வைதீக மதம் பற்றி பேசும் முன்னுரை ஆசிரியர் ஏன் வைதீக மதம் அல்லாத மதங்களைப் பற்றி கூற தவறுகிறார்?
மனுஸ்மிருதி
சூத்திரர்கள் மற்றும் பெண்கள் பற்றி சொல்வதென்ன?
தொகுப்பு - கௌதம சன்னா
குறிப்பு
இத்தொகுப்பு வெகுமக்களின் புரிதலுக்காக எளிய நடையில் தொகுக்கப்பட்டுள்ளது. பெண்கள் சூத்திரர்கள் என்று தனித்தனியே பிரிக்கவில்லை. ஏனென்றால் மனுவைப் பொருத்தவரையில் பெண்களும் சூத்திரர்களும் ஒன்றே. இருவருக்கும் கல்வி மற்றும் பூணூல் உரிமைக் கிடையாது. இந்த சிறு தொகுப்பைத் உருவாக்க துணைநின்ற ஆதார நூல்கள் இந்நூலின் இரண்டாம் பக்கத்திலும் கடைசிப் பக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அத்தனை நூல்களும் சமஸ்கிருதத்திலிருந்து நேரடியாக தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்ட புத்தகங்களாகும். அவற்றில் கொடுக்கப்பட்ட அசல் மொழிப்பெயர்ப்புகளையும் அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள சமஸ்கிருத சுலோகங்களையும் ஒப்புநோக்கி சரிபார்த்தப் பிறகு இச்சிறுநூல் தொகுக்கப்பட்டது. ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் பயன்படுத்தப்படவில்லை. மேலும் ஆதார மொழிப்பெயர்ப்புகளை செய்தவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பன வர்ணத்தை சார்ந்தவர்களே. வேறு யாருடைய மொழிப் பெயர்ப்பும் இதில் பயன்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி கடைசிப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்த்ரீகளுக்குரிய பத்ததி என்பது இந்து புனித நூல்களிலிருந்து தொகுப்பட்ட இந்துப் பெண்களுக்கான கடமைகளைப் பற்றியதாகும். மனுஸ்மிருதியை எவ்வாறு நடைமுறைப்படுத்த அது உதவுகிறது என்பதை மக்கள் புரிந்துக் கொள்வதற்காக இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
கௌதம சன்னா
தொகுப்பாசிரியர்
______________________________________________________________________________
அத்தியாயம் - 1
31. உலகைப் படைத்த பிரம்மா அது பல்கிப் பெருகும் பொருட்டு - உலகம் உய்யும் பொருட்டு நான்கு வகையினரை - நான்கு வருணத்தாரைப் படைத்தார்.
32. பரம்பொருளானவர், தம் தேகத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒரு பாகம் ஆணாகவும், மற்றொரு பாகம் பெண்ணாகவும் மாறினார். அந்த ஆண், அந்தப் பெண்ணிடம் ‘விராட் புருஷனை சிருஷ்டித்தார்.
35. (இப்போது) மனுபகவான், பிரம்மதேவர் தம் கூற்றாக மனுவுக்கு எப்படி உரைத்தாரோ, அதை அவ்வாறே இப்போது எடுத்துரைக்கிறார்.
58. இந்த தர்ம சாஸ்திரத்தை முதலில் உருவாக்கியவர் பிரம்மா. அவரே எனக்கு இந்த சாஸ்திரத்தை விதிமுறைப்படி உபதேசித்தார். நான் இதை மரீசி முதலான முனிவர்களுக்கு உரைத்தேன்.
91. பிரம்ம தேவர், சூத்திரர்களுக்கு விதித்த தர்மமோ ஒன்றே ஒன்றுதான். அது, அசூயையின்றி முதலில் கூறப்பட்ட மூன்று வர்ணத்தாருக்கும் பணிவிடை புரிதல்.
93. வேதங்களை உணர்ந்துள்ளதால் படைக்கப்பட்டவர்களுள் பிராம்மணன் மேலானவன்.
100. பூமியிலுள்ள அனைத்தும் பிராம்மணனுடையது. எனவே பிராம்மணன் எல்லா செல்வங்களுக்கும் உடைமையாளன்.
______________________________________________________________________________
அத்தியாயம் 2
31. பிராம்மண குழந்தைக்கு வைக்கும் பெயர் சுபம் தரும் வண்ணம் இருக்க வேண்டும். க்ஷத்திரியக் குழந்தைக்கு பலம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். வைசியக் குழந்தைக்கு செல்வம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். சூத்திரர்களுக்கு ஏவலன் என்பதை அறியும் வகையில் பெயர் வைக்க வேண்டும்.
66. சரீர பரிசுத்திக்காக, பெண்களுக்கு எல்லாக் கிரியைகளும் குறிப்பிட்ட காலத்தில் சாஸ்திர முறைப்படி, ஆனால் மந்திரங்கள் இல்லாமல் செய்ய வேண்டும்.
67. பெண்களுக்குத் திருமணமே உபநயன கிரியை என்று சொல்லப் படுகிறது. பதிக்கு செய்யும் பணிவிடையே குருகுலவாசம், வீட்டு வேலைகளை நிர்வகிப்பதே அக்னிஹோத்ரம் என்னும் கிரியையாகும்.
137. மூன்று வார்ணத்தாரில் செல்வம், பந்துமுறை, வயது, அனுஷ்டானம், கல்வி ஆகிய ஐந்து குணங்களில் அதிக குணங்கள் கொண்டவன் உயர்ந்தவன். சூத்ரர்களில் வயது முதிர்ந்தவன் உயர்ந்தவன்.
155. பிராம்மணர்களுக்கு ஞானத்தால் உயர்வு ஏற்படும். க்ஷத்ரியர்களுக்கு வீர்யத்தால் உயர்வு ஏற்படும். வைசியர்களுக்கு தனதானியங்களின் பெருக்கால் உயர்வு ஏற்படும். சூத்ரர்களுக்கு வயது முதிர்ச்சியினால் உயர்வு ஏற்படும்.
213. ஆண்களை நிலை தடுமாறச் செய்யும் தன்மை பெண்களுக்கு உண்டு. எனவே அறிந்தவர்கள் பெண்கள் விஷயத்தில் நிலை தடுமாறாமல் இருக்க வேண்டும்.
214. வித்வானாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி, அவர்களைக் காமத்துக்கும் குரோதத்துக்கும் ஆளாக்கி தங்களுக்கு வசப்படுத்தும் சக்தி பெண்களுக்கு உண்டு.
215. இந்திரியங்களின் கூட்டமானது மிகவும் பலமுடையது. விவேகம் நிறைந்தவனையும் தவறான வழியில் இழுக்கும். எனவே, தாய் சகோதரி, மகள் இவர்களுடன்கூட தனித்திருக்கக் கூடாது.
223. பெண்ணாக இருந்தாலும், சூத்திரனாக இருந்தாலும் அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வார்களாயின், அவற்றைப் பற்றி நன்கு ஆராய்ந்து, அவை தன் மனத்துக்கிசைந்ததாகவும், சாஸ்திரத்துக்கு விரோதமில்லாததாகவும் இருந்தால் அவற்றைத் தானும் செய்யலாம்.
இன்னும் வரும் ...
அத்தியாயம் 3
13. சூத்திரன், சூத்திரப் பெண்ணை மணப்பதே சிறந்தது. வைசியன், சூத்திரப் பெண்ணையும், வைசியப் பெண்ணையும் மணக்கலாம். க்ஷத்ரியன், சூத்திரப் பெண்ணையும், வைசியப் பெண்ணையும், க்ஷத்ரியப் பெண்ணையும் மணக்கலாம். பிராம்மணன், சூத்திரப் பெண்ணையும், வைசியப் பெண்ணையும், க்ஷத்ரியப் பெண்ணையும், பிராம்மணப் பெண்ணையும் மணக்கலாம்.
