அன்புடையீர்,
இப்போது நான் எடுத்துக்கொண்டது சிந்தாமணி நிகண்டு என்னும் நூலாகும். இது இலங்கை வல்வெட்டித்துறை எனும் நகரைச் சேர்ந்த வல்வை. ச. வயித்தியலிங்கர் என்பவர் எழுதியது. இவர் 1843-இல் பிறந்தவர். அதாவது நான் பிறப்பதற்குச் சரியாக 100 ஆண்டுகட்கு முன் பிறந்தவர். தமிழ் இலக்கண இலக்கியங்களையும் அவற்றுடன் வடமொழியையையும் நன்கு கற்றவர். தன்னுடைய முப்பதாவது வயதில் இந்த நிகண்டு நூலை அவர் எழுதியிருக்கிறார் என்பதிலிருந்து அவரது புலமையின் திறம் நன்கு புலனாகும்.
இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளைக் கொண்டது. ஒவ்வொரு அடியிலும் இரண்டு சொற்கள் மட்டும் விளக்கப்படுவது இதன் தனிச்சிறப்பு. ஓர் எடுத்துக்காட்டு
முசருவே தயிரின் நாமம் முசுப்பதி பாடிவீடு
அசலகால் மலையக்காலே அசன்னியம் சகுனம் ஆகும்
விசமே தாமரைநூலே விச்சிராணனம் கொடை விளக்கும்
யசுரு இரண்டாம்வேதம் ஆச்சியம் நெய்யின் பேரே
ஆனால் பெருவாரியான சொற்கள் வடசொற்களாகவே இருப்பது இன்றைய பார்வையில் சற்றுக் குறைபாடாகவே தோன்றுகிறது. மஞ்ஞை என்ற தமிழ்ச் சொல்லுக்குக் கூட அவர் அதனை மயில் என்னாது மயூரம் என்பார்.
விஞ்ஞதை ஞானம் ஆமே விஞ்ஞாத்தி அறிவிப்பு ஆகும்
அஞ்ஞத்துவப் பேரே அஞ்ஞானம் அஞ்சிட்டன் சூரன்
மஞ்ஞை தானே மயூரம் மஞ்சூரம் கடலை நாமம்
பிஞ்ஞகன் பேயொடாடி பிஞ்ஞகம் பங்குசப்பேர்
இதன் பதிப்பாளர் சந்தி பிரிக்காத மூலத்துடன், சந்தியும் சொற்களும் பிரித்து, அச் சொற்களின் பொருளையும் தந்து வெளியிட்டிருப்பதால் என்னுடைய பணி மிகவும் எளிதாகி, இதற்கான தொடரடைவு 15 நாள்களில் உருவாக்கிவிட்டேன்.
தமிழில் பல நிகண்டுகள் உள்ளன. ஓலைச்சுவடிகளினின்றும் அவற்றை எடுத்துப் புத்தகமாகப் பலர் பல காலகட்டங்களில் பதிப்பித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் வையாபுரிப்பிள்ளை அவர்களும் (1930-களில்) இன்றைக்கு முனைவர் வ.ஜெயதேவன் அவர்களுமே. ஆனால் பலர் தன்னார்வ முனைப்பாகப் பல நிகண்டுகளைப் பதிப்பித்துள்ளனர். அவற்றில் பல முதல் பதிப்போடு பல முக்கிய நூலகங்களில் அரிய புத்தகப் பிரிவில் முடங்கிப்போயின. அவற்றை எல்லாம் நேரில் சென்றும், நண்பர்கள் மூலமாகவும் படியெடுத்து ஒரே நூலாகத் தொகுத்திருக்கிறார் முனைவர். ச.வே.சுப்பிரமணியம் அவர்கள். மிகவும் அரிய, பெரிய முயற்சி இது. இத்தொகுப்பினை, தமிழ் நிகண்டுகள் என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாக மெய்யப்பன் (மணிவாசகர்) பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதில் 18 நிகண்டுகள் வெளியிடப்படிருக்கின்றன. ஆனால், இந்தப் பதினெட்டிலும் சேராததுதான் இந்த சிந்தாமணி நிகண்டு. ஏனோ ச.வே.சு அவர்கள் இதனைச் சேர்க்கவில்லை. இதனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் முனைவர் ஜெயதேவன் அவர்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
இந்த நிகண்டை விருபா அவர்கள் அக்குவேறு ஆணிவேராகப் பிரித்துப் பலவகைகளில் ஆய்வுசெய்திருக்கிறார்.
இதனை http://www.viruba.com/Nigandu/Chintamani_Nigandu.aspx என்ற இணைப்பில் பார்க்கலாம்.
ஆனால், இதில் ஒரு பாடல்கூட படியெடுக்காத வகையில் உள்ளது. எனக்கு text file வடிவில் ஒரு நூல் வேண்டும். நல்லவேளை சிந்தாமணி நிகண்டு என்ற ஒரு நூல் கிடைத்தது. இதனை Google Lens மூலம் படியெடுத்து text file ஆக மாற்றவேண்டும். இதே போல் வேறொரு நூலுக்கு, என் அருமை நண்பர் இம்மானுவேல் ஜெபராஜனும், எங்கள் முன்னாள் மாணவன் பெங்களூர் சீனிவாசனும் உதவினார்கள். இம்முறை நானே Google Lens மூலம் படியெடுத்து text file ஆக மாற்றிக்கொண்டேன். இதற்குத்தான் நெடுநாள் ஆனது. இல்லையென்றால் இதனை இன்னும் விரைவாக முடித்திருப்பேன்.
இதற்கான தொடரடைவை, எனது tamilconcordance.in என்ற இணையதளத்தில் தொடரடைவுகள் -- > நிகண்டுகள் என்ற தலைப்பின் கீழ் காணலாம்..
நிகண்டுகள் வரிசையில் இது பத்தாவது நிகண்டு. மொத்தத்தில் இது என்னுடைய 111-ஆவது தொடரடைவு.
இனி, அடுத்த நிகண்டின் தொடரடைவுடன் சந்திக்கிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா