கடலின் அரசியல், கடற்குடிகளின் பிரச்சினைகள்

9 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 21, 2026, 2:57:08 PM (6 days ago) Jan 21
to மின்தமிழ்
ref : https://www.facebook.com/photo?fbid=10239272120399174&set=a.4316185300716
கடலின் அரசியல், கடற்குடிகளின் பிரச்சினைகள் குறித்து;  பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் நூல் " தாவாக்களின் பெரு நீர்" நூலுக்கு Geetha Narayanan எழுதிய  அறிமுகவுரையின்  . . . ஒரு பகுதி



. . . . . . .  ‘கடலுக்கு ஏது எல்லைகள்? மீன்களுக்கு ஏது பாஸ்போர்ட்?’ஒரு நாட்டின் சட்ட , திட்டங்கள் இன்னொரு நாட்டையும் மீன் வளத்தையும் பாதிக்கும்தானே! இலங்கையில் அனுமதிக்கப்பட்ட கடலட்டை அறுவடை இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது.அதனால் சட்டத்தை மீறுகிறார்கள் நம் மீனவர்கள்.இலங்கை மீனவர்கள் இந்தியப் பகுதியில் கடலட்டையோடு பிடிபட்டிருக்கிறார்கள். சீனா மரபணு மாற்ற கடலட்டைகளை விளைவிக்க பல ஆசிய நாடுகளைக் களமாகப் பயன் படுத்திக் கொள்கிறது. அதில் இலங்கையும் ஒன்று.வட இலங்கையைச் சுற்றி நிலத்திலும் ,நீரிலும் இந்தப் பண்ணைகள் அமைக்கப் பட்டுஅங்குள்ள கடற் குடிகள் கூலித் தொழிலாளர்களாக மாறி இருக்கின்றனர். அரியாலை போன்ற பகுதிகளில் அமைக்கப் பட்ட பண்ணைகள் சீனா இந்தியாவை கண்காணிக்க உதவும் தளங்கள்.அது ராமேஸ்வரத்திலிருந்து வெறும் 54 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.புவிசார் அரசியலில் இதெல்லாம் கருவிகள் இல்லையா? மரபு மாற்ற கடலட்டைப் பண்ணைகளால் கடலுக்குள் மண்புழு போன்ற வேலையைச் செய்து கொண்டிருந்த இயற்கை கடலட்டைகள் அழிந்திருக்கின்றன.இந்தக் கடலட்டைப்பண்ணைகள் இலங்கையின் மீன்பிடி தொழிலை அழித்திருக்கிறது.கடற்கரைச் சூழலியலையும், நிலத்தடி நீரையும் மாசு படுத்தி இருக்கிறது.போர் நிறுத்தத்திற்குப் பின் புதிய பண்ணைகள் அனுமதிக்கப் படவில்லை. ஆனால் தமிழ் மீனவர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றும் முயற்சி அது என்ற கருத்தும் பதிவிடப் பட்டிருக்கிறது.
‘கடலுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள மணல் ஒரு தொல்லியல் தொடர்ச்சி’.கடல் மணலை உள்ளே இழுத்துச் செல்லும், வெளியேயும் தள்ளும்.கடற்கரை மணற் குன்றுகள் அரணாக நின்று கடலரிமானத்திலிருந்தும், வெள்ளத்திலிருந்தும் பாதுகாக்கின்றன.கடலடி மணல்தான் கடலுயிர்களின் இனப் பெருக்க மையங்கள். தென் மாவட்ட தாது மணல் கொள்ளையால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகள் , மீன் தொழில் இழப்பு மட்டுமல்லாமல் , தாது மணல் ஆலைக் கழிவுகளால் கடற்கரைக் கிராமங்கள் பாலைவனமாய் மாறும் அவலம் பேசப்படுகிறது.இந்திய அணுசக்தி துறையின் கனிம மணல் ஆலைகளால் (கதிர் வீச்சால்) கடலோர மக்களிடையே புற்று நோய் விகிதம் அதிகரித்திருக்கின்றது .நன்னீர் வளங்கள் அற்றுப் போயிருக்கின்றன.இது தவிர கடற்புறத்தின் அனைத்துக் கட்டுமானங்களும் கடலரிப்புக்குக் காரணமாக உள்ளன.தமிழ் நாட்டில் 43 சதவீதக் கடற்கரை காணாமல் போயிருக்கிறது.மீனவர்களின் வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டிய தடுப்புச் சுவர்கள் அரிமானத்திற்குக் காரணமாய் உள்ளன. கேரளத்தின் 595 கிமீ கடற்கரையில் 275 கிமீ காணாமற் போயுள்ளது.நீலப் பொருளாதாரக் கொள்கை கடல் வளங்களை முற்றிலும் பயன்படுத்துவது குறித்துப் பேசும் நேரத்தில் அதற்கான ஆய்வுகள் நடத்தப் பட வேண்டும், பாரம்பரிய மீனவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் பட வேண்டும் போன்ற விசயங்கள் நடைமுறைப் படுத்தப் படவில்லை என்பது சுடும் உண்மை.கடற்கரைகள் கடல் குடியின் முன்னுரிமைப் பகுதி என்பதைத் தாண்டி பொதுச் சமூகத்தின் சொத்தும் கூட. ‘ கடற்கரையைப் பாதுகாப்பிற்கு சம வெளி மக்களின் பங்கு என்ன’ என வினவுகிறது நூல்.
சேது கால்வாய்த் திட்டம் நிறுத்தி வைக்கப் பட்ட போதும் அது தொடங்கப் பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட பதிவுகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. மன்னார் குடாவின் உயிர்ச் சூழலைப் பாதுகாக்க ஆசிய வங்கியின் நிதியை வாங்கிய அரசு சேது கால்வாய்க்காக பவளப் பாறைகளை உடைத்துக் கொட்டிக் கொண்டிருந்தது எத்தனை பெரிய முரண்.சேது கால்வாய்க்கான மூலதனம்,பராமரிப்புச் செலவைச் சேர்த்து கட்டணம் வசூலிக்கப் பட்டிருந்தால் அதைக் கொடுக்க எந்த கப்பல் நிறுவனமும் முன் வந்திருக்காது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.பெரிய சரக்கு கப்பல்களுக்கான ஆழமும் சேது கால்வாயில் இல்லை.சேது கால்வாய் தொடங்கிய காலத்தில் மீனவர்களால் வலை விரிக்க முடியவில்லை.கப்பல் போக்குவரத்து தொடங்கினால் படகு விபத்துக்களைத் தவிர்க்க முடியாது என்ற குரலையும் இயக்கங்கள் எழுப்பின.சேதுக் கால்வாய் கடலடித் தரையைத் தோண்டும் திட்டம். கரைக்கடல் ‘நீரோட்டத்தை சமாளித்து கடலடித் துறையில் தோண்டுவது,அதை நீண்ட கால அளவில் பராமரிப்பது அடிப்படை அறிவியலுக்கு எதிரானது’ எனப் பதிவு செய்கிறது நூல்.
தூத்துக்குடியிலும்,இலங்கையிலும் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து நடந்த முத்துச் சலாபம் வரலாற்றுப் பார்வையோடு விவரிக்கப் பட்டிருக்கிறது.19 ஆம் நூற்றாண்டில் நடை பெற்ற சங்கு குளியலின் பெறுமதி விளக்கப் பட்டிருக்கிறது. உயிர்வளி உருளை இல்லாமல் மூச்சைப் பிடித்து கடலில் இறங்கும் சங்கு, முத்து குளியாளிகளின் அனுபவங்கள் முன்வைக்கப் படுகின்றன. குளியாளி உள்ளே இறங்கும் போது கயிறு துணையாளாகப் போகும் மைத்துனரிடம் கொடுக்கப் படும் பண்பாடும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.இன்றைய சங்கு குளித்தலின் சவால்கள்,தரம் பிரிப்பு,விலை நிர்ணயம் அனைத்தையும் நூல் பேசுகிறது. 2007 லிருந்து 2020 வரை 85 குளியாளிகள் மரணமடைந்து இருக்கிறார்கள்.இதில் நோய்களுக்கு ஆளாகி தொழிலை விட்டு வெளியேறியவர் 500 க்கும் மேல்.சங்கு அறுவடையில் கிடைக்கு வருமானம் ரூபாய் 1000 என்றால் அது மதிப்புக் கூட்டப்பட்டு வங்க தேசத்தை அடையும்போது ரூபாய் 8000 முதல் 10000 த்தைப் பெறுகிறது.அரசு இத்தொழிலைக் கொள்கைரீதியாக அனுமதிக்கவில்லை.கம்ப்ரெசரோடு கடலில் இற்ங்கி கடலில் மரணமடையும் குளியாளிகளைக் குறித்த உண்மைகள் மறைக்கப் பட்டு அரசு நிவாரணம் கோரப் பட்டிருக்கின்றன,இந்த உண்மைகளைப் பட்டியலிடும் அத்தியாயம் அரசு தரப்பில் குளியாளிகளுக்கு செய்ய வேண்டிய சமூக பாதுகாப்பை வலியுறுத்திச் செல்கிறது.
