தொடுதோல் மாந்தர்
— தேமொழி
காலணி அணிவது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு வழக்கம். தோலில் செய்யப்பட்டக் காலணி (செருப்பு) குறித்த குறிப்புகள் சங்க இலக்கியக் காலத்திலேயே காணக் கிடைக்கின்றன.
பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
"தொடுதோல் அடியர் துடி படக் குழீஇ,
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட"
[தொடுதோல்=காலைத் தொட்டபடி இருக்கும் வேற்றுத் தோல், தோல் காலணி / செருப்பு]
கரிகாலன் வெற்றிக்குப் பின் அவனுடைய பகைவர் நாட்டின் வாழ்விடங்களில் மாற்றம் ஏற்படுகிறது, இருப்பிடங்கள் பாழ்நிலை அடைகிறது. அந்த இடங்களில் பாலைநிலத்து எயினர்களின் நடமாட்டம் அதிகரிக்கிறது, செருப்பை வெளியில் கழற்றிவிட்டு அன்று நுழைந்த இல்லங்களில் இன்று எயினர்கள் செருப்புக் காலோடு நடமாடுகின்றனர் என்கிறார்.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் மீண்டும், "தொடுதோல் மரீஇய வடுவாள் நோன் அடி" (பெரும்பாணாற்றுப்படை, அடி 149); அடி முழுவதையும் மூடும் செருப்பை "அடிபுதையரணம்" (பெரும்பாணாற்றுப்படை, வரி 61) என்று பெரும்பாணாற்றுப்படையிலும் குறிப்பிடுகிறார்.
அகநானூற்றில்;
"தொடுதோல் கானவன் சூடுறு வியன்புனம்
கரிபுறம் கழீஇய பெரும்பாட்டு ஈரத்து' (அகநா. 368)
பயிர் அறுவடைக்குப் பிறகு வயலை நெருப்பிட்டுக் கொளுத்துவது வழக்கம். அவ்வாறு கொளுத்தப்படும் பொழுது, குறிஞ்சி நிலத்துக் கானவர்கள் (வேடர்கள்) தங்கள் காலில் நெருப்புப் படாமல் இருப்பதற்காகத் தோல் செருப்பு அணிந்திருப்பதைப் பதிவு செய்துள்ளார் மதுரை மருதன் இளநாகனார்.
மீண்டும் மற்றொரு பாடலில்;
"தொடுதோல் கானவன் கவை பொறுத்தன்ன
இருதிரி மருப்பின் அண்ணல் இரவை" (அகநா. 34)
என்று முல்லை நிலக் காட்டின் கானவன் தனது காலில் தொடுதோல் என்னும் செருப்பினை அணிந்தபடி கையில் கவைக் கம்பினை வைத்திருக்கிறான் என்றும் காட்சிப்படுத்துகிறார் மதுரை மருதன் இளநாகனார்.
"அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்
கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்" (அகநா. 101)
என்ற பாடலில், புலவர் மாமூலனார், ஆநிரைகளைக் கவர்வதற்குச் செல்லும் எயினர்கள் தங்களின் காலடித் தடத்தைப் பிறர் அறியாமல் மறைத்துவிடும் நோக்கில் செருப்பு அணிந்து செல்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்.
"விரத்தி வைராக்கிய விவேகத் தொடுதோல்
உரத்து அணியத் தையா என்று ஓது".
(நீதி வெண்பா-72)
என்று 12 ஆம் நூற்றாண்டுக் காலத்து நீதி வெண்பா பாடல் பிச்சை வாங்கி உண்ணும் துறவி தன் மனத்தில் விவேகம் என்ற வைராக்கிய விரதத்தை (விரத்தி வைராக்கிய விவேகத் தொடுதோல் / வைராக்கிய விரதம் என்னும் செருப்பை) நெஞ்சில் அணிந்துகொண்டு சென்றால் மகளிரின் காமக் கண் என்ற முள் தைக்காது எனக் குறிப்பிடுகிறது. மகளிர் கண்ணை முள்ளாகவும், விரதம் மேற்கொள்வதைத் தவத்தைக் காக்கும் செருப்பாகவும் பாடல் உவமிக்கிறது.
கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக் குறிப்பொன்று "அடிநிலை" என்ற பெயரால் காலணியைக் குறிப்பிடுகிறது. இதனால், பழந்தமிழ் நாட்டில் தேவை கருதித் தோல் செருப்பு அணியும் வழக்கம் இருப்பதை அறிகிறோம்.

