மலாயா ஆவணங்கள் – 37
முனைவர் க.சுபாஷிணி
1921 மலாயா தமிழ்ப்பள்ளிகள் 1921 செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி என தேதியிடப்பட்ட அன்றைய மலாயாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து வெளியிடப்பட்ட ”தமிழகம்” பத்திரிக்கை ஐக்கிய மலாய்நாட்டில் அன்றைய தமிழ்க் கல்வி பற்றிய சில தகவல்களைப் பகிர்கின்றது. இன்று ஏறக்குறைய 550 தமிழ் பள்ளிகள் மலேசிய நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
1921 ஆம் ஆண்டு கணக்கின்படி அக்கால கட்டத்தில் மொத்தம் 15 தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இயங்கின என்று தெரிகின்றது. அவற்றுள் 10 அன்றைய காலனித்துவ அரசின் உதவி பெற்றவை. இவற்றை தமிழகம் பத்திரிக்கை ”சர்க்கார் உதவி பெறும் பள்ளிக்கூடங்கள்” என்று குறிப்பிடுகின்றன.
அவற்றுள் இன்றைய பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் பற்றிய சில தகவல்களை இப்பத்திரிக்கை செய்தி நமக்கு வழங்குகின்றது.
பேராக் மாநிலத்தில் அன்றைய காலகட்டத்தில் இரண்டு புதிய பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. அதே காலவாக்கில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு பள்ளிக்கூடம் மூடப்பட்டது என்றும் தெரிகிறது . 38 பிள்ளைகள் தேர்வில் அமர்ந்ததாகவும் அதில் 26 பேர் தேர்ச்சி பத்திரம் பெற்று வெற்றி பெற்றனர் என்றும் இச்செய்தி பதிகின்றது. தரமான கல்வியை வழங்கக் கூடிய ஆசிரியர்கள் இல்லாமையினால் தான் மாணவர்கள் திறமையாக தேர்ச்சி பெற முடியவில்லை என்பதையும் அறிகின்றோம்.
சிலாங்கூர் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருந்தது என்றும், இக்காலகட்டத்தில் 12 புதிய உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன என்ற செய்தியையும் இந்நாளிதழ் பகிர்கின்றது. சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள இப்பள்ளிகளில் மொத்தம் 720 பிள்ளைகள் கூடுதலாக இணைந்திருக்கின்றார்கள். 1919 ஆம் ஆண்டின் உபகாரத் தொகையாக $14,704 வெள்ளி கொடுக்கப்பட்டது என்றும் 1920 ல் $21,059 வெள்ளி பெறப்பட்டது என்றும் தெரிகின்றது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இதே ஆண்டில் 11 தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதில் ஒன்று அரசாங்கத்தின் பள்ளிக்கூடம். ஏனையவற்றுள் நான்கு பாடசாலைகள் உயர்தரம் கொண்டவையாகவும், அடுத்த நான்கு இரண்டாம் தரம் என்றும், ஏனையவை மூன்றாம் தரமாக அமைந்துள்ளன என்றும் அறிகின்றோம்.
இதே 1921 காலகட்டத்தில் பஹாங் மாநிலத்தில் அரசு பள்ளிக்கூடங்கள் இல்லை என்றும், ஆங்கிலேய பள்ளிக்கூடங்கள் 40 இயங்கின என்றும் அறிகின்றோம். அவற்றுள்
ஐரோப்பியர் 373 (ஆண்கள்), 535 (பெண்கள்)
மலாய்காரர் 890 (ஆண்கள்), 44 (பெண்கள்)
சீனர் 3591(ஆண்கள்), 876 (பெண்கள்)
இந்திய 2,271(ஆண்கள்), 456 (பெண்கள்)
மற்றவர்கள் 117(ஆண்கள்), 55 (பெண்கள்)
ஆக அக்காலகட்டத்தில் பஹாங் மாநிலத்தில் கல்வி பயின்ற மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 7,242 (ஆண்கள்), 1,966 (பெண்கள்)
தமிழ்ப் பள்ளிகள் மற்றும் தமிழ் மாணவர்களின் நிலையைப் பற்றி குறிப்பிடும் தமிழகம் பத்திரிக்கை, அக்காலத்திய காலனித்துவ அரசின் சிந்தனைப் போக்கையும் நமக்கு விவரிக்கின்றது.
”அரசாங்கம் ஏற்படுத்துகின்ற பள்ளிக்கூடம் ஆயினும் சரி தனியார் நடத்துகின்ற பள்ளிகளும் சரி, அவை மீன்பிடிப்பவன் மகனே மீன்பிடிப்பவனாகவும் மேழி பிடிப்பவனின் மகனை மேழி பிடிப்பவனாகவும், ஆனால் அவன் தகப்பனைக் காட்டிலும் புத்திசாலியான மீன் பிடிப்பவனும் மேழி பிடிப்பவனுமாகச் செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. தமிழர்களில் கூலிக்காரன் மகன் கூலிக்காரனாகவும் கங்காணி மகன் கங்காணியாகவும் வளர வேண்டியது தான் முறை. இதனை அனுசரித்தே தோட்டங்களிலும் பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றன. பேருக்காக இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கூலிக்காரன் மகனையும் கங்காணி மகனையும் ஓரிடத்தில் அடைத்து வைத்து ஓட விடுவது தான் நடக்கின்றது. ரப்பர் தோட்டங்களிலும் ஈயக்காணிகளிலும் தங்கள் வாழ்க்கை நடத்த ஒழுங்கு செய்து கொள்ள பழக வேண்டியது தான் தேவை. கூலி பிள்ளைகளுக்கு எழுத்தின் வாசனை ஏன்? ஒரு பால் மரம் வெட்டுபவன் மகனும் பால் மரம் வெட்ட வேண்டியது தான். இதற்கு ஏற்ற வகையில் குழந்தைகளை உருவாக்குவது தான் சர்க்காரின் நோக்கம்” என்றும் சாடுகிறது இப்பத்திரிகை.
ஆக, 1920 கால கட்டங்களில் மலாயாவின் தோட்டக்காடுகளில் தோட்டப்புற நிர்வாகத்தை மேற்பார்வை செய்த உரிமையாளர்கள் உருவாக்கிய பள்ளிக்கூடங்களில் தரமான கல்வி வழங்கப்படவில்லை என்பது தெரிகின்றது. அக்கால கட்டங்களில் தமிழ் மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட பலரது உழைப்பின் பயனாகத்தான் படிப்படியாக கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் தமிழ் மாணவர்களின் கல்வித் தரம் உயர்வை கண்டது. மலாயா மலேசியாகவாக சுதந்திரம் பெற்று வளர்ச்சி அடைந்த பின்னர் தமிழ்க் கல்வியின் நிலை மேலும் வளர்ச்சி அடைந்தது. இன்று நாடெங்கும் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் சிறப்பாக இயங்கி வருகின்றன என்பது தமிழ் மக்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியும் பெருமையும் என்று சொன்னால் அது மிகையில்லை.
(தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 341ல் இன்று வெளியிடப்பட்ட கட்டுரை)
----------------------------------------------------------------------------------------------------------------