‘குடவோலை முறை'... உண்மையான ஜனநாயகத் தேர்தல் முறையா?

35 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 7, 2024, 12:59:44 AMJun 7
to மின்தமிழ்
நன்றி: விகடன் 

‘குடவோலை முறை'... உண்மையான ஜனநாயகத் தேர்தல் முறையா?- உத்திரமேரூர் கல்வெட்டும், உலக மகா உருட்டுகளும்!

சு. சூர்யா கோமதி

குடவோலை எந்த வகையிலும் ஜனநாயகத்துக்கான அடிப்படையாக இருக்கவே முடியாது. இப்போது இருப்பதுதான் உண்மையான ஜனநாயகத் தேர்தல் முறை.

ஜூன் 2,  2024

‘உலகத்துக்கே தேர்தல் நடைமுறையைச் சொல்லித் தந்தவன் தமிழேண்டா..'

- இந்தியாவில்/தமிழகத்தில்... ஏன், அமெரிக்காவில் தேர்தல் வந்தாலும்கூட, உத்திரமேரூரில் இருக்கும் சோழர்கள்கால கல்வெட்டைப் பகிர்ந்து... `வாழ்க ஜனநாயகம்' என்று பலரும் பரவசப்படுவதுண்டு.

`தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகத்தை உலகத்துக்குப் பறைசாற்றினார்கள்’, ‘அன்றைய குடவோலை முறை... இன்றைய தேர்தல் முறையின் முன்னோடி' என ஆளுக்கொரு கருத்தைச் சொல்வதால், ‘குடவோலை’ முறையை நம் அடையாளமாகப் பார்த்துப் பலரும் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், ``அந்தக் குடவோலை முறை என்பது இன்றைய தேர்தலுக்குத் துளிக்கூடச் சம்பந்தமில்லாத ஒன்று. ஆனால், மக்களில் பலரும்... ஏன் அரசாங்கமும் அதை நம்பி, திரும்பிய பக்கமெல்லாம் உத்திரமேரூர் கல்வெட்டுப் புகழ் பாடிக்கொண்டிருப்பதுதான் அதிர்ச்சி’' என்று நம்மை எழுந்து உட்காரவைக்கிறார் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் முனைவர் பட்ட ஆய்வு மாணவரான விக்னேஷ் சீனிவாசன்.
Screenshot 2024-06-06 214721.jpg
குடவோலை முறை பற்றிப் பேசும் உத்திரமேரூர் கல்வெட்டு தொடர்பான செய்தி, குழந்தைகளுக்கான சமச்சீர் கல்விப் புத்தகங்களிலும் இடம்பெற்றிருக்கிறது, தமிழக தேர்தல் ஆணையத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகள் அதை உணர்த்துகின்றன. தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலில் இந்தக் கல்வெட்டின் மாதிரி ஒன்று பெரிதாகக் காட்சிப்படுத்தப்பட்டு, மாணவர்களுக்குப் பாடமாகப் படிக்கப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில்கூட உத்திரமேரூர் கல்வெட்டின் மாதிரி இடம்பெற்று, ஒன்றிய அளவில் மூன்றாம் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

`சரி, உண்மையிலேயே குடவோலை முறை என்பது என்ன... அதில், இன்றைய தேர்தல் முறைக்கு முன்னோடியாக என்னவெல்லாம் இருக்கின்றன?' என்ற கேள்விகளுடன்தான் விக்னேஷ் சீனிவாசனைச் சந்தித்தோம். ஆனால் அவரோ, மொத்தத்தையும் உடைத்துப்போட்டார்.

குடவோலையும், வரலாற்றுப் பின்னணியும்!
``குடவோலை முறை என்பது சங்ககாலம் தொட்டே தமிழர்களின் வழக்கத்தில் இருந்திருக்கிறது. அகநானூற்றின் 77-ம் பாடலில் ‘குழிசியோலை முறை’ என்ற முறையில் ஊர்த் தலைவர் தேர்வு நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அதற்கான விதிமுறைகளோ, யார் போட்டியிட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோ, தகுதிகளோ எதுவும் அந்தப் பாடலில் குறிப்பிடப்படவில்லை. குடவோலை முறை குறித்த செய்தியை மட்டுமே அறிந்துகொள்ள முடிகிறது.

இடைக்காலத்தில், தென்பாண்டி நாட்டில் மானூர் எனும் ஊரில் அம்பலவாணசுவாமி கோயில் மண்டபத் தூணில் கிடைக்கப்பெற்ற கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய அரசன் மாறன் சடையனால் வழங்கப்பட்ட வட்டெழுத்து கல்வெட்டில், மானநிலை நல்லூர் மகாசபையில் உறுப்பினர் ஆவதற்கான தகுதிகளாக, `வேதம் கற்றவர், ஊரில் நிலம் உடையவர், நன்னடத்தைகொண்டவர் பங்கு பெறலாம்’ எனத் தகுதிகளை வரையறுக்கிறது.

கி.பி 10-ம் நூற்றாண்டில் முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டு, உத்திரமேரூரில் அமைந்திருக்கும் வாரியங்களுக்கான தேர்வு மற்றும் தகுதிகள் குறித்து மிக விரிவாகக் குறிப்பிடுகிறது. இதையே `குடவோலை முறையின் முன்னோடி’ என்று நாம் பாடப்புத்தகங்களில் படித்துவருகிறோம்.

இரண்டிலுமே ஜனநாயகம் இல்லை!
‘மானூர் கல்வெட்டுதானே’ காலத்தால் முந்தையது என்று இந்தக் கட்டுரையைப் படிக்கும் யாவருக்கும் ஐயம் வரலாம். ஆங்கிலேயர் காலத்தில் கல்வெட்டுகள் முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டபோது, முதலில் (1890-களில்) உத்திரமேரூர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. மானூர் கல்வெட்டு 1906-ல்தான் கண்டெடுக்கப்பட்டது. இடைப்பட்ட 10 ஆண்டுக்காலத்துக்குள் உத்திரமேரூர் கல்வெட்டு அன்றைய முக்கிய வரலாற்றாளர்கள் அனைவராலும் பேசுபொருளாக இருந்தது. தவிர, மானூர் கல்வெட்டைக் காட்டிலும் மிக விரிவாக உத்திரமேரூர் கல்வெட்டு குடவோலை முறையைப் பேசியதாலும், உத்திரமேரூர் கல்வெட்டு சிறப்பாகப் பேசப்படுகிறது எனலாம்.

உண்மையிலேயே மானூர், உத்திரமேரூர் இந்த இரு கல்வெட்டுகளிலும் ஜனநாயக முறை இருந்ததா என்று ஆராய்ந்தால் ‘இல்லை’ என்பதே பதிலாக இருக்கிறது. ஏனெனில், இன்றைய தேர்தல் முறையில் ஆண், பெண், ஏழை, பணக்காரன், சாதி-வர்ணப் பாகுபாடுகள் இல்லாமல் அனைவராலும் தேர்தலில் போட்டியிட முடிகிறது. அது மட்டு மல்லாமல், அனைவருக்கும் வாக்கு செலுத்தும் உரிமையும் இருப்பதால், வேட்பாளர் தேர்வு ஜனநாயக முறைப்படி நடைபெறுகிறது எனலாம். ஆனால், மானூர் மற்றும் உத்திரமேரூர் கல்வெட்டுகளை எடுத்துக்கொண்டால் பிராமணர்களுக்கு மட்டுமே போட்டியிடவும், போட்டி யிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் அதிகாரம் வழங்குகிறது.

ஆராய்ச்சிகளின்போது உத்திரமேரூரில் பல்வேறு கல்வெட்டுகள் கிடைத்தாலும் குடவோலை குறித்துப் பேசும் கல்வெட்டு, முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டில் குடவோலை பற்றிப் பேசியிருக்கும் ஒரு பகுதியில்,‘ஸ்வஸ்திஸ்ரீ  மதிரை கொணட் கோப்பரகேசரிவர்மர்க்கு யாண்டு பனிரண்டு ஆவது உத்திரமேருச்சதுர்வேதிமங்கலத்து சபயோம் இவ்வாண்டுமுதல் எங்களூர் ஸ்ரீமுகப்படி ஆஞைனால் தத்தனூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக்காலும் ஸம்வத்ஸர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரிவாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தை செய்த பரிசாவது குடும்ப மும்மதாய் முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரேய் கூடி காநிலத்துக்கு மேல் இறை நிலமுனையான் தன் மனையிலே அகம் எடுத்துக்கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டோர் வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணரென்னப்பட்டிருப்பாரை அந்த்தசௌசமும் ஆத்ம் சௌசமும் உடையராட் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாத்தார் வாரியஞ் செய்தொழிந்த பெருமக்களுக்கு’எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு வரி செலுத்தும் இடமாக உத்திரமேரூர் கொடுக்கப்படுகிறது. இதே ஊரின் ஒரு பகுதியில், போரில் உயிரிழந்தவர்களுக்கும், நாட்டுக்காகப் போருக்கு முன் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கும் ‘ரத்தக் கொடை’ என்ற பெயரில் நிலங்கள் கொடுக்கப்படுகின்றன. அந்தப் பகுதியைப் பராமரிக்க தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்ச வாரியம் போன்றவற்றை அமைக்கிறார்கள். உத்திரமேரூரில் வசித்தவர்கள் 30 குடும்பங்களாகப் பிரிக்கப்படுகிறார்கள். இங்கு தோட்டம் பராமரிப்பு தொடங்கி, ஏரி பராமரிப்பு வரை பராமரிப்பு பணிகளைச் செய்ய பணியாளர்கள் தேவைப்படுவதால், அனைத்துச் சாதியினரும் அனுமதிக்கப்படுகிறார்கள். பணியாளர்களாக பிராமணர்கள் இருக்க மாட்டார்கள். பணியாளர்களை நிர்வகிக்கும் தலைமைப் பொறுப்புக்கு பிராமணர்களை நிர்ணயம் செய்கிறார்கள். இவ்வாறு நிர்ணயம் செய்யவே குடவோலை முறையைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

குடவோலை முறையில் போட்டியிடுபவர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும், எப்படித் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்பதும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதோ அந்தத் தகுதிகள்!

உறுப்பினருக்குக் கால் வேலிக்குமேல் வரிகட்டும் இடம் இருக்க வேண்டும். சொந்த இடத்தில் வீடு கட்டப்பட்டிருக்க வேண்டும். 30 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். வேதத்திலும் நிபுணராக இருக்க வேண்டும். குற்றங்களிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது என்பன போன்ற பல விதிமுறைகள் இருந்திருக்கின்றன. இந்த விதிகளின்படி பார்க்கையில், வேத சாஸ்திரத்தில் வல்லுநர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், பிராமணர்கள் மட்டுமே உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட முடியும். அந்த உறுப்பினர்களை, பிராமணர்கள் மட்டுமே தேர்வுசெய்ய முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இதுதான் குடவோலை முறை!
மேலே குறிப்பிட்டிருக்கும் தகுதிகளை உடையவர்களின் பெயர்கள் ஓர் ஓலையில் எழுதப்படும். அதைக் குடத்தில் இட்டு, வாயைக் கட்டியிருக்கிறார்கள். தேர்தல் நாள் அன்று அந்தப் பகுதியிலுள்ள எல்லா மக்களும் ஓரிடத்தில் ஒன்றாகக் கூட வேண்டும். கூட்டத்திலுள்ள மூத்தவர் ஒருவர் குடத்தை எல்லோருக்கும் காட்டுவார். பிறகு, அந்தக் குடத்திலுள்ள ஓலைகள் வேறு குடத்தில் போடப்பட்டு நன்றாகக் குலுக்கப்படும். அதன் பிறகு ஒரு சிறுவனை அழைத்து ஓர் ஓலையை எடுக்கச் சொல்வார்கள். அதிலிருக்கும் நபரின் பெயர் கூட்டத்தில் வாசிக்கப்படும். அவரே வாரிய உறுப்பினராகத் தேர்வுசெய்யப்படுவார். இது போன்றே எல்லா வாரியங்களுக்கும் உறுப்பினர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதைத்தான் அந்தக் கல்வெட்டு கூறுகிறது.

