1. பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல் ++ 2. தோழர் தியாகு எழுதுகிறார் 216 : கலைமகள் எனும் தொன்மம்

16 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 19, 2023, 7:10:36 PM9/19/23
to thiru thoazhamai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Dr. Ku.Muthukumar, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, antony louis, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, chitr...@gmail.com

தோழர் தியாகு எழுதுகிறார் 216 : கலைமகள் எனும் தொன்மம்

 


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      20 September 2023      அகரமுதல


(தோழர் தியாகு எழுதுகிறார் 215 : காலுடுவெல் கலைவண்ணம்-தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்
கலைமகள் எனும் தொன்மம்

இனிய அன்பர்களே!

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கொள்கை அறிக்கையில் தமிழ்த் தேசியத்துக்கும் சமூக நீதிக்குமான இடையுறவை விளக்கப்படுத்தப் பாவலர் பாரதிதாசனிடமிருந்து நான் எடுத்துக்காட்டிய கவிதை வரிகள் –
“சாதி ஒழித்தல் ஒன்று – நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் – மற்றப்
பாதி துலங்குவதில்லை.”

பாரதிதாசனின் இந்த வரிகள் “பாரதி உள்ளம்” என்ற கவிதையில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க செய்தி.


இந்த வரிகளின் அடிப்படையில் பாரதியைச் சாதி ஒழிப்புக் கொள்கை கொண்டவர் என்று நான் கருதியதுண்டு. ஆனால் சாதிமறுப்பும் சாதிஒழிப்பும் ஒன்றல்ல என்ற புரிதல் ஏற்பட்ட பின் பாரதியைப் பற்றிய மதிப்பில் ஒரு மாற்றுக் குறைந்துதான் போயிற்று. பாரதியை அவரது பார்ப்பனப் பிறப்பின் அடிப்படையில் தூற்றுவதை நான் ஏற்பதில்லை. ஆனால் புறஞ்சார்ந்த ஆய்வு நோக்கில் பாரதியிடம் குறைகாண்பதில் எவ்விதப் பிழையும் இல்லை. இந்தியத் தேசியத்தின் இந்துத்துவ உள்ளடக்கம் பாரதியிடமும் தாக்கம் செலுத்திற்று என்பதில் ஐயமில்லை.

உணர்வுகளை வெளிப்படுத்த பாரதி துணைக்கழைத்த தொன்மங்களில் இந்துத் தெய்வங்களே ஆட்சி செலுத்தின. உருசியப் புரட்சியை மாகாளியின் கடைக்கண் பார்வையாகக் காட்டிய பாரதி பாரதத் தாயை தேவியாகவே வழிபட்டார்.
“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று பெருமிதம் கொண்ட பாரதி… கல்வியைக் கலைமகள் அல்லது சரசுவதியாகவே உருவகித்தார். சரசுவதியை அவர் கல்விக் கடவுளாகக் கண்டதிலும் காட்டியதிலும் வியப்பில்லை. அதுதான் தொன்றுதொட்டு வரும் மரபு. ஆனால் அந்தத் தொன்மத்தை முன்னிறுத்தி பாரதி வெளிப்படுத்திய கல்விச் சிந்தனைகள் செறிவானவை, குமுக அறம் (சமூக நீதி) என்பதன் பாற்பட்டவை.

அனைவர்க்கும் கல்வி என்பதுதான் பாரதியின் கொள்கை. இதற்கு மாறானது வருண தருமம், மனு நீதி. பாரதி எந்தப் பக்கம்?

“வஞ்ச மற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குல தெய்வ மாவாள்,
வெஞ்சமர்க்குயிராகிய கொலலர்,
வித்தையோர்ந்திடு சிற்பியர், தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ்செய்வோர்
வீரமன்னர் வேதியர் யாரும்
தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறிவாகிய தெய்வம்.”

சரசுவதி – கலைமகள் – கல்வியின் தெய்வம். அவளே உழைக்கும் மக்களின் குலதெய்வம், அவர்கள் அனைவர்க்கும் கல்வி உரிமை உண்டு என்று பொருள். அனைவர்க்கும் கல்வி என்ற உரிமையை மறுக்கும் மனுதருமத்தை மறுத்துக் கொல்லர், தச்சர், வாணியர், சத்திரியர், வேதியர் என்று கீழிருந்து மேலாக இந்துச் சமூகத் தட்டுகளை வரிசையாகச் சொல்லி அனைவருக்குமான கல்வியை வலியுறுத்துகின்றார் முண்டாசுப் பாவலர். .

