தமிழ்ப் பகுப்பாக்கம் மற்றும் சொல்லாக்கம் – சொல்லாக்கியன்

103 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 7, 2023, 8:01:09 PM5/7/23
to மின்தமிழ்

தமிழ்ப் பகுப்பாக்கம் மற்றும் சொல்லாக்கம்

சொல்லாக்கியன்

முன்னுரை

உலகில் வழங்கும் எல்லா மொழிகளும், தமிழ், சமக்கிருதம் உட்பட, மனித இனத்தால் உருவாக்கப்பட்டு, கற்பிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, திருத்தப்பட்டு, செழுமைப்படுத்தப்பட்டவையே! ஒரு மொழிக்கெனவே சங்கம் அமைத்து, அதன் இலக்கணத்தையும், இலக்கியத்தையும் ஒழுங்குபடுத்தி செழுமைப்படுத்திய  தனிச்சிறப்பு, தமிழ் மொழிக்கே உண்டு.    ஒரு  சமுதாயத்தின் இயக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் ஏற்ப, அதன் மொழியும் மாறி வந்துள்ளது, சொல்வளமும் பெருகியுள்ளது. மொழி என்பது, தனிமனிதப் படைப்பாக்கம் அல்ல. அது, பல்வேறு காலங்களில் வாழ்ந்த பலப்பல மாந்தரின் பங்களிப்பால் விளைந்த சமூக மற்றும் வரலாற்று உற்பத்திப் பொருள் (Language is a Social and Historical product). மொழி என்பது ஒரு சமூகத்தின் பொதுச் சொத்து. அதை, ஒரு தனிப்பட்ட நபரோ, குழுவோ தனதென சொந்தம் கொண்டாட முடியாது. மொழி என்பது, ஒரு சமுதாயத்து மக்களின் உரிமை. மொழி எனும் சொத்தை, உரிமையைக் காக்க வேண்டியது, அச்சமுதாயத்தின் ஒவ்வொருவரின் கடமையுமாகும்!

 

சொல்லாக்கத்தின் அவசியம்

ஒரு மொழியின் மாற்றமும், வளர்ச்சியும், அதன் வரலாற்று அடிப்படைகளைக் கொண்டும், உள் முரண்பாடுகள் இன்றியும் நிகழ்தல் வேண்டும். கிடைக்கப்பெற்ற தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம், தன்னுடைய புறநடைகளின் வாயிலாக, தமிழ் மொழியில் மாற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த வழிவகைகளைச் செய்துள்ளது. ஒரு பக்கம், மரபைக் காக்க வேண்டிய கடமையை, அறிஞர்களுக்கு அறிவுறுத்திய போதிலும், மொழியின் அடிப்படைகளுக்கு  ஒத்திசைவான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இடம் அளித்துள்ளது, தொல்காப்பியம். சமுதாய மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் ஏற்ப, மொழி ஈடு கொடுத்தாக வேண்டும் என்பதை தொல்காப்பியர் நன்கு அறிந்தவர் போலும். ஒரு சமுதாயத்தின் வளரச்சிக்கு ஏற்றவாறு ஒரு மொழி மாறவில்லை என்றால், வேறு ஒரு மொழியோ, பல மொழிகளோ, அதன் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

 

வரலாற்றை மீளாய்வு செய்வது போல், மொழியையும் மீளாய்வு செய்தல்  வேண்டும். அத்தகைய மீளாய்வுகளால்தான், அன்று, தனித் தமிழ் இயக்கமே உருவானது. இன்றைய கணிணி மனநிலையில், எண்ணிலடங்கா வகை வகையான புதிய சிந்தனைகள்,  எல்லாத் துறைகளிலும்   தோன்றுகின்றன. காரண, காரியங்களைத் தேடுகின்றன. புதிய சொல்லாக்கங்கள், கணிணியின் மூலமாகவே கூட நிகழ்த்தப்படுகின்றன. நம்முடைய மொழிச்சிந்தனை உலகளாவியதாய் இருக்க வேண்டும், எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டதாய் இருக்க வேண்டும். ஆனால், அதே சமயம், மாற்றமும், வளர்ச்சியும், நம்முடைய தமிழ் மொழியின் இலக்கண அடிப்படைகள் சிதையாதவாறு, நிகழ்த்தல் வேண்டும். 