சதுர்வேதி மங்கலத்தைத் தொடர்ந்து, 11-ம் நூற்றாண்டில் வெள்ளாளர் சமூகத்தினர் சித்திர மேழி பெரிய நாட்டார் சபையைத் தொடங்குகிறார்கள். இந்தச் சபையின் மூலம் வெள்ளாளர் சமூகத்தினர் குடவோலை முறை மூலம் ஓர் ஊரை நாட்டாமை செய்யும் உரிமையை எப்படி வாங்கினார்கள் என்பதை திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள் விவரிக்கின்றன.

ஆக, குடவோலை முறை என்பது சாதியரீதியாகவே இருந்திருக்கிறது என்பதை வரலாற்றுச் சான்றுகள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.

குடவோலையும் வாக்குச்சீட்டும்!
குடவோலை முறை என்பது உறுப்பினர்களுக்கான ஒரு தேர்வு முறை. அதை நம்முடைய இப்போதைய ஜனநாயகத் தேர்தல் முறையுடன் நிச்சயம் ஒப்பிடக் கூடாது. ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே போட்டியிட முடியும். அவர்களுக்கே நிர்வாக உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மற்றவர்களுக்குப் போட்டியிடும் வாய்ப்புகள்கூட வழங்கப்படவில்லை என்பதே உண்மை. நிர்வாகத்தில் கருத்து சொல்லும் உரிமை, பிரச்னைகளைத் தட்டிக்கேட்கும் உரிமை போன்றவையெல்லாம் இருந்தனவா என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் இல்லை. எந்த நிர்வாக வழக்கமும் இல்லாத காலகட்டத்தில் தமிழர்கள் ஒரு விதி வகுத்து, குடவோலையைக் கடைப்பிடித்தார்கள் என்பது பெருமைப்படவேண்டிய ஒன்றுதான். ஆனால், அது தனிப்பட்ட ஒரு சாதியினருக்கானதாகத்தான் இருந்திருக்கிறது என்பதையும் சேர்த்தே புரிந்துகொள்வது முக்கியம்.

பொதுவாகவே, வரலாற்றை ஆராய்பவர்களில் பலரும் தங்களுடைய சொந்தக் கண்ணோட்டத்தையும் சேர்த்தே சொல்லிவிடுவதுண்டு. அப்படி யாரோ சொல்வதை வைத்தெல்லாம் வரலாற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது. உண்மை என்ன என்பதை ஆழ்ந்து அறிந்து, தெரிந்துகொண்டு அதன் பிறகு கொண்டாடினால் வரலாறு சிறக்கும். அப்படி ஆழ்ந்து அறிந்துகொள்ள வாய்ப்பில்லையென்றால், கண்டதையும் அப்படி அப்படியே நம்புவதையும், பரப்புவதையும் தவிர்த்தாலே போதும்... ஜனநாயகத்துக்குச் செய்யும் மாபெரும் தொண்டாக இருக்கும்.

குடவோலை எந்த வகையிலும் ஜனநாயகத்துக்கான அடிப்படையாக இருக்கவே முடியாது. இப்போது இருப்பதுதான் உண்மையான ஜனநாயகத் தேர்தல் முறை. எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம உரிமை இருக்கிறது என்ற ஜனநாயகத் தேர்தல் முறையே மக்களாட்சியின் வெற்றி” என்று தெளிவாக விளக்கினார், விக்னேஷ் சீனிவாசன்.

இனியாகிலும் எதற்கெடுத்தாலும்... `தமிழேண்டா...', `இந்தியண்டா', `பாரத் மாத கி ஜே' என்றெல்லாம் எடுத்ததுமே கூப்பாடு போடாமல், நிதானிப்போம். உண்மை இருந்தால் உரக்கச் சொல்வோம்... இல்லையேல், ஃபார்வர்ட் செய்யாமலாவது இருப்போம்!

தேமொழி

unread,
Jun 7, 2024, 1:05:14 AMJun 7
to மின்தமிழ்

" குடவோலைத் தேர்தல் "

மா.மாரிராஜன்

தமிழர்களின் பண்டைய குடவோலைத் தேர்தல் முறை. உத்ரமேரூர் கல்வெட்டு.

குடவோலைத் தேர்தல் முறை சங்க இலக்கியங்களிலேயே காணப்படுகிறது. காலத்தால் மிக மூத்த தொல்லியல் ஆவணமாக முற்கால பாண்டியன் மாறஞ்சடையனின் மானூர் கல்வெட்டு குடவோலை தேர்தல் பற்றிக் கூறுகிறது.

உத்ரமேரூர் பராந்தகச்சோழனின் கல்வெட்டு குடவோலை முறையை விரிவாகப் பதிவு செய்கிறது.

உத்ரமேரூர் ஊர்சபை
12 சேரிகளாகவும்., 30 குடும்புகளாகவும் ( வார்டு)  பிரிக்கப்பட்டு வாரிய உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ..
1. ஆண்டு வாரியம்.
2. ஏரி வாரியம்.
3.பொன் வாரியம்.
4 பஞ்சவாரியம்.
போன்ற வாரிய உறுப்பினர்களாக ஊர்சபையின் பணியாளர்களாக இருப்பார்கள்..

இவ்வாரிய உறுப்பினர்கள் குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தலில் நிற்பதற்கானத் வேட்பாளர்களின் தகுதி.
தேர்தல் நடைபெற்ற முறை ஆகிய செய்திகள் விரிவாகக் கல்வெட்டில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்திகளை விரிவாக பார்க்க இருக்கிறோம்.

அதற்கு முன்பாக ஒரு விடயத்தை தெளிவுபடுத்தவேண்டியது அவசியமாகிறது.

சமீப காலத்தில் ஒரு பெரும் உருட்டு ஒன்றை உருட்டுகிறார்கள்.

உத்ரமேரூர் கல்வெட்டு என்றாலே அது பார்ப்பனர்களுக்கானத் தேர்தல். பார்ப்பனர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதுவா மக்களாட்சி.?
என்று பொங்கி எழுவார்கள்..

நிச்சயம் இது தவறான,ஆதாரமற்ற  வன்மமான யூகமானக் குற்றச்சாட்டு .

தேர்தலில் நின்றவர்கள் பார்ப்பனர்கள் மட்டும் என்று கல்வெட்டில் இல்லை..

சதுர்வேதி மங்கலம் என்றாலே பார்ப்பனர்கள் மட்டும்தானே இருப்பார்கள் என்ற கேள்வியை எழுப்புவார்கள்..

உண்மைதான்..
நான்கு வேதங்களை கற்ற தூய்மையான எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடாத பார்ப்பனர்களின் வாழ்வாதரத்திற்காக அரசு நிலம் வழங்கும். இந்நிலத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்கு வரி கிடையாது. இதுதான் சதுர்வேதிமங்கலம்.

ஆனால்...
தேர்தலில் நிற்பவர்களின் முதல் தகுதியே, சொந்தமாக வரிகட்டக்கூடிய கால்வேலி நிலம் இருக்கவேண்டும்..

சதுர்வேதிமங்கல பிராமணர்களோ வரிஇல்லா இறையிலி நிலம் வைத்திருப்பார்கள். ஆகவே சதுர்வேதிமங்கலத்து பிராமணர்கள் தேர்தலில் நிற்பதற்கே தகுதியற்றவர்கள்.

சதுர்வேதிமங்கலத்தில் பிராமணர்கள் மட்டும் குடியிருப்பார்களா.?

இதுவும் தவறு.
சதுர்வேதி மங்கலத்தில் பிராமணர்கள் மற்றும் அனைத்து சமூக மக்களும் குடியிருந்தனர். ஏராளமான சான்றுகள் உண்டு.

உதாரணமாக ..
மூன்றாம் இராஜராஜனின் திருமானிக்குழி கல்வெட்டு.
' ஜெயங்கொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்து தென்பிடாகை மணற்குடியிருக்கும் ஊர்பறையன் மண்டை சோமனான ஏழிசை மோகப்படைச்சான் " என்பவர் கோவிலுக்கு நிவந்தம் வழங்குகிறார்.
( S.i.i.vol 7 no 794)

அதாவது சதுர்வேதிமங்கலத்தில் பிராமணர், பறையர் உள்ளிட்ட அனைத்தும் சமூகத்தினரும் குடியிருந்தனர்.

வேத சாஸ்திரங்களைக் கற்றவர்கள் பார்ப்பனர்கள் மட்டும்தானே....

இதுவும் தவறு...

வேத சாஸ்திரங்களை பார்ப்பனர்களும் மற்றும் அனைத்து சமூகத்தினரும் கற்றனர்.
ஏராளாமான கல்வெட்டுச்சான்றுகள் உண்டு.

சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்றில் கையெழுத்துப்போட தெரியாமல் கைரேகை இட்ட (தற்குறி) பிராமணர்களும், எழுத்தால் கையெழுத்துப்போட்ட மற்ற சமூகத்தினரும் உண்டு. ( புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண் 421)
கல்வியறிவு என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து சமூகத்தாருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தது...

முடிவாக...
உத்ரமேரூர் சதுர்வேதிமங்கல ஊர்சபை குடவோலைத் தேர்தல் என்பது பார்ப்பனர்களுக்கு  அல்ல.. அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய பொதுவான ஊர்சபை தேர்தல் என்று உறுதியாகக் கூறி...

உத்ரமேரூர்..
குடவோலைக் கல்வெட்டின் விபரங்களைப் பார்ப்போம்..
---------------------------------------

உத்ரமேரூர்.. கல்வெட்டு..

மதுரைகொண்ட கோபரகேசரியான முதலாம் பராந்தகனின்
கல்வெட்டு. இரண்டு கல்வெட்டு..

அவரது 12 ஆம் ஆட்சியாண்டு..
 ( கி.பி.919)

மற்றும்.

அவரது 14 ஆம் ஆட்சியாண்டு.
( கி.பி.921)

தேர்தலில் நிற்பதற்கான வேட்பாளர்களின் தகுதிகள்..

முதல் கல்வெட்டு.

1. சொந்தமாக கால் வேலி வரி கட்டும் நிலம் வைத்திருக்கவேண்டும்.

2. தனக்குச் சொந்தமான மனையில் வீடு கட்டப்பட்டிருக்க

வேண்டும்.

3.  30-  60 வயதுக்குள்  இருக்கவேண்டும்.

4. வேத, சாஸ்திரத்திலும் எந்த ஒரு  காரியத்திலும் வல்லவராக  இருக்கவேண்டும்.

5. நல்ல வழியில் சேர்த்த  செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் உடையவராக இருக்கவேண்டும்.

6. கடந்த கால தேர்தலில் பங்கேற்று   வாரியத்திலும் உறுப்பினராக இருந்தவர்கள் இம்முறை தேர்தலில் நிற்கக் கூடாது.

7.  கடந்தமுறை  வாரிய உறுப்பினராக இருந்தவர்களின்  நெருங்கிய உறவினர்களும் இம்முறை தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை.

இரண்டாம் கல்வெட்டு ..

1. கால் வேலிக்கு அதிகமான வரி செலுத்தக்கூடிய   சொந்த நிலம் இருக்க  வேண்டும்.

2. தனது சொந்த நிலத்தில் சொந்தமாக வீடு இருக்கவேண்டும்.

3. வயது 35 - 70 க்குள் இருக்க வேண்டும்.

4. வேத சாஸ்த்ரம். அறிந்து அதைப் பிறருக்கு கற்பிக்கும் திறன் பெற்றவராய் இருக்கவேண்டும்.

5. கால்வேலிக்கு குறைவாக நிலம் இருப்பவர்,  ஒரு  வேதம்  நான்கு  பாஷ்யத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்.

6. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.

7. கடந்த முறை  எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது.

 8. கடந்தமுறை  வாரிய உறுப்பினராக இருந்தவர்களின். நெருங்கிய உறவினர்கள் இம்முறை தேர்தலில் நிற்க இயலாது.

9. வாரியத்தில் இருந்து கணக்கு காட்டாதவர்களின்   உறவினர்களும்.. அவரது  தாயின் சிறிய, பெரிய சகோதரிகளின் மக்கள் - தந்தையின் சகோதரிமக்கள் - மாமன் - மாமனார் - மனைவியின் தங்கையை மணந்தவர் - உடன் பிறந்தாளை திருமணம் செய்தவர் - தன் மகளை மணம் புரிந்த மருமகன் . ..
இவர்களும் தேர்தலில் நிற்க இயலாது.

