சென்னை.
கொழும்பு தமிழ்ச் சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம்,
‘இனிய நந்தவனம்’ இதழும் இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ; நான்காவது
உலக மாநாடு’ கடந்த மே 11 ஞாயிறன்று இலங்கையிலுள்ள கொழும்புத்
தமிழ்ச் சங்க அரங்கில் முழு நாள் விழாவாக நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி சுகந்தி
இராஜகுலேந்திரா தலைமையேற்றார். ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை
அனைவரையும் வரவேற்றார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்
நிறுவனரும் இலக்கியப் புரவலருமான அ.ஹாசிம் உமர் முன்னிலை வகித்தார்.
‘தினகரன்’ வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், தொழில்
முனைவோர் சண்முகப்பிரியா கார்த்திகேசு ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர்.
இலங்கையின் மூத்த கவிஞர் மேமன்கவி தொடக்கவுரையாற்றினார். மாநாட்டின்
நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர், கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் கருத்துரை
ஆற்றினார். ‘தமிழ் ஹைக்கூ பயணத் தடத்தில்’ எனும் தலைப்பில் மாநாட்டு
ஆலோசகரும் கவிஞருமான மு.முருகேஷ் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஹைக்கூ கவியரங்க நிகழ்விற்கு இலங்கையைச்
சேர்ந்த மருத்துவரும் கவிஞருமான ஜலீலா முஸம்மில், ஹைக்கூ கருத்தரங்கிற்கு
மலேசியாவைச் சேர்ந்த கல்வியாளரும் கவிஞருமான ந.பச்சைபாலன், ஹைக்கூ
அனுபவப் பகிர்வரங்கிற்குத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கம்பம் புதியவன்
ஆகியோர் தலைமையேற்று ஒருங்கிணைத்தனர்.
நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் கவிஞர்கள் ஆழ்வார்குறிச்சி
ப.சொக்கலிங்கம்,
மேரிசுரேஷ், சா.கா.பாரதி ராஜா, கம்பம் புதியவன், அன்புத்தோழி ஜெயஸ்ரீ,
நந்தவனம்
சந்திரசேகரன், ஜலீலா
முஸம்மில், சோ.ஸ்ரீதரன், காரை
இரா.மேகலா,
ஆ.லெ.மு.இர்ஷாத், காவத்தையூர்
பழனியாண்டி கனகராஜா, பாலமுருகன் கேசவன்,
புதுகை கணேசன், மகேந்திரன் நவமணி, மு.முருகேஷ் உள்ளிட்ட 15 ஹைக்கூ
கவிஞர்களின் கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன.
1988-ஆம் ஆண்டில் ‘கூடைக்குள் தேசம்’ எனும் இலங்கையின் முதல் ஹைக்கூ நூலை எழுதிய
கவிஞர் சு.முரளிதரனுக்கு ‘ஹைக்கூ பேரொளி’ எனும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
37 ஆண்டுகளுக்குப் பிறகு கவிஞரது ‘கூடைக்குள் தேசம்’ நூலின் இரண்டாம் பதிப்பு
வெளியிடப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினரும் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின்
தலைவருமான கவிஞர் தங்கம் மூர்த்தி மாநாட்டு நிறைவுரையாற்றினார். அவர் பேசும்போது,
“கவிஞன் ஒரு காட்சியைக் கண்டு, கண்டதை
உணர்ந்து உள்வாங்கி, அப்படியே ஹைக்கூவில்
மிகையில்லாமல் சொல்லும்போது அது மிகச்
சிறந்த கவிதையாக மாறுகிறது. தமிழில்
ஹைக்கூ எழுதும் ஆர்வம் எல்லோரிடத்தும்
இருக்கிறது. ஆனால், அதைத் தேடலோடு
உள்வாங்கி எழுதுபவர்கள் சிலரே. இப்படியான
மாநாடுகளும், பகிர்வுகளும்
ஹைக்கூவை
கண்டடையும் தொடர் பயணத்தில் புதிய வெளிச்சங்களைத் தருமென உறுதியாக
நம்புகின்றேன்”
என்று குறிப்பிட்டார்.
கவியரங்கில் சிறப்பான கவிதைகளைப் படித்த கவிஞர்களுக்கும், ஓவிய ஹைக்கூ போட்டியில்
பரிசுகளை வென்ற கவிஞர்களுக்கும் கவிஞர்கள் செளந்தி (ஜெர்மனி). புதுகை ஆதிரா ஆகியோரின்
சார்பில் புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டன. இம்மாநாட்டில் தமிழகம், புதுச்சேரி, இலங்கை, மலேசியா,
சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களும் ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர்.
நிறைவாக, கவிஞர் யாழ்வாணன் நன்றி கூறினார்.
=======
இணைப்பு: மாநாட்டுப் படங்கள்