ஈரோடு தமிழன்பனின் எழுத்துப்பட்டறை

12 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
Jul 26, 2024, 10:31:09 AM (21 hours ago) Jul 26
to மின்தமிழ்
ஈரோடு தமிழன்பனின் எழுத்துப்பட்டறை

__________________________________________________



எழுதாத வேளையில்
என்சொற்கள்
ஐந்தாறு குழந்தைகளேடு
ஒளிந்து விளையாடப் போய்விடும்.
தினமும்
என்வாசல்தேடிவரும் சிட்டுக்குருவிகள்
கொத்தித்தின்னத் தீனிகள்
கொண்டுபோகும்.
மழைக்காலத்தில்
தவளைகள் பாடும் பாட்டுக்கு
புதிய
மெட்டுக்கொண்டுபோகும்
குளிக்கப்போய்க்
குளத்தில் நீந்தும் அவற்றைம்
மீன்கொத்திப் பறவைகள்
பார்த்து வியக்கும்-
இது என்ன புதிதாய்ச்
சொல்மீன்கள் !
கவிதையிலேயே குளிக்கலாமே!
குளத்துக்கு வந்து   குழப்பம்
செய்யலாமா?
என்றுகேட்க நினைக்கும்!
சிலசொற்கள்
விண்மார்பு தழுவியபடி
நட்சத்திங்களைப் பார்த்துக்
கண்ணிமைத்துச் சீண்டும்
சோளக் காட்டுக்குள்
நுழைந்த சில சொற்கள்
கதிர்களுக்குள் புகுந்து
பவளக் குஞ்சுகளா! நீங்கள்
மஞ்சள் நிலாவுக்கு
மைத்துனி குழந்தைகளா!
என்று
பரல்களை வியக்கும்.
பள்ளி மாணவர்
புத்தகப் பையயோடு போன
சில சொற்கள்
வகுப்பறைக்குள் போகவில்லை.
பூக்கடை
ரோசாப் பூக்களில் தம்மை
உச்சரிக்கத் தக்க உதடுகள்
கிடைக்குமா என்று
பார்க்கப் பைகளிலிருந்து
குதித்தோடிவிடும்.
எழுதாத வேளையில்
என்சொற்கள் என்றும் படுக்கையில்
படுத்துக் குறட்டை விட்டதில்லை
எப்போதும்
என்கவிதைக்குள் எங்கிருந்தாலும்
ஓடிவந்துவிடும்.
நான்
எழும்வரைதான் இந்தக் கதையெல்லாம்!
........................o.........................
எதுவரை இக்கதைகள்?--தலைப்பு
26-07-2024

ஈரோடு தமிழன்பனின் 26.07.2024 கவிதை பற்றி
ஒரு கவிதை.
___________________________________________________


கவிதைகளின் சிகரமே
உன் சொற்கள்
முளைத்து வந்ததும் கேட்டன‌
நாங்கள் எங்கே இருக்கிறோம்
என்று.
எங்கிருந்து வந்தீர்கள் என்று
முதலில் சொல்லுங்கள்
அப்புறம் இந்த
முகவரி தருகிறோம்
என்றோம்
எல்லாம் குறும்புக்குத்தான்.
அதற்குள்
அவற்றின் இருப்பிடத்தில்
எல்லா பிரபஞ்சங்களும் கால் கொண்டு விட்டன.
அந்த எக்ஸோ பிளேனட் கூட‌
வாருங்கள் கொறிக்கலாம் பாப் கார்ன்ஸ் என்று
நட்சத்திர டப்பாவை குலுக்கிக்கொண்டு.
அகரமுதல என்று
வள்ளுவன் தொடங்கும் முன்னேயே
அதற்கும் முந்திய‌
அவன் இதயச்சிலிர்ப்புகளையெல்லாம்
நாற்று நட‌
வந்து விட்டனவே
உன் எழுத்துக்கள்.
வால்ட் டிஸ்னி படங்கள் கண்டு
நாம் வியந்தது உண்டு.
அது எப்படி
உன் எழுத்தின்
ஒவ்வொரு சுழியும் புள்ளியும்
உயிர்த்துக்கொண்டு
முட்டைக்கண்கள் கொண்டு
நம்மை உருட்டிப்பார்க்கும்
அந்த டிஸ்னித்துடிப்புகளின்
தூரிகைக்காடுகள் ஆயின?
கவிதைகள்
தலையணையும் பஞ்சுமெத்தையும்
கேட்பதில்லை
படுத்துக்கொள்ள.
படிப்பவர்களின் படுக்கை விரிப்பெல்லாம்
முட்களின் பீலிகளில்
முடையப்பட்டவை தானே
என்று
கனவுகளையும் கற்பனைகளையும் கொண்ட
சித்திரவதைக்கூடத்தை
வேய்ந்து வைத்திருக்கும்.
உன் கவிதைகள் கூட‌
தூங்குவதில்லையாமே.
உன் சொற்களின்
தூக்க மாத்திரைகள் இன்றி
அவை தூங்குவதே இல்லையாமே!
_____________________________________________
சொற்கீரன்







Reply all
Reply to author
Forward
0 new messages