10.  பஞ்சமா பாதகங்கள் செய்தார்,  பாவம் செய்தவர்கள், கையூட்டுப் பெற்றவர்கள்..
குற்றம் செய்து அதற்காக  பரிகாரம் செய்தோர்...
இவர்களும் இவர்களது உறவினர்களும் தேர்தலில் நிற்க இயலாது.  

 11.கொலைக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்,  அடுத்தவர் பொருளை களவு செய்தவர் , ஊர் மக்களுக்கு விரோதி... இவர்களும் தேர்தலில் நிற்க இயலாது.

12.  குற்றம் செய்து கழுதை மீது  ஏறியோர், பொய் கையெழுத்திட்டோர்....
இவர்களும் தேர்தலில் நிற்க இயலாது..

"தேர்தல் நடக்கும்  முறை.."

மேற்கண்ட  தகுதிஉடைய வேட்பாளர்கள் ஒவ்வொறுவரின்  பெயர்களைத் தனித்தனியே ஒரு   ஓலையில் எழுதி ஒரு குடத்தில் போடுவார்கள்..

ஊர் சபையில்  உள்ள அனைவரும் கூடியிருக்கும் ஒரு பொதுமேடையில்., ஊரில் உள்ள பெரியோர்கள் முன்னிலையில்,
வயோதிகராய் உள்ள ஒருவர்  ஓலை இடப்பட்டுள்ள  குடத்தைத் தூக்கி எல்லோரும் நன்கு காணுமாறு மக்களிடம் காட்டுவார்.

அதன்பிறகு
அக்குடத்திலிருக்கும் ஓலைகளை வேறொரு குடத்தில் போட்டு  நன்றாக் கலக்குவர்.

 பின் ஏதும் அறியாத ஒரு சிறு பிள்ளையை அழைத்து   ஒரே ஒரு ஓலையை மட்டும் எடுக்கச்செய்வர்.

எடுத்த ஓலையை சபையின் நடுவர்
தனது ஐந்து விரலையும் அகல விரித்து உள்ளங்கையில் வாங்குவார்.
 வாங்கிய ஓலையை அவர் வாசிக்கவேண்டும்.
ஓலையில் இருக்கும் நபர் வாரிய உறுப்பினராக அறிவிக்கப்படுவார்.

 இவ்வாறே முப்பது  குடும்பிற்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது கடமைகளை ஆற்றுவர்.

ஏறக்குறைய 1100 ஆண்டுகளுக்க்கு முன்பு.. ஒரு சரியான நேர்மையான தேர்தல் ஒன்று.. தமிழர்களின் தொல்லியல் ஆவணமாக பதிவுசெய்யப்பட்ட வரலாறு..

மா.மாரிராஜன் #WhatsAppShare 

தேமொழி

unread,
Jun 7, 2024, 2:20:39 AMJun 7
to மின்தமிழ்
ref:  https://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/uttar_merur.htm


உத்திர மேரூர் கல்வெட்டுக்கள்
(முதலாம் பராந்தகன்)



முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை

அமைவிடம் : உத்திரமேரூர், காஞ்சிபுரம்வட்டம், செங்கல்பட்டுமாவட்டம்
அரசன் : முதலாம் பராந்தகன் (பொ.ஆ 907 - 956)
ஆட்சியாண்டு : 12 மற்றும் 14
பொ. ஆ. : பொ.ஆ. 919 , 923
மொழி : தமிழ்
எழுத்து : 10ஆம் நூற்றாண்டு தமிழும் கிரந்தமும்

உத்திரமேரூர் ஊர்ச் சிறப்பு :

வரலாற்றுச்சிறப்புமிக்க ஊரான உத்திரமேரூர் காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. உத்திரமேரூர் நான்மறையுணர்ந்த வேதியர்கள் நிறைந்து விளங்கியதால் உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம் என்றும், உத்திரமேரூர் என்றும் வழங்கப்பட்டது. உத்திரமேரூரில் உள்ள கோயில்கள் பல்லவர் காலப் பழமை வாய்ந்தவை. இதில் சிறப்புமிக்க பல கோயில்களும் அவற்றில், பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களும் உள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால மக்களின் வாழ்க்கை, பஞ்சாயத்து ஆட்சிமுறை பற்றிய செய்திகள் கல்வெட்டுக்களில் காணக்கிடைக்கின்றன.

மற்ற பெயர்கள் :

உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம், ராஜேந்திர சோழ சதுர்வேதிமங்கலம், விஜயகண்டகோபால சதுர்வேதிமங்கலம், வடமேருமங்கை, உத்திரமேலூர், பாண்டவவனம், பஞ்சவரத ஷேத்திரம், இவ்வாறாகப் பலவிதமாக அழைக்கப்பட்டுள்ளன.

உத்திரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுக்கள் :

உத்திரமேரூரில் ஊர் பெருமக்கள் சபை இயங்கி வந்துள்ளது. இச்சபை உழவு, கல்வி, மராமத்துவேலை, கோயில் பணி, வாணிபம் முதலானவற்றை நிர்வகித்து வந்தது. சபை பல வாரியங்களாகச் செயல்பட்டது. குடவோலை முறையில் அங்கத்தினர் தேர்வு செய்யப்பட்டது போன்ற சிறப்புமிக்க ஊராட்சிமுறையைப் பற்றி 2 கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.அவற்றுள் ஒன்று முதலாம் பராந்தகனின் 12 ஆம் ஆட்சியையும் (கி.பி917), மற்றொன்று 14ஆம் ஆட்சியாண்டையும் சேர்ந்தது (கி.பி919). உத்திரமேரூர் இரண்டாம் நந்திவர்மனது காலத்திலேயே முதன்முதலாக உத்திரமேரூர் (கி.பி.750) சதுர்வேதிமங்கலமாக உருவாக்கப்பட்டது. 1200 வேத வைஷ்ணவ பிராமணர்களுக்குத் (சதுர்வேதிமங்கலமாக) தானமாக வழங்கப்பட்ட நிலமாகும். எனவே ஆரம்பமுதலே இது ஒரு பிராமண குடியிருப்பாக திகழ்ந்துள்ளது.

குறிப்பு :

குடவோலை முறைப் பற்றிப் பேசும் முதல் கல்வெட்டு 12 வரிகளைக் கொண்டது. இரண்டாம் கல்வெட்டில் 18 வரிகள் உள்ளன. கல்வெட்டுப் பாடத்திலிருந்து முதல் 5 வரிகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுப் பாடம் :

1. ஸ்வஸ்திஸ்ரீ (;) மதிரை கொண்ட கோப்பரகேசரிவர்மர்க்கு யாண்டு பனிரண்டு ஆவது (;) உத்திரமேருச்சதுர்வேதிமங்கலத்து சபையோம் இவ்வாண்டுமுதல் எங்களூர் ஸ்ரீமுகப்படி ஆஞை
2. யினால் தத்தனூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக்காலும் ஸம்வத்ஸர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரிவாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தை செய்த
3. பரிசாவது ;) குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரேய் கூடி காநிலத்துக்கு மேல் இறை நிலமுனையான் தன் மனையிலே அகம்
4. எடுத்துக்கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணரென்னப்பட்டி
5. ருப்பாரை அர்த்தசௌசமும் ஆத்ம சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாத்தார் வாரியஞ் செய்தொழிந்த பெருமக்களுக்கு ...........

கல்வெட்டுச் செய்தி :

மதுரையைப் கைப்பற்றிய பரகேசரிவர்மனான முதலாம் பராந்தகனின் 12ஆம் ஆட்சியாண்டிலும் (கி.பி917), 14ஆம் ஆட்சியாண்டிலும் (கி.பி. 919) உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்தின் சபை கிராம நிர்வாகத்திற்குத் தேவையான குழுக்களை அரசாணையின்படி அமைக்கிறது. அவ்வமைப்பின்படி அரசு அதிகாரி ஒருவரும் உடன் இருக்க ஒவ்வொரு ஆண்டும் சம்வத்ஸர வாரியம் தோட்டவாரியம், ஏரிவாரியம், பொன் வாரியம், பஞ்சவாரியம் போன்ற வாரியங்கள் அமைக்கப்பட்டு அதன் செயல்பாட்டிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கான தகுதிகள் என்ன அவர்களது பதவிக்காலம் போன்றவை இக்கல்வெட்டில் விளக்கப்பெற்றுள்ளன. உத்திரமேரூர் சபையில் 30 குடும்புகளும், 12 சேரிகளும் உள்ளன. எனவே அவை அனைத்திற்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் முறையில் தேர்தலானது நடத்தப்படவேண்டும். அவ்விதம் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் தகுதிகள், தேர்வு முறைகள், தேர்வுக்குப் பின் நடைபெறவேண்டிய நடைமுறைகள் ஆகியவை கல்வெட்டுக்களில் தெளிவுற விளக்கப்பட்டுள்ளன.

முதல் கல்வெட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில விதிமுறைகளின்படி ஊராட்சித் தேர்வு நடைபெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். பின்னர் மீண்டும் 14 ஆம் ஆண்டு மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது இடைப்பட்ட ஆண்டில் ஏதோ சிக்கல் ஏற்பட்டிருக்கும் போல் தோணுகிறது. மேலும், உத்திரமேரூர் ஊராட்சித் தேர்தலை நாகசாமி போன்ற வரலாற்றாய்வாளர்கள், இது மக்களாட்சி முறையிலான ஊராட்சித் தேர்தல் என்று விளக்குகின்றனர். உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம் எனும் பெயரிலிருந்தே அது ஒரு பிராமணக்குடியிருப்பு என்பதைத் தெளிவாக்குகின்றது.

மேலும் இக்கல்வெட்டில் உறுப்பினர்களின் தகுதிகள் குறிப்பிடப்படும் பொழுது, வேத, சாஸ்திரத்தில் வல்லுனர்கள் மட்டுமே இதில் உறுப்பினராகத் தகுதி படைத்தவராகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும், இது போன்ற தேர்தல் முறை (குடவோலை முறையிலான ஊராட்சித்தேர்தல்) வேறேங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. பாண்டிய மன்னன் மாறன் சடையனின் காலத்தைச்சேர்ந்த மானூர் (திருநெல்வேலி மாவட்டம்)கல்வெட்டும் பிரம்மதேய ஊர்களுக்கான சபைத் தேர்வுமுறை பற்றிப் பேசுகிறது. நடனகாசிநாதன், ஒட்டு மொத்தமாக கல்வெட்டுச்செய்திகள் பற்றிக் கூறுகையில் தமிழ்நாடு முழுவதுமே குடவோலை முறையிலான ஊராட்சித்தேர்தலே நடைபெற்றதாகக் கூறுகின்றார். எனவே இதை மக்களாட்சி முறையிலான ஊராட்சித் தேர்தல் என்பதற்குப் பதிலாக பிராமண ஊர்களின் சபைத்தேர்தல் என உரைப்பது சாலச்சிறந்ததாகும். இனி கல்வெட்டுச் செய்திகளைக் காண்போம். இதில் வாரியங்கள் ஸம்வத்ஸர வாரியம், தோட்டவாரியம், ஏரிவாரியம், பொன் வாரியம், பஞ்சவாரவாரியம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் பணி என்ன? என்பது நேரடியாக்க் கொடுக்கப்படவில்லை. அதன் பெயர் கொண்டு ஆய்வாளர்கள் ஸம்வத்ஸர வாரியம் என்பது - ஆண்டுக்கு ஒரு முறை கூடும் மேற்பார்வைக்குழு என்றும், தோட்டவாரியம் - தோட்டப்பணிகளைக் கண்காணிப்பது என்றும், ஏரிவாரியம் - நீர் நிலைகளை நிர்வகிப்பது என்றும், பொன் வாரியம் - பொன்னின் மாற்றை காண்பதற்கும், பஞ்சவார வாரியம் - நில வரி வாரியம் (1/5 ஐந்தில் ஒரு பங்கு நிலவருவாய் பெறும் குழு ) என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

சபை உறுப்பினராக்க் கோரப்படும் தகுதிகள்(முதல் கல்வெட்டு) :

1. 1/4 வேலிக்கு மேல் இறை கட்டும் நிலம் வைத்திருக்கவேண்டும்
2. சொந்த மனையில் வீடு கட்டப்பட்டிருக்கவேண்டும்
3. வயது 30மேல் 60க்குள் இருக்கவேண்டும்
4. வேதத்திலும் சாஸ்திரத்திலும் தொழிலும் காரியத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்
5. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.
6. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களதுநெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.

சபை உறுப்பினராகக் கோரப்படும் தகுதிகள்(இரண்டாம் கல்வெட்டு) :

1. கால் வேலிக்கு அதிகமான இறை செலுத்தக் கூடிய சொந்த நிலம் பெற்றிருக்க வேண்டும்.
2. அந்நிலத்தில் சொந்த மனை இருக்கவேண்டும்.
3. வயது வரம்பு முந்தைய கல்வெட்டில் 30க்கு மேல் 60க்குள் என்றிருந்தது. பின் அது மாற்றப்பட்டு 35க்கு மேல் 70க்குள் என்று வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. மந்தர பிரமாணம் அறிந்து அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுபவன்.
5. 1/8 நிலமே பெற்றிருப்பினும் 1 வேதத்திலும் 4 பாஷ்யத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்.


6. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.

7. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.
8. ஏதாவதொரு வாரியத்தில் இருந்து கணக்கு காட்டாது சென்றவர்களும் அவர்களது உறவினர்களும் உறுப்பினராகக்கூடாது. (முன் கல்வெட்டில் இவ்விதம் குறிக்கப்படவில்லை); தாயின் சிறிய, பெரிய சகோதரிகளின் மக்கள் - தந்தையின் சகோதரிமக்கள் - மாமன் - மாமனார் - மனைவியின் தங்கையை மணந்தவர் - உடன் பிறந்தாளை திருமணம் செய்தவர் - தன் மகளை மணம் புரிந்த மருமகன் . இது போன்ற சுற்றத்தினர் யாரும் தங்களது பெயர்களைக் குடவோலைக்கு எழுதுதல் கூடாது.
9. ஆகமங்களுக்கு எதிராக (அகமிஆகமான) பஞ்சமா பாதஹங்கள் செய்தார், கொள்கையை மீறுபவன் (ஸம்ஸவர்க்கப்பதிதரை), பாவம் செய்தவர்கள், கையூட்டு பெற்றவர்கள் அதற்கான பரிஹாரகளைச் செய்து தூய்மை அடைந்திருந்தாலும் அவர்களை உறுப்பினராகும் தகுதியற்றவரே. அவர்களது உறவினர்களும் உறுப்பினராக இயலாது. கொலைக்குற்றஞ்செய்யத் தூண்டுபவர், கட்டாயத்தினால் கொலைக்குற்றம் செய்பவர் (சஹசியர்), அடுத்தவர் பொருளை அபஹரிப்பவர், ஊர் மக்களுக்கு விரோதியாய் இருப்போர் (கிராம கண்டகர்) இவர்கள் உறுப்பினராகத் தகுதியற்றவர்களாவர்.
10. கழுதை ஏறியோரும், பொய் கையெழுத்திட்டோரும் உறுப்பினராகத் தகுதியற்றோராவர். இதன் மூலம் உறுப்பினர்களுக்கான தகுதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

தேர்தல் முறை: Mode of Election :

இவ்விதம் தகுதிஉடைய உறுப்பினர்களின் பெயர்களைத் தனித்தனியே ஒவ்வொரு குடும்பும் ஒலையில் எழுதி ஒரு குடத்தில் இட்டு அதன் வாயைக்கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். தேர்தல் நாள் அன்று மஹாசபையில் ஊரில் உள்ள அனைவரும் கூடியிருக்கவேண்டும். ஊரில் உள்ள நம்பிமார்களும் (பூசாரிகள்) இருக்கவேண்டும். அதில் ஒருவர் உள் மண்டபத்தில் இருக்கவேண்டும். கூடி நிற்கும் நம்பிமார்களில் வயோதிகராய் உள்ள ஒருவர் ஒரு குடும்பிலிருந்து ஓலை இடப்பட்டுள்ள ஒரு குடத்தைத் தூக்கி எல்லோரும் நன்கு காணுமாறு மக்களிடம் காட்டுவார். அவ்விதம் காட்டிய பின் அக்குடத்திலிருக்கும் ஓலைகளை வேறொரு குடத்திலிட்டு நன்றாக்க் கலக்குவர். பின் ஏதும் அறியாத ஒரு சிறுவனைக் கொண்டு ஒரே ஒரு ஓலையை மட்டும் எடுக்கச்செய்வர். எடுத்த ஓலையை மத்யஸ்தன் தனது ஐந்து விரலையும் அகல விரித்து உள்ளங்கையில் வாங்கவேண்டும். வாங்கிய ஓலையை அவர் வாசிக்கவேண்டும். வாசித்த பிறகு உள் மண்டபத்திலிருக்கும் நம்பிமாரும் அதை வாசிப்பர். அவ்விதம் வாசித்த பெயரைப் பின்னர் எழுதிக்கொள்வர். இவ்விதமே 30 குடும்பிற்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது கடமைகளை ஆற்றுவர்.

தேமொழி

unread,
Jun 7, 2024, 2:37:28 AMJun 7
to மின்தமிழ்
குடும்பில் குடவோலை
ச. கமலக்கண்ணன்
ref:http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=334
வரலாறு - இதழ் 22[ ஏப்ரல் 16 - மே 15, 2006 ]

"பேரன்பார்ந்த பெரியோர்களே! தாய்மார்களே! இன்னும் சற்று நேரத்தில், சேவூர் முதலான போர்க்களங்களில் காட்டிய வீரத்தால், சக்கரவர்த்திகளின் ஆசி பெற்ற உங்கள் வேட்பாளர் சாகாவரம் பெற்ற சத்தியவான் பஞ்சவன் பிரமாதிராயர் ஓட்டுக் கேட்டு உங்கள்முன் வர இருக்கிறார்! அவருக்கு உங்கள் பொன்னான வாக்குகளைப் புலிச் சின்னத்தில் இட்டுப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க, தெரிஞ்ச கைக்கோளப் படையின் வலங்கைப் பிரிவின் முப்பத்தேழாவது வட்டம் சார்பில் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்."

சோழர் காலத்தில் இப்படியெல்லாம் வாக்குச் சேகரித்துத் தேர்தல் நடத்தி இருப்பார்களா? கல்வெட்டுகளின்படி பார்த்தால், நாம் நடத்துவதைப் போன்றதொரு தேர்தல் நடைபெற்றதில்லை. அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கக் குடவோலைமுறை என்றொரு வழியைப் பின்பற்றியிருக்கிறார்கள். ஆனால், நம் கதையாசிரியர்களும், சில அரைகுறை வரலாற்றாய்வாளர்களும் சோழர்களின் பெருமைகளை உலகுக்கு எடுத்துக் கூறுவதாக எண்ணிக்கொண்டு, இப்படியொரு தகவலைப் பரப்பி, அதைப் படிக்கும் பலரும் உண்மையென்றே நம்பி வந்திருக்கின்றனர். கதாசிரியர்களையாவது விட்டு விடலாம். அது அவர்களின் கற்பனைச் சுதந்திரம். கதை சொல்லும் திறத்தால், அக்கதையை உண்மையென்று நம்பி, 'சிவகாமி இங்கெல்லாம் நாட்டியமாடியிருப்பாளா?', 'ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டது கீழ்க்கடம்பூரா அல்லது மேலைக்கடம்பூரா?' என்றெல்லாம் வாசகர்கள் மண்டையை உடைத்துக்கொண்டால், அது படிப்பவர்களின் தவறுதான். ஆனால், வரலாற்றை எழுதுகிறேன் பேர்வழி என்று அரைகுறையாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களை வெளியிடுவதும், பரபரப்புக்காக அவசரப்பட்டு ஒரு செய்தியை வெளியிட்டுவிட்டுப் பிறகு அதையே உண்மை என்று சாதிப்பதும், மக்களுக்கு வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆர்வத்தையும் குலைத்துவிடும்.

நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது, உத்திரமேரூர்க் கல்வெட்டுகளைப் பற்றி ஒரு பாடம் இருந்தது. அதை எங்கள் தமிழாசிரியர் முதல் பத்தியில் சொன்னது போலத்தான் சுவாரசியமாகப் பாடம் நடத்தினார். அதை முழுக்க உண்மையென்று நம்பினோம். இது மட்டுமல்ல. தஞ்சை இராஜராஜீசுவரத்தைப் பற்றி எத்தனை பொய்யான தகவல்கள்! எல்லாவற்றையும் உண்மையென்று நம்பிவிட்டு, பிறகு உண்மையில்லை என்று தெரியவரும்போது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சோழர்களையும் இராஜராஜீசுவரத்தையும் பற்றி எந்தக் கதையையும் ஊகங்களையும் சொல்ல வேண்டியதில்லை. ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மட்டும் சொன்னாலே போதும்! அவற்றின் பெருமைக்கு எந்தநாட்டுச் சரித்திரமும் ஈடாகாது.

இப்படியெல்லாம் இருக்க, உத்திரமேரூர்க் கல்வெட்டைத் தவறாகப் பொருள் கொள்வதற்கு என்ன காரணம்? அதில் பயின்று வரும் சில சொற்கள்தான். உதாரணமாக 'குடும்பு' என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். முதன்முதலில் இக்கல்வெட்டைக் கண்டுபிடித்து, அதன் பொருளை விளக்கிச் சொன்ன அந்த மகானுபாவர் யாரென்று தெரியவில்லை. குடும்பு என்ற சொல்லுக்கு 'வட்டம்' (இன்றைக்கு இருக்கும் Ward என்னும் அர்த்தத்தில்) என்று பொருள் கூறிவிட்டார். அவரைப் பின்பற்றிய மற்ற ஆய்வாளர்கள், பாடப்புத்தகங்கள் ஆகியவை அதையே உடும்பாகப் பிடித்துக் கொண்டுவிட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூரில் முனைவர். எ. சுப்பராயலு அவர்களின் தலைமையில் 'கல்வெட்டுச் கலைச்சொல்லகராதி' ஒன்று தயாரிக்கப்பட்டது. இதுவரை அரசால் படியெடுக்கப்பட்ட அனைத்துக் கல்வெட்டுகளிலும் வரும் சொற்களுக்கு, மற்ற கல்வெட்டுகளுடன் ஒப்புநோக்கிப் பொருள் கண்டறியப்பட்டது. அதில், குடும்பு என்ற சொல்லுக்கு, பிராமண ஊரின் விளைநிலங்களின் பாகுபாடு என்ற பொருளை அளித்துள்ளனர். அதாவது, பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊரிலுள்ள விளைநிலங்களின் பாகுபாடு. இதற்கு வலு சேர்க்கும் கல்வெட்டு,

ஆண்டு தோறும் குடும்பு மாறி இடவும்
இடும் மடத்துக் கட்டளைக்குப் பொருந்தினாரை இடவும்
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 6, கல்வெட்டு எண் 58)

இதைத்தவிர, குடும்பாட என்றால், உழுகுடிப் பணிசெய்ய என்றும், குடும்பு என்ற சொல்லுக்குக் குடியைக் (குடும்பத்தைக்) குறிக்கும் சொல் என மதுரை தமிழ்ப் பேரகராதியும் பொருள் தருகிறது.

சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் பூலாங்குறிச்சி என்ற ஊரில் கண்டறியப்பட்ட கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் குடும்பாட என்ற சொல் பயின்று வருகிறது. மற்ற கல்வெட்டுகளில் குடும்பாட, குடும்பிட்டு, குடும்பிலார், குடும்பு செய்தார், குடும்பு வாரியம் போன்ற சொற்கள் இடம்பெறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட உடையாளூர் கள ஆய்வின்போது, இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும் கீழ்க்கண்ட கல்வெட்டு படியெடுக்கப்பட்டது.

