சிங்கம், சிங்காரம் - இவை தமிழ்ச் சொற்கள் தான் என்று நிறுவ முடியுமா?

96 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 30, 2019, 1:58:02 AM10/30/19
to
சிங்கம், சிங்காரம் - இவை தமிழ்ச் சொற்கள் தான் என்று நிறுவ முடியுமா?

- கோராவில் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான எனது விடையும்..

**************************************************************************


சிங்கம், சிங்காரம் ஆகிய இரண்டு சொற்களும் தமிழ்தான் என்பதில் எள்ளளவும் அயிர்ப்பு இல்லை. இவை இரண்டும் எப்படித் தமிழ்ச் சொற்கள் ஆகும் என்று இங்கே விளக்கமாகக் காணலாம்.

சிங்கம்:

தமிழில் பலவகைப்பட்ட இலக்கணப் போலிகள் உண்டு என்று பலரும் அறிவோம். அவற்றுள் ஒன்றுதான் சம்மோனைப் போலி ஆகும். முதலிச் சொல்லில் வரும் உயிர் மோனைக்குப் பதிலாக அவ்வுயிரின் மேலேறிய சகர மெய்யினை முதல் எழுத்தாகக் கொண்டு அதே பொருளில் வரும் போலிச்சொல்லே சம்மோனைப் போலி ஆகும். இதற்குச் சான்றாக கீழே சில எடுத்துக்காட்டுக்களைக் காணலாம்.

இப்பி >>> சிப்பி இறகு >>> சிறகு உணங்கு >>> சுணங்கு

இவற்றில் இப்பி, இறகு, உணங்கு என்பன முதலிச் சொற்கள். சிப்பி, சிறகு, சுணங்கு ஆகியன சகர மெய் ஏறியதால் சம்மோனைப் போலிகள். இதைப்போன்ற ஒரு சம்மோனைப் போலியே சிக்கு என்பதாகும்.

இக்கு என்னும் தமிழ்ச் சொல்லுக்கு முடிச்சு, பின்னல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. இக்கு என்ற சொல்லின் சம்மோனைப் போலியே சிக்கு என்பதாகும். அதாவது,

இக்கு >>> சிக்கு

மேலே காணப்படும் சிக்கு என்னும் பெயர்ச்சொல்லில் இருந்து சிக்குதல் எனும் வினை பிறக்கும். சிக்கிக் கொள்ளுதல், பின்னிக் கொள்ளுதல் எனும் வினைகளைச் சுட்டுவதான சிக்குதல் என்ற வினையின் அடிப்படையில் சிக்கம், சிகை, சிக்கல், சிக்கடி, சிகண்டம், சிகண்டி போன்ற பல சொற்கள் தோன்றும்.

சிக்கு >>> சிகை = தலைமயிர் – அடிக்கடி பின்னிக் கொள்ளும் தன்மையது.

சிக்கு >>> சிக்கு+வாரி = தலைமயிர்ப் பின்னலை நீக்கும் சீப்பு.

சிக்கு >>> சிக்கல் = பின்னல், குழப்பம்.

சிக்கு >>> சிக்கடி = தலைமயிரின் எண்ணை நாற்றம்.

சிக்கு >>> சிக்கம் = தலைமயிர், குடுமி.

சிக்கு >>> சிகண்டம் = தலைமயிர், குடுமி.

சிக்கு >>> சிகண்டி = மயில் = தலையுச்சியில் அழகிய குடுமியைக் கொண்டது.

சிக்கம் என்ற சொல்லானது தலைமயிரைக் குறித்தாலும் சிக்கலைக் கொண்டது என்ற பொருளில் சிக்கலுடைய அடர்த்தியான தலைமயிரைக் குறிக்கவே பெரிதும் பயன்படுகிறது. ஏனென்றால், அடர்த்தியான தலைமயிரில்தான் சிக்கல்கள் அதிகமாக உருவாகும்.

சிக்கம் என்ற சொல்லானது சிங்கம் என்று மெலித்தல் விகாரமாகவும் பயன்பட்டு இருக்கிறது. குறவர்களின் தலைமயிர் சரியாக வாரப்படாமல் எப்போதும் சிக்கலைக் கொண்டிருந்ததால் அவர்கள் சிங்கன் என்றும் சிங்கி என்றும் அழைக்கப்பட்டனர்.

சிக்கம் >>> சிங்கம் >>> சிங்கன் = குறவன், சிங்கி = குறத்தி.

குறவர்களைப் போலவே சிக்கலான அடர்ந்த தலைமயிரைக் கொண்ட விலங்கினமே சிங்கம் என்று அழைக்கப்பட்டது. அதாவது,

சிக்கம் >>> சிங்கம் = சிக்கலான அடர்ந்த தலைமயிர் கொண்ட விலங்கு.

சிங்கம் என்ற பெயரானது அவ் விலங்கின் சிக்கலான அடர்ந்த தலைமயிரின் அடிப்படையில் தான் அமைக்கப் பட்டது என்பதனைச் சிங்கத்தைக் குறிக்கும் வேறுசில பெயர்களின் மூலமும் உறுதி செய்யலாம்.

அரிமா (தமிழ்) = அரி ஆகிய தலைமயிரைக் கொண்ட விலங்கு = சிங்கம்.

கேசரி (சமக்கிருதம்) = கேசம் ஆகிய தலைமயிரைக் கொண்ட விலங்கு = சிங்கம்.

அரிமா, கேசரி போன்ற பெயர்களைப் போலவே அடர்ந்த தலைமயிரின் அடிப்படையில் இவ் விலங்கிற்கு சூட்டப்பட்ட பெயரே சிங்கம் ஆகும். இதிலிருந்து, சிங்கம் என்னும் பெயரானது தமிழ்ச் சொல்லே என்பது உறுதியாகிறது.

சிங்கம் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து கீழ்க்காணும் விதிகளின்படி சி`ம்க` என்னும் தமிக்ருதப் பெயர் தோன்றியது.

சிங்கம் >>> சி`ம்க` (வி.15,5,15,6)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி, சிகரம் சி`கரமாகவும் ககரம் க`கரமாகவும் மாறின.

வி.5 – நட்பெழுத்து விதி – இதன்படி, ஙகரமானது அதன் நட்பெழுத்து ஆகிய மகரமாக மாறியது.

வி.6 – விகுதிகெடல் விதி – இதன்படி, மகர விகுதி கெட்டது.

சிங்காரம்:

ஆண் மயிலுக்குத் தோகையைப் போல, ஆண் சிங்கத்திற்கு அழகே அதன் அடர்த்தியான தலைமயிர் தான். குதிரை போன்றவற்றுக்கும் அழகிய பிடரி மயிர் / தலைமயிர் உண்டு என்றாலும் சிங்கத்தின் தலைமயிர் ஆனது அதன் தலையைச் சுற்றிலும் வட்ட வடிவில் சூழ்ந்திருக்கும் என்பது இங்கே குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது ஆகும். சிங்காரம் என்னும் சொல்லே இவ் வடிவத்தின் அடிப்படையில் தோன்றியது தான். அதாவது,

சிங்காரம் = சிங்க + ஆரம் = சிங்கத்தின் வட்டவடிவமான தலைமயிர்.

சிங்கம், ஆரம் ஆகிய இரண்டு சொற்களும் தமிழே என்பதால் இவற்றின் கூட்டுச் சொல்லான சிங்காரம் என்பதும் தமிழ்ச் சொல்லே என்பது உறுதியாகிறது. சிங்கத்தின் வட்டவடிவமான தலைமயிரைக் குறித்துவந்த சிங்காரம் என்னும் தமிழ்ச் சொல்லானது நாளடைவில் தலையில் சூட்டப்படுவதான வட்டவடிவ மலர்மாலைகள், மணிமாலைகள் போன்ற பலவற்றையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

சிங்காரம் = வட்டவடிவ தலைமாலை.

இப்படியான வட்டவடிவ மாலைகளைத் தலையில் சூட்டி அழகுபடுத்திக் கொள்வதனையே சிங்காரித்தல் என்ற வினைச்சொல்லால் குறிக்கத் தொடங்கினர் எனலாம். இச் சொல்லே பின்னர் அனைத்து வகையான அழகூட்டும் வினைகளையும் குறிக்கும் பொதுச்சொல்லாக மாறியது.

சிங்காரம் >>> சிங்காரித்தல் = அழகுசெய்தல்.

சிங்காரம் என்னும் தமிழ்ச்சொல்லே கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்பத் திரிந்து தமிக்ருத மொழியாக மாறியது.

சிங்காரம் >>> ச்`ருங்கார (வி. 21,6)

வி.21 – விரிமோனை விதி – இதன்படி, சி என்னும் மோனை ச்`ரு என்று இரண்டு எழுத்துக்களாக விரிந்தது.

வி. 6 – விகுதிகெடல் விதி – இதன்படி, மகர விகுதி கெட்டது.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்தன்னைப் பேசிடுவீர் நேசமுடன் அமிழ்தென்ன
தங்கமே தானாய் வரும்.!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
Reply all
Reply to author
Forward
0 new messages