நாணயங்கள் பயன்படுத்தும் காலம் வந்தபொழுது மாழைகளால் – உலோகங்களால் – காசுகள் உருவாக்கிப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டது. (இ)லிதியன் மக்கள்தாம் முதன் முதலில் தங்கத்திலும் வெள்ளியிலும் காசுகள் அடித்ததாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரொதத்தசு (Herodotus) என்னும் கிரேக்க வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். எனினும் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் பொற்காசுகள் மிகுதியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. மக்களுக்கு உவமையாகக் கூறும் அளவிற்கு அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டில் இருந்துள்ளமை அக்கால மாழை (உலோக)ப் பயன்பாட்டையும் செல்வச் செழிப்பையும் நமக்கு உணர்த்துகின்றன.உகாஅய்க் கனியைப் போன்று, நெல்லிக்கனியைப் போன்று, வேப்பங்கனியைப் போன்று, நடுவில் துளையுடன் வட்ட வடிவில் எனப் பலவகையில் பொற்காசுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.
புலவர் நக்கீரர், பொற்காசுகள் பலவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட மேகலை குறித்து,
பல்காசு நிரைத்த சில்கால் (திருமுருகாற்றுப்படை :16)
எனக் குறிப்பிடுகின்றார்.
காவன்முல்லைப் பூதனார் என்னும் புலவர், வேனிற் காலத்தில், உகாஅய் மரக்கிளையினின்றும் அதன் கனிகள் கீழே உதிர்ந்து விழுவன பொற்காசுகள் போல இருப்பதாக
மணிக்காசு அன்ன மால்நிற இருங்கனி
உகாஅய் மென்சினை உதிர்வன கழியும் (அகநானூறு : 293 : 7:8)
எனக் குறிப்பிடுகின்றார்.
குடவாயில் கீரத்தனார் என்னும் புலவர்,
மேற்கில் இருந்து வீசும் கோடைக்காற்றால், நெல்லிக்காய்கள் உதிர்ந்து கீழே விழுவன, நூல் அறுந்து கீழே விழுந்த துளையுடைய பளிங்கு காசுகள்போல் இருப்பதாகப்,
புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக்
கோடை உதிர்த்த குவிகண் பசுங்காய்
அறுநூல் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
வறுநிலத்து உதிரும் அத்தம் (அகநானூறு : 315 : 10-13)
என்னும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
அள்ளூர் நன்முல்லை என்னும் புலவர், கிளியின் வளைந்தவாயில் உள்ள வேப்பம் பழம் பொற்கொல்லன் கூரிய கைந்நகத்தில் உள்ள பொன்காசு போல் காட்சியளிப்பதாகக்
கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்
பொலங்கல ஒருகாசு ஏய்க்கும் (குறுந்தொகை : 67 : 1-4)
என்னும் பாடலில் தெரிவிக்கின்றார்.
கொன்றை அரும்புகள், செல்வச் சிறுவர்களின் காலில் கட்டப்பட்ட தவளைவாய் போன்ற பொற்காசுகள் போல் உள்ளன என்பதை இளங்கீரந்தையார் என்னும் புலவர்,
செல்வச் சிறாஅர் சீறடிப்பொலிந்த
தவளை வாஅய பொலம்செய் கிண்கிணிக்
காசின் அன்ன போதுஈன் கொன்றை (குறுந்தொகை : 148: 1-3)
எனத் தெரிவிக்கின்றார்.
மான் உராய்வதால் குமிழ் மரங்களில் உள்ள பழங்கள் உதிர்ந்து கீழே பரவிக்கிடப்பது,
பெண் ஒருத்திப் பொற்காசுகளைக் கீழே பரப்பி வைத்துள்ளமை போல் உள்ளதாகக் காவன் முல்லைப் பூதனார் என்னும் புலவர்,
உழைபடு மான்பிணை தீண்டலின் இழைமகள்
பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம்
குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம் (நற்றிணை 274 : 3-5)
எனக்கூறுகிறார்.
மருதன் இளநாகனார் என்னும் புலவர் கைத்தொழிலால் பொலிவு பெற்ற பொற்காசுகள் இடைஇடையே வைத்துக் கோக்கப்பட்ட பொன்மணிகளை உடைய மேகலை பற்றி,
கைவினைப் பொலிந்த காசமை பொலங்காழ் மேல்
மையில் செந்துகிர்க் கோவை (கலித்தொகை :85: 3-4)
எனக் குறிப்பிடுகிறார்.
உருத்திரன் என்னும் மற்றொரு புலவர்,
புறாவின் முதுகு போன்ற அடியுடைய கொன்றை மரத்தின் பழங்கள் பொற்காசுகள் போல் இருக்கும் என்பதைப்
புறவுப்புறத் தன்ன புன்கால் உகாஅத்து
காசினை அன்ன நளிகனி உதிர (குறுந்தொகை : 274 : 1-2)
எனக் குறிப்பிடுகின்றார்.
பொற்காசுகள் குவிந்து கிடந்த தமிழ்நாட்டவர் வெற்றுக் குவளைகளை கையில் ஏந்தும் நிலை வந்தது ஏன் எனச் சிந்தித்தால் விடிவு பிறக்கும் அல்லவா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு இதழ்
(சனாதனம் பொய்யும் மெய்யும்: 16 – தொடர்ச்சி)
சனாதனம் பொய்யும் மெய்யும்: 17- 19
17. நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு. சரியா?
o நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றளவும், ஆசாரி, செட்டியார், நாயுடு, வன்னியர் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள், நல்ல / பொல்லா நாட்களில் பூணூல் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று சொல்கிறார்களே!