16. சூத்திரப் பெண்ணை மணந்தவன் பதிதன் என்று அத்ரி மஹரிஷியும், கெளதம மஹரிஷியும் கூறியுள்ளனர். சூத்திரப் பெண்ணிடம் புத்திரனைப் பெற்றால் அவன் பதிதன் என்று செளனக மஹரிஷி கூறியுள்ளார். சூத்திரப் பெண்ணிடம் பிறந்தவன் பதிதன் என்று பிருகு மஹரிஷி கூறியுள்ளார்.
19. சூத்திரப் பெண்ணிடம் அதரபானம் செய்தவனுக்கும், அவளது நீண்ட மூச்சுக் காற்றுப்பட இருந்தவனுக்கும், அவளிடம் சந்ததியை உண்டு பண்ணியவனுக்கும் பிராயச்சித்தமே கிடையாது.
156. சூத்திர மாணாக்கருக்குக் கல்வி கற்பிப்போனும், சூத்திரனை ஆசிரியராகக் கொண்டவனும், சூத்திரருக்குத் தகுதி அளித்தமையால், தனது தகுதியை இழந்தவன் ஆகிறான்.
178. சூத்திரர்களுக்கு புரோகிதம் செய்பவன், தன் பந்தியில் அமர்ந்திருக்கும் எத்தனை பேரைக் தொடுகிறானோ, அத்தனை பேர் சாப்பிட்ட பலனை அன்னதாதாவுக்குக் கிட்டாதபடி அழிப்பான்.
179. வேத வித்தான பிராம்மணன் ஆசையினால், சூத்திரர்க்கு புரோஹிதம் செய்யும் பிராம்மணனிடமிருந்து தானம் பெறுவானே யாகில், சுடாத மண்பானை நீரில் விழுந்தால் கரைந்து போவது போன்று நாசமடைவான்.
191. நியமிக்கப்பட்ட பிராம்மணன் தாழ்குலத்துப் பெண்ணுடன் கூடினால், தன்னை நியமித்த கர்த்தாவின் பாபம் மொத்தத்தையும் தான் அடைகிறான்.
249. சிராத்தத்தில் மிகுந்த அன்னத்தை, சூத்திரனுக்குக் கொடுத்தால் கொடுத்தவனான அந்த சிராத்த கர்த்தாவான மூடன் தலைகீழாக காலசூத்ரம் என்னும் நரகத்தில் விழுவான்.
______________________________________________________________________________
அத்தியாயம் 4
43. மனைவியுடன் சேர்ந்து உண்ணலாகாது. மனைவி இருமும் போதும், தும்மும் போதும், கொட்டாவி விடும் போதும், சாவகாசமாய் தன்னிஷ்டத்துக்கு உட்கார்ந்திருக்கும் போதும் கணவன் பார்க்கக்கூடாது.
57. பாழடைந்த வீட்டில் தனியாகப் படுத்துறங்கக்கூடாது. தன்னைவிட கல்வியாலும் தனத்தாலும் மேம்பட்டவனை அவன் உறங்கும் போது எழுப்பக்கூடாது. மாத விலக்கான பெண்ணுடன் பேசக் கூடாது. வேதவித், தன்னை அழைக்காதபோது யாக கர்மாவில் கலந்து கொள்ளப் போகக் கூடாது.
61. சூத்திரன் மன்னனாக இருக்கும் நாட்டில் வசிக்கக்கூடாது. தர்ம நெறிப்படி வாழாதவர்கள் அதிகமாக இருக்கும் கிராமத்தில் வசிக்கக் கூடாது. வேதத்துக்கு விரோதமான நெறிகளையுடைய பாஷாண்டிகள் அதிகமாக உள்ள கிராமத்தில் வசிக்கக் கூடாது. சண்டாளர்கள் வசிக்கும் கிராமத்திலும் வசிக்கக் கூடாது.