சரசுவதி துதி, கலைமகள் வழிபாடு என்றால் என்னவாம்?

“மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன் மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனையன்றாம்.”

வேறென்ன செய்வதாம்?

வீடு தோறும் கலையின் விளக்கம்,

வீதிதோறும் இரண்டொரு பள்ளி,

நாடு முற்றிலும் உள்ளனவூர்கள்,

நகர்கெளுங்கும் பலபல பள்ளி,

தேடு கல்வியிலாத தொரூரைத்

தீயினுக் கிரையாக மடுத்தல்

கேடுதீர்க்கும் அமுதமென் அன்னை

கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.”

கல்வியைக் “கேடில் விழுச்செல்வம்” என்றார் திருவள்ளுவர்.
“கேடுதீர்க்கும் அமுதம்” என்கிறார் பாரதியார்.
திருக்குறளைப் படித்தாரோ இல்லையோ, தெரியாது, கல்வியைக் குறளின்
குரலாகவே போற்றுகின்றார். கல்விக்காகப் பணி செய்ய மறந்த அரசினரைச்
சாடுகின்றார்:
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?”

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்”

என்ற குறள்தான் நினைவுக்கு வரும். மானமிழந்து விலங்குகள் போல் வாழ்வதும் ஒரு வாழ்வாமோ? எப்படி ஆற்றித் தேற்றுகிறார் பாருங்கள்:

“போன தற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!”

செய்ய வேண்டியது என்னவாம்?

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்.”

ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றால் ஏழைத் தமிழ்நாட்டின் கல்வியுரிமை காத்தல் என்று பொருள் கொள்வோம்
.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 24
3

+++

+++

பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்

 


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      20 September 2023      அகரமுதல


(பூங்கொடி 14 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகை – தொடர்ச்சி)

பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்

பூங்கொடி கண்ணிர் புத்தகம் நனைத்திட

ஆங்கது கண்ட அருண்மொழி வெதும்பிக்

கண்ணிர் மாற்றிக் கவலையை ஆற்ற

எண்ணினள் குறுகி, ஏனோ கலங்கினை?

மக்கள் கலக்கம் மாற்றிடல் ஒன்றே  25

தக்கதென் றெண்ணிச் சார்ந்தனம் ஈண்டு ;

நாமே கலங்குதல் நன்றாே ? நம்பணி

ஆமோ பூங்கொடி! அவலம் விட்டொழி

மலர்வனம் சென்று மாற்றுக் கவலை

அலர்பூங் காவுள் ஆறுதல் கிட்டும் ; 30

பூம்பொழில் தந்திடும் ஐம்புல இன்பம்

பலர்முகம் கண்டும், பாட்டொலி கேட்டும்,

சிறுவர் ஆடிடும் சிரிப்பொலி கேட்டும்,

நறுநீர் அருந்தி நளிகனி உண்டும்,

மலர்மணம் நுகர்ந்தும், வருசிறு தென்றல்

தளிருடல் வருடித் தருநலம் பெற்றும்   35

களிமிகு மனத்தொடு திரும் பெனக் கழறினள்,

    பூங்கொடியின் அழகு

உடனுறை தோழி அல்லி உரைப்போள்

பூங்கொடி நல்லாள் பொற்பின் செல்வி,

தேங்கெழில் இளமை செறிதரு சிற்பம்,

சிற்றிடை கொடியைச் சிரிக்கும், பிறையெனும்  40

நெற்றியிற் புருவம் வில்லினை நிகர்க்கும்,

அவ்வில் லடியில் அம்பென இருவிழி

செவ்விதின் நிற்கும், செவ்வா யிதழில்

புன்னகை மின்னும், பொலிவுறச் சுருள்படு

பின்னலில் இணையாப் பிரிந்துள கருங்குழல்   45

துகலிடைக் கிடந்து நுடங்கும்.அக் காட்சி

கவிஞன் ஒவியன் கற்பனை தாண்டும்,

நடைக்கோர் உவமை நவிலவும் ஒல்லுமோ ?

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி

+++





--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages