தமிழகத்தில் பெருகி வரும்
போலியான பட்டங்களின் பிசினஸ்!
"டாக்டர் பட்டம் வேண்டுமா,
எங்களைத் தொடர்பு கொள்ளவும்..."
என்று சமீபத்தில் முகநூலில் வந்த விளம்பரத்தைப் பார்த்து பலர் அதிர்ச்சியானார்கள்.
ஆனால், இது நமக்குப் புதுசு இல்லை. டாக்டர் பட்டம் வாங்கித் தருவதற்கென்றே தமிழகத்தில் ஏகப்பட்ட ஏஜென்ட்டுகள் நீண்டகாலமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு மறைமுகமாகச் செயல்பட்டார்கள். டெக்னாலஜி காலம் என்பதால் தற்போது வெளிப் படையாகவே ஆரம்பித்துவிட்டார்கள்.
கஷ்டப்பட்டு படித்து ஏதாவது ஒரு துறையில் முதுகலைப்பட்டம் வாங்கி, தொடர்ந்து அதில் ஐந்து ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில், தான் மேற்கொண்ட ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து, அதை வல்லுநர் குழு ஏற்றுக்கொண்ட பிறகுதான், நீங்கள் 'டாக்டர்' என்று பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள முடியும்.
#அது_கல்வியால்_கிடைக்கும்_கவுரவம்.
ஆனால்,தற்போது ...
கொஞ்சம் பணம் செலவு செய்தால் போதும், அடிப்படை கல்வித்தகுதி துளியும் இல்லாத யாரும், இங்கு டாக்டர் பட்டம் பெறமுடியும்.
அதுவும் இந்திய பல்கலைக்கழகத்தில் அல்ல...
அயல்நாட்டு பல்கலைக்கழகங்கள்
உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க
காத்துக் கொண்டிருகின்றன.
என்னவோ, அயல்நாட்டு பல்கலைக்கழகம் என்றதும் அயல்நாட்டுக்கு விமானத்தில் பறந்து போய், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கும் டாக்டர் பட்டம் என்று நினைத்தால், உங்களுக்கு விவரம் பத்தாது பாஸ்...
இந்த பட்டம் பெற, நீங்கள் கடல் கடந்து அவ்வளவுதூரம் போகத்தேவை இல்லை.
அந்த பல்கலைக்கழகம் சிங்கார சென்னையில், ஏதாவது ஒரு சந்தில் 10 க்கு 10 அறையில் கூட
செயல்படலாம். ஈமுக்கோழி ஸ்கீமுக்கு ஆள்பிடிக்கிற கதையாக நிறைய டெக்னிக்குகளுடன் புரோக்கர்கள் பலர் வலம் வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றிவரும் இவர்களின் டார்கெட் படிக்காத தொழிலதிபர்கள்தான்.
குறிப்பிட்ட ஊரில் இருக்கும் அந்த தொழிலதிபரை சந்தித்து ஆசை வார்த்தை கூறி, மசிய வைப்பார்கள்...அப்புறம் என்ன? அந்த தொழில் அதிபரை சென்னைக்கு வரவழைத்து , ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு யுனிவர்சிட்டி பிரதிநிதிகள் குழு எனப்படும் சூட்டு கோட்டு போட்ட சிலர், இவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பார்கள். இவரும் கருப்பு அங்கி, தலைப்பட்டம் சகிதம் டாக்டர் பட்டம் வாங்கியபடி வாயெல்லாம் பல்லாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து வாங்கிச் செல்வார்.
பட்டம் கொடுத்த கையோடு, 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த வெளிநாட்டு யுனிவர்சிட்டி(?) குழுவினர் கட்டணமாக பெற்றுக்கொண்டு, தயாராய் இருக்கும் அடுத்த் தொழில் அதிபரை வரவேற்க போய்விடுவார்கள்.
பட்டம் பெற்ற இவரும், ஊர் முழுவதும் பிளக்ஸ் பேனரை வைத்து, தான் வாங்கிய டாக்டர் பட்டத்தை பறைசாற்றுவார். விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு, காது குத்து கல்யாண பத்திரிகை என்று சகலத்திலும் அந்த தொழிலதிபரின் பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டம் டாலடிக்கும்.
வெறுத்துப்போய், "யாருங்க இவங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது?" என்று விவரமானவர்களிடம் விசாரித்தால், விலா நோகச் சிரிக்கும் அளவுக்கு விவரிக்கிறார்கள்.
"நம்ம நாட்டுல அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் கௌரவ டாக்டர் பட்டங்களை யாருக்கும் வழங்க மாட்டார்கள். ஆனாலும், கடந்த காலங்களில் அரசியல் சிபாரிசில் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள், அரசியல் கட்சி ஆதரவு கொண்ட செனட், சிண்டிகேட் உறுப்பினர்கள், யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, சினிமாவில் யார் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்க ஆரம்பித்தார்கள். அதில் தகுதியானவர்களும் உண்டு, தகுதியற்றவர்களும் உண்டு. இந்த விவகாரமே சர்ச்சையுடன் போய்க்கொண்டிருக்கும் நிலையில்தான், இது எதிலும் சம்பந்தப்படாத கும்பல் ஒன்று டாக்டர் பட்டங்களைக் கூவிக்கூவி விற்கத் தொடங்கிவிட்டது.
போலியான பல்கலைக்கழகங்கள் (!) கொடுக்கும் போலியான டாக்டர் பட்டம் (!) என்பது தெரிந்தும் பல்வேறு விழாக்களில் கலந்துகொள்வது என்று இவர்கள் ரவுசு காட்டுகிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலோ, உள்ளாட்சித் தேர்தலோ நெருங்கிவிட்டால் போதும், இவர்கள் கிளம்பிவிடுவார்கள். சுள்ளென்ற வெயிலிலும் சபாரி, ஸ்வெட்டர், ஜெர்க்கின் கோட்டுகளை சட்டைக்கு மேல் போட்டுக்கொண்டு அந்தக் காலத்து நடிகர்கள் கெட்டப்பில் இக்கும்பல் மாவட்டம்தோறும் விசிட் அடிப்பார்கள். அந்தந்த ஊர்களில் இவர்களின் நண்பர்கள் இருப்பார்கள். அவர்களிடம் விசாரித்து ஊரிலுள்ள கந்து வட்டி பார்ட்டிகள், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், ஊராட்சித் தலைவர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், டுபாக்கூர் சமூக சேவகர்களை நேரில் சந்திப்பார்கள்.
உலக அமைதிப்பூங்கா பல்கலைக்கழகம், உலக தத்துவ பல்கலைக்கழகம், உலக மானுடப் பல்கலைக்கழகம், சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம், தான்சானியா பல்கலைக்கழகம், சலாமியா பல்கலைக்கழகம், மகிழ்மதி பல்கலைக்கழகங்களின் தமிழகப் பிரதிநிதி என்று வாய்க்கு வந்த பெயரில் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வார்கள்.
"எங்க டாக்டர் பட்டத்துக்கு உலகம் முழுக்க டிமாண்ட் இருக்கு. பஸ், ரயில், பிளைட்டுல உடனே டிக்கெட் கிடைக்கும். பச்சை மையில் கையெழுத்து போடலாம். முதலமைச்சர், கவர்னர், கலெக்டர், எஸ்.பியை எப்போதும் சந்திக்கலாம்" என்று அள்ளிவிட்டு சிக்கிய ஆட்டுக்குட்டியை அமுக்கிவிடுவார்கள்.
அதில் மயங்கிவிடுபவர்களிடம், "பல்கலைக்கழகத்துக்கும் வருகிற வி.ஐ.பி-களுக்கும் மரியாதை செய்யணும்" என்று ரூ.1 - 2 லட்சம் கறந்துவிடுவார்கள். ஒத்துவராதவர்களிடம் கிடைத்த தொகையை வாங்கிக்கொள்வார்கள். இதுபோல் மாவட்டத்துக்கு 20 பேரைப் பிடித்துவிடுவார்கள்.
நகரில் ஒரு அரங்கில் பட்டமளிப்பு விழாவை நடத்துவார்கள். யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஏரியா எம்.எல்.ஏ, ரிடையர்டு மாஜிஸ்திரேட், டி.எஸ்.பி ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வருவார்கள். கூடவே டி.வி சீரியல் துணை நடிகைகளையும் அழைத்து வருவார்கள். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்று விளம்பரத்தில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் வெளிநாட்டுக்காரர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள் (இருந்தால்தானே வருவதற்கு).
கவுனை மாட்டிவிட்டு உள்ளூரில் அச்சிடப்பட்ட மதிப்புறு முனைவர் என்ற சான்றிதழை வழங்குவார்கள். மறுநாள் நாளிதழ் முதல் ஏரியாவிலுள்ள சுவர்கள் வரை நம்ம வெட்டி பந்தா பார்ட்டி பட்டம் வாங்கிய போட்டோவுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருப்பார்.
இவர்கள் சொல்கிற பல்கலைக்கழகங்களை எப்போது தொடங்கினார்கள், யார் தொடங்கினார்கள், எந்த நாட்டில் செயல்படுகின்றன என்பது யாருக்கும் தெரியாது. ஆளாளுக்கு இப்படி டாக்டர் பட்டம் கொடுக்க அனுமதி இருக்கிறதா என்பதை அதிகாரிகளும் விசாரிப்பதில்லை. ஆனால், ஆண்டுதோறும் இதுபோன்ற டாக்டர் பட்டங்களைத் தங்குதடையின்றி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
டாக்டர் பட்டங்களை விரும்பாத விளம்பர நோயாளிகளுக்கு 'உலகக் குடிமகன் விருது, பிளானட் விருது, குளோபல் விருது, அல்டிமேட் நோபல் விருது, கிரேட் ஆஸ்கர் விருது, சர்வதேச சமூகக் காவலன் விருது, கேப்டன் அமெரிக்கா விருது, இடி அமீன் விருது, பாடிசோடா விருது, கலிஃபோர்னியா சிறந்த தமிழ் நடிகருக்கான விருது என்று பல பெயர்களில் விருதுகளை வழங்கி அட்டகாசம் செய்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், சிறந்த இலக்கியவாதிகள், கலைஞர்கள், நல்ல அரசியல்வாதிகளுக்கும் இந்த விருதுகளை வழங்கி விமர்சிக்கவிடாமல் செய்துவிடுகிறார்கள்.
இன்னும் இது போன்ற போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் துணிச்சலாக செயல் படுவதுதான் ஆச்சர்யம்.
இந்த டுபாக்கூர் டாக்டர் பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்கும் டுபாக்கூர்களுக்கு எதிராக அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைத்தால் சிறப்பாக இருக்கும்.
நன்றி : செ.சல்மான் பாரிஸ்
ஆனந்த விகடனுக்காக..