ஜெர்மனி ஹாலே பிராங்க் கல்விக் கூடத்தில் நடந்த பயிற்சிப் பட்டறை
தமிழ்நாட்டின் வரலாற்றைத் தேட நாம் ஐரோப்பியருடைய ஆவணங்களைக் கட்டாயமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மக்கள் வரலாற்றைப் பதிந்து வைத்த மிக முக்கியமான ஆவணங்களாக ஐரோப்பியருடைய ஆவணங்கள் திகழ்கின்றன. அவ்வகையில் இக்கருத்தை முன்வைத்து எனது ஆய்வின் அடிப்படையில் வெளிவந்த ”மெட்ராஸ் 1726- பெஞ்சமின் சூழ்ட்சே” என்ற நூல் எவ்வகையான தகவல்களை வழங்குகின்றது என்பதைப் பகிர்வதற்கான ஒரு வாய்ப்பாகக் கடந்த சனிக்கிழமை கிழக்கு ஜெர்மனியில் ஹாலே நகரில் நடைபெற்ற பயிற்சி பட்டறை நிகழ்ச்சி அமைந்தது.
பொலிவியா, டாஸ்மானியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா (தமிழ்நாடு பெங்களூர்), கென்யா, பாப்புவா நியூகினியா, பெரு, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிலிருந்து ஓராண்டு சமூகவியல் பயிற்சிக்காக வந்திருந்த ஏறக்குறைய 20 மாணவர்கள் இந்தப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டார்கள். அவர்களோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் ஜெர்மனியில் வசிக்கின்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்கள்.
ஜெர்மனியின் 400 ஆண்டு கால வரலாற்றுப் பழமை கொண்ட ஆய்வு நிறுவனமான பிராங்க கல்விக்கூடம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஆகையால் அந்த அமைப்பின் செயல்பாட்டாளர்களும், அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருந்தனர். அவர்களோடு இதற்கு ஏறக்குறைய 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற பழமை வாய்ந்த லைப்சிக் மிஷன் அமைப்பின் அதிகாரியும் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டார்.
இந்த லைப்சிப் மிஷன் என்பது புகழ்பெற்ற ஓர் அமைப்பாகும். அதற்குக் காரணம் இதன் இயக்குநராக 19 ஆம் நூற்றாண்டில் பணியாற்றிய டாக்டர் கால் கிரவுல் என்பவர் ஜெர்மனியில் இருந்து கால்நடையாக இந்தியாவின் தெற்குப் பகுதி வரை வந்து, பின்னர் தரங்கம்பாடி லூத்தரன் சபையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அங்கு அமைப்பைச் சீரமைக்கும் பணிகளைச் செய்தவர். இவர் தான் திருக்குறளின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பை உருவாக்கியவர் என்ற சிறப்புக்குரியவர்.
திருக்குறள் முதலில் லத்தின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும் கூட அதன் பின்னர் ஐரோப்பிய மொழிகள் சிலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டது. அவை ஒரு சில செய்யுட்கள், அறத்துப்பால்-பொருட்பால் என்ற நிலையில் அமைந்தன. 1856 ஆம் ஆண்டு டாக்டர் காவல் கிரவுல் அவர்கள் திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் ஆகிய மூன்று பிரிவையும் முழுமையாக மொழிபெயர்த்து முதல் முழுமையான மொழிபெயர்ப்பை வழங்கினார்; இது ஜெர்மன் மொழியில் அமைந்திருக்கின்றது.
ஆக, தமிழ் மொழியோடும், தமிழ் நிலத்தோடும் ஏறக்குறைய 400 ஆண்டு காலத் தொடர்புடைய இந்த அமைப்புகளின் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து தமிழ் மரபு அறக்கட்டளையும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டது என்பது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
இந்த இரண்டு அமைப்புகளிலும் பாதுகாக்கப்படும் தமிழ் மக்கள் தொடர்பான ஆவணக் குறிப்புகளை வாசித்து அதனை ஆராய்ச்சி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்து அன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
2.10.2025
-------------------------