உலகத் தரத்தில் பொருநை அருங்காட்சியகம் - திருநெல்வேலி — சிவ.க. மணிவண்ண சுந்தரம்

16 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 29, 2026, 3:00:29 AM (5 days ago) Jan 29
to மின்தமிழ்
உலகத் தரத்தில் பொருநை அருங்காட்சியகம் - திருநெல்வேலி

  — சிவ.க. மணிவண்ண சுந்தரம்

               

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால்  கடந்த 20 ஆம்தேதி திறந்து  வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம்  2025 டிசம்பர் 23 முதல்  பொதுப்  பயன்பாட்டுக்கு வந்துள்ளது.  அனுமதிச் சீட்டு  எடுத்தவுடன்  சி.எஸ்.ஆர் திட்ட  மேலாண்மையில் இயங்கும் பேட்டரி கார் நம்மை அறிமுக அரங்கிற்கு  அழைத்துச்  செல்கிறது. கட்டிட  / அரங்க  வளாகங்களில்  மின்தூக்கி  மற்றும்  சக்கர நாற்காலி வசதி உள்ளது .
porunai 3.png
porunai 4.png 

  அறிமுக அரங்கில் காலக் கணிப்பையும் ஐந்து திணைகளையும் குறிக்கும் அருமையான வரைபடம் உள்ளது. இது நுண்கற்காலம் இரும்புக் காலம்  எனக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. வரை படத்தின் முன் பகுதியில் உள்ள  ஆடியோ புள்ளியில்  நம் காலினை வைத்தால் நிற்கும் இடத்தின் மேற் கூரையில் உள்ள  ஒலி பெருக்கி  விரிவான வரலாற்றுத் தகவல்களை  ஒலிக்கிறது. நாம் நகர்ந்ததும் ஒலிப்பது நின்று விடுகிறது.  பார்வையாளர்களுக்கு  விளக்கம் கொடுக்க நிறைந்த தகவல்கள் அறிந்த  ஆர்வமுள்ள நல்ல  இளம் வழிகாட்டிகள் உள்ளனர்.  

  3150 வருடம் பழமையான சிவகளை அகழாய்வுத்தள நெல்மணிகளும், 5300 வருடம் பழமையானதும் நம் தமிழர்களின் உலோகப் பயன்பாட்டு அறிவினைப் பறைசாற்றக் கூடியதுமான அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இரும்பு ஆயுதமும் இங்குக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.  இந்த வாளினை நாம் முன்பே ஓரிரு முறை தொட்டுப் பார்த்து உணர்ந்திருக்கிறோம் என்பது கூடுதல் மகிழ்வு.

  அறிமுக அரங்கை விட்டு வெளியே வந்தால் சிவகளை அரங்கிற்குக் கூட்டிச்  செல்ல பேட்டரி கார் தயாராக  உள்ளது.

  அரங்க / கட்டிட இடைவெளிகளில் பழமையான பொருட்களின் மாதிரிகளும் பத்தமடை பாய் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் கைவினைப் பொருட்களும் விற்பனைக்காகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பார்த்து / ரசித்து /  விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
porunai 1.jpg
   இந்த சிவகளை  அரங்கில் சிவகளை அகழாய்வில் கண்டெடுத்த  பொருட்கள் மட்டுமின்றி அருகாமை வாழ்விடங்களில் கண்டெடுக்கப்பட்ட தங்கம் உள்ளிட்ட  பல்வேறு பொருட்களும் காட்சிமைப் படுத்தப்பட்டுள்ளது. பெரிய திரையில் பிம்பப் படுத்திக் காட்டப்படுகிற இரும்புத் தாது வெட்டி அள்ளுதல் முதல் உருக்கி  வார்ப்பது வரையிலான  செயல்முறை விளக்கங்களைத்  தொடுதிரையை  நாமே தொட்டு நகர்த்தி இயக்கி அறியலாம். திரையில்  இரும்பு உலைக்குக் காற்று ஊதுகிற  காட்சி தெரிகையில்  நெருப்பு உலைக்குக் காற்று ஊதும் துந்துபி என்கிற  ஊதுகுழலின்  பெடலினை  நமது காலால் நாமே இயக்கி  காற்று ஊதப் படுவதை  நேரடி அனுபவமாக  உணரலாம் இது ஒரு மகிழ்வான கூடுதல் சிறந்த  அனுபவம்.

