ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்த சிந்துவெளிப் பண்பாடும் ஆய்வுக் கூறுகளும் சிந்துவெளிப் பண்பாட்டை ஆய்வாளர் ஜான் மார்ஷல் உலகிற்கு அறிவித்த நாள் செப்டம்பர் 20, 1924. ஜான் மார்ஷல் 1902-ம் ஆண்டு துவங்கி 1928-ம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கத்தின் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக இருந்தார். இவர்தான் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தொல்லியல் களங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு உலகிற்கு அறிவித்தவர்.
ஜான் மார்ஷல் சிந்து சமவெளி நாகரீகத்தைப் பற்றி வெளியிட்ட முக்கியமான இரு ஆய்வு நூல்களை கீழ்காணும் இணைப்புகளில் சென்று படிக்கலாம்.
தொகுதி 1: Mohenjo-Daro And Indus Civilization
https://archive.org/details/in.ernet.dli.2015.722/page/n3/mode/2upதொகுதி 2: Mohenjo-Daro And Indus Civilization
https://archive.org/details/in.ernet.dli.2015.62023
ஜான் மார்ஷல்சிந்துவெளி நாகரிகத்தை ஜான் மார்ஷல் உலகிற்கு அறிவித்த நாளை முன்னிட்டு “சிந்துவெளிப் பண்பாடும் ஆய்வுக் கூறுகளும்” என்கிற தலைப்பில் ’ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்’ இணையவழி கலந்தாய்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிறப்பு உரையாளர்களாக சிந்துவெளி ஆய்வுமையத்தின் ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிந்துவெளி ஆய்வு – ஒரு அறிமுகம்கலந்தாய்வில் முதலில் உரையாற்றிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன் சிந்து சமவெளி ஆய்வு தொடங்கியது முதல் அது எப்படி வீழ்ந்திருக்கலாம் என்பது வரையிலான விரிவான அறிமுகத்தினை அளித்தார்.
ஜான் மார்ஷல் மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா எனும் இரண்டு இடங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளின் கூறுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, இந்த இரண்டு நாகரிகங்களும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டறிந்தார். மேலும் இது திராவிட மொழிக்குடும்பத்தின் நாகரிகமாகத்தான் இருக்க வேண்டும் என்றும், வேத நாகரிகத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்தார். வேத காலத்தை விட 1500 ஆண்டுகள் பழமையான நாகரிகம் இது என்பதையும் ஜான் மார்ஷல் தெரிவித்தார்.
தொல்லியல் துறை தலைவராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham 1853-56) தான் முதன்முதலில் சிந்து சமவெளி ஆய்வைத் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வை அவர் தொடங்கியதற்கு முக்கியக் காரணம் அவருக்கு பௌத்தத்தின் தொன்மம் குறித்து இருந்த தேடலே ஆகும். பெளத்தத்தின் தொன்மங்களைத் தேடிப் புறப்பட்டவர்களின் விடையாகவே சிந்துவெளி நாகரிகம் நமக்குக் கிடைத்தது என்று சுந்தர் கணேசன் தனது உரையில் தெரிவித்தார்.
மேலும் சிந்துவெளியானது ஒன்றரை மில்லியன் சதுர கிலோமீட்டர் கொண்ட பரப்பளவிலான பெரிய நாகரிகமாகும். இந்த நாகரிகம் கி.மு 2600-ம் ஆண்டு தொடங்கி கி.மு 2500 – 2000 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்தது என்று கூறி, அதன் முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டார்.
சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய அம்சங்கள்1. சுட்ட செங்கற்கள் (செங்கல் என்பது செங்குத்தாக இருப்பதனால் பெயர் வந்ததா இல்லை சிவப்பாக இருப்பதால் அதற்கு அப்பெயர் வந்ததா என பாலகிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார்)
2. சிந்துவெளி நாகரிகம் செம்பு காலத்தைச் சேர்ந்தது.
3. சிவப்பு – கருப்பு மற்றும் கருப்பு – சிவப்பு மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
4. செம்பு மற்றும் வெண்கலங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட உருவ பொம்மைகள்
5. தாய் தெய்வ உருவங்கள் கிடைத்துள்ளன
6. மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள்
7. தார் கொண்டு தண்ணீர் கசிவைத் தடுத்து கட்டமைக்கப்பட்ட பெரிய குளம்
8. பொது தானியக் களஞ்சியம் இருப்பது இந்த நாகரிகத்தில் உபரி கிடைத்ததற்கான சான்றாக அமைந்துள்ளது.
9. களிபங்கன் எனும் இடத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிணற்றுக்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட செங்கற்கள்
10. மண் மற்றும் செம்பினால் செய்யப்பட்ட கலைப் பொருட்கள்
இந்த நாகரிகம் வீழ்ந்ததற்குக் காரணங்களாக காலநிலை மாற்றம் அல்லது வெளியில் இருந்து வந்த படையெடுப்பு என்பவை இருக்கலாம். உள்ளிருந்து எழுந்த கிளர்ச்சிகளாகக் கூட இருக்கலாம். இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு இனம் ஒரே அடியாக அழிய வாய்ப்பு இல்லை எனவும், அங்கு இருந்த மக்கள் அந்த பகுதிகளிலிருந்து சிதறி வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கக் கூடும் என்கிறார்.
1924-க்குப் பின் சுனிதி குமார் சாட்டர்ஜி என்கிற கட்டுரையாளர் மற்றும் ஃபாதர் ஹென்றி ஹெராஸ் என்கிற ஆய்வாளர் போன்றோரும் இதை திராவிட நாகரிகம் என்றே கூறியுள்ளனர்.
சிந்து சமவெளி நாகரிகம் மனிதத்தை கொண்டாடுவதற்கானது – ஆர்.பாலகிருஷ்ணன்சிந்துவெளி பற்றிய முழுமையான புரிதலுக்கு தரவுகள் சார்ந்த அணுகுமுறை தேவை என்கிறார் சிந்துவெளி ஆய்வு மையத்தின் ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன்.
ஜான் மார்ஷல் சிந்துவெளி நாகரிகம் முக்கியமான ஆய்வு இடமாவதற்கு முக்கியப் பங்காற்றிய நபர். இந்தியாவின் தொல்லியல் துறை தலைமை அலுவலகம் சிம்லாவில் அமைந்திருந்தது. ஜான் மார்ஷல் சிம்லாவில் இருந்தே பணிபுரிந்தார். லாகூர் மற்றும் கல்கத்தாவில் இருந்த மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா தொல்லியல் ஆய்வுப் பொருட்களை சிம்லாவிற்கு எடுத்து வரச் சொல்லி தொகுத்தார். அதில் அவர் மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவிற்கு இடைப்பட்ட தூரம் 600 கி.மீ என்றும், ஆனால் இரண்டு தொல்லியல் இடத்திலும் கிடைக்கப்பட்ட பொருட்கள் ஒரே தரநிலையுடன் இருக்கிறது என்றும், ஆதலால் இந்த இரண்டு இடங்களும் ஒரே நாகரிகத்தின் (திராவிட நாகரிகம்) மூலங்கள் தான் என்கிற முடிவுக்கு வந்தார். இதை திராவிட நாகரிகம் என முதன்முதலில் குறிப்பிட்டது ஒரு வங்காளியே (சுனிதி குமார் சாட்டர்ஜி).
இந்த நாகரிகம் இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமிதம். ஜான் மார்ஷல் கொண்டாடப்பட வேண்டியவர் எனவும், இந்த நாள் கொண்டாடப்பட வேண்டிய முக்கியமான நாள் என்றும் தெரிவித்தார். “யார் கொண்டாடுகிறார்களோ இல்லையோ இந்த தேதியைக் கொண்டாட வேண்டிய தேவையும், உரிமையும், உறுத்தும், நோக்கமும், பயனும் நம்மிடம் இருக்கிறது. அந்த கடமையை நாம் செய்ய வேண்டியது வரலாற்றுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை” என்றார்.