‘கச்சத்தீவு ஒரு வியூக முக்கியத்துவம் வாய்ந்த சிக்கல்.கடல் எல்லை,இந்திய இறையாண்மை,இந்திய மீனவர் வாழ்வாதாரம்,கடலடி எரிபொருள் வளங்கள் எல்லாம் பின்னிப் பிணைந்த சமூக வரலாற்று அரசியல் தூதாண்மைச் சிக்கல்’ எனப் பதிவு செய்கிறது இந்த நூல்.இப் பிரச்சினையில் இருக்கும் பலவேறு தரப்புகளின் நிலைப்பாடுகளை முன் வைக்கிறார் ஆசிரியர் . அவை ஈழத் தமிழ் மீனவர் தரப்பு,தமிழக பாரம்பரிய மீனவர்கள்,தமிழக விசைப் படகு மீனவர்கள்,இலங்கை அரசு, தமிழக அரசியல் களம்,இந்திய ஒன்றிய அரசு என ஆறு தரப்புகளாகும். கச்சத்தீவு சிக்கலின் வரலாறு முன் வைக்கப் பட்டிருக்கிறது.இந்திய எல்லைக்குள் நம் நாட்டு மீனவர்கள் தாக்கப் பட்டதும்,சீனா கடலில் காலூன்றியிருப்பதும்,இலங்கை -சீனக் கூட்டணி எரி வாயுவிற்காக இப்பகுதியில் அதிகாரத்தை நிலை நாட்டுவதும்,கடற் புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் தமிழக மீனவர்களைத் தாக்கியதும்,இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலும்,தமிழக அரசியல் களத்தின் தெளிவற்ற புரிதலும், ஒன்றிய அரசின் நய வஞ்சக நிலைப்பாடும் விவரிக்கப் படுகின்றன.1974 வரை தமிழக மீனவர்கள் வரை கச்சத்தீவை முழுச் சுதந்திரத்துடன் பயன்படுத்தி இருக்கிறார்கள்.பன்னாட்டுக் கடல் எல்லை முறைமைகளின் படி கடலோர நாடுகள் கடல் பரப்பை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். தமிழகக் கடற்கரையிலிருந்து கச்சத் தீவு 12 கல் தொலைவு. கச்சத் தீவிலிருந்து இலங்கைக் கடற்கரை 16 கல் தொலைவு.கச்சத் தீவு இந்தியாவின் உரிமைப் பகுதியாக இருந்த வரையில் கச்சத் தீவிலிருந்து எட்டுக் கல் தொலைவு வரை இந்தியக் கடல் எல்லை இருந்திருக்கிறது.தமிழகக் கடற்கரையிலிருந்து 20 கல் வரை சென்று சுதந்திரமாக மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இருந்தது.1974 ல் கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியான பின் இந்தியக் கடல் எல்லை வெறும் ஆறு கல்லாகக் குறைந்திருக்கிறது.இத்தகையத் தகவல்கள் பொதுச் சமூகம் அறிந்திராதவை.இந்த எல்லைத் தாண்டும் பிரச்சினையின் காரணமாக 360 தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.இலங்கைக் கடற்படையினரால் 8000 தமிழக மீனவர்கள் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள்.நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. தமிழக மீனவர்கள் காணாமலும் போயிருக்கிறார்கள்.’கச்சத் தீவு தாரை வார்ப்பு செல்லத் தக்கதல்ல’ என்ற கருத்துப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. ”முன்பு இந்திய சுறாப்பாரை இலங்கை குத்தகைக்கு எடுத்தது போல் இந்தியா கச்சத்தீவை குத்தகைக்கு எடுக்க முடியும்.எல்லை தாண்டுதல், மறுத்தல் என்ற மோதல் நிலைப்பாட்டிற்குப் பதிலாக ‘எல்லையை ஒழித்தல்’ என்ற அணுகு முறையை இரு நாட்டு மீனவர்களுக்கு ஏதுவாக எட்ட முடியும்.இரு அரசுகளும் இரு பக்கத் தீர்மானங்களை எட்ட முடியும்.கடல் எல்லை மற்றும் கடற்பரப்பிற்கான கொள்கை முடிவுகளில் மீனவ அமைப்புகளின் பங்கு உறுதிப்படுத்தப் பட வேண்டும்,,,” எனத் தீர்வை நோக்கிய செயல்பாடுகளை எடுத்துரைக்கிறது நூல்.