  அறிமுக அரங்கில் காட்சிமைப் படுத்தப் பட்டிருக்கும் 5300 வருடங்கள்  பழமையான   இரும்பு வாள் மாதிரி ஒன்றை யாம்  இத்தொடுதிரை இயக்கம் வழியாய்  செய்து மகிழ்ந்தோம். எம் முன்னோர்களோடு  இணைந்து யாமே நேரடியாக இரும்பு உலையில்  இயங்கியதை  போன்ற மகிழ்வு மனதுக்குள் பிரவாகமாய் பொங்கிப்  பெருகி நினைவுகளைக் கால சக்கரத்தில்  5300  ஆண்டுகள் பின்னோக்கிக் கடத்தியது.  
 
  மின்னணு காட்சிமை சிவகளையை உணர்ந்து / பார்த்து / அறிந்து / தெளிந்து வெளியே வந்தால் ஆதிச்சநல்லூர் பிளாக் அழைத்துச் செல்ல  அடுத்த  பேட்டரி கார் தயார் நிலையில் உள்ளது.

  இந்த பிளாக்கின் நான்கு காட்சியகங்களில் மூன்று ஆதிச்சநல்லூருக்கும் ஒன்று துலுக்கர் பட்டிக்கும் ஒதுக்கப் பட்டுள்ளது. துலுக்கர் பட்டி குறியீடுகளும்  சிந்து சமவெளி குறியீடுகளும் சம காலத்தவை என்பது ஆய்வாளர்களால் உறுதிப் படுத்தப்பட்ட தகவல்..

  ஜெர்மனியின் ஜாகோர் 1876லும் இந்தியத் தொல்லியல் துறை(ASI) அதிகாரி   அலெக்ஸாண்டர் ரியா 1899 முதல் 1904 வரையிலும் மிகப்பெரிய அளவில்  நடத்திய அகழாய்வுகளில்  தங்கத்தினால் ஆன நெற்றிப் பட்டயம் உள்ளிட்ட   பொருட்கள் கண்டறியப்பட்ட   ஆதிச்சநல்லூரில்  பூமிக்குள் முதுமக்கள் தாழிகள்  எப்படி  இருக்கிறது  என்பது  இங்குச் செயற்கை தத்ரூபமாகக்  காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. இந்தச் செயற்கை அமைப்பானது,  2022ல்  மத்திய அரசு அமைக்க அடிக்கல் நாட்டியுள்ள ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்திற்கான சிறிய மாதிரி  (மினியேச்சர்) போலவே உள்ளது .

  சுடுமண்ணில் செய்யப்பட்ட மிகச்சிறிய   புலி ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நிறைய நாணயங்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.

  நம்பியாற்றங்கரையில் உள்ள முக்கிய தலங்களை ஒளிவரைபடமாகவரையப்பட்டு  அது  நமக்கு ஒலியாகவும் விவரிக்கப்படுகிறது.

  அடுத்த கட்டிடம்  கொற்கை அங்கே முழுக்க முழுக்க கொற்கை பொருள்கள். சங்குகள், வளையல்கள், கடல் பொருள்கள்.
 
  மேற்குலகம் அதுவரை கண்டிராத கொற்கை முத்துக்களையும் மிளகையும் கிரேக்கத்திற்கு ஏற்றுமதி செய்த இந்தியாவின்  முசிறி துறைமுகம் பற்றிக்  குறிப்பிடப்பட்டுள்ள  உலகின் முதன்மையானதும்  பழமையானதும்   நான்கு /ஐந்தாம் நூற்றாண்டு காலத்தியதுமான  வியன்னாவின் ஆஸ்திரியத் தேசிய நூலகத்தில் (Austrian National Library) பாதுகாக்கப்படும் 674 சென்டிமீட்டர் நீளமும், 34 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட  இந்தியாவிற்கு (இந்தியா வரை) என்ற பெயருடைய நீண்ட சுருள் வரைபடமான ரோமானிய வணிகப் பாதை வரைபடம்  Tabula Peutingeriana (டாபுல பெயிட்டிங் கேரினாயா)  ஒளிப்பிரதியாகக்  காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
porunai 2.jpg
  இந்த வரைபடத்தின்  வலது பக்கத்தில் திராவிட எனப் பொருள் கொள்ளும் DAMIRICE என்றும் அதற்குச் சற்று  கீழே சங்க இலக்கியங்களில்  வஞ்சி என்றும் 16 ஆம் நூற்றாண்டு  ஐரோப்பியர்கள் வருகை காலங்களில் கிராங்கனூர்  என்றும் அழைக்கப்பட்ட நமது மேற்குக்கரை முசிறி துறைமுகம்  முசிரிஸ் (Muziris), என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.  (தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம்  காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள "முசிறி" என்ற ஊருடன் இதனைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்).

  பதினான்காம் நூற்றாண்டில் பெரியாறு நதியின்  போக்கில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த முசிறி துறைமுகம் வணிக  முக்கியத்துவம் இழந்து  கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக கொடுங்கலூர் என்கிற பெயரில்  சிறு கிராமமாக உயிர்ப்போடு உள்ளது.

  அப்போதைய ஐரோப்பியர்கள் இந்தியாவில் நுழைந்த போது இங்கு அவர்களைப் பயமுறுத்திய  யானைகள் மற்றும் தேள்கள் வளரும் இடங்கள் குறித்த குறிப்புகளும் இலங்கை 'தப்ரபேன்' (Taprobane) என்றும்  இந்த வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

  இந்த வரைபடம் பயணிகளுக்கான வழித்தடங்களை (Itinerary) மட்டும் மையமாகக் கொண்டு வரையப்பட்டது, புவியியல் ரீதியான  துல்லிய  வரைபடம் இல்லை என்றாலும் முக்கியத்துவம் கொண்டதே.

  அடுத்து சுமார் 50 பேர் இருக்கக் கூடிய 5D திரையரங்கம் உள்ளே சென்றவுடன் நமக்குக் கருப்பு கண்ணாடி தரப்படுகிறது இடுப்பு இடைவார் அணிந்து இருக்கையில் அமைக்கப் பட்டிருக்கும் கைப்பிடியைப் பிடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுத் தொடர்ந்து படம் திரையிடப்படுகிறது.  பொதிகை  மலையில் தாமிரபரணி ஓடி வரும் அழகுடன் காட்சி துவங்கும்  10 நிமிடக் காட்சி மிகப் பிரமாண்டமாக விரிகிறது. இருக்கைகளில் இருக்கும் நாமும் அந்த காட்சிகளோடு ஓடுகிறார்போல்  அரங்கமும்  இசையும் பின்னணி ஒலிகளும் காட்சிகளும் வடிவமைக்கப் பட்டுள்ளது. நமக்கு எதிர்த் திசையில்  ஓடி வரும் பாறைகளும், மீன்களும் நம் மீது மோதுவதைப் போலவும் பாய்ந்து  வரும் புலி நம்மை கடப்பதுவும் போன்ற இயற்கைச் சூழல்களை ரசிக்க ஓர் அலாதி ரசனையும் மனமும் தேவை.

  மழை பொழிவது போன்ற திரைக்காட்சியின்   போது நம் மீதும்  மழைச் சாரல் விழுவது போலச் செயற்கை முறையில் தண்ணீர்  மேலிருந்து தூவப்படுகிறது. இது ஒரு பரவசத்தினைத் தருகிறது.  ஆற்றில் பொதிகை மலைக் காட்டு வழியே நாமே படகில் செல்வது போல உணர முடிகிறது. அங்கிருந்த யானைகளையும் பழங்குடி சகோதரர்களையும்   தேன் கூட்டினையும் ரசிக்கையில் அருகில் வந்த தேனீக்கள் நம் மீது மோதி கிச்சு மூச்சு காட்டியது. இந்தப் படங்களைக்  கண்டு மகிழ்ந்து வியந்து  போற்றிடப் பெரிய தொல்லியல் அறிவெல்லாம் தேவை இல்லை. நல்ல திறந்த மனமும் மண் மீதான பற்றும் இருந்தால் போதுமானது.
 
  அங்கிருந்து நகர்ந்து  தொடர்ந்து 7D திரையரங்கு  அங்கே 20 பேர் அமரக் கூடிய  ஒரு படகு அமர்ந்த பின் பிரத்தியேகமான கண்ணாடி அங்கிருக்கும் ஊழியர்களால் நமக்கு  அணிவிக்கப்பட்டுத் திரைக் கட்சிகள் நகரத் துவங்குகின்றன. திரைக் காட்சிகளில் பிரம்மாண்டம் என்றால் அப்படியொரு பிரம்மாண்டம் கடற்கரைக்குச் செல்லும் காட்சி வருகையில் நம் மீது  தீடீர் குளிர்  காற்று  வீசுகிறது.யானை குளிக்கையில் நம் மீதும் தண்ணீரைத் தூவுகிறது. நிஜமாகவே நனைந்து விடுகிறோம். உலகின் பண்டைய தொழிலும் தமிழர்கள் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்த கடல் சார் தொழில்களில் ஒன்றான முத்துக்குளித்தலில்  நம்மவர்கள்  கடலுக்குள் மூழ்கும் போது நாமும் இணைந்து மூழ்குவது போலான காட்சி  அமைப்பு மிகச் சிறப்பு.

  நம்மை முப்புறமும் திரும்பிப் பார்க்கச் சொல்லுகிறார்கள். பெரிய கடலும் அதற்குள் நீந்தும் மீன் வகைகள், முத்துகள் எனக் காட்சிகள் விரிகையில்  இரும்பு ஆயுதம் தயாரிக்கும் பட்டறையில் உருவாகும் தீப்பொறி நமது கண்ணுக்குள் வந்து விழுகிற காட்சியை உணர்ந்து முடிப்பதற்குள் தயாரான  இரும்பு ஆயுதத்துடன் தயாரித்த  சகோதரர் நம்மை இடித்தபடி முன்னே வந்து நின்று சிநேகமாய் சிரிக்கிறார்.

  வயல்வெளியில் விவசாயிகள் நாற்று நடுவது, தூத்துக்குடி கடலில் சங்கு /முத்து குளிப்பது, தேரிக்காடு  இரும்பு உலை எனப்  பல காட்சிகள் 10 நிமிடங்கள்  பரவசத்தால் நம்மை திணற வைக்கிறது.

  70 ரூபாய் செலவில் நாம் 5500 வருடங்களுக்கு முந்தைய நம் தமிழர்களின் பண்பாட்டை / வரலாற்றை / தொழில்நுட்பத்தை / வாழ்வியலைப்  புரிந்து கொள்ள இந்த அருங்காட்சியகம் உதவுகிறது.  

  பெரிய உலகத்தரம் வாய்ந்த  அருங்காட்சியகம்  நமக்குக்  கிடைத்து விட்டது.“நாம் ஒவ்வொருவரும் இந்த அருங்காட்சியகத்தினைப் பார்த்துப் பாதுகாக்க வேண்டும்”
 
  பொருநை அருங்காட்சியகம் செல்வதற்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேரடிப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

  நல்ல தரமான  சுத்தமான சுகாதாரமான கழிவறைகள் உள்ளது. மக்களாகிய நாமும் கடமை உணர்ந்து  அவற்றினை நல்லமுறையில் உபயோகித்து சுத்தமாக வைத்திருந்து   அடுத்து பயன் படுத்துவோருக்கும் அரசுக்கும் நிர்வாகத்துக்கும் உதவ வேண்டும்.

  பள்ளி/கல்லூரி ஆசிரியர்கள் மட்டுமின்றி  மாணவர்களை நன்முறையில் பயிற்றுவிக்கும் ஆசிரியப் பெருந்தகைகளும் தனியார்ப் பள்ளி நிர்வாகங்களும் வாய்ப்புள்ள போது நமது தொன்மையைக் காட்டும்  இந்த  அருங்காட்சியகத்தினை  மாணவர்கள் பார்வையிட  அவசியம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
porunai 5.jpg

பின்குறிப்பு: மதுரை லேடிடோக் கல்லூரி பேராசிரியை  சகோதரி பாப்பாவையும் எம்மையும் இந்தப்  பொருநை அருங்காட்சியகத்திற்கு இட்டுச் சென்றவரும் உலகின் பெரும்பகுதி  அருங்காட்சியகங்களுக்கெல்லாம் பயணித்து அவற்றை அப்படியே கண்ணில் விரிய வைக்கும் “உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம்”  என்கிற மூன்று  தொகுதி  புத்தகங்களைச் சமூகத்திற்குத் தந்துள்ள தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் எமது  இனிய சகோதரி முனைவர்  சுபாஷிணி கனகசுந்தரத்துக்கும்  அருங்காட்சியகத்தினை முழுமையாகக் கண்டு அனுபவிக்க  வழிகாட்டிய  தமிழ்நாடு தொல்லியல் துறை தொழில்நுட்ப இணை இயக்குநர்  முனைவர் இரா. சிவானந்தம். IAS க்கும்  அருங்காட்சியக நிர்வாக அதிகாரிகளுக்கும் எமது நன்றிகள்.  

வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றியும் :
தமிழ்நாடு அரசுக்கும்  மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கும் கோவை உலகச்செம்மொழி மாநாட்டில்  நமது ஆதிச்சநல்லூரையும் ஒரு பேசுபொருளாகப் பட்டியலிட வைத்தவரும் தமிழக அரசில்  நிதியோடு சேர்த்து  தொல்லியலையும் நிர்வகிக்கும் அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசுக்கும்  தொல்லியல் துறைச்  செயலருக்கும் இயக்குநருக்கும்  மாவட்ட ஆட்சியருக்கும் களத்தில் உயிர்ப்பாய் ஓய்வின்றிப் பணியாற்றிய  அனைத்து மாவட்ட அருங்காட்சியக் காப்பாட்சியர்களுக்கும்   அனைத்துத் துறை  அலுவலர்களுக்கும்  எமது  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.   நல்ல திறமையான அதிகாரிகளும்  அதிகாரிகளை வேலை வாங்கும் திறனும் ஆர்வமும் அதற்கேற்ற ஞானமும்  உள்ள ஒருவர் மூத்த அமைச்சராகவும் இருந்து விட்டால்  ஊருக்கு  / சமூகத்திற்கு  என்னென்ன பணிகளை எப்படி விரைந்து  செய்து முடிக்க முடியும் என்பதற்கு நமது நடப்புக் கால முன்னுதாரணம் மாண்புமிகு தங்கம் தென்னரசு ஆவார் .அவருக்குத் தனிப்பட்ட முறையிலும் எமது பாராட்டுக்களும் நன்றிகளும். தொல்லியல் துறை அமைச்சராக மட்டுமின்றி  நிதித்துறையையும் அவரே நிர்வகித்ததாலும் அவரும் அதே நெல்லைப்  பகுதியினைச் சேர்ந்தவர் என்பதாலும்  கூடுதல் நிதிகளைத்  தடையின்றி ஒதுக்கீடு செய்து சிறந்த  ஒரு நல்ல பலனை  அதி விரைவாக  நமக்கு நம் மண்ணிற்குத் தமிழ்ச் சமூகத்திற்கு வரலாற்றிற்குக்   கொடுத்து உள்ளார், இதில் அரசு  முதல்வர்  மற்றும் அமைச்சரின் செயல்பாடுகளைக்  குறுகிய அரசியல் நோக்கில்  பார்க்காத எவரும் பாராட்டுவர். அந்த வகையில் நாமும் மீண்டும் ஒருமுறை மனதார பாராட்டுகிறோம்.    

அருங்காட்சியக அனுமதிக் கட்டணம்:        
பெரியவர்களுக்கு ரூபாய் 20    
சிறியவர்களுக்கு ரூபாய் 10          
மாணவர்களுக்கு ரூபாய் 5            
புகைப்படம் எடுக்க ம் 30  
கேமராக்கள் மூலம் வீடியோ எடுக்க ரூபாய் 100  
தனித்தனி 5D&7D தொழில் நுட்பத் திரைகளில்   திரையிடப்படும் தமிழர்  தொன்மை  வரலாற்றினைக் கண்டு தெளிய  தலா ரூபாய்  25      

 டிசம்பர்  23, 2025
Reply all
Reply to author
Forward
0 new messages