 

சொல்லாக்க அடிப்படைகள்

. ஒரு சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் நிகழும் மாற்றம் மற்றும் வளரச்சிக்கு ஏற்ப, இயல்பான, எளிதான, தெளிவான, இனிமையான, சுருக்கமான, இயன்ற அளவு பொருள் வெளிப்படையாய்த் தெரியும் சொல்லாக்கம், அதன் மொழியில் நடைபெறல் வேண்டும். ஏனெனில், தொல்காப்பியம், பெயரியலின் மூன்று நூற்பாக்கள், அவற்றை வலியுறுத்துகின்றன. அவை:

152. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.

சொல், பொருள் பொதிந்ததாய் இருக்க வேண்டும். சொல்லின் உயிர் அதன் பொருளே! பொருளற்ற எழுத்துக்குவியல் சொல்லல்ல.

153. பொருண்மை தெரிதலும் சொன்மை  தெரிதலும்

    சொல்லி னாகும் என்மனார் புலவர்.

ஒரு சொல்லை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதையும், அதன் பொருள் என்ன என்பதையும், அச்சொல்லே வெளிப்படுத்தல் வேண்டும்.

154. தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்

    இருபாற் றென்ப பொருண்மை நிலையே.

வெளிப்படையானப் பொருள் மற்றும் குறிப்புப் பொருள் என, பொருள் இரு வகைப்படும்.   

 

தமிழ்ச் சமுதாயம், கலை, அறிவியல், வணிகம், பண்பாடு என  பல்வேறு துறைகளில் வளர்ந்து விரிவடைகின்றது. அதற்கேற்ற தமிழ்ச் சொல்வளம், இன்றைய மக்களுக்கு தேவை. சொல்லாக்கத்தாலேயே சொல்வளம் பெருகும். சொல்லை எப்படி ஆக்குவது? சொற்கள் ஏற்கனவே எந்த அடிப்படையில், எப்படி உருவாக்கப்பட்டுள்ளன எனப் பகுப்பாக்கம் செய்து விட்டால், அதே அடிப்படைகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்கலாம் அல்லவா?

 

எழுத்துகளின் தோற்றம்

சொற்கள் உருவாக, எழுத்துகள் தேவை அல்லவா? அப்படி என்றால், எழுத்துகள் எப்படி உருவாக்கப்பட்டன? இன்றிருக்கும் ஒலி மற்றும் வரிவடிவ எழுத்துகள் போன்று, முதலில் எழுத்துகள் தோன்றவில்லை. அவை, பல வரலாற்றுப் படிநிலைகளைக் கடந்தே இன்றைய நிலையை வந்தடைந்துள்ளன. ஆதி மனித இனம், அருவி, ஆறு, காற்று, இடி, மழை போன்றவற்றின் ஒலிகளையும், வண்டுகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் ஒலிகளையும், தம் இனத்திற்குள் பசி, காமம், கோபம், தாகம் ஆகியவற்றிற்காக   ஏற்படுத்தும் ஒலிகளையும் பழகி இருக்கும். மனித இனம், இயற்கையின் சீற்றங்களில் இருந்தும், கொடிய, வலிமையான வன விலங்குகளிடம் இருந்தும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, கூட்டமாக அல்லது குழுவாக வாழ வேண்டியது அவசியம். அச்சமயம், அவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வேண்டியதும் அவசியம். முதலில், ஒலிகளால் தொடர்பு கொண்டிருப்பர். அது போதாத போது, உடலசைவுகளாலும், பின்னர், கோலால் தரையில் கீறிய வடிவங்களாலும் தொடர்பு கொண்டிருப்பர்.

 