இராஜராஜதேவர்க்கு யாண்டு 30வது
... ஐந்தாம் குடும்பில்
... வதிக்குக் கிழக்கு
... வாய்க்காலுக்குத் தெற்கு
... முதல் கண்ணாற்று முதல் சதிரத்து
ஐம்பத்து மூன்றாம் குடும்பில்
மூன்றாம் தரத்து நிலம்

ஆக, குடும்பு என்பது வார்டு அல்ல. ஒரு வகையான விளைநிலத்தின் பாகுபாடு என்பது தெளிவாகிறது. இதன் பின்னரும் இன்னும் சிலர் ஊடகங்களிலும் இணையத்திலும் (சமீபத்திய சன்டிவியின் தேர்தல் கவியரங்கத்தில் கலைஞர் உட்பட) ஜனநாயகத் தேர்தல் முறை எனக்கூறி வருகிறார்கள். உத்திரமேரூர்க் கல்வெட்டு அப்படி என்னதான் சொல்கிறது என்பதையும் காண்போம்.
---
ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரிவன்மர்க்கு யாண்டு பனிரண்டாவது உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம் இவ்வாண்டு முதல் எங்கள் ஊர் ஸ்ரீமுகப்படி ஆணை

இதனால் தத்தனூர் மூவேந்த வேளான்இருந்து வாரியம் ஆக ஆட்டொருக் காலும் சம்வத்சர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்

த பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி கானிலத்துக்கு மேல் இறை நிலம் உடையான் தன் மனையிலே அ

கம் எடுத்துக் கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணர் என்னப் பட்டி

இருப்பாரை அர்த்த சௌசமும் ஆத்ம சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதார் வாரியம் செய்தொழிந்த பெருமக்களுக்கு

அணைய பந்துக்கள் அல்லாதாராய் குடவோலைக்கு பேர் தீட்டி சேரி வழியே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராம் ஆறு ஏதும் உருவறியாதான் ஒரு

பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்து பன்னிருவரும் சவத்ஸர வாரியம் ஆவதாகவும் அதன் பின்பே தோட்ட வாரியத்துக்கு மேல்படி குடவோ

லை வாங்கி பன்னிருவரும் தோட்டவாரியம் ஆவதாகவும் நின்ற அறுகுட வோலையும் ஏரி வாரியம் ஆ

வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியமும் முந்நூற்று அறுபது நாளும் நிரம்ப வாரியம் ஒழிந்த அனந்தரம் இஇடும் வாரியங்கள் இவ்வியவஸ்தை ஓலைப்படியே குடும்புக்கு குடவோலையிட்டு குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியம் செய்தார்க்கு பந்துக்களும் சேரிகளில் அனோன்யமே அவரு

ம் குடவோலையில் பேர் எழுதி இடப்படாதார் ஆகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்பது குடவோலையிட்டு சேரியால் ஒருத்தரை குடவோலை பறித்து பன்னிருவரிலும் அறுவர் பஞ்சவாரவாரியம் ஆவதாகவும் அறுவர்பொன்வாரியம் ஆவதாகவும் சம்வத்சர வாரியம் அல்லாத

வாரியங்கள் ஒருகால்செய்தாரை பின்னை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெறாதாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்னும் குடவோலை வாரியமேய் இடுவதாக தேவேந்திரன் சக்கரவர்த்தி ஸ்ரீவீரநாராயணன் ஸ்ரீபராந்தகதேவர் ஆகிய பரகேசவர்மர் ஸ்ரீமுகம் அருளிச் செய்து வரக்காட்ட

ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தனூர்மூவேந்தவேளான் உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கெட்டு சிஷ்டர்வர்த்தித்திடுவாராக வியவஸ்தை செய்தோம் உத்திரமேரு சதுர்மேரு சதுர்வேதி மங்கலத்துக்குச் சபையோம்.
(இந்தியத் தொல்லியல் துறை ஆண்டறிக்கை 1904-1905, பக்கம் 136-138)

இக்கல்வெட்டு, முதலாம் பராந்தகச் சோழர் (மதுரை கொண்ட பரகேசரியென்றாலே, முதலாம் பராந்தகர்தான்) காலத்தில் வெட்டப்பட்டது. இது வெட்டப்பட்டதன் நோக்கம், மூன்றுவகை வாரியங்களான சம்வத்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம் முதலானவற்றுக்கு வாரியத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளைக் கூறுவது. அது எப்படிப்பட்ட முறை? உத்திரமேரூர்ச் சதுர்வேதிமங்கலத்தை முப்பது குடும்புகளாகப் பிரித்து, ஒவ்வொரு குடும்பிலும் தகுதியுள்ளவர்களின் பெயர்களை ஓலையில் எழுதி, ஒரு குடத்திலிட்டு, கள்ளம் கபடமற்ற பாலகன் (ஆறு ஏதும் உருவறியாதான் ஒரு பாலனைக் கொண்டு, ஆறு = அழுக்காறு) ஒருவனை எடுக்கச்சொல்லி, 30 பேரில், 12 பேர் சம்வத்சர வாரியத்தலைவர்களாகவும், 12 பேர் தோட்ட வாரியத்தலைவர்களாகவும், மீதமுள்ள 6 பேர் ஏரி வாரியத்தலைவர்களாகவும் பணியமர்த்தப்படுவர். சதுர்வேதிமங்கலத்தைச் சுற்றியிருக்கும் சேரிக்கு (புறநகர்க் குடியிருப்பு) ஒருவராக, 12 சேரிகளைச் சேர்ந்த 12 பேரையும் இதே குடவோலை முறையில் தேர்ந்தெடுத்து, அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, 6 பேர் பஞ்சவார (ஒரு வகையான வரி) வாரியத்துக்கும் 6 பேர் பொன் வாரியத்துக்கும் தலைவர்களாக ஆகவேண்டும். இங்கு பொன்வாரியம் என்பது எதைக் குறிக்கிறது என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. பொற்கொல்லர்களுக்கான வரியாக இருக்கலாம் அல்லது பொன்னை வாங்கும்போது செலுத்தும் வரியாக இருக்கலாம்.

இதில் போட்டியிடுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும்?

1. குறிப்பிட்ட அளவு நிலம் வைத்திருப்பவர்கள் (கானிலத்துக்கு மேல் இறை நிலம் உடையான்)

2. சொந்த வீட்டில் குடியிருப்பவர்கள் (தன் மனையிலே அகம் எடுத்துக் கொண்டு இருப்பானை)

3. முப்பதிலிருந்து அறுபது வயதுக்குட்பட்டவர்கள் (அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார்)

4. வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றவர்கள் (வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணர்)

5. உடல்வலிமையும் உள்ளவலிமையும் உள்ளவர்கள் (அர்த்த சௌசமும் ஆத்ம சௌசமும் உடையராய்)

6. இதுவரை வாரியத்தலைவராக இருந்திராதவர் (வாரியம் செய்திலாதார்)

7. அவ்வாறு வாரியம் செய்தவர்களுக்கு உறவினராக அல்லாதவர் (வாரியம் செய்தொழிந்த பெருமக்களுக்கு அணைய பந்துக்கள் அல்லாதாராய்)

உத்திரமேரூர்ச் சதுர்வேதிமங்கலத்தில் மட்டும்தான் இப்படிப்பட்ட தேர்தல் முறை இருந்ததா? இல்லை என்கிறார், காலஞ்சென்ற டாக்டர். கிஃப்ட் சிரோமணி அவர்கள். அதே காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்திலும் (சுரத்தூர் நாட்டு, புலியூர்க் கோட்டத்து, ஜெயங்கொண்ட சோழ மண்டலம்) கிராம சபையினரைத் தேர்ந்தெடுக்க இம்முறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார். இந்தியத் தொல்லியல் துறை ஆண்டறிக்கை 1932-33, பக்கம் 75ல் உள்ள கல்வெட்டைக் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

The country was divided and subdivided into smaller units and Taampuram was located in Surattur nadhu, a subdivision of Puliyur kottam in Jeyankonda sola mandalam. The temples priests lived in villages called Chadurvedimangalam and there a lottery system (kudavolai) was used to select the village committee (sabhai). Some of the villages were renamed after the king but in most cases the earlier names prevailed.

இங்கு, கோயில் அர்ச்சகர்கள் குடியிருப்பைத்தான் சதுர்வேதிமங்கலம் என்று பெயர் எனும்படி பொருள் கொண்டிருக்கிறார் டாக்டர். கிஃப்ட் சிரோமணி. ஆனால், சதுர்வேதிமங்கலம் என்பது, நான்கு வேதங்களிலும் வல்லவர்களாக இருப்பவர்களுக்குக் கொடையளிக்கப்பட்ட கிராமம் என்பதே சரி. அர்ச்சகர்கள் மட்டுமின்றி, பிற தொழில்கள் புரியும் பிராமணர்களும் வசித்திருக்க வாய்ப்புண்டு.

ஆக, சோழர் காலத்தில் பின்பற்றப்பட்ட குடவோலை முறைக்கும், தற்போதுள்ள தேர்தல் முறைக்கும், அதிகாரிகளை/ஆள்பவர்களைத் தேர்ந்தெடுப்பது என்பதைத் தவிர, துளியும் தொடர்பில்லை என்பது புலனாகிறது. ஆனால், யோசித்துப்பார்த்தால், இப்போது இருப்பதைவிட, சிறந்ததொரு முறை என்பது தெரியவரும். அன்றைய சமுதாயத்தின் பக்குவப்பட்ட முதிர்ச்சி புலப்படும். இன்று தேர்தலில் நிற்க, வயது ஒன்றைத்தவிர, வேறெந்தத் தகுதியும் தேவையில்லை. குறிப்பிட்ட அளவு நிலம் வைத்திருப்பவர்களும் சொந்த வீட்டில் குடியிருப்பவர்களும் மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படமாட்டார்கள் என்று அக்காலத்தில் எண்ணியிருந்திருக்க வேண்டும். வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்பது ஒரு கல்வித்தகுதியாக இருந்திருக்கிறது. அவற்றைக் கற்றவர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியுமென விதித்திருப்பதால், வேதம் கற்காத பிராமணர்களும் அக்காலத்தில் இருந்தனர் என்பது தெரிய வருகின்றது. ஆக, சதுர்வேதிமங்கலத்தில் அர்ச்சகர்கள் மட்டுமே இருந்தனர் எனச்சொல்ல முடியாது.

ஒருவரே எத்தனைமுறை வேண்டுமானாலும் வாரியத்தலைவராக ஆகலாம் என அதிகாரத்தை ஏகபோக உரிமையாக்காமல், ஒருமுறைக்கு மேல் நிற்க முடியாமல் செய்திருப்பது நல்லது. இதனால், அனுபவக்குறைவு இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. ஏனெனில், மற்ற பிற தகுதிகளும், முன்னர் தலைவராக இருந்தவரின் வழிகாட்டலும் இவ்வனுபவக்குறைவை ஈடுசெய்யும். முன்பு தலைவராக இருப்பவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, தற்போதைய தலைவரிடம் தோற்றால்தான், போட்டி மனப்பான்மையினால் ஒத்துழைக்காமல் போக வாய்ப்புண்டு. எனவே, இதிலும் சிக்கல் இல்லை. ஏற்கனவே தலைவர் பதவியை அனுபவித்தவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருப்பது ஒரு தகுதிக்குறைவு என்பதால், வாரிசு அரசியல் தடுக்கப்படுகிறது.

இன்றைய பல பிரச்சினைகளுக்கு வரலாற்றில் தீர்வு இருப்பதைப் பாருங்கள்! எந்த ராஜா எந்தப் போரில் எந்த ஆண்டு ஈடுபட்டான் என்ற புள்ளி விவரங்களைப் படிப்பது மட்டுமே வரலாறு அல்ல. சமூக வாழ்க்கையின் பல்வேறு சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் வழிகாட்டிதான் வரலாறு. அலுவலகத்தில் வேலை செய்யும்போது அனுபவம் உதவுவதைப் போலத்தான். அனுபவம் என்பது ஒரு தனிமனிதனின் வரலாறு. வரலாறு என்பது ஒரு இனத்தின் அனுபவம். முடிந்த கதையைப் படித்து என்ன ஆகப்போகிறது என எண்ணாமல், வரலாற்றைப் படித்துப் பயன்பெறுவோமாக!

தேமொழி

unread,
Jun 28, 2024, 2:28:29 AM (2 days ago) Jun 28
to மின்தமிழ்

சோழர் கால ''சபா" தேர்தல் சட்டங்களும் - திருத்தங்களும்


— டாக்டர். எஸ். சாந்தினிபீ
மேனாள் பேராசிரியர், CAS, வரலாற்றுத் துறை, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.
chan...@gmail.com



பிராமணர் வாழ்ந்த  பிரம்மதேய கிராமங்களின் உள்ளூர் தன்னாட்சி அமைப்பு சபா என்று அழைக்கப்பட்டது. பல்லவர்கள் காலம் முதல் இது நடைமுறையில் இருந்தது.  கிபி 8 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டு வரை இவ்வமைப்பு பல மாற்றங்களைக் கண்டு இருந்ததற்கான ஆதாரமாக அதன் பதிவுகள் காணப்படுகின்றன. இது பாண்டியர்கள், சோழர்கள் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்கள் தென்னகத்தை ஆண்ட காலமாகும்.

