மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடியவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: --
வரும் வெள்ளிக்கிழமை (மே, 16) என் மறுமகள் பிரகதியின் பிறந்தநாள். உங்களின் வாழ்த்துகளை மேலே உள்ள விழியத்தின் பின்னூட்டத்தில் (comments) சொல்லுங்கள்.
விசிலடித்து இந்த பாடலை ஆரம்பித்திருக்கிறேன். மெட்டு வித்தியாசமாக வந்திருக்கிறது.
என் மறுமகள் பிரகதி எப்போதுமே "மாமா, நீ பாட்டுல்லாம் நல்லா தான் எழுதுற. ஆனா, நீ பாடாத மாமா. உன் குரல் நல்லா இல்ல" என்று சொல்லுவாள். உண்மைதான். என் குரல் மற்றவர்களை வசீகரிக்கும் அளவு இல்லை. நான் பாட ஆரம்பித்ததே என் மெட்டுகளைத் தான். நான் உண்மையில் சிறந்த பாடகன் இல்லை. ஆனால், என்னிடமிருந்து நல்ல நல்ல மெட்டுகள் வருவதால் நான் ஒரு இசையமைப்பாளர் என்ற உண்மை சமீப காலங்களில் எனக்குத் தெரிய வருகிறது.
என்னிடம் பாடகர்கள் இல்லை. என்னிடமிருந்து உருவாகும் மெட்டுகளுக்கு பாடல் வரிகளும் என்னிடமிருந்தே வருகின்றன. பாடிக் காட்டுவதற்கு ஆள்கள் இல்லை. என்னிடருந்து உருவாகும் மெட்டுகளை என்னை விட சிறப்பாக பாடகர்களுக்கு பாடிக் காட்ட, மற்றவர்களுக்கு எப்படிப் பாடுவது என்று வேறு யாராலும் சொல்லிக் கொடுத்து விட முடியாது. ஏனெனில், இவையெல்லாம் என்னிடமிருந்தே உருவாகும் மெட்டுகள்.
உதாரணத்திற்கு, ஓராண்டுக்கு முன்பு என் மகள் ரிதன்யாவின் பள்ளியில் ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு தலைப்பில் அந்த வாரத்தில் வரும் நிகழ்வுகள் தொடர்பாக ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ பேசச் சொல்லி இருந்தார்கள். அந்த வாரம் முத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தி. என்னிடமிருந்து தேவர் ஐயாவின் வாழ்க்கை வரலாறு பற்றி உருவான மெட்டையும் பாடல் வரிகளையும் என் மகள் ரிதன்யாவுக்கு சொல்லிக் கொடுத்தேன். எப்படிப் பாட வேண்டும்? எப்படி தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும்? எந்த இடத்தில் எந்த அளவு ஏற்ற இறக்கத்தோடு பாட வேண்டும்? என நானே பயிற்சி கொடுத்து பள்ளியில் அனைவரின் முன்னிலையில் பாடியிருந்தாள். அதன் பிறகு பள்ளி ஆசிரியை ஒருவர் என் மகள் பாடிய விதம் குறித்து, அவள் தமிழை உச்சரித்த விதம் குறித்து பள்ளி சார்ந்த எல்லா whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொண்ட நிகழ்வு குறிப்பிடத் தக்கது.