2009 இலங்கை உள் நாட்டுப் போர் முடிவிற்கு வரும் வரை ஈழத்து மீனவர்கள் தொழில் செய்யாமல் இருந்தார்கள்.சிங்கள மீனவர்கள் கடற்புலிகளுக்கு அஞ்சி மன்னார் கடல் அருகே வராத சூழலில் ராமேஸ்வரத்தைச் சுற்றி விசைப் படகுகள் அதிகரித்தன. இவை பாரம்பரிய மீனவர்கள் அல்லாத மற்ற பலமுடைய நபர்களுக்கும் சொந்தமானவை.அப்பகுதி நாட்டுப்படகு மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்குமான மோதலைக் காணத் தொடங்கியது. ‘உயர் தொழில் நுட்பப் படகுகள் பெரும் முதலீட்டைக் கோருபவை’.இரட்டை மடி விசைப் படகுகள் மீன் வளத் துறை அனுமதித்துள்ள குதிரைச் சக்தியை விட அதிகமான சக்தியுள்ள எந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.இவற்றை அறிந்தே அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள்.2014 ஆம் ஆண்டு பிஜேபி ஆட்சிக்குப் பின் சிங்களப் படை தமிழக மீனவர்களைக் கொல்வதில்லை.நம் விசைப் படகுகள் எல்லை தாண்டிச் செல்கின்றன.அப்படிச் சென்றால்தான் அறுவடை கிடைக்கும் நிலை உள்ளது. எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப் படுவது படகு முதலாளிகளுக்குப் பிரச்சினையில்லை. அவர்களுக்குப் புதிய தொழிலாளிகள் கிடைத்து விடுகிறார்கள்.2024 ஆண்டில் மட்டும் 540 மீனவர்கள் சிறை வைக்கப்பட்டு விடுகிறார்கள்.2025 முதல் இரு மாதங்களில் நூறு பேர் சிறைப் படுகிறார்கள்.
அன்றாடம் ஆயிரம்,இரண்டாயிரத்திற்குத் தொழில் செய்கிற ஈழத் தமிழ் மீனவர்கள் இந்த விசைப் படகுகளோடு ஈடு கொடுக்க முடியாது. விசைப் படகுகள் வருடம் முழுதும், நாட்டு படகு மீனவர்களோடு இருக்கும் ஒப்பந்தத்தை மீறி மீன் வளத்தை வழித்து எடுத்து விடுகிறார்கள்.ஈழத் தமிழ் மீனவர்களுக்கு இலங்கை அரசு நிவாரணம் எதுவும் அளித்திடாத நிலை நிலவுகிறது.தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 3000 இழுவை மடிப் படகுகள் ஐப்பசியிலிருந்து கார்த்திகை வரை வரும் சிறு மீன்களை நம்பித் தொழில் செய்யும் மரவள்ளங்கள், கண்ணாடி இழைப் படகுகள் மூலம் தொழில் செய்யும் 6000 தொழிலாளர்களைப் பாதிக்கின்ற பிரச்சினையை பலர் செய்திருக்கும் ஆய்வுகளின் மூலம் விளக்கும் ஆசிரியர் கடல்வளங்களை நீடித்த முறையில் பயன் படுத்த பராமரிக்கத் தேவையான கொள்கை முடிவுகள் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மேல் அக்கறையோடு அரசுகளால் எடுக்கப் பட வேண்டும் என்கிறார்.
2017 ஆம் ஆண்டு விசைப் படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப்பை நோக்கி நகர்த்த ‘பிரதான் மந்திரி சாகர் சம்பதா’ திட்டம் தொடங்கப் பட்டது.கொடுக்கப் பட்ட மானியம் போதாத நிலையில் பலர் பின் வாங்கினர்.ஆழ்கடல் மீன்பிடி என்பது மாறுபட்ட தொழில் நுட்பங்கள் தேவைப்படும் தொழில். ஆழ்கடலில் எந்தெந்த மீன்கள் கிடைக்கும் என்ற தகவல்கள் மீனவர்களுக்கு இல்லை.ஆழ்கடல் அறுவடைக்குக் குறைந்த பட்ச விலையை உறுதியளிக்கும் சாத்தியங்களும் இல்லை. ஆழ்கடலில் எந்தெந்த மீன்கள் கிடைக்கும், அவைகளைப் பிடிக்கத் தேவையான கருவிகள் என்னென்ன என ஆய்வுகளும் அதற்கேற்ற பயிற்சிகளும் தேவைப் படுகின்றன,குறைந்த குதிரைச் சக்தி கொன்ட எந்திரங்கள், ஸ்டோரேஜ் வசதி போதாத நிலை,ஐஸ் உற்பத்தி செய்யும் எந்திரத்தின் சிக்கல் எல்லாவற்றையும் விளக்குகிறது இந்தப் பிரதி.
மொத்தத்தில் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் அனைத்து கொள்கை தொடர்பான விவாதங்களிலும் முன்னுரிமை பெற வேண்டும். அதற்கு மீனவ இயக்கங்களின் பங்கேற்பு திட்டமிடலில் இருக்க வேண்டும்.பெரு முதலாளிய மீன் அறுவடை மீனவப் பெண்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. அவர்களுக்கு சுய உதவிக் குழுக்களோ,ஃபினாயில் தயாரிப்பது போன்ற பயிற்சிகளோ எள்ளளவும் பயன்படப் போவதில்லை.அரசு மீனவப் பெண்கள் அமைப்புகளோடு திட்டமிடலை நடத்த வேண்டும். அரசுகள் புதை படிவ ஆற்றல்களிலிருந்து மாற்று ஆற்றலுக்கு நகர வேண்டிய தேவையை அறிந்து செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.முக்கியமாக கடலின் அரசியலை சமவெளி மக்கள் விளங்கி அதில் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்த நூலுக்கு அறிமுகவுரை எழுதுவது கடலின் அரசியலை அறிந்து கொள்ள உதவும் பெரு வாய்ப்பாகக் கருதுகிறேன். இந்த நல் வாய்ப்பை வழங்கிய நூலின் ஆசிரியர் பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களுக்கு நன்றி.
இந்த நூல் கொள்கைகளை வடிப்பவர்களை,அரசுத் துறை அதிகாரிகளை ,அமைச்சர்களை, சட்ட மன்ற உறுப்பினர்களை,பல்வேறு சமூக இயக்கத்தினரை,இளம் தலைமுறையினரைச் சென்று சேர வேண்டுமென விரும்புகிறேன்.
Geetha Narayanan
Consultant- Gender and Development
19/sep/2025

நூல்: " தாவாக்களின் பெரு நீர்"
வெளியீடு கடல்வெளி பதிப்பகம்.
விலை ரூபாய் 260.
தொடர்பு எண் 91- 9442242629
மின்னஞ்சல் Varee...@gmail.com

Reply all
Reply to author
Forward
0 new messages