வளரும் கவிதை - நா.முத்துநிலவன் வலைப்பக்கம்உண்மை இதழில் எனது கட்டுரை - பெரியாரும் பொங்கலும் . . .
பொங்கல் விழா என்றும், தமிழர் திருநாள் என்றும் இப்போது உலகத் தமிழர்கள் எல்லாரும் உவந்து கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளை, தந்தை பெரியார்தான் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்து, கொண்டாடத் தூண்டினார் இது பலருக்கு வியப்பாகவும் சிலருக்கு எரிச்சலாகவும்தான் இருக்கும்.
சரி, ஏன் அப்படிச் செய்தார் என்றாவது தெரியுமா? இதுபற்றி, நான் எழுதிய கட்டுரை இன்று வந்த 'உண்மை' ஜனவரி-01 -15 இதழில் வந்திருக்கிறது. நண்பர்களைப் படித்துப் பார்க்க வேண்டுவதோடு;
நேற்று திருச்சியில் நடந்த தமுஎகச - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் செயற்குழுவில், ''தமிழர் திருநாளாக உலகத் தமிழர்கள் எல்லாரும் உவந்து கொண்டாடும் பொங்கல் விழா'வை, ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் கலைக் கழகம் (யுனெஸ்கோ - United Nations Educational Scientific and Cultural Organisation) ஏற்று, அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு" ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது என்னும் உவப்பான செய்தியையும் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு மகிழ்கிறேன். சரி இனி நான் எழுதிய கட்டுரை.
-----------------------------------------------------------------------
பொங்கல் கொண்டாடப் பிரச்சாரம் செய்த பெரியார்!
-- நா.முத்துநிலவன் --
சாதாரண மக்கள், அவ்வப்போது எதையாவது கொண்டாட விரும்புவதும் கூடியிருந்து மகிழ்வதும் உலகம் முழுதும் உள்ளதுதானே? எந்திரங்கள் அல்லவே மனிதர்கள்? ஆகவேதான் எந்திர கதியான வாழ்க்கையில் தினமும் உழைத்துக் களைத்துப் போகும் மக்கள், அவ்வப்போது மாற்றத்தை, மகிழ்வை, ஓரிருநாள் கொண்டாட விரும்புவதும் உலக இயல்புதானே?
ஆண்டுதோறும் சிற்றூர்களில் கூட, ஏதாவதொரு திருவிழா நடத்துவது பகுதிக் கொண்டாட்டம் எனில், நாடுமுழுக்கக் கொண்டாடும் பண்டிகைகளை “கடன ஒடன வாங்கியாச்சும்” கொண்டாடுவதன் காரணமும் இதுதான்! ஆனால், இந்தப் புத்துணர்ச்சி தேடும் மனித இயல்பைப் புரிந்து கொண்ட பார்ப்பனியம், அதற்குள் புகுந்து கொண்டு செய்துவரும் அர்த்தமற்ற சடங்குகள், ஆசைகாட்டி அதில் காசு பார்ப்பது தான் அபத்தமானது, அநியாயமானது!, அறிவுக்கு ஒவ்வாத இந்தப் பண்பாட்டு நிகழ்வுகளுக்கான மாற்று இன்றி சமூக மாற்றமும் வெற்றிபெறாது என்பதை தந்தை பெரியார் உணர்ந்திருந்தார்.
அதைக் கொண்டாடாத பகுத்தறிவாளர்கள் என்ன செய்யலாம்? அறிவுக்கு ஒவ்வாத தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட விரும்பாதவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மாவட்ட – மாநில அளவில் - வேறு ஏதாவது ஒரு விழாவை எடுத்து நடத்தலாம்தான். ஆனால், அவ்வளவு அறிவு முதிர்ச்சிபெறாத மக்கள் கொண்டாடவும் ஒரு தமிழர் விழாவாவது வேண்டுமே பார்ப்பனர்களின் அறிவுக்கு ஒவ்வாத தீபாவளி, சரஸ்வதி பூஜைக்கும் மாற்றாக அர்த்தம் கெட்ட ‘சித்திரையில் தொடங்கும் தமிழ்ப் புத்தாண்டு’க்கும் மாற்றாக, ‘தமிழர் விரும்பிக் கொண்டாடும் அர்த்தமுள்ள விழா ஒன்று வேண்டுமே’ எனத் தந்தை பெரியார் சிந்தித்திருந்த வேளையில்தான் ஒரு நல் வாய்ப்பு வந்தது.
தமிழ்நாட்டின் அறிஞர்கள் பலர் ஓரிடத்தில் கூடியிருந்த நிகழ்ச்சி. தந்தை பெரியார் உரையாற்றச் சென்றிருந்த வேளை, ஒரு வாய்ப்பு வந்தது. இது பற்றி எழுத்தாளர் பெருமாள் முருகன், தனது வலைப்பக்கத்தில் “பெரியார் ஏற்றுக்கொண்ட பொங்கல்” எனும் தலைப்பில் பின்வருமாறு எழுதுகிறார்:
“1921ஆம் ஆண்டு மறைமலையடிகள் தலைமை தாங்க, சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’ என்று தமிழறிஞர்கள் தீர்மானித்ததாகவும் திருவள்ளுவர் ஆண்டை முடிவு செய்ததாகவும் தெரிகிறது. பின்னர். 1937ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் திரு.வி.க. உள்ளிட்ட தமிழறிஞர்கள் ‘பொங்கலே தமிழர் திருநாள்’ என்றுரைக்கப் பெரியாரும் அதை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
1949ஆம் ஆண்டு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்த பெரியார், ‘மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக் குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே? அதற்கென்ன செய்வது? என்று கேட்ட காலத்தில், பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டாடலாம் என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று. அக்கூற்றுக்கேற்ப இந்த 10ஆண்டில் பொங்கல், தமிழர்கள் இடையில் ஆண்டுக்காண்டு வளர்ந்து தீபாவளிப் பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாட ஆளாகி விட்டனர்’” என்று இந்தச் சரித்திரப் புகழ்பெற்ற நிகழ்வை எழுதுகிறார் எழுத்தாளர்பெருமாள் முருகன்.
இதை, அங்கிருந்த ‘பெரியார் ஏற்றுக் கொள்வாரோ, மாட்டாரோ’ என்று திரு வி.க. நினைத்ததற்கு மாறாக, பெரியார் அதை உடனே ஏற்றுக்கொண்டு, தமிழர் அனைவரும் தமிழர் திருநாளை, பொங்கலைக் கொண்டாட வேண்டும் என்று பேசியதை மிகுந்த மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். பெரியார்தான் இப்படி ஒரு வாய்ப்பு வராதா என்று காத்துக் கொண்டிருந்தாரே! அதை உடனே தனது உரைகளில் ஊரெல்லாம் போய்ப் பொங்கலைப் பிரச்சாரம் செய்தவர் பெரியார்!
-----------------------------------------------------------------------
தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகளைக் கொண்டாடுவதை விட, இப்படித் தமிழ்த் திருநாள் (பொங்கல்) என்று, தமிழ்மக்கள் கூட்டுறவுக்கும் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்கும், அனுகூலமாகத் திருநாள்களைப் பரப்ப வேண்டும் - குடிஅரசு -26-01-1946
-----------------------------------------------------------------------
இவ்வாறு, மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் வேண்டும், அவ்விழா அறிவுப் பூர்வமானதாகவும் இருக்க வேண்டும் என்று சிந்தித்த பெரியார், தமிழரைக் கேட்டுக் கொண்ட - 1921முதல் 1949வரை - சில பத்தாண்டுகளாக நாடு முழுக்கத் தான் பேசிய கூட்டங்களில் எடுத்துச் சொல்லி, பொங்கல் விழாவை மகிழ்வோடு நடத்தச் சொல்லிப் பிரச்சாரம் செய்ததன் பயனாகவே இப்போது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம், பொங்கல்விழா தமிழர் திருநாளாக வள்ளுவர் விழாவாக நடந்து வருகிறது.
இதில் உள்ள இன்னொரு மனநிலை என்னவென்றால், இதை -– வழக்கமான பண்டிகைகளில் முதலிடம் பிடித்திருக்கும் -- வழிபாடுகளை நடத்தும்போது, ஏதோ குலசாமியைக் கும்பிடுவது போலக் கால்நடைகளை --குறிப்பாக மாடுகளை—கொண்டாடுவதுதான்! ‘குலசாமி வழிபாடு’ என்பது தமிழ் வழக்கில் நெடுங்காலமாக இருப்பதைச் சங்க இலக்கியங்களே சொல்கின்றன!
