வைக்கம் போராட்டம் - பொ. நாகராஜன்.

17 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 11, 2024, 11:07:08 PMDec 11
to மின்தமிழ்
ref : https://www.facebook.com/share/p/19kAEoQdFQ/

vaikkam.jpg
' வைக்கம் போராட்டம் '
என்ற பழ. அதியமான் எழுதிய புகழ் பெற்ற இந்த நூலின் எனது அறிமுகவுரையை மீள் பதிவாக பகிர்வதில் மகிழ்வடைகிறேன். !

பொ. நாகராஜன்.
11.12.2024
****************

இது என்னுரை 70
*********
வைக்கம் போராட்டம் - பழ. அதியமான் - காலச்சுவடு பதிப்பகம். பக்கங்கள் - 648. விலை - ரூ.325.

★  வைக்கம் - கேரளத்திலுள்ள ஊரின் பெயர்; தமிழகத்திற்கு அது சமூகநீதியின் மறுபெயர். வைக்கம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வைக்கம் வீரர் பெரியார் தான் !

★  வைக்கம் போராட்ட வரலாற்றை ஆராய்ந்து, ஒரு ஆவணமாக, கள நிலவரத்தை தேதி வாரியாக ஆதாரங்களோடு படைத்த இந்த நூலாசிரியர் பழ. அதியமானுக்கு தமிழகம் கடமைப்பட்டுள்ளது.

★  பெரியாரின் அரிய பங்கையும் அர்ப்பணிப்பையும் மிகத் தெளிவாக பதிவிட்டுள்ளார் ! தமிழகத்தின் பெரியார்  கேரளத்திற்கு என்ன சேவை செய்தார் என்பதை இந்த நூலில் அறியலாம் !

★  கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் ஊரின் முக்கிய கோவிலை சுற்றி இருந்த
வீதிகளில், ஈழவர்கள், புலையர்கள் மற்றும் இதர தாழ்த்தப்பட்டோர் நடப்பதற்கே தடை இருந்தது. அதை எதிர்த்து அந்த தெருக்களில் எல்லோரும் சுதந்திரமாக நடந்து செல்ல, தடையை நீக்க கோரிய உரிமைப் போர் தான் வைக்கம் போராட்டம்.

★  இது கோயில் நுழைவு போராட்டமல்ல ! வீதிகளில் நடப்பதற்கே நூறாண்டுகளுக்கு முன்பு போராட வேண்டிய அவல நிலை இருந்ததை இளைய தலைமுறையினர் உணர வேண்டும் !

★  வைக்கம் போராட்டம் 30.03.1924 அன்று துவங்கப்பட்டது. டி.கே.மாதவன், கே.டி. கேசவ மேனன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் போன்ற காங்கிரஸ் தலைவர்களால் முன்னின்று நடத்தப்பட்டது. காந்தியிடம் அனுமதி பெற்றே போராட்டம் துவங்கியது. பத்து நாட்களிலேயே அனைத்து தலைவர்களும் திருவாங்கூர் அரசால் கைது செய்யப்பட்டார்கள்.

★   சிறையிலிருந்தே ஜார்ஜ் ஜோசப் காந்திக்கு தந்தி கொடுத்தார். தேசிய தலைவர்கள் யாரையாவது வைக்கத்துக்கு அனுப்பி போராட்டத்தை நடத்த கோரினார். காந்தியோ, தேசிய அளவில் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டாம் எனவும், இது உள்ளூர் பிரச்சினை எனவும், அங்கேயே வேறு யாரையாவது வைத்து நடத்தி கொள்ளுங்கள் என்றும், தேவைப்பட்டால் சென்னை மாகாண காங்கிரஸை நாடுங்கள் என கை காட்டி -  கை கழுவினார் !

★  சென்னை மாகாண தலைவராக பெரியார் இருந்தார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவர் என்பதும், தைரியமானவர் என்பதும், ஆணித்தரமான பேச்சாளர் என்பதையும் அறிந்த கேரள தலைவர்கள், ஜார்ஜ் மூலமாக பெரியாரை, போராட்டத்தை வழி நடத்த வைக்கத்திற்கு அழைத்தார்கள்.

★   தீண்டாமைக்கு எதிராக போராட நல் வாய்ப்பமைந்ததாக எண்ணி, பெரியார் தனது காங்கிரஸ் மாகாண தலைமை பொறுப்பை ராஜாஜியிடம் ஒப்படைத்து, 13.04.1924 அன்று வைக்கம் சென்றடைந்தார்.

★   பெரியார் வந்த பின்பு போராட்டம் தீவிரமடைந்தது. தமிழகத்திலிருத்தும் போராட்டத்தில் பங்கு பெற பலர் சென்றனர். பெரியார் 22.05.1924 அன்று கைது செய்யப்பட்டு ஒரு மாத சிறை தண்டனைக்குள்ளானார்.

★  பெரியார் தண்டனை அனுபவித்து வெளியே வந்தார். தமிழகத்திற்கு திரும்பாமல் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். போராட்டத்தில் பங்கு பெற அவரது துணைவியார் நாகம்மை மற்றும் தங்கை கண்ணம்மாளையும் வைக்கத்திற்கு வரவழைத்தார். அவர்களோ பெண்களை திரட்டி சத்யாகிரகம் நடத்தினார்கள்.