தமிழ் நாட்டில் அதன் தொடக்கத்தைக் கண்டறியும் பொதுவான ஆர்வம் சில ஊகங்களுக்கு வழிவகுக்கிறது. ஆரம்பக்கால வரலாற்றுக் காலத்தில், சங்க காலம் (கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை) பிராமணர் வாழ்ந்த கிராமங்களின் கிராம நிர்வாக அமைப்பு  என அதன் உண்மைப் பொருளில் 'சபா' பற்றி ஆதாரங்கள் இல்லை, அதேசமயம், மன்று[1] போன்ற கற்றவர்களின் அவையைக் குறிக்கும் சொற்கள் உண்டு.

தென்னிந்தியாவிற்கு பௌத்தம், சமணம் மற்றும் வடமொழி தொடர்பான கலாச்சாரத்துடன் வந்தது சபா என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த கோட்பாடு.  புத்த, சமண இலக்கியங்களில் சபா பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் இந்தக் கருதுகோள் கருதப்படலாம். வட இந்தியாவின் இந்த இலக்கியச் சான்றுகள் சபா[2] வின் அமைப்பு மற்றும் பல்வேறு செயல்பாடுகளைப் பற்றிப் பேசுகின்றன.  ஆனால், வட இந்தியாவில் சபாவின் இருப்பை, அவை செயல்பட்டதை நியாயப்படுத்த எந்தக் கல்வெட்டு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. தென்னிந்திய இலக்கியங்களும் சபாவைப் பற்றிப் பேசவில்லை, அதே நேரத்தில் இதற்கான செய்தி செப்புப் பட்டயம் மற்றும்  கல்வெட்டுகளில் வெளிப்படுகிறது. மேலும், ‘சபா’ என்பது தமிழ்ச் சொல் அல்ல என்பதும் வெளிப்பாடு.

பல்லவர்கள் காலத்திலிருந்தே, தென்னிந்தியாவில் சபா இருந்தது, மற்றும் அதன் செயல்பாடுகளை மேற்கொண்டது.[3]   பாண்டியர் பிரதேசத்திலும் சபா சம காலத்தில் இயங்கியது.[4]  இதனால் சபாவிற்கு அரசியல் தடைகள் எதுவும் இல்லாமல் தென்னிந்தியா முழுவதும் இருந்ததை நாம் காண்கிறோம். ஏகாதிபத்திய சோழர்கள் மற்றும் விஜயநகரத்தின் குறிப்பிட்ட காலம் வரையிலும் கல்வெட்டுச் சான்றுகள் வழியே இதன் தொடர்ச்சியைக் காணலாம்.

8 ஆம் நூற்றாண்டுக்கும் 16 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், அனைத்துக் கால, அரசியல் மாற்றங்கள் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வேறுபாடுகளையும் தாங்கி நிற்க முடிந்தது என்பதே இந்த நிறுவனத்தின் சிறப்பு. ஒரு நிறுவனம் ஏறக்குறைய 900 ஆண்டுகள் நீடித்தது என்பது ஆச்சரியமான உண்மை. இந்த நிறுவனம் ஏகாதிபத்திய சோழர்களின் காலத்தில் (கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை) அதன் முழு ஆடம்பரத்துடனும் மகிமையுடனும் காணப்பட்டது. அது கட்டமைப்பு முறை, சரியான நேரத்தில் விதிக்கப்பட்ட சட்டங்கள், திருத்தப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளே அதன் நீண்ட காலச் செயல்பாட்டிற்கான புறக்கணிக்க முடியாத ஒரு சிறந்த காரணம். இக்கட்டுரையில் சபா சிறந்து விளங்கிய சோழர் காலத்தில் இருந்த கட்டமைப்புச் சட்டங்கள், திருத்தங்கள் பற்றி ஓர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

முதலாம் பராந்தகனின் காலத்திலிருந்து தொடங்கி மூன்றாம் இராஜராஜனின் ஆட்சி வரையிலான கல்வெட்டுச் சான்றுகள், சபா தேர்தல்கள்/தேர்வு, செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் நடத்தை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மன்னரின் சட்டங்களின் பேரில் பல மாற்றங்கள் மற்றும் கட்டுப் பாடுகளுக்கு  உட்பட்டதைத் தெளிவாக்குகிறது.

அமைப்பு:
பல கல்வெட்டுகள் சபாவின் இருப்பு மற்றும் செயல்பாட்டைப் பற்றிக் குறிப்பிடுகின்றன என்றாலும், மிகச் சில கல்வெட்டுகள் அதன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பற்றி நமக்கு விவரிக்கின்றன. இதைப் பற்றிக் கூறும் முதலாம் பராந்தகன் கால (கி.பி. 907-955) மூன்று கல்வெட்டுகளைக் காண்கிறோம். இரண்டு கல்வெட்டுகள் சென்னை செங்கல்பட்டு தாலுக்காவில் உள்ள உத்திரமேரூர் கிராமத்தில் (வரதராஜ பெருமாள் கோயில்) இருந்து கி.பி 919 மற்றும் கி.பி 921 தேதியிட்டவை.[6] மூன்றாவது கல்வெட்டு கி.பி 925 இல் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் உள்ளது.[7]

உத்திரமேரூர், நன்கு அறியப்பட்ட பிரமதேயமாகும், இது இரண்டாம் கட்ட நகரமயமாக்கலின் முதல் காலகட்டத்திலும் (கி.பி. 850-985) தனியூராக உருவாகும் அளவிற்குப் பெரிதாக இருந்தது. பொதுவாக குடவோலை அமைப்பு (குடம்= பானை, ஓலை = எழுதுவதற்கு ஊடகமாகப் பயன்படுத்தப்படும்) தேர்தல் முறையைப் பற்றிப் பேசும் இத்தகைய விரிவான கல்வெட்டை இங்கு மட்டுமே இன்றுவரை கண்டிருக்கிறோம்.

நீண்ட கல்வெட்டில் 5 முக்கியமான செய்திகள் உள்ளன அவை;
(1) இது பல குழுக்கள் (வாரியங்கள்) அவர்களின் பணி,
(2) குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விரிவான அமைப்பு முறை,
(3)  குழு உறுப்பினராகத் தேர்வு செய்வதற்குத் தேவையான தகுதிகள்,
(4)  தகுதியற்ற பல்வேறு வகையான நபர்கள் பட்டியல்,
(5) கணக்கர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகள். (ஒருவேளை அந்தப் பதவி மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருக்கலாம்.)

தேர்வு முறை:
மேற்கூறிய இரண்டு கல்வெட்டுகளின்படி, பிரம்மதேய கிராமமான உத்திரமேரூர் 30 குடும்புகளாகப் பிரிக்கப்பட்டு, அவை 12 சேரிகளாகப் பகுக்கப்பட்டது.
சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தேவையான தகுதியாக 4 முக்கிய அளவுகோல்கள் குறிப்பிடப்பட்டன:
தகுதிகள்:
(1) வயது: 30 வயதுக்குக் குறையாத மற்றும் 60 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் (கிபி-919). ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள்(கிபி-921) 35 முதல் 70 வயது வரையென மாற்றப்பட்டது.
(2) கல்வித் தகுதி: ஒருவர் மந்திரபிரம்மத்தை அறிந்திருக்க வேண்டும், அதாவது அந்த நபர் தான் கற்றதுடன், மற்றவர்களுக்குக் கற்பிக்கும் தகுதியும் கொண்டிருக்க வேண்டும்.
(3) சொத்து: அக்காலத்தின் மிகப்பெரிய நில அளவான ஒரு வேலி  (வேலி = 5 ஏக்கர்) நிலத்தின் நான்கில் ஒரு பங்கிற்கு அதிகமாகச் சொந்தமாக இருக்க வேண்டும், அதற்கு வரியும் செலுத்தும் நபராகவும் மேலும் அவர் சொந்தமாகக் கட்டப்பட்ட தன் வீட்டில் வசிக்கவும் வேண்டும். (அதாவது தானம் பெற்ற  வரியில்லா நிலமல்ல)
(4) ஒழுக்கம்: ஒருவர் கிராம நிர்வாகம் அதன் செயல்பாடுகளை நன்கு அறிந்தவராகவும், புனிதமானதாகக் கருதப்பட்ட விதிகளின்படி நடந்து கொள்ளவும் வேண்டும், நேர்மையான வழிகளில் செல்வத்தை ஈட்டியிருக்க வேண்டும். சொல், செயல், எண்ணம் ஆகியவற்றில் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தகுதியின்மை:    
இதில் 3வகை   குறிப்பிடப் பட்டுள்ளது அவை. . .
ஐந்து மாபெரும் பாவங்களில் முதல் 4ல் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டவர்கள் தகுதி இழந்தவராவார். அந்த ஐந்து பாவங்கள் பின்வருமாறு;
I. (1) பிராமணனைக் கொல்வது, (2)  மது அருந்துவது, (3) திருடுவது, (4)ஆசிரியரின் மனைவியுடன் உடலுறவில்  ஈடுபடுவது மற்றும் (5) இந்தக் குற்றங்களில் ஏதேனும்  ஒன்றைச் செய்தவருடன் தொடர்புகொண்டு அது பதிவுசெய்யப் பட்டிருத்தல்.  
II. எந்தவொரு குழுவிலும் பணியாற்றியவர்கள் அவரோ அவரது உறவினரோ தங்கள் கணக்கை ஒப்படைக்கத் தவறி இருந்தால் அவர்கள் தடைசெய்யப்பட்டவர்கள்.
III. ஒருவரின் தந்தை, சகோதரர்கள், தந்தைவழி, தாய்வழி சகோதரர்கள் மற்றும் அவர்களது மகன்கள்,  தந்தைவழி மற்றும் தாய்வழி சகோதரிகளின்  கணவர்கள் மற்றும் மகன்கள், ஒருவரது மனைவி மூலம் மாமனார், மைத்துனர்கள் மற்றும் பலர் என்று உறவினர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. அவர்களின் மகன்கள். சொந்த மகன்கள், மற்றும் மகன்கள் மற்றும் மகள்களின் மாமனார், மைத்துனர்கள் மற்றும் ஒருவரின் சொந்தப் பேரக் குழந்தைகள். இவ்வளவு பெரிய அளவிலான உறவினர்கள் சபாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. நான்கு தலைமுறைகளைத் தண்டனைக்கு உரியவராக்கியது.

ஆனால் அவர்களின் தடை தற்காலிகமானது, எனக் கருத இடமுள்ளது  வேறு சிலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி "வாழ்நாள் முழுவதும்" என இங்கு வகைப்படுத்தப்படவில்லை.

சில பாவங்களைச் செய்த, மற்றொரு பிரிவினர் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டனர்,  சில பரிகாரச் சடங்குகளைச் செய்த பிறகு போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அவர் பின்வருமாறு:
1. தாழ்த்தப்பட்ட (சாதி) மக்களுடன்  மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள்.[9]
2. சிந்திக்காது செயல்படுபவர்கள்…. (பிரிவு சேதமடைந்துள்ளது மற்றும் முழுமையாகப் படிக்க முடியவில்லை).[10]
3. மூன்றாவது பிரிவினர், பாவங்களைச் செய்து, பிராயச்சித்தச் சடங்குகளைச் செய்தாலும், வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தனர். பாவங்களில் சமயம் தொடர்பான பாவங்கள் மட்டுமே பரிகாரச் சடங்குகளால் கழுவ முடியும், ஆனால் சமூக மற்றும் அரசியல் பாவங்களை அப்படிக் கழுவ இயலாது என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.