சமுதாயம் வளர்ந்த பின், பல்வேறு மக்கள் குழுக்கள் ஒன்று சேர்ந்து வாழும் நிலையில், பேச்சு மொழியுடன், பட வடிவங்களும், சித்திரங்ககளும், சின்னங்களும் (சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்டது போல்) பயன்படுத்தப்பட்டிருக்கும். எகிப்திய நாகரிகமும் பட வடிவங்களைப் பயன்படுத்தி உள்ளது. சமுதாயம் வளர வளர,  மனிதரின் கருத்துருவங்கள் நுண்மையானதாயும், சிக்கலானதாயும் மாறுகின்றன. அவற்றை வெளிப்படுத்த, படவடிவங்கள் போதுமானதாக இல்லாமல் போகலாம். சான்றாக, சிந்து சமவெளி நாகரிகத்தில் “பானை”  எனும் படவடிவம், “தண்ணீர் இறைப்பதையோ, கொணர்வதையோ, தானியம் சேமிப்பதையோ” குறிக்கப் பயன்படுத்தலாம். அதையே “வானத்”தைக் குறிக்க பயன்படுத்த இயலாது. அதைப் போன்று, “மூடியுடைய பானை”, “பாதுகாப்ப”தைக் குறிப்பிடலாம். “மனம்” என்பதைக் குறிக்க வேண்டும் என்றால், அப்பட வடிவைப் பயன்படுத்த முடியாது. ஆனால், இந்த பருண்மையானப் படவடிவை, அருவமான வரிவடிவமாக்கினால், பல்வேறு கருத்தாங்கங்களை வெளிப்படுத்த முடியும். (அதற்குள், சமுதாயத்தினர் பலரும், அருவப் பொருண்மைகளை, பருண்மைப் பொருண்மையாக்கிக் கொள்ளும்  அறிவுத்திறனை அடைந்திருப்பர்).  அப்படித்தான், “திறந்த பானைப் படவடிவம்”, “ப” எனவும், “மூடியிட்டப் பானைப் படவடிவம்”, “ம” எனவும் ஆகி இருக்கும். இப்பொழுது, “ப்” அல்லது “ப” என்பது “கொள்ளல்” எனும் கருத்து எங்கெல்லாம் வருகின்றதோ, அங்கெல்லாம் பயன்படும்; “ம்” அல்லது “ம” என்பது “கொண்டு மூடியது” எனும் கருத்து எங்கெல்லாம் வருகின்றதோ,  அங்கெல்லாம் பயன்படும். இப்படியே, பல படவடிவங்கள், வரிவடிவங்களாக மாற்றப்பட்டன.

 

(எழுத்து வரிவடிவம் மட்டுமல்ல. பேச்சு ஒலிவடிவமும் பற்பல மாற்றங்களை  ஏற்றுக் கொண்டே இன்றைய நிலையை அடைந்திருக்கும். சான்றாக, “அ” எனும் ஒலியை, புதிதாய் கற்கும் குழந்தைகள் பல்வேறு வகைகளில் ஒலிப்பர். எவ்வளவு வாயைத் திறக்க வேண்டும், எவ்வளவு அழுத்தம் தரவேண்டும், எவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும் என்பதை நாம்தான் கற்றுத் தருகிறோம். கற்றவர்கள் கூட, சில ஒலிகளை இன்றும் சரியாக ஒலிப்பதில்லை. சான்றாக, “ண, ந, ன”, “ர, ற” , “ல, ள, ழ” போன்ற ஒலி இனங்களை, வேறுபாடு இல்லாமல் ஒலிக்கின்றனர். காரணம், கற்பித்தலிலும், கற்றலிலும் நேர்ந்த குறைபாடு).

 

அடிப்படைத் தமிழ்ச் சொற்கள்

சொல்லாக்கம் பற்றி அறிய, தொல்காப்பியத்தின் மூன்று நூற்பாக்களை தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. அவை, எழுத்து அதிகாரம், மொழிமரபில் உள்ளவை:

43. நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி.

44. குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே.

45. ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி

   இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட

   மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.

(1)    “ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ” ஆகிய நெட்டெழுத்துகள் ஏழும், ஓர் எழுத்தாக இருந்தே, முழுமையான பொருளைத் தருவன. உயிர் நெடில்கள் மட்டுமல்லாது, உயிர்மெய் நெடில்களும், ஓர் எழுத்தாக இருந்தே, முழுமையான பொருளைத் தருவன. (கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ, சா, சீ, சூ, சே, சை, சோ, சௌ, ஞா, ஞை, ஞே, தா, தீ, தூ, தே, தை, தோ, நா, நீ, நூ, நே, நை, நோ, நௌ, பா, பீ, பூ, பே, பை, போ, பௌ, மா, மீ, மூ, மே, மை, மோ, மௌ, யா, வா, வீ, வே, வை, வௌ போன்ற, மொழிக்கு முதலாக வரும் உயிர்மெய் நெட்டு எழுத்துக்களும் ஓர் எழுத்தாக இருந்தே, முழுமையான பொருளைத் தருவன).   