திருக்குறளின் முதல் அதிகாரம் “கடவுள் வாழ்த்து” என்று இப்போது அறியப்பட்டாலும் அந்த அதிகாரப் பெயர் வள்ளுவர் வைத்தது அல்ல! பழைய உரையாசிரியர்கள் பத்துப் பேரின் ‘உரைக் கொத்து” இப்போதும் கிடைக்கிறது அதில், குறளில் ‘கடவுள்’ எனும் சொல் எங்குமே வரவில்லை! என்பதை பன்மொழி அறிஞர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களின் ‘அறியப்படாத தமிழ்மொழி’ நூலில் காண்க. ‘கடவுள் வாழ்த்து” எனும் தலைப்பு, குறள் தோன்றி ஆயிரம் ஆண்டுக் கழித்து, பின்னர் உரையெழுத வந்த பரிமேலழகர் என்னும் பார்ப்பனர் வைத்த தலைப்பே ‘கடவுள் வாழ்த்து” என்பதாகும்! அவரது உரை முழுவதும் பார்ப்பனியக் கருத்துகள் ஊடுருவிக் கிடக்கும்! அதைத் தனி ஆய்வாகவே எழுத வேண்டும். திருக்குறளில் பெயர் சுட்டி எந்தக் கடவுள் பெயரும் இல்லை, ஆயினும் பாயிரத்தின் ஓர் அதிகாரமாக ‘நீத்தார் பெருமை’ வரும்! அது தமிழர் மரபில் ‘முன்னோர் வழிபாடு’ என, நெடுங் காலமாக இருப்பதுதான். இப்போது கூட வீட்டுச் சிறுவர்களுக்கு வேட்டி கட்டி விட்டு, ‘தாத்தாவக் கும்பிட்டுக்கடா’ என்பது பெருவாரியாக இருப்பதுதானே?
‘குலசாமி’ என்பது பெருந்தெய்வங்கள் அல்ல! ‘பணக்கார’ சாமிகளான திருப்பதி வேங்கடாசலபதியோ, தஞ்சாவூர் பிரகதீஸ்வரனோ, ஸ்ரீரங்கம் ரெங்கநாதனோ, சிதம்பரம் நடராஜனோ அல்ல! இவையெல்லாம் பின்னால் பார்ப்பனர்களால் கட்டமைக்கப் பட்ட பெருந்தெய்வ வழிபாட்டுக் கோவில்கள். இந்தக் கோவில்களில் உழைக்கும் மக்கள் உள்ளே கருவறைவரை போய் வழிபாடு நடத்த முடியாது! இடைத்தரகராக நிற்கும் பார்ப்பனர் ஒருவர், அர்ச்சனை செய்வதற்குக் கட்டிய தொகைக்கும் மேலாக, மக்கள் தரும் காணிக்கைப் பிச்சையை, பூசைப் பொருள்களோடு வாங்கிக் கொண்டு, கருவறைக்குள் போய், சாமி அருகில் நின்று கொண்டு, மக்களுக்குப் புரியாத மந்திரத்தைச் சொல்லி, ராசி நட்சத்திரத்தின் பேரில் அர்ச்சனை செய்வார்கள். (ராசி நட்சத்திரம் தெரியாதவர் எனில், ‘சாமி பேர்லயே அர்ச்சனை செஞ்சிடுங்க சாமி’ என்பார்கள்! இதுதான் அர்த்தமற்ற மக்களின் அப்பாவிப் பெருந்தன்மை!)
‘குலசாமி’ பெரும்பாலும் ஒரு சிறு கல்லாக மரத்தடியில் இருக்கும். அதற்கு பூசை நடத்தும் கிராமக் கோயில் பூசாரிகள் பார்ப்பனர் அல்லாதாராக இருப்பார்கள். அந்தச் சாமிக்கு தான் விரும்பும் பொருள்களோடு, ஆடு கோழி வெட்டிப் படைத்து, சாராயம், சுருட்டு முதலானவற்றையும் படைப்பதுண்டு!
மேற்சொன்ன பெருந்தெய்வ வழிபாடுகளைத்தான் பார்ப்பனர்கள் கைப் பற்றி புரியாத மந்திரம் சொல்லி, காசு தந்து வழிபடுபவனைத் புறம் தள்ளி, காணிக்கைத் தொகையை மட்டும் அள்ளிக் கொள்வார்கள். கவிஞர் நந்தலாலா சொல்வது போல, ‘உண்டியல்’ மட்டும்தான் தமிழில் இருக்கும்! மற்றவை எல்லாம் புரியாத வடமொழிதான்! உண்டியலை வட மொழியில் எழுதினால், ‘புரியாம காசு போடாம போயிட்டா..?’ அடடா! என்னா மெய்ஞ்ஞானம்!
திருக்குறள் சொல்லும் அந்த நீத்தார் பெருமைக்கும் ஓர் அர்த்தமுண்டு! முன்னோரை மரியாதை செய்வது, அதன் தொடர்ச்சியே வழிபடுவது இன்றும் போரில் வீரமரணம் அடைந்தவருக்கு வைக்கப்படும் நடு கல்லே அனைவரின் மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் உரியதாக மாறுகிறது. இந்த நன்றியைத்தான் பொங்கல் விழாவில் தனது விவசாய வேலைக்குப் பயன்படும் மாடுகளை வழி பட்டு நன்றி செலுத்துவது. விவசாயத்திற்கு உதவும் சூரியனை வணங்கி வழி படுவது என்று நல்லதொரு பண்பாட்டின் அடையாளமாகப் பொங்கல் உள்ளது. அந்த நடுகல்லைப் பின்னர் மக்கள் வழிபடத் தொடங்கினர் என்பதையும் நமது சங்க இலக்கியம் சொல்கிறது – ‘கல்லே பரவின் அல்லது நெல்லுகுத்துப் பரவுமோர் கடவுளும் இலவே!” –புறநானூறு -335. அந்தக் கல் எந்தக் கல் எனில், அதைத் திருக்குறளே சொல்கிறது – குறள் -771. வீரர் வழிபாட்டுக் கல்!
ஆரிய சூழ்ச்சியிலிருந்து பொங்கலைக் காப்பாற்றிய பெரியார்: ஆரியப் பார்ப்பனர்களின் அர்த்தமற்ற கதைகளின்படி சொல்லப்படும் தமிழ் ஆண்டு அறுபது பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை! மாறாக, வாழ்வியல் நூலாம் திருக்குறளைத் தந்த வள்ளுவர் நாளையே தமிழர் ஆண்டுத் தொடக்க நாளாகச் சொல்வதிலும் இந்த நீத்தார் பெருமை உண்டு! எனவே உழவுக்கும், வாழ்வியல் நூல் தந்த வள்ளுவருக்கும் சேர்த்தே அடுத்தடுத்த நாள்களில் தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் விழாக்கள் என்று நாடெங்கும் தனது உரை வழியாகப் பொங்கலையும் தமிழ்ப் புத்தாண்டையும் பிரச்சாரம் செய்த பெருமை நமது தந்தை பெரியாரையே சேரும்.
மகர சங்கராந்தியாக, இந்திர விழாவாக பார்ப்பனர்கள் சொல்லிவந்த பொங்கலை, தமிழர் திருநாளாக, நன்றிகூறும் திருவிழாவாக, தமிழர் வேளாண் வாழ்வியல் சார்ந்த விழாவாக, அறுவடைத் திருநாளாக மாற்றி, மக்களிடம் பேசி, புராணப் புளுகு மூட்டைகளை மூட்டைகட்டி வீசி, தமிழர் திருநாளாகப் பொங்கலை மாற்றித் தந்த பெருமை தந்தை பெரியாருக்கு என்றென்றும் உண்டு!
பொங்கட்டும் தமிழர் சுயமரியாதை! பொங்குக தமிழ்ப் பொங்கல்! பொங்கல் விழாவைத் தமிழர்க்கே உரியவிழாவாக மாற்றிய பெரியாரை வாழ்த்தி, ‘பொங்கலோ பொங்கல்’ என்று புது அரிசியில் புதுப் பானையில் புத்துணர்ச்சி பொங்கப் பொங்கலிடுவோம்! பொங்கட்டும் பெரியார் பெருமை!
சாதிச் சடங்குகள் அற்ற – மத வேற்றுமை இல்லாத – மதச்சார்பற்ற பொங்கலாக, மூடச் சடங்குள் இல்லாத தன்னைத் தமிழர் என்றுணரும் யாவரும் குடும்பத்துடன் கூடி, தமிழர் விழாவாக, இயற்கைக்கும், உழவருக்கும், கால் நடைகளுக்கும், நன்றி கூறும் தமிழ்விழா சிறக்கட்டும்!
-----------------------------------------------------------------------