பிறருடைய சொத்துக்களைத் திருடியவர்கள் அல்லது கொள்ளையடித்தவர்கள், தடை செய்யப்பட்ட உணவுகளை உண்டவர்கள், கிராம, சமூக விரோதிகள். சட்டவிரோதப் பாலியல் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும்…... (கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது) பிற பாவம் [11].
இவ்வாறு குற்றம் அல்லது பாவங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டு அதற்கேற்பப் பாவிகளுக்குச் சபாவின் குழுக்களுக்குச் சேவை செய்வதிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறை:
தேர்தல் என்பது இன்று புரிந்து கொள்ளப்படுவது போல் இல்லை, ஆனால் இது பானையிலிருந்து சீட்டுகளை எடுப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது, இது பண்டைய கிரேக்கத்தில் கூட நடைமுறையில் இருந்தது. [12]   சபாவின் தேர்தல் முறை 'குடவோலை' என்று அழைக்கப்படுகிறது. குடம்' என்பது 'பானை', 'ஓலை' என்பது மடல். இந்த பெயரை வரலாற்றாளர்களே சூட்டினர் தவிர வேறு ஆதாரம் இல்லை.

உத்திரமேரூர் கிராமம் 30 குடும்புகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பும் தனித்தனியாகச் சந்தித்து, தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை, ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாக ஒரு துண்டு ஓலையில் எழுதி, குடும்பின் எண்ணை/ பெயரைக் குறிப்பிட்டு ஓர் அடையாளக் குறிப்புச் சீட்டுடன் தொகுத்து ஒரு கட்டாகக்  கட்டிப்  பானையில் வைக்க வேண்டும். ஒரு குடும்பிலிருந்து தகுதியானவர்களில் எத்தனைப்பேர் பெயர் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். அதற்கேதும் தடை தென்படவில்லை. இவ்வாறு தகுதியுடைய நபர்கள் தங்கள் சொந்தக் குடும்பு ஆட்களால் 30 குடும்புகளால் பரிந்துரைக்கப்படுகின்றனர்.

அடுத்து தேர்தலுக்காகக் கூட்டப்பட்ட இளைஞர்கள் மற்றும் வயதான உறுப்பினர்கள் உட்படக் கிராம சபையின் முழுக் கூட்டத்தின் நடுவில் பானையில் உள்ள கட்டுகள் திறக்கப்படும். சம்பந்தப்பட்ட நாளில் கிராமத்தில் இருக்கும் அனைத்துக் கோவில் பூசாரிகளும், விதிவிலக்கு இல்லாமல், சபை கூடும் கிராம மண்டபத்தில் அமர வேண்டும். கோவில் பூசாரிகள் நடுவில், பெரியவராக இருந்தவர்களில் ஒருவர் எழுந்து நின்று, அங்குள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும்படி ஒரு காலியான பானையைத் தலக்கீழாக உயர்த்திக் காட்டுவார். பானை காலியாகத்தானுள்ளது என்று தெளிவாக்கபோலும்.

விபரம் அறியாத ஒரு சிறுவன், 30 கட்டுகளிலிருந்து ஒரு கட்டை நிற்கும் பூசாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.  எல்லோரின் முன்னிலையிலும் அக்கட்டைப் பிரித்து அதிலிருக்கும் ஓலைகளை ஒரு வெற்று பானைக்கு மாற்றப்பட்டு நன்கு குலுக்கப்படும். அச்சிறுவன் இந்தப் பானையிலிருந்து  ஓலை ஒன்றை எடுத்து  மத்தியஸ்தர் எனும் நடுவரிடம் கொடுப்பார்.

அந்த ஓலையைப் பெறும்போது, நடுவர் தன் ஐந்து விரல்களைத் திறந்து காண்பித்து பின்னர் உள்ளங்கையில் அதைப் பெறுவார். அவ்வாறு பெறப்பட்ட ஓலையில் உள்ள பெயரை அவர் உரக்கப் படித்துக் காட்ட வேண்டும். அவர் வாசித்த ஓலையை, மண்டபத்தில் இருக்கும் அனைத்துப்  பூசாரிகளும்  ஒவ்வொருவராக வாசிக்க வேண்டும். இவ்வாறு வாசிக்கப்படும் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் பதிவு செய்யப்படும். அதேபோல முப்பது வாரியங்களுக்கும் 30 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இப்படித்தான் சபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜனநாயகத்தின் வலுவான அம்சம், வெளிப்படையே. ஒளிவு மறைவு எதுவும் இல்லை என்பதை இந்தச் செயல்முறை தெளிவாக்குகிறது. நாம் மேலே பார்த்த குறிப்பிட்ட அளவுகோல்களின்படி, தேர்ந்தெடுக்கப் பட்டவர்களிடமிருந்து தேர்வு செய்ய அவர்கள் பின்பற்றும் ஒரு முறை இதுவாகும்.

அடுத்த கட்டமாக அவர்களின் இலாகாக்களை ஒதுக்கீடு செய்வது, அதாவது எந்தக் குழுவில் யார் பணியாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது. கல்வெட்டு[13] வழியே நாம் அறிவது;  நீர்நிலைக் குழு மற்றும் தோட்டக் குழுவில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களும், படிப்பிலும், வயதிலும் சிறந்து விளங்குபவர்கள் வருடாந்திர மேற்பார்வைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. எப்படித் தேர்வு செய்யப்பட்டது? அது குறிப்பிடப்படவில்லை. ஆனால் தோட்டம், நீர்நிலை, தங்கம், பஞ்ச வாரியம் போன்ற மற்ற பொறுப்புகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் குரல் வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
எனவே, தென்னிந்தியாவில் இடைக்காலத்தில் மக்கள் குரல் மூலம் தேர்வு முறையையும் அறிந்திருந்தமை தெளிவாகிறது.

இவ்வழக்கம் இன்றும் நமது பாராளுமன்றத்திலும் மாநிலச் சட்டசபைகளிலும் மசோதாக்களை நிறைவேற்றுவதில்  நடைமுறையில் உள்ளது. கிராம சபாவில் காணப்படும் மூன்றாவது படிநிலை, குழுக்களில் செயல்பட 30 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேவைப்பட்டால், இரண்டாவது முறையாக முழுச் செயல்முறையும் மீண்டும் கடைப்பிடித்து ஒரு குடும்பில் இருந்து ஒருவரென 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் தேவையான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அடுத்த தேர்வில் தற்போது வாய்ப்புப் பெற்ற குடும்புகளுக்கு  விலக்கு அளிக்கப்பட்டது, இதனால் அனைத்துக் குடும்புகளும் நிச்சயமாக அனைத்துக் குழுக்களிலும் பணியாற்ற வாய்ப்பு பெறமுடியும். இது அனைவருக்கும் சம வாய்ப்பை உறுதி செய்கிறது.

உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகள்:
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே. பல்வேறு குழுக்களின் உறுப்பினர்கள் 360 நாட்களிலும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் போது, அவர்கள் தங்கள் கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். பதவிக் காலத்தின் முடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் ஓய்வு பெற வேண்டும், மேலும் எந்த அடிப்படையிலும் எந்த வகையிலும் தங்கள் பதவியை நீட்டிக்க யாருக்கும் உரிமை இல்லை. கணக்குகளைச் சமர்ப்பித்தல் அல்லது ஓய்வு பெறுதல் மற்றும் தேர்தல்களைத் தவிர சில சட்டவிரோத வழிகளில் குழுவில் நுழைதல்,  கடமைகளில் தோல்வியுற்றவர்கள் ஆகிய அனைவரும், 'கிராமத்துரோகிகள்' (அதாவது கிராமத்தின் துரோகிகள்) எனக் கருதப்படுவார்கள், அதன்படி தண்டிக்கப்படுவார்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

தேவைக்கு ஏற்ப விதிகளின் திருத்தம்:
விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நிலையானவை அல்ல, ஆனால் அவை காலத்தின் தேவைக்கேற்பத் திருத்தப்பட்டவை எனக் கல்வெட்டிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. பத்தாம் நூற்றாண்டிலேயே (பராந்தகன்-I) வயது வரம்பு 30 முதல் 60 வயதிலிருந்து 35 முதல் 70 வரை மாற்றப்பட்டுள்ளது.[14]
உத்திரமேரூர் கிராமத்தில் நிலைமை இப்படி இருக்கும்போது, கி.பி.925ல் தஞ்சாவூரின் பிள்ளைப்பாக்கம் கிராமத்திலிருந்து மற்றொரு திருத்தம் கூறப்பட்டது, பராந்தகரின் 20வது ஆட்சியாண்டிலிருந்து (கி.பி. 926) ஒவ்வொரு குடும்பிலும் முன் அனுபவம் இல்லாதவர்கள் 2 உறுப்பினர்கள் சபாவில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்றும் சபா இதைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. கிராமத்தின் அனைத்துத் தகுதியான உறுப்பினர்களும் நிர்வாகத்தின் உண்மைத்தன்மையை  அறியும் வாய்ப்பிற்கு இந்தத் திருத்தம் வழிவகுத்தது. இந்த அமைப்பு கிராம மக்கள் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் வெளிப்படையாக வைத்திருக்க உதவும்.
மேலே கூறப்பட்ட அதே உத்தரவின் மற்றொரு விதி என்னவென்றால், இந்த விதிமுறையின் வெளிப்படுத்தப்பட்ட நிபந்தனைகளுக்கு எதிராகச் செயல்படும் நபர்கள் தினசரி ஒரு மஞ்சாடி தங்கம் அபராதம் விதிக்கப்படுவார்கள் மற்றும் அவ்வாறு விதிக்கப்பட்ட அபராதம் முறையாக வசூலிக்கப்பட வேண்டும். உத்திரமேரூர் கல்வெட்டு அத்தகையவர்களைக் கிராம துரோகிகளென்று அழைக்கிறது.  ஆனால் பிள்ளைப்பாக்கம் கல்வெட்டு அவர்களை மிகவும் கடுமையாகத் தண்டித்துள்ளது.  சுத்தமல்லி கல்வெட்டு சபா உறுப்பினர்களின் தேர்தலுக்கான சில விதிகளையும் குறிப்பிடுகிறது, அதில் அதிக வேறுபாடுகள் இல்லை, ஆனால் ஒரே வரியில் உள்ளது. மகாசபையுடன் இணைந்து செயல்படும் மற்ற சபைகளும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.[16]

இரண்டாம் குலோத்துங்கனின் 7வது ஆட்சியாண்டில் (கி.பி. 1140) தஞ்சாவூரில் அரசரின் 2 அதிகாரிகளான பிரம்மேந்திரர் மற்றும் வானதி ராயர் ஆகியோர் வழியே பேரவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான விதிகள் வெளியிடப்பட்டது.[17]   குறைந்தபட்ச வயது 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சபாவில் ஏற்கனவே பணியாற்றியவர்களைப் பற்றிப் பேசுகிறது.  இந்தக் கல்வெட்டு கடந்த பத்து ஆண்டுகளில் சபாவுக்குச் சேவை செய்யாதவர்களும், பாரபட்சமற்ற கற்றறிந்தவர்களும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் தேர்தலில் போட்டியிடலாம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறது. மேலும் முந்தைய ஐந்து ஆண்டுகளில் சபா உறுப்பினர்களின் உறவினர்களாக இல்லாதவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உறுப்பினர்களின் உறவினர்களைத் தேர்வு செய்யக்கூடாது என்றும் சட்டத்திருத்தம் சொல்கிறது.

ஊரில் உள்ள பிராமணர்களைத் துன்புறுத்தியவர்கள், சபா உறுப்பினர்களாக இல்லாதவர்கள் மற்றும் வரி செலுத்தாதவர்கள், பிராமணர்கள், சாதுக்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் 'கையூட்டு' வாங்குபவர்கள் ஆகியோர் அவர்களின் குற்றத் தன்மைக்கேற்பத் தண்டிக்கப்படுவார்கள் என்பது கடைசி விதி. தொடர்ந்து சில குடும்பங்கள் பதவி வகிப்பதைத் தடுக்க, அதிகாரப் பிடியிலிருந்து விலக்கி வைக்க முதல் இரண்டு விதிகள் விதிக்கப் பட்டுள்ளதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. மத்தியில் பரம்பரையாக  மன்னர் அரசாட்சி இருந்தபோதிலும், அத்தகைய பரம்பரை ஆட்சி அதிகாரத் தொகுதிகள் கிராம, பிரமதேயங்களில் நீக்கும் முயற்சிகள் பின்பற்றப் பட்டுள்ளன. அதிகார மையங்கள் தோன்றுவதைத் தடுக்கும் ஒரு முறையாக இவை அமைந்தன. இது போன்ற தொடர்ச்சியான சக்திவாய்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்  பதவியிலும் அதிகாரத்திலும் இருந்தால் முறைகேடுகள் நடப்பதின் சாத்தியக் கூறுகள் அதிகம் என்றறிந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க, ஐந்து வருடங்களுக்கு உறவினர்களைக் கூட இக்கட்டமைப்பிலிருந்து விலக்கி வைத்தனர் போலும்.  இது மனிதகுலத்தின் அதிகார ஆசையை எச்சரிப்பதாகப் படுகிறது.

