வணக்கம்!
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான நான்காவது தமிழ்க் கல்வி மாநாடு (DTEC) பற்றி அறிவிப்பதில் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் (ITA) மிகவும் மகிழ்ச்சியடைகிறது, இந்த அமைப்பு முன்னர் கலிஃபோர்னியா தமிழ் கல்விக்கழகம் (CTA)என்றழைக்கப்பெற்றது.
இந்த மாநாடு 2026 ஆம் ஆண்டு ஜூலை 2 முதல் ஜூலை 5 வரை சென்னை, இந்தியா, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தமிழ் கற்பிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு உலகத் தமிழ்க் கல்விக்கழகம் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. தமிழை முதன்மை மொழியாகக் கொள்ளாதவர்க்குத் தமிழ் கற்பிக்கும்போது தனித்துவமான சவால்களையும் அனுபவங்களையும் எதிர்கொள்கிறோம். வெளிநாடுவாழ் தமிழர்க்குத் தமிழ் கற்றுக்கொடுப்பதை மேம்படுத்துவதில் ஒன்றிணைந்து செயல்படுவதில் DTEC 2026 மாநாடு பெருமைகொள்கிறது. உலகெங்கிலும் உள்ள தமிழ்க் கல்வியாளர்களுடன் இணைந்து கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவுத் திறனையும் ஒருங்கிணைப்பதனால் மொழி கற்பித்தலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. புலம்பெயர் தமிழ்க் கல்வி மாநாடு 2026, தமிழ்க் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மனித கல்வியாளர்களின் முக்கியத்துவத்தை புறக்கணிக்காமல் இயந்திர நுட்பங்களைக் கவனமாகப் பயன்படுத்துவதே நாம் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க சவாலாகும். மேலும் பல்வேறு கற்றல் திறன்களைக் கொண்ட மாணவர்களுக்கும் பயன்படக்கூடிய கற்றல் உத்திகளை கண்டறியும் முயற்சியையும் இம்மாநாடு மேற்கொள்கிறது. பேச்சுத் தமிழின் முக்கியத்துவம், நவீன மதிப்பீட்டு முறைகள் மற்றும் தரப்படுத்துதல் ஆகியவற்றில் உள்ள தேவைகள், மாற்றங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சியையும் இந்த மாநாடு கவனத்தில்கொள்கிறது. இவை அனைத்தும் வகுப்பறையில் தமிழாசிரியரின் தேவையை உறுதிப்படுத்துகின்றன. மேற்கண்ட குறிக்கோள்களை மையமாகக் கொண்டு, அயலக மொழி தரநிலைகளின் அடிப்படையில், பயனுள்ள மொழி கற்பித்தல் முறைகள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஆராயும் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க உங்களை அழைக்கிறோம்.
மாநாட்டின் மையக்கரு:
அயலகத் தமிழ்க் கல்விக்கான பொதுவான தர நிலைகள்
கட்டுரைத் தலைப்புகள்
வெவ்வேறு கற்றல் திறன்களைக் கொண்ட மாணவர்களுக்குத் தமிழ் கற்பிப்பதற்கான உத்திகள்
பல்வேறு தமிழ்ப் பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்பித்தல் முறைகள்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தமிழ் கற்பித்தல்.
பேச்சுத் தமிழ் கற்பித்தல் உத்திகள்
கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய திறன்களின் பல்வேறு நிலைகளுக்கான தேர்வுமுறை அமைப்புகள்
தேர்வுகளுக்கான தர மதிப்பீட்டு முறைகள்
மொழிகற்றலில், வகுப்பீடு மற்றும் செயல்திட்டங்கள்.
உட்தலைப்புகள்:
தமிழ் கற்பிப்பதில் AI ஐப் பயன்படுத்துவதன் நன்மைகளும் பாதிப்புகளும்
மாணவர்கள் தமிழ் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள “flipped classroom” கற்பித்தல் முறை எந்த அளவிற்கு உதவக்கூடும்? இம்முறையில் என்னென்ன சவால்கள் உள்ளன? அச்சவால்களுக்கான தீர்வுகள் எவை?
விளையாட்டுக் கூறுகளை ஒருங்கிணைத்து உரையாடல் திறனை மையப்படுத்திய பேச்சுத் தமிழைக் கற்றுக்கொடுத்தல்
இன்றைய தலைமுறையும் தமிழ் கற்றலும்: புது முறைகளும் சவால்களும்
மாணவர்களிடம் "தமிழ் உணர்வை" விதைத்தலில் புதுமைத் திட்டங்கள்.
நடப்பியல் செயல்பாடுகளைப் பயன்படுத்தி இக்காலத் தமிழ் கற்பித்தல்
தமிழில் “டூயோலிங்கோ செயலியைப் போன்ற” ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள்.
தமிழ் கற்றலில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் செயலிகளில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் அதன் தீர்வுகள்
சொல்வளத்தை மேம்படுத்த “Augmented reality (AR)” மற்றும் “Virtual Reality (VR)”இன் பயன்பாடு
தேர்வுகளின் அடிப்படை நோக்கம்
மதிப்பீட்டு அளவுகோல்களைப் பயன்படுத்துதல்
தேர்வுகளும் பின்னூட்டங்களும்
மதிப்பீட்டிற்கான கருவிகள்
மேற்கண்ட தலைப்புகளையொட்டிய மாணவர் கட்டுரைகளும் வரவேற்கப்பெறுகின்றன.
மேலும் மாநாட்டில் ஆசிரியர் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் குழு கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
தமிழ்க்கல்வி, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைப் பறைசாற்றும் வகையில் மாணவர்கள் கைவண்ணத்தில் அமையும் கண்காட்சி மற்றும் பல நாடுகளின் தமிழ்க் கல்வி முறைகளை விளக்கும் கண்காட்சியும் இம்மாநாட்டில் இடம்பெறும். இக்கடிதம் மூலம் அனைத்து நாட்டினருக்கும் நாங்கள் இக்கண்காட்சியில் பங்குகொள்ள அழைப்புவிடுக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்:
வியாழக்கிழமை, ஜூலை 2 -அறிமுக விருந்து
வெள்ளிக்கிழமை, ஜூலை 3 -ஆசிரியர் பயிற்சிப் பட்டறை & குழு கலந்துரையாடல்
பல்வேறு நாடுகளுக்கான கண்காட்சி மற்றும் மாணவர் கண்காட்சி & மாணவர் கட்டுரை வழங்குதல்
சனிக்கிழமை, ஜூலை 4 - ஆராய்ச்சிக் கட்டுரை வழங்குதல் (கல்வியாளர் & மாணவர்)
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5 - நிறைவு விழா
DTEC 2026 மாநாட்டுக்கு உலகத் தமிழ்க் கல்விக்கழக்கம் உங்களை அன்புடன் அழைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு,
www.itadtec.org என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
நன்றி.
வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம்
நிறுவனர் மற்றும் தலைவர்
www.catamilacademy.orgwww.itadtec.org se...@catamilacademy.org