ஜீவ்ஸ்,
அந்த பழமொழிக்குப் பொருள் தெரியவில்லை. விளக்கம் கூறவும்.
பழமொழிகள் சேகரிப்பதில் விருப்பம் இருப்பதால், நான் சேகரிதவற்றுள் சில பழமொழிகளைக் கீழே பகிர்ந்துள்ளேன். தவறு இருந்தால் குறிப்பிடவும்.
விளக்கம் சில வலைதலங்களிலிருந்து சேகரித்ததால், கொஞ்சம் colloquialஆகவும் ஒரு சில வடசொற்களும் இருக்கும்.
பழமொழி :
----------
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.
விளக்கம் :
---------
பெண்களை மதிச்சு வாழறதுதான் நம்ம தமிழரோட பண்பாடு...அப்படியிருக்கிறப்ப ... நல்லது, கெட்டது நடக்குறதுக்கு பெண்கள்தான் காரணம்னு தப்பான அர்த்தத்துல நிச்சயம் சொல்லியிருக்க மாட்டாங்க...உண்மை என்னன்னா...
மறைந்த உபன்யாசகர் திரு.டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் (இயக்குனர் மௌலியின் தந்தை). ஒரு முறை நெல்லையில் இது குறித்து சொன்னது.
ஒரு குழந்தை பிறந்ததும் அதற்குப் பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி அதற்கு
ஐந்து புலன்களையும் அறிமுகப்படுத்தி அதை ஒரு முழுமையான மனிதனாக ஆக்குவதும் தாய் என்ற பெண் தான். பிறகு, அவனுக்குள்ளேயிருக்கிற அகங்காரம், பொறாமை போன்ற குணங்களையெல்லாம் அழித்து அவனைத் தகப்பனாக்கி
திருத்துவதும் மனைவி என்ற ஒரு பெண் தான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
நேர் விளக்கம் :
-------------
இந்தப் பழமொழியை அப்படியே பார்த்தால் ஆயிரம் பேரைக் கொன்றால்தான் அவன் அரை வைத்தியன் என்று பொருள்படும்! அதற்காக செல்பவர்களை எல்லாம் கொன்றால் அவர் மருத்துவரா? அடுத்து யாராவது அந்தப் பக்கம் செல்வார்களா? கொலைகாரன் என்று சிறையில் தள்ளி விடுவார்கள்!
சரியான பழமொழி:
-----------------
ஆயிரம் வேரை கொணர்ந்தவன் அரை வைத்தியன்
விளக்கம் :
---------
சித்த மருத்துவம்தான் நமது பண்டைய மருத்துவம். மூலிகைகளால் குணமடையச் செய்யும் சித்த மருத்துவம் கற்றுக்கொள்ள வேண்டுமானால், மூலிகைச் செடிகளின் வகைகளை கண்டறியும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சித்த மருத்துவம் கற்றுக்கொள்ள செல்லும் சீடர்களுக்கு, குருக்கள் ஒரு கட்டத்தில் காடுகளுக்கு சென்று மூலிகைச் செடிகளைப் பறித்து, அந்தச் செடிகளின் பெயர், அதன் பலன்களை சொல்லச் சொல்வார்கள். அந்தக் காலத்தில், ‘ஆயிரம் வேரை கொணர்ந்தவன் அரை வைத்தியன்’ என்று சொல்லி வந்தார்கள். அதாவது ஆயிரம் செடிகளை வேரோடு பறித்து, கொண்டு வந்து, அவை எந்தெந்த வகை என்று குருவிடம் சொன்னால், அவன் அரை வைத்தியனுக்கு சமம் என்று கூறுவார்கள். அது திரிந்து இப்படி ஆகிவிட்டது!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
அடி உதவற மாதிரி அண்ணன் - தம்பி கூட உதவ மாட்டான்
நேர் விளக்கம் :
-------------
சிக்கலான நேரங்களில் அடி (உதை) உதவுவது போல உடன்பிறந்த அண்ணன் தம்பிகள் உதவி செய்யமாட்டார்கள். வழக்கம் போல தூய செந்தமிழ்ச் சொற்கள் இப்பழமொழியில் கொச்சை வழக்காகத் திரிந்து வேறு பொருளைத் தந்து நிற்கின்றன. ‘அடி உதவுற’ என்பதற்கு ‘அடிபுதைஉறை’ என்பதே திருத்தம் ஆகும். அடி என்றால் பாதம்; புதைத்தல் என்றால் மூடுதல் அல்லது மறைத்தல்; உறை என்றால் கவசம். மொத்தத்தில் ‘அடிபுதைஉறை’ என்றால் ‘பாதத்தை மூடும் கவசம் அதாவது செருப்பு’ என்று பொருள்.