அசாதாரணமான சிறப்புகளை விரும்புவோருக்கு, அவர்களிடம் வரி மற்றும் அபராதம் வசூலிக்க  எவ்வளவு கண்டிப்பு காட்டப்பட்டது என்பதைக் கடைசி விதிமுறை காட்டுகிறது. சட்டவிரோதச் செயல்களில் சாதுக்கள் மற்றும் பிராமணர்கள் கூட மற்ற கிராமவாசிகளுடன் சம நிலையில் தண்டிக்க வேண்டும் என்ற மன்னர் விருப்பைத் தெளிவாக்குகிறது. கையூட்டு பெறுவது  பற்றிக் குறிப்பிடுவது மிகவும் சுவாரஸ்யமானது. வரி செலுத்துவதிலிருந்து சிலருக்கு விலக்கு அளிக்க லஞ்சம் பெறப்பட்டிருக்கலாம். எனவே, இங்கு வசிக்கும் அனைவரும் சட்டத்தின் முன் சம நிலைக்குக் கொண்டு வரப்பட்டனர் போலும். இந்தக் கிராம சபாவின் பணிகள் அனேகமாக எல்லாம் சரியான வகையில் நடை பெறவில்லை, அதன் உறுப்பினர்களிடையே ஒரு கோஷ்டி மனப்பான்மையின் எழுச்சியால் அதன் பணி தடைப்பட்டது, எனவே அரசாங்கத்தின் குறுக்கீடு மற்றும் வலியுறுத்தல் தேவைப்பட்டுள்ளது என நம்மால் உணரமுடிகிறது.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் 40 வயதைக் குறைந்தபட்சமாக வலியுறுத்தும் கல்வெட்டுகளை நாம் காண்கிறோம் மற்றும் முந்தைய ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் உறுப்பினர்களாக இருந்தவர்களைத் தவிர்த்து விடுதல். கிராமத்தில் உள்ள அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், முதிர்ச்சியடைந்த நாற்பது வயது சபாவின் சிறந்த செயல்பாட்டிற்கு உதவும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், வழமையான ஓராண்டு பதவிக்காலம் முடிந்த பிறகும் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைத் தொடருதல், லஞ்சம் வாங்குவது, கணக்குகளை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை, உறுப்பினர் சேர்க்கையைத் தொடர்வது போன்ற எல்லா முறைகேடுகளும்  நடந்தேறியமை மறைமுகத்  தகவலாகத் தெரிகிறது. மன்னரின் ஆணைகள் அத்துமீறப்பட்டமை வெளிப்படையாக உணரமுடிகிறது.  இதுபோன்ற விஷயங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை, மேலும் பலர் விதிகளை மதிக்கக் கூட கவலைப்படவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அந்த இடத்தின் கோவிலின் மூலபரிஷத்திடம் முறையீடுகள் குறிப்பிடப்படுகின்றன, குறிப்பாக போதுமான தகுதிகள் இல்லாத புதிய நபர்கள் உள்ளே நுழைதல். மூன்றாம் இராஜராஜன் காலத்தில் ஒரு கிராமத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.[17]

மூன்றாம் ராஜராஜனின் 30வது ஆட்சியாண்டில் (கி.பி. 1246) குறைந்த வயது வரம்பை 40 வயதாக வலியுறுத்துவதோடு, சொத்து வைத்திருப்பதில் சில தளர்வுகளும் காணப்படுகின்றன. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து (கி.பி. 919) 13 ஆம் நூற்றாண்டு வரை (1246ஆம் ஆண்டு) ¼ வேலி நிலத்தை ஒருவர் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமானது.  அது ஒரு வேலியில் 1/8 பாக நிலம் போதுமென தளர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கல்வித் தரம் தொடர்பாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஓராண்டு பதவிக் காலம் முடிந்தவுடன் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்பது போன்ற விதிகளைக் கல்வெட்டு மிகவும் அழுத்தமாகப் பேசுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டிலிருந்து (கி.பி. 919) ஒரு வருடப் பதவிக்காலம் என்பது வழக்கமான பதவிக்காலம் என்பதும், 13ஆம் நூற்றாண்டில் கூட இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஒவ்வொருவரும் தேர்தல் மூலம் மட்டுமே குழுவிற்குள் நுழைய வேண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எந்த வகையிலும் சரிசெய்து கொள்ளக்கூடாது. அத்தகைய வழிகளில் முயற்சி செய்பவர்கள் அனைவரும் கிராமத்துத் துரோகிகளாகவும் (கிராமத்ரோஜின்கள்) சாதி நீக்கம் செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள்.
இங்கு சாதி நீக்கம் என்ற வார்த்தை இருப்பதால் தண்டனை மிகவும் கடுமையானதாகத் தெரிகிறது. சாதி நீக்கம் பெற்றவர் மற்றும் கிராமத்ரோகிகள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது  தெரியவில்லை என்றாலும், கிராமவாசிகளின் தற்போதைய மனப்பான்மையுடன் அதைக் கட்டியெழுப்ப முடியும், ஒருவரை அவர்களின் கிராமம் மற்றும் சாதியிலிருந்து வெளியேற்றினால், கிராமத்தில் யாரும் தொடர்பு கொள்ளவோ, மளிகைப் பொருட்களை வழங்கவோ கூடாது, அவர்களுக்குத் தண்ணீர் கூட தடை செய்யப்படும் எனவே, இயற்கையாகவே அவர்கள் கிராமத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்ல வேண்டிய நெருக்கடிக்கு ஆட்படுவார்கள். ஒருவேளை அவர்களின் சொத்துக்கள் ஏதேனும் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கலாம்.

அவ்வப்போது அரசரின் தலையீட்டால் விதிகள் திருத்தப்பட்டாலும், கடுமையான விதிகளைக் கடந்து லஞ்சம், முறைகேடு, ஊழல், கணக்குகளைச் சரிசெய்வது, தேர்தல்களிலிருந்து தப்பித்து வாரியாக குழுக்குள் நுழைந்து சபா நிர்வாகத்தில் பிரம்மதேயத்தினர் வலம் வந்ததுதான் வேடிக்கை. கிபி13 ஆம் நூற்றாண்டு  இறுதியில்(1279ஆம் ஆண்டு) சோழப்பேரரசு வலுவிழந்ததையும்  மற்றும் ஆட்சியாளர்களின் பலவீனத்தையுமே இச்செயல்முறைகள் எதிரொலிக்கின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை.
 
பாண்டிய நாடு[18]  மானூர் கிராமம், திருநெல்வேலி மாவட்டம் (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு) ஒரு மிக ஆரம்பக்காலக்  கல்வெட்டு, சட்டமன்ற உறுப்பினர்களின்  கூட்ட நடத்தையைப்  பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை அளிக்கிறது. ஒருவேளை உறுப்பினர்களிடையே குழுவாதம் இருந்திருக்கலாம் மற்றும் ஒருவர் மற்றவரின் அனைத்துத் திட்டங்களையும் நிராகரித்தனர். அத்தகைய சூழ்நிலையைச் சமாளிக்க, நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், சபையில் முன்வைக்கப்படும் ஒவ்வொரு திட்டத்திற்கும் இல்லை, இல்லை என்று கூறி சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்க்கக்கூடாது என்றும், அதைச் செய்தவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சேர்ந்து அபராதப்பணம் செலுத்துவார்கள் என்றும் கல்வெட்டு கூறுகிறது.  ஒவ்வொரு நபரும்  5 காசு அபராதம் செலுத்த வேண்டும். மேலும் அதே விதிகளுக்குத் தொடர்ந்து சபா நடப்பில் பங்கேற்க வேண்டும்.

உறுப்பினர்களின் தவறான நடத்தைக்காக அவர்களைத் தண்டிக்கும் இந்த அணுகுமுறை, நிச்சயமாக, அவர்களைச் சபை நடவடிக்கைகளில் இருந்து வெளியேற்றாமல், இன்னும் அதே விதிகளுக்கு உட்பட்டுச் செயல்பட வைப்பது, உறுப்பினர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழுங்கு படுத்துவதற்கும் மிகவும் பொருத்தமான முறையாகத் தெரிகிறது. இது சபை நடவடிக்கைகளைத்  தொடர உதவுகிறது.

மக்களாட்சி  இந்தியாவில் இந்த நூற்றாண்டில் வாழும் ஒவ்வொருவரும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில மற்றும் மத்திய அரசு உறுப்பினர்களை நினைவு கூர்வது தவிர்க்க முடியாதது. ஒருவேளை மேலே குறிப்பிட்டுள்ள விதி நம் பிரச்சினைகளையும் தீர்க்கலாம்.   சபை செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளில் அரசின் போதுமான மற்றும் உடனடி தலையீடு, அதிகார ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தின் பயங்கரவாதத்திலிருந்து பொதுமக்களை விடுவித்துள்ளது. புதிய விதிமுறைகள் உள்ளிடப்பட்டுச் செயல்படுத்தப்படுவதைக் காண மன்னரின் அதிகாரிகள் உடனிருந்தனர். அரசின் பலமான  அதிகாரம், மற்றும் தலையீடு  கிராம நிர்வாகத்தில் மக்களால் உணரக்கூடியதாக ஆழமாக ஊடுருவி இருந்தது.

சபா அமைப்பிற்கான சட்டங்கள்-திருத்தங்கள் நமக்குச் சொல்லிச் செல்லும் தகவல்கள் என்ற கோணத்தில் ஆய்ந்தால் பல தொடர்புகள் புரியும். பிரம்மதேய செயல்பாடுகள் மன்னரின் கவனத்திலிருந்தன. அரசு சக்தி வாய்ந்ததாயின் அவை பெரும்பாலும் முறையாகச் செயல்பட்டதும் அரசு பலவீனமடைந்தால் சட்டங்கள் மீறி முறைதவறி செயல்பட்டதும் தெளிவாகிறது. மன்னர்கள் தொடர்ந்து கண்காணித்தாலும் சட்டத் திருத்தங்கள் கொண்டுவந்தாலும் சபா எனும் அமைப்பில் எல்லைமீறலும் தவிர்க்க இயலவில்லை. சட்டங்களும் சட்டமீறல்களும் ஆள்பவருக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே காலகாலமாக நடைபெறும் ஒரு தொடர்கதை என்பதும் தெளிவு.

 
FOOTNOTES:
1. Meenakshi, C. Administration and Social Life under Pallavas, p.155.
2. Mookerji, R.K. Local Government in Ancient India, p.161.
3. Meenakshi, C., Ibid. p.106.
4. ARE 423 of 1906 – 35th regnal year of Maran Sadaiyan about 9th century AD.
5. ARE 2 of 1899
6. ARE 1 of 1899.
7. ARE 176 of 1930
8. Champaklakshmi-R Trade Ideology and Urbanisation – South India. 300 BC to 1300 AD Index to Maps 2-6 (The urban process) p. 247.
9. The words in the brackets are adopted from ARE 1899.
10. The words in the brackets are adopted from ARE 1899.
11. The words in the brackets are adopted from ARE 1899.
12. Rajalakshmi-R, Tamil Polity (600-1300 AD).
13. ARE 2 of 1899
14. ARE 1 of 1899.
15. ARE 176 of 1930
16. ARE 5 of 1945-46
17. ARE 278 of 1927
18. ARE 23 of 1924
ARE= Annual Reports of Epigraphy

குறிப்பு: இக்கட்டுரை ஒரு மீள்வாசிப்பு. இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் வருடாந்திரக் கூட்டத்தில்(2000) கொல்கத்தாவில் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டது. பின்னர் பதிப்பிக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் தமிழ் வடிவம் பெற்றுள்ளது. ஆயினும் அடிக்குறிப்புகள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.
Reply all
Reply to author
Forward
0 new messages