சிந்துவெளியின் முழு புரிதலுக்கு இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த பல்துறை (தொல்லியல், இலக்கியம், மானுடவியல், சமூகவியல்) ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். இந்த நாகரிகத்தின் சிறப்பு என்னவென்றால் இது முதலில் மனிதத்தை கொண்டாடுவதற்கானது. இரண்டாவதாக இது இந்தியத் துணைக்கண்டத்தில் அல்லது தெற்காசியாவில் வளர்ந்த வந்த ஒரு அறிவார்ந்த உன்னதத்தைக் கொண்டாடுவது என்றார்.
இன்றைய தேதிக்கு இந்தியப் பண்பாட்டை அணுகவேண்டும் என்றால், இந்த மண்ணின் மைந்தர்கள் தொடங்கி பழங்குடிகள், சிந்துவெளியின் உன்னதம், வேத காலப் பண்பாட்டின் பங்களிப்பு, இடைக்காலத்தில் ஏற்பட்ட உன்னதம், பாரசீகர்கள், ஐரோப்பியர்கள் என அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட தரவுகள் சார்ந்த அணுகுமுறையும், அறிவியல் அணுகுமுறையும் தேவைப்படுகிறது என்றார். சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய புரிதல் இந்தியாவில் எழுதப்பட்ட வேறு எந்த இலக்கியத்தை விடவும் சங்க இலக்கியத்தில் தான் பொருத்தமாக இருக்கிறது. மேலும் அந்த சங்க இலக்கியங்களின் குறிப்பை தொல்லியல் பகுதிகளில் கிடைக்கும் பொருட்களுடன் சேர்த்து முக்கியக் குறிப்புகளை உள்ளடக்கிய தரவுத்தளத்தினை உருவாக்க வேண்டும் என்கிறார்.
அறிவியல் பூர்வமான பலமுனை ஆராய்ச்சி தேவை – உதயச்சந்திரன்தொடர்ச்சியாக நம் சிந்தனைகளை வழிநடத்தும் சொல் சிந்து சமவெளி என்கிறார் உதயச்சந்திரன். முன்பெல்லாம் அகழ்வாய்வு நடைபெறும்போது அப்பொருட்களை கண்காட்சியில் வைப்பதோடு நின்றுவிடும். அதிகபட்சம் ஒரு புத்தகம் வெளியிடப்படும். ஆனால் இன்று இந்த தளம் விரிவடைந்துள்ளது. கீழடியில் கிடைக்கப்பட்ட முதுமக்கள் தாழியைச் சுற்றி வரும்போது, அதில் பதிந்து இருக்கும் கைரேகைகள் ஒன்று சேருகின்றனவா இல்லையா என்பதை வைத்து நாம் எப்படி வேறுபடுத்தி பார்க்க முடியும் என்பதைப் போன்ற பல தகவல்கள் அதில் இருக்கின்றன.
பலமுனை துறைகளை இணைத்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது எனவும் கூறினார். உதாரணத்திற்கு கீழடியில் கிடைத்த மணியை வைத்து மட்டும் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டியிருக்கிறது.
• அந்த மணி எப்படி செய்யப்பட்டிருக்கிறது?
• துளைகள் எப்படி இடப்பட்டு இருக்கின்றன?
• என்ன பொருட்களால் செய்யப்பட்டிருக்கின்றன?
• என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது?
• எந்த மூலப் பொருட்களால் செய்யப்பட்டுள்ளன?
• அந்த மூலப்பொருட்கள் கிடைக்க அவர்கள் என்ன விதமான வணிகம் செய்து வந்தனர்?
இப்படி பல கோணங்களில் ஆராய்ச்சியினை மெற்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆய்வு அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். நமது முக்கியமான நோக்கம் பழமைவாத கருத்துகளை எல்லாம் புறந்தள்ளக்கூடிய அளவில் சான்றுகளின் அடிப்படையில் நம்முடைய வாதங்களை வைப்பதே நமது பண்பாட்டை, மொழியை, பெருமையை உலகளவில் நிலைநிறுத்த உதவும். சோர்வான நேரத்தில் புத்துணர்ச்சி கொடுக்கக் கூடிய கலங்கரை விளக்கமாக சிந்து சமவெளி நாகரிகம் தொடந்து வழிநடத்துவதாகக் கூறுகிறார்.
-------------------------