சரியான பழமொழி:
-----------------
அடி புதைஉறை மாதிரி அண்ணன் தம்பி உதவார்
விளக்கம் :
---------
நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பின் மூலம் அண்ணன்-தம்பி உறவின் மதிப்பை உணர்த்த வந்த பழமொழி இது. சங்க இலக்கியத்தில் செருப்பினை ‘அடிபுதைஅரணம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அரணம் என்றாலும் உறை என்றாலும் கவசத்தையே குறிக்கும். விலங்குகளின் தோலினால் ஆன செருப்பினை சங்க கால வேட்டுவர்கள் அணிந்தனர். இதற்கு ‘தொடுதோல்’ என்றும் பெயர். சரி, செருப்பிற்கும் அண்ணன்-தம்பிக்கும் என்ன தொடர்பு? ஏன் இவற்றை ஒப்பிடவேண்டும்?. அதைப் பற்றிக் கீழே காணலாம்.
வெளியில் சுற்றித் திரியும் நேரமெல்லாம் நம்மோடு இருந்து நமது பாதங்களைப் பாதுகாக்கிறது செருப்பு. ஆனால் அதை நாம் எப்போதும் வீட்டுக்கு வெளியில் தானே விடுகிறோம். தேவைப்பட்டால் அணிந்துகொள்வதும் தேவை இல்லாவிடில் கழற்றி விடுவதும் செருப்புக்குத் தான் ஒக்கும். நம்முடன் பிறந்த அண்ணன்-தம்பியரின் உறவினை இப்படிச் செருப்பு போலப் பயன்படுத்த முடியாது. தேவைப்பட்டால் அண்ணன் என்றும் தம்பி என்றும் உறவு கொண்டாடி விட்டு தேவை தீர்ந்தவுடன் உறவினை அறுத்துக் கொள்வது இந்த உறவின் முறையில் சாத்தியமில்லை. செருப்பு அறுந்துவிட்டால் புதிய செருப்பு வாங்கிப் போட்டுக் கொள்வது மாதிரி புதிய உடன்பிறப்புக்களை நாம் பெற முடியாது. செருப்பு அறுந்துவிட்டால் நாம் அதைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்; தைத்தும் பயன்படுத்தலாம்; தூக்கியும் போட்டு விடலாம். ஆனால் அண்ணன்-தம்பியருக்குள் விரிசல் ஏற்பட்டால் விரிசலை சரி செய்யலாம்; பழகாமல் இருக்கலாம்; ஆனால் உறவினை ஒரேயடியாக அறுத்துக் கொண்டுவிட முடியாது. என்னதான் செருப்பு தன்னை அணிபவருக்காகத் தேய்ந்து சருகாய்ப் போனாலும் ஒரு கட்டத்தில் அதைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய செருப்பைப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும். செருப்பு மாதிரி தனக்காக அண்ணன்-தம்பியர் தேய்ந்து சருகாய் ஆகாவிட்டாலும் அவர்களைத் தூக்கி எறிய முடியாது. அன்றியும் பல்வேறு உறவின் முறைகளுள் அண்ணன்-தம்பி உறவு மிக முக்கியமானது. உதவி என்று தேவைப்பட்டால் அண்ணன்-தம்பியர் தான் முன் வருவார்களே ஒழிய அக்காள்-தங்கையோ மாமன்-மச்சானோ வருவதில்லை. உதவி செய்யும் உறவுகளுள் அண்ணன்-தம்பி உறவே முதன்மையானது என்பதால்தான் செருப்பையும் அண்ணன்-தம்பி உறவினையும் ஒப்பிடுகிறது இப்பழமொழி. ஒற்றுமையே இல்லாத இரண்டு பொருட்களை ஒப்பிட்டுக் கூறுவதன் மூலம் ஒன்றின் மதிப்பை உயர்த்திக் கூறலாம் என்பதற்கு இப்பழமொழி ஒரு எடுத்துக்காட்டாகும்.
