நண்பர்களே, செய்யறிவுத்துறை தொடர்பான அனைத்துக் கலைச்சொற்களையும் ஒருங்கே திரட்ட எண்ணுகிறேன். வெவ்வேறு இடங்களில் படைக்கப்பட்ட சொற்களோடு, வெவ்வேறு கட்டுரைகளிலும் பதிவுகளிலும் பகிரப்பட்ட சொற்களும் இருந்தால் சிறப்பு. இதைச் சொல்லாய்வுக்குழுவிலும் பகிர்ந்திருக்கிறேன். முதல் தவணையாக, எனக்குக் கிடைத்த சொற்களையும், நான் படைத்த சில சொற்களையும் இத்துடன் இணைத்திருக்கிறேன். நண்பர் செல்வ குமார் Selva Kumar சொல்லாய்வுக்குழுவில் பகிர்ந்த சொற்களையும் அகரவரிசைப் படுத்திய பிறகு இத்துடன் இணைக்கவுள்ளேன். தமிழில் எழுதும் செய்யறிவு வல்லுநர்கள் தாங்கள் புழங்கும் சொற்களைப் பகிர்ந்தால் மகிழ்வேன். புழக்கத்தில் இருந்தால்தான் கலைச்சொற்கள் வேரூன்றும். இதில் பகிரும் கலைச்சொற்கள் முதலில் தொழில்நுட்பத் துல்லியத்துடன் உள்ளனவா என்று வல்லுநர்கள் கருத்துரைக்கட்டும். தமிழ்ப்புலவர்கள் இவற்றில் இலக்கணப் பிழைகள் உள்ளனவா என்று சுட்டிக் காட்டட்டும். பிறகு, நுகர்வோர், இந்தச் சொற்களைப் புரிந்து கொண்டு எடுத்தாள முடிகிறதா, இல்லை இன்னும் எளிமைப்படுத்த வேண்டுமா என்று சொல்லட்டும். இத்தகைய ஊடாடல்களில் பிறக்கும் சொற்கள் பொதுவாக மொழியில் ஆழ்ந்து பரவுகின்றன. புகழ்முகங்கள் பரிந்துரைக்கும் சொற்கள், அவை பொருந்தாவிட்டாலும் விரைவாகப் பரவிவிடுகின்றன. (மென்பொருள், வன்பொருள் என்பவை அப்படிப்பட்ட பொருந்தாச் சொற்களுக்கான எடுத்துக்காட்டு.) அப்புறம் அவற்றை மாற்ற முடிவதில்லை. பொதுவாக, ஒரு கலைச்சொல் ஏற்கப்பட்டுப் பரவலாகப் புழங்கத் தொடங்கியபின் அவற்றை மாற்றுவதற்கு வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். இந்த இணையக் காலத்தில் வேரூன்றிய கலைச்சொற்களை மாற்றுவது மிகமிகக் கடினம். எனவே தோன்றும்போதே பொருத்தமான சொல்லாகத் தோன்றினால் சிறப்பு.