சடங்குகளைப் பிராமணன்தான் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது சடங்கிற்குரியோர் பூணூல் அணிய வேண்டும் எனச் சனாதனம் வலியுறுத்துவதால், சடங்கு செய்யும் நல்ல அல்லது துன்ப நாட்களில் பிற சமூகத்தார் பூணூல் அணிவிக்கப்படுகிறார்கள். இதுவும் பூணூல் அணிந்தவனே சடங்குசெய்ய வேண்டும் என்னும் அடிமைத்தனத்தை உணர்த்துவதுதான்.
பின்வரும் வினாவிற்கான விடையையும் காண்க.
18. நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் எனச் சில வேத பிரம்மாணங்கள் வலியுறுத்துகின்றனவா?.
o “சூத்திர, வைசிக, சத்திரிய, பிராமண ஆகிய நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் எனச் சில வேத பிரம்மாணங்கள் வலியுறுத்துகின்றன. தொழிலையும் சாதியையும் பிறப்பின் அடிப்படையில் கொண்டு வந்த பிறகே சகல சாதியினரும் பூணூல் அணியும் பழக்கம் நின்று போய் விட்டது என வெவ்வேறு இணையத் தளங்களில் குறிக்கப்பட்டுள்ளனவே!
ஆரியர்கள், தமிழர்களைப் பார்த்துத் தங்கள் மொழி, இலக்கியம், பழக்க வழக்கம் முதலியவற்றை யெல்லாம் அமைத்துக் கொண்டனர். அதுபோல் தமிழர்கள் உடலில் அணிந்துள்ள அம்பறாத்தூணியைப்(அம்புக்கூட்டைப்) பார்த்து ஆரியர்கள் நூல் அணிந்து கொண்டனர். அவ்வாறே பூணப்பட்ட நூலே பூணூல் ஆகும். மூன்று புரியாக உள்ளதால் இதனை முப்புரிநூல் என்றும் கூறுகின்றனர். இது தமிழர்களின் பழக்கம் இல்லை. எனினும் தங்களை இரு பிறப்பாளராகப் பிராமணர் கூறிக்கொண்டு பூணூல் அணிந்ததும் ஆசாரிகள் கடவுளின் உருவத்தையே உருவாக்கும் தாங்களும் இரு பிறப்பாளர்கள் என்று பூணூல் அணிந்து கொண்டனர். இதுபோல் வேறு சில வகுப்பாரும் தங்களை உயர்வாகக் காட்டுவதற்காகப் பூணூல் அணிந்து கொண்டனர். எனினும் பிராமணர்கள் பிராமணர் அல்லாதவர்கள் பூணூல் அணிவதை ஏற்கவில்லை. அவர்களைச் சூத்திரர்களாகவே கருதினர்.
பூணூல் போட்டிருந்தாலும் வேதங்களில் கரை கண்டிருந்தாலும் விசுவ பிரம்ம குலம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் பிராமணர்களுக்கு இருக்கும் உயர்ந்த தகுதி மற்றவர்களுக்குக் கிடையாது என்பதுடன், அதை யார் மீறினாலும் பிராமணர்கள் கொதித்து எழுவார்கள் என்பதற்கு 1818 இல் நடந்த வரலாற்று நிகழ்வே சான்று.
“அதே விசுவ பிராம்மணர்கள் என்கிற சமூகத்தினர் 1938 ஆம் ஆண்டுகளில் தங்கள் பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி” என்று போட்டுக் கொண்டனர். அப்போது சென்னை இராசதானி என்ற தமிழ்நாட்டின் முதல்வராக இராசகோபாலச்சாரி பதவியில் இருந்தார். பஞ்ச கருமார்கள் என்பவர்களும், பிராமண இராசாசியும் ஆச்சாரியார்களா? பொறுத்துக் கொள்ளக்கூடிய செயலா? இருவரும் ஒன்றாக முடியுமா?” எனக் கீற்று மின்னிதழில் கா.கருமலையப்பன் எழுதியுள்ளதும் இதற்கு விடையாகும்.
19. பூணூல் போடுபவர்கள் எல்லாம் ஐயரா?
அல்ல. எனினும் மேலே கூறியவாறு பூணூலில் உள்ள நூல் வேறுபாடு பிராமணர்களின் பாகுபாட்டு உணர்வைக் காட்டும். அதுமட்டுமல்ல, தலைவர் என்னும் பொருள் கொண்ட ஐயர் என்னும் தமிழ்ச்சொல்லைத் தங்களுக்குச் சூட்டிக் கொண்டவர்கள் பிறர் அவ்வாறு குறிக்கப்படுவதற்கு விரும்பவில்லை.
சான்றாக, நாயக்கர் காலத்தில் செளராட்டிரர்கள் ஐயர், ஐயங்கார் என்று குறித்துக்கொள்ளக்கூடாது எனப் பிராமணர்கள் வழக்கு தொடுத்தனர். இராணி மங்கம்மாள் அரசு குழு ஒன்றை அமைத்து உசாவி, அதன் அடிப்படையில் செளராட்டிரர்கள் ஐயர், ஐயங்கார் என்று குறித்துக் கொள்ள உரிமையுடையவர்கள் எனத் தீர்ப்பளித்தது. அதன் பிறகு வேண்டா வெறுப்பாக அதனை ஏற்றுக் கொண்டனர்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன், சனாதனம் பொய்யும் மெய்யும் பக்.39-41