என் முந்தைய பதிவைப் படித்திராதவர்களுக்கு – முடிந்தால் அதைப் படித்துவிட்டு வாருங்கள்)
[ இளைஞருக்கான பத்துப்பாட்டு என்ற தலைப்பில் பத்துப்பாட்டில் இருக்கும் ஐந்து ஆற்றுப்படை நூல்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதை எனக்கு முன்பின் தெரியாத தமிழறிஞர் தமிழண்ணல் ஐயாவிடம் காண்பித்து அணிந்துரை கேட்டபோது, மிக்க தயக்கத்துடன் ஓர் அரைப்பக்கம் எழுதித்தந்தால் போதுமா, பத்து நாள் கழித்து வாருங்கள் என்று சொல்லிவிட்டு, அடுத்த இரு நாள்களுக்குள்ளே என்னை அவசரமாக வரச்சொன்னார்.நான் போய்ப் பார்த்த போது -----]
அவர் கையில் நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு வெள்ளை முழுத்தாள் இருந்தது.
அரைப்பக்கம் எழுதித்தரவா என்று கேட்டவர், நான்கு பக்கங்கள் எழுதி, அதுவும் போதாமால், மடித்து வைத்திருக்கும் மார்ஜின் பகுதியிலும் எழுதியிருந்தார்.
எங்களை உட்காரவைத்து அதில் ஒவ்வொரு வரியையும் படித்தார்.
குறிப்பாக கீழ்க்கண்ட வரிகளைப் படித்தார்.
‘சிறப்புக் காட்சிகள்' சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஒவ்வோரடியாக, ஓர் அடியில் ஒவ்வொரு சொல்லாக விளக்குகிறார். அவை அனைத்தும் சங்கப் புலவர்களின் ‘சொல்லோவியங்களாக'த் திகழ்கின்றன. அச் சான்றோர்கள் தாம் சொல்லவந்த செய்திகளுடன் எந்த அளவு ஒன்றித் தோய்ந்து, நன்கு அறிந்தும் உணர்ந்தும் உள்ளதை உள்ளபடி கூற முயன்றுள்ளனர் என்பதை இவரளவு இதுவரை எடுத்துக் காட்டியவர்கள் மிகச் சிலர் ஆவர் எனலாம்.
”இவரளவு இதுவரை எடுத்துக்காட்டியவர்கள் இல்லை என்று முதலில் எழுதிவிட்டு, பின்னர் அதை அடித்து ” இதுவரை எடுத்துக் காட்டியவர்கள் மிகச் சிலர் ஆவர் எனலாம்” என்று எழுதியிருப்பதாகச் சொன்னார்.
எனக்கு மகிழ்ச்சியினால் நெஞ்சடைத்துப்போனது.
பின்னர் நெடுநேரம் பேசியிருந்துவிட்டுத் திரும்பினோம். சென்னையில் சில புத்தக வெளியீட்டாளர்களைச் சந்திக்கப் பரிந்துரைத்தார். அவர்களிடம் தான் ஏற்கனவே பேசிவிட்டதாகச் சொன்னார்.
சென்னை திரும்பியபின் அந்த வெளியீட்டாளர்களைச் சந்தித்தேன்.
கணிதப் பேராசிரியர் பத்துப்பாட்டைப் பற்றியா? யார் வங்கிப் படிப்பார்கள் என்றார் ஒருவர்.
சங்க இலக்கியத்துக்கெல்லாம் இப்ப மவுசு இல்லை என்றார் ஒருவர்.
நீங்கள் காசு கொடுங்கள். நாங்கள் பதிப்பித்து வெளியிடுகிறோம். விற்க விற்க, காசை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் ஒருவர்.
நொந்துபோய் எழுதியதை மூலையில் போட்டுவிட்டேன்.
இருப்பினும் ஐயா கொடுத்த ஊக்கத்தினால், பத்துப்பாட்டில் மீதமுள்ள ஐந்து பாடல்களைப் பற்றியும் இரண்டாம் தொகுதி எழுதினேன். அதற்கும் தமிழண்ணல் ஐயா அவர்கள் அணிந்துரை தந்தார்.