இப்பழமொழி உணர்த்தும் சரியான பொருள் இதுதான்: ‘அண்ணன்-தம்பியரின் உறவும் உதவியும் செருப்பு போன்றதல்ல.’ இனி ‘அடிபுதைஉறை’ என்ற சொற்கள் எவ்வாறு கொச்சை வழக்கில் திரிபுற்றன என்று பார்ப்போம். ‘புதையல்’ என்பது கொச்சை வழக்கில் ‘புதயல்’ என்று ஆவது போல ‘உறைமோர்’ என்பது கொச்சை வழக்கில் ‘உறமோரு’ என்று ஆவதைப் போல ‘அடிபுதைஉறை’ என்பது கீழ்க்கண்டவாறு ஆனது.
அடிபுதைஉறை > அடிபுதஉற > அடிபுதவுற > அடிஉதவுற
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
பொதுவான விளக்கம் :
-------------
பெரும்பாலானவரகள் இதன் விளக்கமாக நினைப்பது என்னவென்றால்,ஊரில் உள்ள குழந்தைகளைத் தன் குழந்தை போல் வளர்த்தால்,தன்னுடைய குழந்தை தானே வளரும் என நினைக்கிறார்கள். மற்றவர்களின் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் அதைப் பார்த்து நம் பிள்ளை வளராது, ஏங்கிப் போகும்!
உண்மையான விளக்கம் :
---------
அதாவது ஒருவனின் மனைவி கருவுற்று இருக்கும்பொழுது(என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவர் பிள்ளை அதாவது ஊரான் பிள்ளைதானே...),நல்லப் பணிவிடை செய்து,மனம் நோகாமல் தேனும்,பாலும்,பழங்களும்,உணவும் கொடுத்து ஊட்டி வளர்த்தால், அவள் வயிற்றில் இருக்கும் தன் பிள்ளை தானே வளரும் என்பதை உணர்த்தும் பழமொழியாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
பந்திக்கு முந்தணும்! படைக்கு பிந்தணும்
பொதுவான விளக்கம் :
-------------
பெரும்பாலானவரகள் இதன் விளக்கமாக நினைப்பது என்னவென்றால், சாப்பாடு என்று வரும் போது முந்திக்கொள்ள வேண்டும். சண்டை என்று வரும் போது பிந்த வேண்டும்.
உண்மையான விளக்கம் :
---------
பந்தினா, ஒன்று கூடல். அது ஊர்க் கூட்டமாவும் இருக்கலாம். போருக்கான ஆயத்தக் கூட்டமாவும் இருக்கலாம். சமபந்தினா, எல்லாரும் ஒரே அணியா ஏற்றத்தாழ்வு இல்லாம கூடுறது. அப்படிப்பட்ட ஒன்றுகூடல் எதுவானாலும் உடனடியா போகணும்.
படை அப்படீன்னா படைப்பது. படைப்பாளி, படையல், படையப்பன் இதெல்லாம் 'படை'யிலிருந்து வந்த சொற்கள். ஆக, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வழி விட்டு, படையலுக்கு பிந்தணும். இதுதான் இந்த பழமொழியோட சாராம்சம். அது மருவி, நேர் எதிர் அர்த்தம் தர்ற மாதிரி நாம பாவிக்க கூடாது.
சிலர் இப்படியும் கூறுவர். உங்க வலதுகை பந்தில உட்காரறப்போ சாப்பாடை எடுக்க முன்னாடி வரும். அதே, படையில போரிடறப்போ அம்பு விடணும்ன்னா, அம்பைப் பிடிச்சுட்டு கை பின்னோக்கி போகணும். (அ) அம்பை எடுக்க பின்னாடி போகும். அதுதான் பந்திக்கு முந்து, படைக்கு பிந்து.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
பொதுவான விளக்கம் :
--------------------
வாழ்கையில் என்ன நடந்தாலும் நம் கையால் கன்னத்தை தாங்க்க்கூடாது என்பதாய் இதற்கு அர்த்தம் கற்பிக்கிறார்கள். அதுவல்ல அர்த்தம்!
உண்மையான விளக்கம் :
-----------------------
அந்தக் காலத்திலெல்லாம் பர்மா, ரங்கூன் என்று கடல் கடந்து பொருளீட்ட வீட்டுத்தலைவர்கள் செல்வார்கள். ஒரு ஊரிலிருந்து நான்கைந்து பேர் கூட்டாக சென்று ஐந்து வருடம், பத்து வருடம் என்று உழைத்து சம்பாதித்துவிட்டு சம்பாதித்த பணத்தை பொன்னும், வைரமுமாக மாற்றிக்கொண்டு கப்பலில் வருவார்ர்கள். அப்படி வரும்போது சில சமயம் கடல் சீற்றம் காரணமாக கப்பல் கவிழ்ந்து ஈட்டிய பொருளெல்லாம் இழந்து விடுவார்கள். தப்பித்து கரை சேரும் சிலர், ‘இவ்வளவு காலம் உழைத்துச் சம்பாதித்ததெல்லாம் இப்படி வீணாகிவிட்டதே.. இனி நம் ஊருக்கு என்ன கொண்டு செல்ல?’ என்ற விரக்தியில் கூட்டு சேர்ந்து ‘கன்னம் வைத்து’ திருட திட்டம் போடுவார்கள். (ஒரு ஆள் புகும் அளவுக்கு சுவரில் துளை போட்டு திருடுவதற்கு ‘கன்னம் வைத்தல்’ அல்லது கன்னக்கோலிடுதல் என்று பொருள்)
அதனால், ‘கப்பலே கவிழ்ந்தாலும் கன்னம் வைக்கும் தொழிலில் ஈடுபடக்கூடாது’ என்ற அர்த்தத்தில் ‘கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்லப்பட்டது, இப்போது வேறு அர்த்தம் கொண்டு உலவி வருகிறது!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே!
விளக்கம் :
---------
இந்தப் பழமொழிக்கும், குதிரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குதிர் என்ற சொல்லின் இரண்டாம் வேற்றுமையே குதிரை. மண்குதிர் என்பது ஆற்று நீரின் சுழற்சியால் ஏற்படும் மணல்மேடுகள். இது பாறை போல் காட்சியளித்தாலும், அதன் மீது ஏறினால் அது நீரில் அமிழ்ந்து விடும்.எனவே மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்
சரியான பழமொழி:
-----------------
ஆயிரம் முறை போய் சொல்லியாவது ஒரு திருமணம் செய்!
விளக்கம் :
---------
நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம். ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது. பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள்(பொறுமை இழக்காமல்), பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர். இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர். ஆயிரம் முறை நம் உறவுகளுக்கும் சுற்றத்தினருக்கும் போய் சொல்லி அனைவரது அன்புநிறைந்த வாழ்த்துகளோடும் செய்துகொள்வதே திருமணம். அதனாலவோ என்னவோ 'வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்' என்றார்களோ!. ஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் தம்பதிகளின் வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டால் நல்லது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி.
அறிந்த விளக்கம் :
----------------
யாரோ ஒரு புண்ணியவான் போன போக்கில் ஐந்தும் பெண் பெற்றால் அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட நாளடைவில் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில் புயல் அடிக்க செய்து விட்டனர். உண்மை அதுவல்ல,
விளக்கம் :
---------
ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்
1. ) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2. ) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
3. ) ஒழுக்கமற்ற மனைவி,
4. ) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்,
5. ) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்.
இவர்களை கொண்டிருப்பவன் அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற அர்த்தத்திலேயே ஆண்டி என்ற பிரயோகம் இங்கு பயன்படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
கல்லை கண்டால் நாயைக் காணாம் , நாயைக் கண்டால் கல்லைக் காணாம்
விளக்கம் :
---------
இதன் அர்த்தம், நாய் வரும்போது கல்லை காணாம், கல்கிடைக்கும் போது நாயை காணாம் என்பதல்ல. தெருவில் இருக்கிற நாயையும் கல்லையும் இணைச்சி அர்த்தம் கொள்ளக்கூடாது நாம. தத்ரூபமாக வடிக்கப்பட்ட ஒரு நாயின் சிற்பத்தை பார்க்கும்போது, அதை நாயாகபார்த்தால் கல் மறைந்து நம் மனக்கண்ணில் நாயாக காட்சிதரும். மாறாக அந்த நாயின் சிற்பத்தை கல்லாக பார்த்தால், என்னதான் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருந்தாலும் கல்தான் நம் மனக்கண்ணில் தெரியும் என்பதாகும். அதாவது, நாயக்கண்டால் கல்லை காணோம். கல்லைக்கண்டால் நாயை காணோம் என்பதாகும்.
செதுக்கி வச்சிருக்கும் நாய் போன்ற சிலையை, கலை கண்ணோட்டத்துல பாத்தா,நாய் தோற்றம் தெரியும்.கல்லா நினைச்சுப்பாத்தா நாய் தெரியாது. அதான்,'கல்லைக் கண்டா நாயைக் காணோம்.நாயைக் கண்டா கல்லைக் காணோம்'ங்றது. இதையே தான் திருமூலர் சொல்கிறார்:
மரத்தில் மறைந்தது மாமதயானை; மரத்தை
மறைத்தது மாமதயானை!
மரத்தை கண் கொண்டு பார்த்தால், யானை தெரியாது. யானையை மனதில் இருத்தி பார்த்தால்,யானையின் பின் இருக்கும் பெரிய மரம் தெரியாது.
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது. இப்போ புரியுதா இதோட விளக்கம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
நேர் விளக்கம் :
-------------
ஒருவன் பல நற்காரியங்களை செய்திருப்பினும், ஒரு தவறிழைத்தனானால் அரசன் அன்று செய்த தவற்றிக்கு தகுந்த தண்டனையை மற்ற நற்செயற்களை பாராமல் வழங்குவான், ஆனால் தெய்வமோ, நன்மை தீமை இரண்டையும் அறிந்து, சீர் தூக்கி சமநிலைபடுத்தி தீமை அதிகமானால் தண்டனையும் நன்மை அதிமாயின் சுகத்தையும் அளிக்கும்.
சரியான பழமொழி:
-----------------
அரசனன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
விளக்கம் :
---------
இந்த பழமொழியின் அர்த்தம், கொல்பவன் அரசனன்று(அரசன் அல்ல). தெய்வமே(அரசன் வடிவில்) நின்று கொல்லும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான்,வாங்கவும் மாட்டான்
சரியான பழமொழி:
-----------------
அறம் படித்தவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான்,வாங்கவும் மாட்டான்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது
சரியான பழமொழி:
-----------------
அறவடிச்ச முன்சோறு கழுநீர் பானைக்குள் விழுந்தது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
கல்லானாலும் கணவன்;புல்லானாலும் புருசன்
சரியான பழமொழி:
-----------------
கள்வன் ஆனாலும் கணவன், புலையன் ( தீயவன் ) ஆனாலும் புருஷன்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
கோத்திரம் அறிந்து பெண் கொடு . பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
சரியான பழமொழி:
-----------------
கோத்திறம்(கோ+திறம்) அறிந்து பெண் கொடு . பாத்திறம்(பா+திறம்) அறிந்து பிச்சை இடு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
சேலை கட்டும் பெண்ணை நம்பாதே
சரியான பழமொழி:
-----------------
சேலை அகட்டும் பெண்ணை நம்பாதே
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
சோழியன் குடுமி சும்மா ஆடாது
சரியான பழமொழி:
-----------------
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
பகையாளி குடியை உறவாடி கெடு
சரியான பழமொழி:
-----------------
பகையாளி பகையை உறவாடி கெடு
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
சரியான பழமொழி:
-----------------
போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்
சரியான பழமொழி:
-----------------
வர வர மாமியார் கயிதை(ஊமத்தம்காய்) போல் ஆனாள்..
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்
விளக்கம்:
----------
சோழர்கள் யானையைக் கட்டிப் நெற்போரடித்தவர்கள்.
நெற்போரடிக்கும் பொழுது யானைக்குக் காலம் வரும்.
நெல்லை சேகரித்து வைத்திருக்கும் பொழுது, எலிகள் வரும். அப்பொழுது பூனைக்கு காலம் வரும்.
இதை, நம் வாழ்க்கைக்குப் பொறுத்த வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழமொழி :
----------
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்
விளக்கம்:
----------
யாராவது கூறவும்...

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்,
கதிரவன்