80. சூத்ரனுக்கு இகலோகத்துக்கு பயன்தரக்கூடிய அர்த்த சாஸ்திரம் முதலான நூல்களை கற்றுக் கொடுக்கக் கூடாது. தான் சாப்பிட்டு மிகுந்த உச்சிஷ்டான்னத்தை (சாப்பிட்டு மிகுந்தது) சிஷ்யனல்லாத சூத்திரனுக்கு கொடுக்கக் கூடாது. ஹவிசில் மிகுந்ததையும் கொடுக்கக் கூடாது.அவனுக்கு தர்மத்தையும் விரதங்களையும் தானே நேரடியாக போதிக்காமல் இன்னொரு வரைக் கொண்டு போதிக்கச் செய்ய வேண்டும்.
81. அவ்வாறன்றி, எவன் இந்த சூத்திரனுக்கு தர்மத்தையும், விரதங்களையும் உபதேசிக்கிறானோ அவன், அந்த சூத்திரனோடு கூட அசம்விருதம் என்னும் பெயருள்ள நரகத்தில் விழுவான்.
99. சூத்திரர்கள் அருகில் வேதம் ஓதக் கூடாது.
166. பிராம்மணனை அறிவுபூர்வமாக புல்லால் அடித்தாலும் இருபத்தொரு ஜன்மங்கள் நாய் முதலான ஈனப் பிறப்புகளை எடுக்க வேண்டி வரும்.
205. வேதமறியாதவன் செய்யும் யாகத்திலும், கிராம புரோஹிதன் செய்யும் யாகத்திலும், பெண்களும் நபும்சகர்களும் செய்யும் யாகத்திலும் பிராம்மணன் போஜனம் செய்யக்கூடாது.
206. இவர்கள் யாகத்தில் ஹோமம் செய்தால் அந்த ஹவிஸ் சாதுக்களுக்கு அலக்ஷ்மிகரமாறெது. தேவர்களுக்கு பிரதிகூலமாகிறது. எனவே இத்தகைய யாகங்களில் சாப்பிடக் கூடாது.
211. பெரும் பாதகனின் அன்னம், நபும்சகனின் அன்னம், டாம்பீகக்காரனின் அன்னம், புளித்துப்போன பால், பழைய சாதம், சூத்ரன் சாப்பிட்டு மிகுந்த அன்னம் - இவைகளைச் சாப்பிடக்கூடாது.
218. சூத்திரனுடைய அன்னத்தைப் புசித்தவனுடைய பிரம்ம தேஜஸ் அழியும்.
233. சூத்திரனிடம் சமைக்கப்பட்ட அன்னத்தைச் சாப்பிடக் கூடாது. வேறு வழியின்றேல், ஒரு பொழுதுக்குத் தேவையான அளவு அரிசி, காய்கறிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
245. உத்தமர்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்ளும் பிராம்மணன் உத்தம நிலையை அடைவான். அதமர்களுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டால் சூத்திரத் தன்மையை அடைவான்.
______________________________________________________________________________
அத்தியாயம் 5
16. ஆயிரம் பற்களுடைய மீன்கள், சிவப்புமீன், கும்பலாகத் திரியும் மீன்கள், சிங்கமுக மீன்கள், முள்நிறைந்த மீன்கள் முதலானவைகளை ஹவ்ய கவ்யங்களில் நியமிக்கப்பட்ட பிராம்மணர்கள் சாப்பிடலாம் மற்ற கர்த்தா முதலானோர் சாப்பிடக்கூடாது. அனைவருமே மற்ற சமயங்களில் சாப்பிடக்கூடாது.
36. வேதமந்திரங்களால் தீர்த்தம் தெளிக்கப்படாமல், வெறுமனே கொல்லப்பட்ட விலங்குகளை பிராம்மணன் எந்நாளும் சாப்பிடக் கூடாது. வேதமந்திரங்களால் தீர்த்தம் தெளிக்கப்பட்ட யாகங்களில் கொடுக்கப்பட்ட மாமிசத்தைச் சாப்பிடுவது ஆசாரமானது.
104. பிராம்மணன் இறந்தால் சவத்தை சூத்திரனை சுமக்கச் சொல்லக் கூடாது. அவ்வாறு செய்தால் இறந்த பிராம்மணனுக்கு சொர்க்கலோகம் கிட்டாது.
147. சிறுமியாயினும், யுவதியாயினும், முதியவளாயினும் எந்தப் பருவத்திலும் பெண்ணானவள் தன் இல்லத்திலும்கூட சுதந்திரமாக எந்தச் செயலையும் செய்யக் கூடாது.
148. பெண், பாலபருவத்தில் தந்தையின் வசத்தில் இருக்க வேண்டும். யுவதி, கணவனுக்கு வசப்பட்டு இருக்க வேண்டும். கணவன் இறந்து போன பிறகு புத்திரார்களின் வசத்தில் இருக்க வேண்டுமேயல்லாமல் சுதந்திரமாக இருக்கக் கூடாது.
149. ஒரு பெண், தந்தை, கணவன், புத்திரன் இவர்களை விட்டு தனித்திருக்க விரும்பக்கூடாது. அப்படி இருந்தால், பிறந்த வம்சத்துக்கும் புகுந்த வம்சத்துக்கும் நிந்தை ஏற்படும்.
150. எப்போதும் சிரித்த முகத்தோடு வீட்டு வேலைகளில் திறமை படைத்தவளாக, பொருட்களை நல்லபடி பேணிப் பாதுகாப்பவளாக, வீண்விரயம் செய்யாதவளாக இருக்க வேண்டும்.
151. தந்தை ஒரு பெண்ணை யாருக்கு மணம் புரிவிக்கிறானோ அல்லது சகோதரன் அப்பெண்ணை யாருக்கு மணம் புரிவிக்கிறானோ, அவனுக்கு வாழ்நாள் முழுவதும் பணிவிடை செய்யவேண்டும். அவன் இறந்தபிறகு அவனுக்கு சிராத்தம் முதலான கிரியைகளை நடத்திவர வேண்டும்.
154. சீலமற்றவனாயினும், பரத்தையர் சேர்க்கை கொண்டவனாயினும், வித்யையும் நற்குணங்களும் அற்றவனாயினும் பதிவிரதையான பெண் கணவனை எப்போதும் தெய்வமாகப் பூஜிக்க வேண்டும்.
155. கணவன் இல்லாமல் வேள்வியோ, விரதமோ, நோன்போ எதையும் பெண்கள் இயற்றுதல் கூடாது. கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாலே மனைவிக்குச் சொர்க்கத்தில் உயர்பதவி கிடைக்கும்.
157. கணவன் இறந்தபிறகு, பதிவிரதையான பெண், காய்கனி, கிழங்குகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டுமேயல்லாமல், மற்றொருவன் பெயரைக்கூட உச்சரிக்கக்கூடாது.
158. பதிவிரதையான பெண், கணவன் இறந்த பிறகு பொறுமையோடு நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். கணவனுக்குச் செய்ய வேண்டிய சிராத்தம் முதலானவைகளைச் செய்ய வேண்டும். நாவிற்கு சுவை தேடாதவளாக, சம்போகத்தை வேண்டாதவளாக, உயிரோடு இருக்கும் வரை பிரம்மச்சரியத் தோடிருக்க வேண்டும்.
160. எனவே, கணவன் இறந்த பிறகு மனைவி பிள்ளைகள் அற்றவளாக இருப்பினும், வேறொரு ஆணை நாடாமல், கற்புள்ளவளாக இருந்தால், நித்ய பிரம்மச்சாரிகளைப் போல ஸ்வர்க்கலோகத்தை அடைவாள்.
162. பதிவிரதையான பெண்ணுக்கு எவ்விடத்திலும் இரண்டாவது மணம் விதிக்கப்படவில்லை.
168. மனைவிக்கு அந்திமக் கிரியைகளைச் செய்து, சாஸ்திர முறைப்படி அனைத்தையும் முடித்த பின்னர், வேறொரு பெண்ணை மணந்து மீண்டும் வைதிக அக்னியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.