★   திருவாங்கூர் அரசாங்கமோ பெரியாரை இரண்டாவது முறையாக கைது செய்து 18.07.1924ல் ஆறுமாத கடுங்காவல் தண்டனை அளித்து சிறைக்குள் தள்ளினார்கள்.

★  போராட்டம் தீவிரம் அடைந்தது. சத்யாகிரகம் தொடர்ந்து நடை பெற்றது. சாதி இந்துக்கள் கொதித்தெழுந்தனர். காந்தியோ ஆரம்பத்திலிருந்தே இந்த போராட்டத்தில் ஆர்வமில்லாதவராக இருந்தார்.

★   வைக்கம் போராட்டத்தில் ஆரம்பத்தில் தீவிரமாக சேவையாற்றிய ஜார்ஜ் ஜோசப் மீது காந்திக்கு கோபம். கிறிஸ்தவரான ஜோசப் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாதென்றார். ஜோசப்பும் தனது ஒரு மாத சிறை தண்ணடனைக்குப் பின் போராட்டத்திலிருந்து விலகினார்.

★  காங்கிரசின் மத்திய கணக்கிலிருந்து போராட்டத்திற்கு பண உதவி செய்ய காந்தி மறுத்தார். மேலும் பஞ்சாபிலிருந்து வந்த அகாலி மக்களின் உதவிகளையும் திருப்பி அனுப்ப சொன்னார். தமிழக மக்களின் ஆதரவாலும் பண உதவியாலும் போராட்டம் தொய்வில்லாமல் நடந்தது.

★  காந்தியாரின் நடவடிக்கைகளிலிருந்து அவர் வைதீக மக்களை பகைத்து கொள்ள தயாராக இல்லை என்பது புரிகிறது. வர்ணாசிரமத்தையும் மதத்தையும் ஒழித்து கட்டாமல் தீண்டாமையை ஒழிக்க நினைத்தார் என்பதும் விளங்குகிறது.

★  போராட்டம் ஒரு வருடத்தை நெருங்கியது. பலமுறை தந்திகள் கொடுத்ததின் விளைவாக, 09.03.1925 அன்று காந்தி ராஜாஜியோடு வைக்கம் வந்தடைந்தார். பெரியாரோடு செல்லாமல், காந்தி ராஜாஜியோடு திருவாங்கூர் மகாராணியை 12.03.1925 அன்று சந்தித்து பேசினார்.

★   மகாராணியோ காந்தியிடம், கோயிலை சுற்றியிலுள்ள வீதிகளை திறந்து விட தயார் எனவும் ஆனால் பெரியார், அடுத்து கோயில் நுழைவு போராட்டத்தை ஆரம்பிக்க கூடாது என்று நிபந்தனை போடுகின்றார். காந்தியோ பின்பு பெரியாரை சந்தித்து, அப்படி ஏதும் திட்டம் இருக்கிறதா என கேட்டதால், பெரியாரும் உடனேயே அப்படி ஒரு திட்டம் இல்லை என கூறுகிறார்.

★  இந்த செய்தியை காந்தி, மகாராணிக்கு தெரிவிக்கிறார். பின்பு திருவாங்கூர் அரசு 22.05.1925 அன்று வீதிகளில் எல்லோரும் செல்லலாம் என்ற ஆணையிட்டது ! போராட்டத்தின் வெற்றியை கொண்டாட 29.11.1925 அன்று பெரியார் தலைமையில் வைக்கத்தில் பெரிய விழா நடந்தது.

★  பெரியாருக்கு ' வைக்கம் வீரர் ' என்ற பட்டத்தை தமிழறிஞர் திரு.வி.க அவர்கள் சூட்டினார்.

★  வைக்கம் போராட்டத்தில் பெரியார் மட்டும் பங்கு பெறாமல் இருந்திருந்தால், போராட்டம் தோல்வியையே  கண்டிருக்கும். காந்தியார் ஆதரவை முழு மனதாக தராமல் இருந்தும் போராட்டம் வெற்றி பெற பெரியாரின் பங்களிப்பு சிறப்பான ஒன்று. காந்தியார் வைதீகத்துக்கும் வர்ணாசிரமத்துக்கும் எப்படி பணிந்து போனார் என்பதையும் உலகம் அறிந்திருக்கும்.

★  வைக்கம் போராட்டம் - வைக்கம் வீரர் பெரியாரின் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம். அதை அற்புதமாக ஆவணபடுத்திய ஆசிரியர் பழ. அதியமானுக்கு பாராட்டுக்களை வழங்குவோம் !

பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்,
சென்னை.
05.09.2021.
****************

தேமொழி

unread,
Dec 11, 2024, 11:58:18 PMDec 11
to மின்தமிழ்
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்
நூற்றாண்டு நிறைவு விழா
தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழா
நாள் : 12.12.2024 வியாழக்கிழமை
காலை 10.00 மணி
இடம் : வைக்கம், கேரள மாநிலம்.
காணொளி நேரலை: https://www.youtube.com/live/UbW7MODUcmo
vaikkam11.jpg
vaikkam12.jpg
vaikkam10.jpg
vaikkam4.jpg
vaikkam.jpg
vaikkam2.jpg
vaikkam3.jpg
vaikkam6.jpg
---------------------------------------------------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages