களைக் கண்டு
சங்கத்தமிழ் மாந்தர்களாக அவர்களை உள்ளூர எண்ணி உவந்தார்.அந்த அந்த
நாடுகளில் வானொலி, தொலைக் காட்சிகளில் தமிழ் தமிழர் பற்றி அடிகளார்


உரையாற்றினார்.

1954 இல் தாய்லாந்து சென்ற அடிகளார் அங்கு மன்னர் முடிசூட்டு
விழாவில்கலந்துகொள்ளும் வாய்ப்புப் பெற்றார்.அப்பொழுது அங்குத் தமிழில்
உள்ள திருவாசகப் பாடல்கள்(ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும்...)
'தாய்'மொழியில் உள்ள எழுத்துகளில் எழுதி வைத்துக் கொண்டு அப்பாடல்களைப்
பாடியதைக் கண்ட அடிகளாருக்கு வியப்பு மேலிட்டது. தாய்லாந் துக்கும்
தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை முதன்முதல் வெளிப்படுத்தியவர் அடிகளாரே
ஆவார்.

அடிகளார் உலக நாடுகளுக்குச் சென்று வந்த பட்டறிவாலும் மிகச் சிறந்த
பட்டப் பேறுகளாலும் 1952 முதல்1961 வரை(ஈராண்டு முனைவர் பட்ட ஆய்வுக்கு
இலண்டன் சென்றமை தவிர)இலங்கையில் பேராதனைப்பல்கலைக்கழகத்தில்
தமிழ்விரிவுரையாளர் பணியேற்றுத் திறம்படப் பணிபுரிந்தார்.இலண்டன்
பல்கலைக்கழகத்தில் பழந்தமிழ் இலக்கியங்களில் கல்விச்சிந்தனைகள்(Education
Thought in Ancient Tamil Literature)என்னும் தலைப்பில் ஆய்வு செய்து
முனைவர் பட்டம் பெற்றவர்.முனைவர் பட்டம்பெற்றுத் திரும்பிய பிறகு
அடிகளார் இலங்கையில் பணிமுடியாதபடி அவருக்கு அரசால் இடையூறுகள் உண்டாயின.

அடிகளார் இலங்கை அரசியல் பணிகளில் தலையிடுவதாக நினைத்த அரசு அவர்மேல்
கண்காணிப்பைத் தொடங்கியது.அந்நாளில் இலங்கையில் பரவி வந்த சிங்களம்
உயர்வு என்ற சிந்தனையால் தமிழர்கள் தங்கள் தாய்மொழியாம் தமிழுக்கு உரிய முதன்மைக்குக்
குரல் கொடுத்தனர்.தமிழ்களுக்கு இலங்கையில் உரிய பங்களிப்பு
கிடைக்கவேண்டும் என்பதில் அடிகளார் அசைக்கமுடியாத நம்பிக்கை
கொண்டிருந்தார்.அதன்பொருட்டு நடந்த பல்வேறு அறப்போராட்டங்களில் பங்கு
கொண்டும் தம் எதிர்ப்பைத் தெரிவித்தார்.இதனால் அடிகளார் அமைதியாகப்
பணிபுரியும் சூழல் அமையாமல் போனது.

அந்த நாளில் மலேசியாவில் உள்ள மலேசியப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த
இந்தியவியல் துறையில் அடிகளார் பணியில் இணையும் வாய்ப்பு
அமைந்தது.தமிழர்களின் தலைவராக விளங்கிய தமிழவேள் கோ.சாரங்கபாணியார்
உள்ளிட்ட தமிழர்கள் அடிகளார் மலேசியாவில் பணிபுரியவேண்டும் என்ற
விருப்பினர் ஆயினர்.அவ்விருப்பத்தின்படி அடிகளார் 1961 முதல் 1969 வரை
இந்தியவியல் துறையில் பணிபுரிந்து இந்தியவியல் துறையைத் தமிழியல் துறையாக
மாற்றினார்.அடிகளாருக்குப் பின்புலமாக இருந்து இந்தியவியல் துறை வளரக்
காரணமாக சாரங்கபாணியார் விளங்கினர்.

இந்தியவியல்துறையில் வடமொழிக்கு முதன்மை தரவேண்டும் என்ற இந்திய அறிஞரின்
பரிந்துரை சாரங்கபாணி அவர்களின் தலைமையில் செயலிழந்தது.அடிகளார்
பின்புலமாக இருந்து தமிழுக்கு அங்கு முதன்மை கிடைக்க ஆவன
செய்தார்.மிகப்பெரிய நூலகம் உருவாக்கப்பட்டது.பிறதுறைப் பேராசிரியர்களைக்
கொண்டு திருக்குறள் சீனமொழியிலும் மலாய்மொழியிலும் மொழிபெயர்க்க அடிகளார்
காரணராக விளங்கினார்.பிற துறை மாணவர்கள் தமிழ் மொழியைப் படிக்க அடிகளார்
வழியேற்படுத்தினார்.

1964 இல் தில்லியில் நடந்த கீழைத்தேய அறிஞர்களின் உலக மாநாட்டிற்கு
உலகெங்கிலு மிருந்து தமிழறிஞர்கள் வந்திருந்தனர்.நீண்ட நாட்களாகத்
தமிழாராய்ச்சியை உலக அளவில் நடத்தவேண்டும் தமிழறிஞர்களைத்,
தமிழறிஞர்களின் பணிகளை ஒருமுகப்படுத்தவேண்டும் என எண்ணியிருந்த அடிகளார்
இம்மாநாட்டை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்தார்.
07.01.1964 இல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்ற அமைப்பு
தொடங்கப்பட்டது.

தனிநாயகம் அடிகளார்,வ.அய்.சுப்பிரமணியன் ஆகியோர் கைச்சாத்திடப்பட்ட
அறிக்கை வழி அறிஞர்கள் ஒன்றிணைந்தனர்.அம்மன்றம் தமிழாராய்ச்சிக்கு மாநாடு
நடத்தும் கொள்கை கொண்டது.அதன் அடிப்படையில் தனிநாயகம் அடிகளாரின்
பெருமுயற்சியால் உலகத் தமிழ் மாநாடு மலேசியப் பல்கலைக்கழக வளாகத்தில்
1966 ஏப்பிரல்17 முதல் 23 வரை மிகச் சிறப்பாக நடந்தது.132 பேராளர்கள்,40
பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.146கட்டுரைகள் படிக்கப்பட்டன.

அதன் பின்னர் 1968 இல் சென்னையிலும், 1970 இல்
பிரான்சு தலைநகர் பாரிசிலும்,நான்காம் மாநாடு இலங்கையில்1974(சனவரி3-9)
ஆம் ஆண்டிலும் நடந்தன.இலங்கை மாநாடு மிகப் பெரிய கலவரத்தில்
முடிந்தது.தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராகச் சிங்களர்களும் தமிழர்கள்
சிலரும் இத் தீச்செயல்களில் ஈடுபட்டனர்.

உலகெங்கும் சென்று தமிழ் பரப்பிய அடிகளாரின் இறுதிப் பத்தாண்டு வாழ்க்கை
இலங்கையில் அமைந்தது.இலங்கையில் இருந்தாலும் அயல்நாடுகளுக்கு இடையில்
சென்று தமிழ்ப்பணியில் ஈடுபட்டு வந்தார்.

அடிகளாரின் ஆய்வுரைகளின் தொகுப்பாக தமிழ்த்தூது நூலும்,உலகப்பணங்களின்
பட்டறிவு,தமிழ்ச்சிறப்பு விளக்கும் வகையில் ஒன்றே உலகம் நூலும்
விளங்குகின்றன. அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய உரை
திருவள்ளுவர் என்னும் பெயரில் நூலாகியுள்ளது.

அடிகளாரின் செயல்பாடுகள் ஆரவாரத்தன்மையுடையது எனவும் இவர் கூட்டிய
மாநாடுகளால் தமிழுக்கு ஆக்கமில்லை எனவும் பாவாணர் குறிப்பிடுவது உண்டு.

உலகெங்கும் உள்ள தமிழறிஞர்களை ஒன்று திரட்டித் தமிழ் தொடர்பாக இது வரை
நடந்துள்ள ஆய்வுகளை ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள பெரும்பங்காற்றியது
உலகத் தமிழ்மாநாடுகள் எனில் மிகையன்று.தமிழாய்வுகள் உலகத் தரத்தை எட்ட
இம்மாநாடுகள் வழிகோலின.

தமிழகத்துடன் அயல்நாட்டு அறிஞர்கள் தொடர்புகொள்ளவும் அயல்நாட்டு
அறிஞர்களின் ஆய்வைத் தமிழர்கள் அறியவும் இம்மாநாடுகள்
பெருந்துணைபுரிந்தன.இவ்வகையில் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளில் நடந்த
உலகத் தமிழ் மாநாடுகளில் மதுரையில் நடந்த மாநாடு
குறிப்பிடத்தகுந்தது.தமிழ்ப்பல்கைலக்கழகம் உருவாவதற்கு இம்மாநாடு
வாய்ப்பாக அமைந்தது.தமிழக அந்நாள் முதல்வர் ம.கோ.இரா.அவர்கள் வரலாற்றுச்
சிறப்பு மிக்க அறிவிப்பை அறிவித்தது அம் மாநாட்டிலேயாகும்.மொழிஞாயிறு
பாவாணர் அவர்களின் இறுதிப் பேருரை அந்த மாநாட்டுன் நிறைவுற்றதும் இங்கு
எண்ணிப்பார்க்கவேண்டிய செய்தியேயாகும்.

மதுரை மாநாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து அறிஞர்கள் வந்து குழுமியவண்ணம்
இருந்தனர்.தங்கள் ஆய்வுரைகள் வழியாகப் புதிய தமிழ் எழுச்சிக்கு வித்திட
வந்தவர்களுக்கு முதல் நிகழ்வாக அமைந்தது தனிநாயக அடிகளாருக்கு இரங்கல்
தெரிவிக்கும் நிகழ்வாகும். உலகத் தமிழ் மாநாட்டுக்கு வித்திட்ட தனிநாயகம்
அடிகளார் இல்லாமல் அம்மாநாடு நடைபெறுவதாக அமைந்துவிட்டது.ஆம்.தமிழை உலகம்
முழுவதும் பரவச் செய்த தனிநாயகம் அடிகளார் தமிழன்னையின் திருவடிகளில்
மீளாத்துயில்கொண்டது 01.09.1981.

தனிநாயகம் அடிகளார் நினைவாகத் திருச்சிராப்பள்ளியில் அருட்தந்தை அமுதன்
அடிகளார் அவர்கள் இதழியில் கல்லூரி ஒன்று நடத்தி வருகின்றமையும் அவர்தம்
புகழை நிலைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

நனி நன்றி :

தமிழ் ஓசை நாளேடு,களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர் தொடர் 10,சென்னை,30.11.2008
தவத்திரு அமுதன் அடிகள்,தனிநாயகம் அடிகளார் நூல்,உ.த.நி.வெளியீடு
முனைவர் பொற்கோ
பிரஞ்சு நிறுவன நூலகம்(IFP),புதுச்சேரி
தமிழ்நேசன்

படங்களுடன் காண என் பக்கம் வருக
http://muelangovan.blogspot.com/2008/12/02081913-01091980.html

தேமொழி

unread,
Aug 2, 2022, 6:44:10 PM8/2/22
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
thaninayagam2.jpg 
திசைக் கூடல் - 296 [ஜூலை 30, 2022]
தனிநாயகம் அடிகள் - பிறந்த நாள் சிறப்புரை
— அருட்தந்தை. அமுதன் அடிகள்
https://youtu.be/Xk7dRM4KE8Q

தேமொழி

unread,
Aug 2, 2022, 6:44:58 PM8/2/22
to மின்தமிழ்
Globe Tamil
thaninayagam.jpg
தனிநாயகம் அடிகளாரை மறந்துவிட்டு தமிழர் என்று எப்படி பெருமை கொள்ளமுடியும்?
-முனைவர் க சுபாஷிணி
https://youtu.be/eZGAXS8yj4s

Reply all
Reply to author
Forward
0 new messages