(2)   “அ, இ, உ, எ, ஒ" ஆகிய குற்றெழுத்துகள் ஐந்தும், ஓர் எழுத்தாக நின்று நிறைவான அதாவது முழுமையானப் பொருளைத் தராமல், பகுதிப் பொருண்மை தரவல்லன. உயிர்க் குறில்கள் மட்டுமல்லாது, உயிர்மெய்க்  குறில்களும் ஓர் எழுத்தாக நின்று நிறைவான அதாவது முழுமையானப் பொருளைத் தராமல், பகுதிப் பொருண்மை தரவல்லன (க, கி, கு, கெ, கொ, ச, சி, சு, செ, சொ, த, தி, து, தெ, தொ, ந, நி, நு, நெ, நொ, ப, பி, பு, பெ, பொ, ம, மி, மு, மெ, மொ, வ, வி, வெ போன்ற, மொழிக்கு முதலாக வரும் உயிர்மெய் குற்று எழுத்துகளும் ஓர் எழுத்தாக நின்று, பகுதிப் பொருண்மை தரவல்லன).

(3)   ஈர் எழுத்து ஒரு மொழிகள் யாவை? “அண், ஆண், இண், ஈண், உண், ஊண், எண், ஏண், ஐண், ஒண், ஓண், ஔண், அம், ஆம், இம், ஈம், உம், ஊம், எம், ஏம், ஐம், ஒம், ஓம், ஔம்.. கண், காண், கிண், கீண், குண், கூண், கெண், கேண், கைண், கொண், கோண்...போன்று, உயிர்குறில், உயிர்நெடில், மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய்குறில், உயிர்மெய் நெடிலை அடுத்து, மொழிக்கு இறுதியாக வரும் மெய்யெழுத்துகள் வருவது, ஈர் எழுத்து ஒரு மொழிகளாகும். இவை, முழுமைப் பொருண்மைகளைத் தருவன.      

(4)   தொடர்மொழி என்றால் என்ன? அவை யாவை? தொடர்மொழி என்றால், ஒரே ஒரு சொல்லே தொடர்ச்சியாகி வருதல். சான்றாக, “அல்” என்பது ஈர் எழுத்து ஒருமொழி. அதன் பின் உயிர்கள் ஒட்டி, “அல, அலா, அலி, அலை, அலே, அலோ” எனத் தொடர்ந்தால், அவை தொடர்மொழிகள். மாறாக, மொழித்தொடர் என்றால், இரண்டு அல்லது இரண்டுக்கு மேலான சொற்கள் அடுத்தடுத்து வருதல். சான்றாக, “அலி வந்தான்” என்பது மொழித்தொடர் அல்லது சொற்றொடர்.    

(5)   1.ஓர் எழுத்தாக இருந்தே, முழுமையான பொருளைத் தருவனவும் (நெட்டெழுத்துகள்), ஓர் எழுத்தாக நின்று நிறைவான அதாவது முழுமையானப் பொருளைத் தராமல், பகுதிப் பொருண்மை தருவனவும் (குற்றெழுத்துகள்), 2.முழுமைப் பொருண்மைகளைத் தரும் ஈர் எழுத்து ஒரு மொழிகளும், 3. இரண்டு மாத்திரைகள், மற்றும் இரண்டிற்கு மேலான மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் தொடர்மொழிகள் ஆகிய மூன்று வகைகளிலேதான் சொற்கள் தனித்து நிற்கின்றன. இவையே தனிமொழிகள், அடிப்படைச் சொற்கள்.

(6)   பிற சொற்கள் யாவும், மேற்கூறிய மூன்று வகையான அடிப்படையான சொற்கள் புணர்ந்து வந்த மொழிகளே, தனிமொழிகள் அல்ல.   

புணர்ச்சி விதிகள்

பல ஓரெழுத்து ஒரு மொழிகளுக்கும், ஈரெழுத்து ஒருமொழிகளுக்கும், தொடர்மொழிகளுக்கும் பொருள் கூறும் அகராதிகள் நம்மிடம் இல்லை. அவற்றுக்கு பொருள் கண்டுவிட்டால், புதிய புணர்மொழிகளை ஆக்கம் செய்வது மிக எளிது.