வேடரான கண்ணப்பரைப் படங்களிலும் சிற்பங்களிலும் செருப்பணிந்தவராகக் காட்டப்படுவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் 7ஆம் நூற்றாண்டில் முத்தரையர்களால் கட்டப்பட்ட திருமெய்யம் வேணுவனநாதர் ஆலயத்தில் இருக்கும் வேடரான கண்ணப்ப நாயனார் சிலையிலும் செருப்பணிந்தவராகக் கண்ணப்பர் காட்டப் பட்டிருப்பார்.

தெலுங்கானாவின் பாலம்பேட்டையில் உள்ள ராமப்பா கோயில் காகதீய அரசாட்சி காலத்தில் கட்டப்பட்ட மிக அழகான கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்புக்களில் ஒன்று. இக்கோயில் காகதீய அரசன் கணபதி தேவனின் படைத்தலைவரான ரச்சேர்ல ருத்திரன் என்பவரால் கி.பி. 1213-ல் கட்டப்பட்டது. கோயில் மண்டபத்தில் புராணக் கதைகளைச் சிற்ப வடிவில் காட்டும் சிற்பங்களுடன், அழகிய நாட்டிய மங்கையர் பலர் நாட்டியம் இசை நிகழ்த்துபவர்களாகவும் சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளனர்.
இந்த மங்கையர்களுள் ஒருவர் காலில் செருப்பணிந்து காணப்படுகிறார். இது சாதாரண வகைச் செருப்பல்ல, இன்றைய நாகரிக உலகில் மாறி மாறி தோன்றியும் மறைந்தும், சுழற்சியாக வந்து போகும் குதிகால் உயர் செருப்பு வகை. இந்த வகைச் செருப்பை 13ஆம் நூற்றாண்டிலேயே ஒரு பெண் அணிந்திருப்பது சிற்பத்தில் பதிவாகியுள்ளது சிறப்பு.

குதிகால் உயர்த்தி ஒருவரை உயரமானவராகக் காட்டும் செருப்பு (Platform shoes) நடைமுறை வாழ்க்கையில் மிகத் தொன்மையானது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாடகங்களின் நடிகர் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இடைக்கால ஐரோப்பாவில் 15, 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் இவ்வகை செருப்பு செல்வந்தர்களின் அடையாளமாகவும் இருந்திருக்கிறது. ஜப்பானில் நீண்ட ஆடைகளின் நுனி சேறு, தூசி, ஈரம் படாமல் இருக்கக் குதிகால் காலணிகள் அணியப்பட்டுள்ளன. மீண்டும் 20ஆம் நூற்றாண்டில் 1930களின் பிற்பகுதியில், டிஸ்கோ காலம் எனப்படும் 1970களில், 1990களின் பிற்பகுதியில் என ஒவ்வொரு கால கட்டத்திலும் இது அக்கால நாகரிகத்தின் அடையாளமாக அணியப்பட்டது. இதில் பாதம் முழுமையையும் உயர்த்தாமல் குதிகாலை மட்டும் உயர்த்தும் வகையிலும் பெண்களால் அணியப்பட்டு அதன் காரணமாகப் பாதங்களின் மாற்றம், முதுகுவலி போன்ற உடல் நோவுகளுக்கு உள்ளாவதும் நிகழ்ந்துள்ளது.
காலம் தோறும் செருப்புகள் அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டாலும், இதிகாசக் கதையில் காலணிகள் நாட்டை ஆண்டதாகக் கூறப்பட்டாலும் மக்களின் மனதில் செருப்புகளிடம் உயர்வான மதிப்பில்லை.
தரவுகள் உதவி:பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை, அகநானூறு, நீதி வெண்பா
சித்திரப் பேச்சு: கண்ணப்ப நாயனாரின் காலணி. ஓவியர் வேதா. இந்து தமிழ் திசை. ஜூலை 15, 2020
https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/564694-kannappa-nayanar.htmlதமிழரின் தோல் தொழில். ஆ.சிவசுப்பிரமணியன். செம்மலர் - நவம்பர் 2009.
https://keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-nov09/1621-2009-12-13-04-36-03ராமப்பா கோயில்
https://en.wikipedia.org/wiki/Ramappa_Templehttps://en.wikipedia.org/wiki/Ramappa_Temple#/media/File:Ramappa_Temple_by_Varsha_Bhargavi_Kondapalli_21.jpg