எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில், "விறலியாற்றுப்படை" என்ற துறையில் அமைந்த நான்கு பாடல்கள் உள்ளன (65,103,105,133).
பத்துப்பாட்டுள்;
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்)
ஆகியன ஆற்றுப்படை நூல்களாக உள்ளன.
பாடாண் திணைக்குரிய ஒரு துறை - ஆற்றுப்படையாகும். பாடாண் திணை என்பது பாடப்பெறுகின்ற ஆண் மகனின் வீரத்தை, புகழைப் பேசுவதாகும். அவ்வாறு பேசப்படுவதற்கு "ஆற்றுப்படை" என்ற துறை பயன்பட்டுள்ளது.
அதாவது ஒரு மன்னனிடம் சென்று தம் வறுமை நிலையைச் சொல்லிப் பரிசு பெற்ற கூத்தர் முதலானோர் திரும்பும் வழியில் தம்மைப்போல் வறுமையில் வாடும் தம் போன்றோரை அம்மன்னனிடம் ஆற்றுப்படுத்துவது, ஆற்றுப்படையாகும். வழிபடுத்துதலே ஆற்றுப்படையாகும்.
சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்களுள் திருமுருகாற்றுப்படையைத் தவிர பிற யாவும் ஒரே பொருளில் அமைந்துள்ளன. பிற ஆற்றுப்படை நூல்களில் பாடியவர் ஒருவராகவும், ஆற்றுப்படுத்துபவர் ஒருவராகவும் உள்ளனர்.
திருமுருகாற்றுப்படையில் பாடல் பாடிய நக்கீரரே ஆற்றுப்படுத்துவதால் இந்நூல் "புலவராற்றுப்படை" எனவும் அழைக்கப்படுகிறது.
தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதியுள்ள ஆசிரியர்கள் சிலர் பத்துப்பாட்டுள் இடம் பெற்றுள்ள முல்லைப்பாட்டு "நெஞ்சாற்றுப்படை" என அழைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக தமிழண்ணல் தாம் எழுதியுள்ள இலக்கிய வரலாற்று நூலில் "தலைவி நெஞ்சை ஆற்றிக் கொள்வதாக இருப்பதால் இந்நூலை நெஞ்சாற்றுப்படை," எனக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். பத்துப்பாட்டுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியரோ, "முல்லைப்பாட்டு ஆராய்ச்சி" நூலாசிரியரான மறைமலையடிகளோ இந்நூலை நெஞ்சாற்றுப்படை என குறிப்பிடவில்லை. எனினும் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இவ்வாறே குறிப்பிட்டுச் செல்லும் போக்கைக் காணமுடிகிறது.
முல்லைத் திணைக்குரிய
- முதல்
- கரு
- உரி
என்ற முப்பொருளையும் முழுவதுமாக எடுத்தியம்பும் முல்லைப்பாட்டு, போருக்குச் சென்ற தலைவன் திரும்பி வரும் பருவமான கார்கால வரவால் வருந்தும் தலைவியின் மனநிலையைச் சுட்டுவதாகப் பாடப்பட்டுள்ளது. "இது தலைவன் வினைவயிற் பிரியக்கருதியதனை அவன் குறிப்பால் உணர்ந்து ஆற்றாளாய் தலைவியது நிலைமை கண்டு அவன் வற்புறுத்தவும் உடம்படாதவளைப் பெருமுது பெண்டிர் அவன் வினைமுடித்து வருதல் வாய்வது, நீ வருத்தம் நீங்குவதெனக் கூற, அது கேட்டு அவள் நீடு நினைந்து ஆற்றியிருந்த வழித் தலைவன் அக்காலத்தே வந்ததனைக் கண்டு வாயில்கள் தம்முட்கூறியது," என நச்சினார்க்கினியர் உரை விளக்கம் கூறியுள்ளார்.
தலைவன் வினைவயிற் பிரிந்துள்ளான் எனப் பொதுப்படக் கூறியிருப்பினும் முல்லைப்பாட்டில் வரும் தலைவன் போர்மேற் சென்று திரும்பும் தலைவனே ஆவான். சங்க இலக்கியத்தில் முல்லைக்கலிப் பாடல்களைத் தவிர, பிற முல்லைத் திணைப்பாடல்கள் யாவற்றிலும் தலைவர்கள் போருக்குச் செல்வோராகவே காட்டப்பட்டுள்ளனர். அவ்வாறு போருக்குச் செல்லும் அல்லது சென்று திரும்பும் தலைவர்களை இரு வகையினராகப் பிரிக்கலாம்.
- ஒரு வகையினர் தம் பகைவர் மீது தாமே போருக்குச் சென்றவர்கள்.
- மற்றொரு வகையினர் வேறொருவருக்காகத் துணைக்குச் சென்றவர்கள்.
இவ்விரு வகையினரையுமே முல்லைத் திணைப் பாடல்களில் காண முடிகிறது.
தொல்காப்பியரின் "தானே சேறலுந் தன்னொடு சிவணி ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே," என்ற நூற்பாவிற்கு முல்லைத் திணைப்பாடல்கள் மிகப் பொருத்தமாக உள்ளன. முல்லைப்பாட்டின் தலைவன் தானே போருக்குச் சென்ற தலைவனாவான்.
போருக்குச் செல்லும் தலைவர்கள் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச் செல்வர். இது சங்க இலக்கிய முல்லைப்பாடல்களுக்குரிய பொதுத்தன்மையாகும். அவ்வாறு கூறிய தலைவர்கள் திரும்பி வராதபொழுது கார் காலத்தைக் கண்டு தலைவி வருந்துவதும், தோழி தேற்றுவதும் முல்லைப் பாடல்களுக்குரிய பொதுத்தன்மையாகும். இந்தப் பொதுத்தன்மையைத் தான் முல்லைப்பாட்டிலும் காணமுடிகின்றது.
மாலை வந்துவிட்டது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றிருந்த கோவலர்கள் அவற்றைத் திரும்ப வீட்டிற்கு ஓட்டி வருகின்றனர். தாம் தாயரைக் காணாத கன்றுகள் கத்துகின்றன. அதனைக் கண்ட ஆயர் பெண்கள் கன்றுகளைப் பார்த்து "உம்முடைய தாயர் இப்பொழுதே வருவர்," எனக் கூறுகின்றனர். இந்தக் கூற்றைக் கேட்ட தோழிகள் தலைவியிடம் இதனை "நற்சொல்லாகக்" கூறித் தலைவர் இன்னே வருவர் என்கின்றனர். ஆனால் அவளோ தாங்கிக் கொள்ளாமல் வருந்துகிறாள்.
இதனை,
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், கைய
கொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன் மொழி கேட்டனம்; அதனால்
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல், தலைவர், வாய்வது, நீ நின்
பருவரல் எவ்வம் களை, மாயோய்! என
காட்டவும், காட்டவும் காணால், கலுழ் சிறந்து
பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப (12 - 23)
என்ற முல்லைப்பாட்டுப் பாடலடிகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.
தலைவன் குறிப்பிட்ட காலத்தில் வரவில்லையே என்று முதலில் தலைவி வருந்தினாலும், பிறகு தன் கணவனை நினைத்துப் பார்க்கிறாள். நம் கணவன் நமக்குக் கணவன் மட்டுமல்ல, அவன் நாட்டிற்கும் காவலன். நாட்டிற்கே காவலன் என்றால் அவனுக்குப் பகைவர் இருப்பதும் அதற்காகப் போர் தொடுப்பதும் இயல்பான நிகழ்வாகிவிடும். எனவே போருக்குச் சென்ற நம் கணவன் திரும்பி வரும்வரை பொறுத்திருக்க வேண்டியது நமது கடமையாகும் என்பதை அவள் உணர்கிறாள். அவ்வாறு உணர்ந்து கொண்டதன் காரணமாக அவள் தன்னையே தன் நெஞ்சையே தேற்றிக் கொள்கிறாள். இதனையே ஆசிரியர் "நெஞ்சாற்றுப்படுத்த" என்ற தொடர் வழி விளக்கியுள்ளார்.
நப்பூதனார் சுட்டியுள்ள இத்தொடரை வைத்தே இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இந்த நூலை நெஞ்சாற்றுப்படை எனக் குறிப்பிட்டுவிட்டனர் போலும். ஆனால் பிற நூல்களுக்குச் சுட்டப்பெறும் "ஆற்றுப்படை" என்ற சொல்லுக்கான பொருளுக்கும் முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள "ஆற்றுப்படுத்தல்" என்ற சொல்லுக்கான பொருளுக்கும் வேறுபாடு உள்ளது.
"ஆறு" என்றால் வழி,
"படை" என்றால் படுத்தல்
என்பது பிற ஆற்றுப்படை நூல்களுக்கு உரிய பொருளாகும்.
ஆனால், முல்லைப்பாட்டில் வரும் தொடருக்குத்;
- தேற்றிக் கொள்ளுதல்
- பொறுத்துக் கொள்ளுதல்
என்பதே பொருளாகும்.
முனைவர் அ. செல்வராசு
நன்றி: தமிழ்மணி (தினமணி)