சொல் புணர்ச்சியைப் பொறுத்து பல இலக்கண விதிகளை, தொல்காப்பியம் கூறிய போதிலும், நான்கு முக்கியமான விதிகளை, நினைவில் கொள்வது நல்லது. அவை,

தொல்காப்பியம், புணரியலில் உள்ள இரண்டு நூற்பாக்கள்:

 109. ....................

    மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென

    ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே.

சொல் புணர்சசியின் இயல்பு நான்கு வகைப்படும். அவற்றில், மூன்று வகைகள் திரிவன, ஒன்று திரியாதது.

110. அவைதாம்

    மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று

    இவ்வென மொழிப திரியு மாறே.

 சொல் புணர்சசியில் திரிபவை: 1. ஒரு மெய்யெழுத்து மற்றொரு மெய்யெழுத்தாக மாறுதல் 2. ஒற்றெழுத்து, சொற்களுக்கு இடையில் தோன்றுதல் 3. ஒரு மெய்யெழுத்து, இடையில் இருந்து மறைதல்.    

மற்றும் எச்சவியலில் உள்ள இரண்டு நூற்பாக்கள்:

395. இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்று

    அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கே, செய்யுள் சேர்த்தச்  சொற்கள். இயற்சொல் என்பது, ஒரு பொருளின் பண்பைக் காரணமாய்க் கொண்டு உருவாக்கப்பட்ட சொல் (மரம் = ம் + அர் + அம். கொண்டு மூடிய மண்ணில் இருந்து + பிரிந்து வரும் + தன்மை ). பல சொற்கள் ஒரு பொருளைக் குறிப்பதும், ஒரு சொல், பல பொருளைக் குறிப்பதும் திரிசொல். “அடுக்கல்”, “ஓங்கல்” என்பன “மலை”யைக் குறிக்கும் பல சொற்கள்.. “உந்தி” எனும் ஒரு சொல், “கொப்பூழ்”, “தேர்த்தட்டு”, “யாழின் உறுப்பு” என பல பொருள் தரும்.. திசைச்சொல் என்பது, செந்தமிழ் நாட்டைச் சுற்றியுள்ள பன்னிரண்டு நிலப்பகுதி மக்களின் வழக்குச் சொற்கள் (கருப்பட்டி, மக்கா...போன்றவை). வடசொல் என்பது, தமிழ் ஒலிகளுக்குப் பொருந்துமாறு தமிழ்ப்படுத்தப்பட்டச் சொல். (புஷ்பம் – புட்பம்)      

397. அந்நாற் சொல்லும் தொடுக்குங் காலை

    வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்

    விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும்

    நீட்டுமவழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும்

    நாட்டல் வலிய என்மனார் புலவர்.  

வலிக்குமவழி வலித்தல்: சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்.

மெலிக்கும்வழி மெலித்தல்: கருப்பு + சட்டை = கருஞ்சட்டை.

விரிக்கும்வழி விரித்தல்: பல் + மாந்தர் = பல்வகை மாந்தர்.

தொகுக்கும்வழித் தொகுத்தல்: அறிகின்ற + துயில் = அறிதுயில்.

நீட்டல்வழி நீட்டல்: பச்சை + மணி = பாசிமணி.

குறுக்கும்வழிக் குறுக்கல்: பாதம் + மலர் = தமலர்.  

 

மெய்யெழுத்துகளின் பொருண்மை:

உயிர் மற்றும் உயிர்மெய் எழுத்துகளுக்கு பொருண்மை உண்டென்று சொன்ன தமிழ் இலக்கண நூல்கள் எவையும், தொல்காப்பியம் உட்பட, மெய் எழுத்துகளுக்கு பகுதிப் பொருண்மையாவது இருக்க வேண்டும் என இயம்பவில்லை. மெய் எழுத்துகள் தனித்து இயங்காது என்றாலும், அவற்றிற்கு பகுதிப் பொருளாவது இருந்தாக வேண்டும் அல்லவா? சான்றுக்கு, ஒரு பொருளைக் கொண்ட ஒரூ உயிர் நெடில் எழுத்து, வெவ்வேறு மெய் எழுத்துகளுடன் சேர்ந்து வெவ்வேறு பொருளைத் தருகின்றது என்றால், அந்த வெவ்வேறு மெய் எழுத்துகளால்தான், பொருண்மை வேறுபடுகின்றது என கருதலாம் அல்லவா

ஆ = ஆதல், ஆகுதல்.