பல ஆண்டுகட்குப் பிறகு இதைப் பற்றி அறிந்த தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர் சுபாஷினி அம்மையார் இவற்றைத் தம் அறக்கட்டளை சார்பாக வெளியிட முன்வந்தார்.
இவற்றுடன் நெடுநல்வாடையைப் பற்றி, ‘நக்கீர்ர் நடைப்பயணம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் எழுதினேன். இதனையும் தமிழ்மரபு அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. அதென்ன நடைப்பயணம் என்கிறீர்களா? அதைப்பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்
இப்பொழுது இந்த மூன்று புத்தகங்களும் Commonfolks –இல் கிடைக்கின்றன. விலை 237+237+171. இப்பணம் முழுக்க அறக்கட்டளைக்குச் செல்கிறது.
தன் வாழ்வையே முழுக்க முழுக்க தமிழ் உணர்வுக்காக அர்ப்பணித்திருக்கும் சுபாஷினி அம்மையாரின் தலைமையில் இயங்கும் தமிழ் மரபு அறக்கட்டளையை ஆதரிக்க எண்ணுவோர் – சங்க இலக்கியங்களின் செழுமையை உணர்ந்து படிக்க விழைவோர் இப்புத்தகங்களை வாங்கி ஆதரியுங்கள். மற்றவருக்கு அன்பளிப்பாக அளியுங்கள் – பரிந்துரையுங்கள்.
நன்றி,
ப.பாண்டியராஜா
முனைவர் தமிழண்ணல் அவர்களின் அணிந்துரை உங்களின் மேலான பார்வைக்கு.
அணிந்துரை
சங்க இலக்கியக் கல்விக்கு ஒரு நுழைவாயில்!
முனைவர். தமிழண்ணல்,
தமிழியல் துறைத்தலைவர்(ஓய்வு),
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
பேராசிரியர்.ப.பாண்டியராஜா பத்துப்பட்டைப் பற்றி எழுதியுள்ள பத்து நூல்களுள் இது ‘இளைஞர்களுக்கு' என எழுதப்பட்ட பத்தாம் நூலாகும். ‘தமிழுடன் பழகவேண்டும்; ஒரு நண்பருடன் அவரது இயல்புகளை அறிந்து பழகுவதுபோலத் தமிழ் மொழியுடன் பழக வேண்டும். அதிலுள்ள இலக்கிய இலக்கண நூல்களைப் படிப்படியாகப் படித்துப் படித்துப் பழகவேண்டும்' என்று யான் அடிக்கடி கூறுவதுண்டு. பேராசிரியர் பாண்டியராஜா இந்நூல்களின் வழி, நம் ஒவ்வொருவரையும் சங்கப் பனுவல்களுடன் மிக நெருங்கிப் பழகவைத்துவிடுகிறார்.
தமிழாசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் எல்லோருமே, இவ்வாறு அத் தனிப் பேரிலக்கியத்துடன் உளங்கனிந்து, ஊனாய் உயிராய் ஒன்றிப் பழகாமல், கால ஆராய்ச்சிகளிலும் புற நீர்மைகளிலும் ஆய்வுகள் செய்து சில ‘கருத்துரை'களை வழங்கி நின்றுவிடுகின்றனர்.
இந்நூல் பத்துப் பாடல்களிலுள்ள ஐந்து ஆற்றுப்படைகள் பற்றியது. இதனை எளிமைப்படுத்தி, இளைஞர்களுக்கு என எழுதியுள்ளார்; இரண்டு பகுதிகளாகப் பிரித்து முதல் பிரிவில் தனிநூலின் முழுமையான கருத்தை, கதை சொல்வது போல் தருகின்றார். இவ்வாறு முன்னுரையும், உரைநடைச் சுருக்கத்தையும் தந்தபின், இரண்டாம் பிரிவில் ‘சிறப்புக் காட்சிகள்' சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஒவ்வோரடியாக, ஓர் அடியில் ஒவ்வொரு சொல்லாக விளக்குகிறார். அவை அனைத்தும் சங்கப் புலவர்களின் ‘சொல்லோவியங்களாக'த் திகழ்கின்றன. அச் சான்றோர்கள் தாம் சொல்லவந்த செய்திகளுடன் எந்த அளவு ஒன்றித் தோய்ந்து, நன்கு அறிந்தும் உணர்ந்தும் உள்ளதை உள்ளபடி கூற முயன்றுள்ளனர் என்பதை இவரளவு இதுவரை எடுத்துக் காட்டியவர்கள் மிகச் சிலர் ஆவர் எனலாம்.
‘கவிதை ஒன்றைச் சொல்லி ஆயிரத்தை உணர்த்துகிறது; உரைநடை ஆயிரத்தைச் சொல்லி ஒன்றை உணர்த்துகிறது' என முன்பொருமுறை எழுதினேன். பேராசிரியர் இந்நூலில், ‘ஓரிரு சொற்களில் ஓராயிரம் செய்திகளைப் பொதிந்துவைத்திருக்கும் சங்க இலக்கியங்கள்' என்று குறித்திருப்பதுடன், அதற்கான சான்றுகள் போல, இந்நூல் முழுவதும் ஒவ்வொரு சொல்லுக்கும் நேர்பொருள், நிழற்பொருள்களுடன், படம் போட்டுக் காட்சிப்படுத்திக் காட்டி விளக்கங்கள் தந்துள்ளார்.
ஒரு மொழி தெரிந்தால், அம் மொழி இலக்கியத்தைப் படித்துவிடலாம். ஆனால் தனித் தன்மையுள்ள தமிழ்த்திணை இலக்கியத்தைப் படிப்பதற்குத் தனிப் பயிற்சி வேண்டும். மேலும் பயிரினம், உயிரினம் (பறவை, விலங்கு, பிற) பற்றிய நேர்முக அனுபவமும் உடையவர்க்கே இவ் இலக்கியத்தில் வந்துள்ள பல செய்திகள் முழுமையாக விளங்கும். இவை அனைத்தையும் பற்றிய சங்க இலக்கியச் சொல்லாட்சிகளை, இவர் விளக்கும் திறம் இவரது பலதுறை அறிவைக் காட்டுகிறது.
சுருங்கச் சொன்னால் தமிழ் இலக்கியத்துள் ஆய்ந்து தோய்ந்து, ‘கற்றுத் துறைபோதல்' என்பார்களே, அது போல இவ் ஆழ்கடலுள் மூழ்கி முத்தெடுக்க முயல்கின்றார் என்றும் கூறலாம். வெறுமனே முகமனுக்காகப் பாராட்டுரைகளை, மணிக்கணக்கில் பேசி ஓயும் தமிழகத்தில், இத்தகைய நூல்களை ஏற்றுப் போற்றச் சிலரேனும் முன்வரவேண்டும் என்பது எனது அவா.
இன்னியம், முருகியம், பல்லியம் யாவை என வேறுபாடு காட்டுகிறார். ஆற்றுப்படையின் அடிக்கருத்து வழிகாட்டுதலாகும். பாணரோ, பொருநரோ, கூத்தரோ அன்று சென்றிருக்கக் கூடிய வழிகளைப் பற்றிப் பாடிய புலவர்கள், எந்த அளவு தங்கள் நேர்முகப் பட்டறிவைத் துளியளவும் மாறாமல் பதிவுசெய்துள்ளனர் என்பதை இவர் விளக்குவது இவரின் அரிய முயற்சியாகும். பழமுதிர்சோலை அருவிக்காட்சியை, நக்கீரர் புனைந்துள்ள திறம்பற்றி, இவர் சொல்லுக்குச் சொல் விளக்கும் முறை பற்றிப் படித்தறிதல் வேண்டும். அடைமொழி, சொல், தொடர் ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு சங்கப் பாடல்களில் ஒவ்வொரு சொல்லுக்கும் காரணம் கருதிப் பொருத்தமுற ஆளப்பட்டிருப்பதை விளக்கிக்காட்டி அவை மேனாட்டார் கூறும் ‘சொல்திறன்' என்பதற்கொப்ப அமைந்துள்ளன எனக் காட்டுகின்றார். ‘விண்பொரு நெடுவரை' என்றது ஏன்? ‘பரிதியின் தொடுத்த' என்பதில் ‘தொடுத்த' என்றது ஏன்? ‘தண் கமழ் அலர் இறால்' என்பதில் ‘அலர்' என்றது ஏன்? என இவ்வாறு விளக்கி, இவற்றைச் ‘சொல்லோவியங்கள்' என மகுடம் சூட்டுகின்றார்.
சங்கப் புலவர்களைச் ‘சொல்லோவியர்கள்' எனலாம் என்ற இவரது மதிப்பீட்டிற்கு இந்நூலுள் தேர்ந்தெடுத்த சொல்லாட்சிகளுக்கு இவர் தந்துள்ள விளக்கம் தக்க சான்றாக அமைகின்றது. குமரகுருபரர் மீனாட்சி அம்மையை ‘உயிரோவியம்' என விளிப்பார். இவரோ சங்கப் பாடல்களில் உள்ள பெரும்பான்மையான சொற்களும் தொடர்களும் ‘உயிரோவியங்கள்' என்று கூறுகிறார்.
கொழித்தல், இரிதல், அருவி ‘இழும்' என இழிதருதல், யாழின் ‘அண் நா இல்லா அமைவரு வறுவாய்', அவையல், வேற்று இழை நுழைந்த துன்னல் சிதார், நுண்மைய பூ கனிந்து - என இவ்வாறு இந்நூல் முழுவதும் சொல்லும் தொடரும் புதுப் பொலிவுபட விளக்கப்படுகின்றன. சங்க கால இயற்கைச் சூழலிலிருந்து நாம் மிகவும் விலகிப் போய்விட்டோம். பூக்களின் அழகு, மரம் செடி கொடிகளின் இயல்பு, பறவைகளின் பழக்கம், விலங்குகளின் வாழ்வு எனப் பலவற்றை அறிந்து படிப்பவரை வியக்கும்படி செய்கின்றார்.
அவரைப் பூ பார்த்ததுண்டா? மயில் கழுத்து எப்படி இருக்கும்? மீன்கொத்திப் பறவை எவ்வாறு இரை மீது பாயும்? ஒரு பூவின் முகிழ், விரி, போது போன்ற வளர்ச்சி நிலைகளை உற்றுக் கவனித்ததுண்டா? வேலி ஓரம் முகிழ்த்து மலரும் செங்காந்தட்பூக்களை எப்போதேனும் பார்த்ததுண்டா? இலவு காத்த கிளி என்ற பழமொழி தெரிந்த நமக்கு இலவமரம் பார்த்த பழக்கம் உண்டா? - இவ்வாறான மிகப் பலவற்றை இந்நூல் விளக்குவதால், இது பயிரியலும் (Botany) விலங்கியலும் (zoology) பற்றியதாகவும் உளது. இவற்றை முறைப்படி அறிவியலாகப் படிக்காத சங்கப் புலவர்கள், பட்டறிவு வாயிலாக உவமை சொல்வதை வைத்து, அவர்களின் நுண்மாண் நுழைபுலத்தை இவர் விளக்கும்போது படிப்பவர்க்கு வியப்பும் திகைப்பும் மட்டுமன்றி, எல்லையற்ற இலக்கிய இன்பமும் வாய்க்கிறது.
பேராசிரியர் பாண்டியராஜா தம் பத்து நூல்களையும் வரிசைப்படுத்தி, இந்நூலை இறுதியில் வைத்திருந்தாலும், ஆர்வமுடைய அனைவரும் இவ் இறுதி முதலில் படித்துவிட்டுப் பிறகு முதலிலிருந்து படித்தால் அவை எளிதாக இருக்குமென்று தோற்றுகிறது.
எத்தனையோ நூல்கள் சங்க இலக்கியம் பற்றி எழுதப்பட்டு வரினும், புதிய நோக்கம், புதிய பார்வை, புதுவரவு எனத் தம் நூல்களை உருவாக்கி வருகிறார் பேராசிரியர் பாண்டியராஜா. தமிழ் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் இந்நூல்களைப் படித்தால், ஒன்று பத்தாக, பத்து நூறாக, நூறு ஆயிரமாகத் தமிழாய்வுத் துறை பரந்து விரியும் என்பது என் நம்பிக்கை.
ஏரகம், தமிழண்ணல்
சதாசிவநகர், 8.11.2010
மதுரை - 625020