க் + ஆ = கா. இடம் பெயரா மெய்யாதல்.

ச் + ஆ = சா. இயக்கமாதல்.

த் + ஆ = தா. தேகமாதல். பிள்ளையாதல். மகப்பெறுதல்.

ந் + ஆ = நா. நெருக்கமாதல். நாக்கு.

ப் + ஆ = பா. கொள்வதாதல்.

ம் + ஆ = மா. கொண்டு மூடியதாதல். அமைதியாதல். பேசா விலங்கு.

ய் + ஆ = யா. இருத்தல் ஆக்கல்.

வ் + ஆ = வா. புறம் இருந்து உள்ளாதல்.

கா, சா, தா, நா, பா, மா, யா, வா ஆகிய உயிர்மெய் நெட்டெழுத்து ஒரு மொழிகளில், ஆதல் என்பது பொதுமையாய் இருப்பினும், நிகழ்தல் வெவ்வேறாக உள்ளது. இந்த வேற்றுமைகளுக்கு காரணம், மெய் எழுத்துகளின் இதுவரை வெளிப்படுத்தப்படாத பொருண்மைதான் எனக் கூறலாம்தானே? அப்படி எனில், மெய்யெழுத்துகளின் பொருண்மைதான் என்ன?

1.jpg

2.jpg

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

பகுப்பாக்கமும் சொல்லாக்கமும்

இவற்றின் அடிப்படையில், ஏற்கனவே உள்ள சொற்களின் முதன்மைக் காரணப் பொருளை அறியலாம். புதிய சொற்களை உருவாக்கவும், இவற்றைப் பயன்படுத்தலாம்.

இவற்றுடன், புணர்ச்சி விதிகளையும், உயிர், மெய் மயக்கங்களையும் அறிதல் அவசியம். சான்றாக, “கொண்டி” மற்றும் “அவிச்சை” என இரண்டு ஏற்கனவே உள்ள சொற்களைப் பகுப்போம்.

கொண்டி = க் + ஒண்  + த் + இ. மெய்யுடன் + ஒன்றாய் மிக நெருக்கம்  + தேகம் + பெண்பால் விகுதி. பொருளை (மறைத்துக்) கொள்பவள். திருடி. இதற்கு, “தகரம்” “டகர”மாய் மாறும் தொகை மரபு விதியை அறிந்திருக்க வேண்டும்.  (தொல். எழுத்து. தொகை மரபு. த, ந எனும் எழுத்துகள்  151. ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும்).

அவிச்சை = அ + இச்சை = இன்மை + ஆசை. ஆசையின்மை. “அ” என்பது இங்கு எதிர்மறைப் பொருளில் வருகின்றது. “வ்” எனும் உடன்படுமெய் இடையில் தோன்றுகின்றது. (தொல். எழுத்து. புணரியல். 141. எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே, உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்). 

இவ்வாறு, சொற்களைப் பகுப்பதன் மூலம், சொற்களின் காரணத்தை அறியலாம்.

“புறதி” என ஒரு புதிய சொல்லை உருவாக்கலாம். “அகதி”க்கு எதிராக “புறதி” எனலாம். அகதி = அக(ம்) + தி. உள்ளே + தேகம் இருத்தல். அடைக்கலம் தேடி வெளி நாட்டில் இருந்து, வேறொரு நாட்டிற்குள் வந்து இருப்பவர். மாறாக, புறதி = புற(ம்) + தி. புறத்தில் + தேகம் இருத்தல். ஒரு நாட்டில் இருந்து, புற   நாட்டிற்கு செல்பவர் அல்லது வெளியேற்றப்பட்டவர்.    

முடிவுரை

எனவே, உயிர் மற்றும் மெய் எழுத்துகளின் பொருண்மைகளை ஆயந்தறிவதன் மூலமும், தொல்காப்பியத்தைக் கற்றுத் தெளிவதன் மூலமும், தமிழ்ப்பகுப்பாக்கம் மற்றும் சொல்லாக்கம் ஆகிய இரண்டையும் எளிதில் திறம்பட நிகழ்த்தலாம். 

தேமொழி

unread,
May 7, 2023, 8:03:40 PM5/7/23
to மின்தமிழ்

அட்டவணை இணைப்பாக . . .  
4.jpg
5.jpg
1.jpg
2.jpg
6.jpg
3.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages