பன்னாட்டு புத்தகக் கண்காட்சியாக மாறும் சென்னை புத்தகக் கண்காட்சி...

13 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 16, 2022, 1:28:13 AM10/16/22
to மின்தமிழ்
siurce 0 https://www.facebook.com/photo/?fbid=10162078398769046&set=a.10150667243234046

Aazhi Senthil Nathan

chennai international book fair 2023.jpg

பன்னாட்டு புத்தகக் கண்காட்சியாக மாறும் சென்னை புத்தகக் கண்காட்சி...

தமிழ்நாடு அரசு ஒரு முக்கியமான முன்முயற்சியை எடுத்திருக்கிறது. ஜனவரி 2023 இல் நடக்கவுள்ள சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒரு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியாக தரமுயர்த்துவதற்கான சில நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அதன் ஒரு கட்டமாக, இந்த வாரம் ஜெர்மனியில் பிராங்க்பர்ட் நகரில் நடக்கவுள்ள உலகின் மிக முக்கியமான புத்தகக் கண்காட்சிக்கு பிரதிநிதிகள் குழு ஒன்றை அரசு அனுப்புகிறது. அதில் நானும் இடம்பெற்றிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியாகத் தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறேன்.

இது ஒரு நீண்ட நாள் கனவு. 45 ஆண்டு காலமாக வெற்றிகரமாக நடந்துவரும் சென்னைப் புத்தகக் கண்காட்சி சாதனைகளைப் படைத்துவரும் ஒரு பெருநிகழ்வு. இந்தியாவில் இவ்வளவு பெரிய புத்தகக் கண்காட்சிகள் நடப்பது மிகவும் குறைவுதான்.
லட்சக்கணக்கான வாசகர்களின் திருவிழாவான சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு பல சிறப்புகளும் உண்டு. ஆனால் அது ஓர் உள்ளூர் கண்காட்சியாகவே இதுவரை இருந்துவருகிறது.

பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகள் (International Book Fairs) என்கிற வடிவம் சற்றே வித்தியாசமானது. அவை பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் துறைசார்ந்த தொழில்திறனாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பலவிதமான வாய்ப்புகளை அளிக்கக்கூடியவை. பிராங்க்பர்ட், லண்டன். பாரீஸ், புது தில்லி, மாஸ்கோ. பெய்ஜிங், ஷார்ஜா, இஸ்தான்புல், ஜகார்த்தா, சியோல், நியூ யார்க் போன்ற சுமார் 20க்கும் மேற்பட்ட உலகின் முக்கிய நகரங்களில் நடைபெற்றுவரும் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி வடிவம் இந்த ஆண்டு சென்னைக்கும் வரும் என எதிர்ப்பார்க்கிறோம்.

பன்னாட்டுப் புத்தகக் காட்சி என்றால் அது நூல் விற்பனை மட்டுமே அங்கே முதன்மையானது அல்ல. அது உறவுகளை உருவாக்கிக்கொள்வதற்கான இடமும் கூட. முக்கியமாக உலகளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அங்கு வருவார்கள், படைப்பாளர்-வாசகர்கள் சந்திப்புகள் பல நடக்கும், பதிப்புத்துறையின் புதுமைகளை வெளிப்படுத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் இருக்கும். பதிப்பாளர்களும் ஆசிரியர்களும் தங்கள் நூல்களின் காப்புரிமைகளை விற்கவும் வாங்கவும் படைப்புரிமை மையம் இருக்கும், அங்கே இலக்கிய முகவர்கள் வணிகம் செய்வார்கள். மொழிபெயர்ப்புகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஓவ்வோராண்டும் ஏதேனும் ஒரு வெளிநாடு, மதிப்புறு விருந்தினர் (guest of honour) என்கிற பெயரில் அழைக்கப்பட்டு, அந்த நாட்டின் இலக்கிய, படைப்பாக்க, பண்பாட்டு கூறுகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறும்.

பதிப்புத்துறை சார்ந்த தொழில்முறை கருத்தரங்குகள் நடைபெறும், ஒரு இன்டர்நேஷனல் பெவிலியனாநது இருக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக நிகழ்ச்சியை நடத்தும் நாடு, மொழிபெயர்ப்பு நல்கைகளின் (translation grants) மூலமாக தங்கள் நாட்டின் இலக்கியங்களை உலகத்துக்கு எடுத்துச்செல்ல பலநாட்டு பதிப்பகங்களோடு ஒப்பந்தங்கள் போடும். இது ஒரு சிறு பட்டியல்தான்.

எதிர்வரும் ஜனவரியில் இவற்றில் பல சென்னையில் நடக்கலாம், இவையெல்லாம் நடந்தால் தமிழ் படைப்பாளர்களுக்கு சர்வதேச வாசிப்புச் சந்தை தன் கதவுகளைத் திறக்கும், வாசகர்களுக்கு உலகின் அற்புதமான படைப்புகள் உடனுக்குடன் கிடைக்கும். நூல்களின் தரமும் பதிப்புலகின் செயல்பாடுகளும் உயரும், உலகத்தின் புத்தக மையங்களில் ஒன்றாக சென்னையும் உருவாகும், பதிப்புதுறைசார் நிறுவனங்களுக்கு தொழில்வாய்ப்பும் பலருக்கு வேலைவாய்ப்பும்கூடும். தமிழர்களின் களமும் தளமும் வலுப்பெறும். மூவாயிரமாண்டு நாகரீகச் செழுமை என்பது மேலும் சிறக்கும்.

இப்படிப்பட்ட தன்மைகளையும் நன்மைகளையும் கொண்ட ஒரு நிகழ்வாக சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தப்படவேண்டும் என்று தமிழ்நாடு அரசு விரும்புகிறது. அதுதொடர்பானக் கருத்துக்களை அரசு நிர்வாகத்தில் கேட்டிருந்தார்கள். நானும் வேறு சிலரும் கருத்துகளைச் முன்மொழிந்திருந்தோம். நான் பிராங்க்பர்ட், புது தில்லி, பெய்ஜிங் பன்னாட்டு புத்தகக் கண்காட்சிகள் தொடர்பாக எனக்கிருந்த நேரடி அனுபவங்களையும் பகிர்ந்திருந்தேன்

சென்னை புத்தகக் காட்சியின் வழமையான எந்த சிறப்பம்சங்களும் நிகழ்வு முறைகளும் மாற்றப்படாமல், கூடுதலான துணை நிகழ்வுகள் மூலமாக இந்த நிகழ்வுகளை அறிமுகப்படுத்தவேண்டும் என தமிழ்நாட்டரசுக்கு நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். எப்படி நடத்தலாம் என்பதைத் திட்டமிடுவதற்கான முதல்கட்டமாக, பிராங்க்பர்ட் புத்தகக்கண்காட்சிக்குச்சென்று, அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து அறியவும், அங்கே வருகைதரும் சர்வதேச பதிப்புத்துறையினரைச் சந்தித்து சென்னைப் புத்தகக் காட்சிக்கு அழைக்கவும் நூலகத் துறை இயக்குநர் திரு. க. இளம்பகவத் ஐஏஎஸ் அவர்களின் தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழு இன்று ஜெர்மன் செல்கிறது. குழுவில் பன்னாட்டு பங்காளுகை ஆலோசகராக (International Partnership Consultant) நான் இடம்பெற்றிருக்கிறேன். (பன்னாட்டு புத்தகக் கண்காட்சிகளில் உள்ள அனுபவம் மற்றும் நவீன மொழிபெயர்ப்புத்துறை அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலும் இதற்கு முன்பு சில அரசுத் திட்டங்களில் பணியாற்றிய அடிப்படையிலும் எனக்கு இக்குழுவில் ஓரிடம் தந்திருக்கிறார்கள்). உலகளவிலிருந்து வரும் சுமார் 30 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளையும் நாங்கள் சந்திக்கவுள்ளோம்.

அரசுக்கு மனமார்ந்த நன்றி. மிகவும் மகிழ்ச்சி. பத்தாண்டுகளுக்கு முன்பு, முந்தைய கலைஞர் ஆட்சிக்காலத்தில், வேலூரில் நூலாறு என்ற பெயரில் அரசின் உதவியோடு நடத்திய புத்தகக் கண்காட்சிக்குப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் செயல்பட்ட அந்தக் காலம் நினைவுக்கு வருகிறது.

தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு திரு. மு.க,ஸ்டாலின் அவர்களின் இந்த ஆட்சிக்காலத்தில் இதைச் செய்துமுடித்தாகவேண்டும் என்றொரு எண்ணம் எனக்கு ஆழமாக இருக்கிறது. அவர் துணைமுதல்வராக இருந்த முந்தைய ஆட்சிக்காலத்தில் ஓர் அதிசயம் தமிழ்நாட்டில் நடந்தது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நூற்றாண்டில் உருவான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் மாநிலத்திலுள்ள 12,000 ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி நூலகம் என்கிற பெயரில் 12,000 சிறு நூலகங்கள் இங்கே உருவாக்கப்பட்டன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், ஏன் உலகின் பல நாடுகளிலும்கூட இந்த அளவுக்கான எண்ணிக்கையில், இவ்வளவு கீழ்மட்ட அளவில் நூலகங்கள் உருவாக்கப்பட்டனவா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நூலகங்களை பேணிப் பாதுகாக்கும் திறமை பிறகு நமக்கில்லாமல் போய்விட்டது. அடுத்துவந்த அதிமுக அரசு அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் சிதைத்தபோது, நாம் யாரும் முனகக்கூட முன்வரவில்லை. அந்த 12,000 நூலகங்களுக்கு நூல்களை விற்ற பதிப்பாளர்களையும் - என்னையும் - சேர்த்தேதான் சொல்கிறேன். அதை நாம் கோட்டைவிட்டுவிட்டோம்.

ஆனால் முதல்வர் சோர்ந்துபோய்விடவில்லை. இப்போது மதுரையில் கலைஞர் நூலகம் வருகிறது. சென்னைப் புத்தகக் கண்காட்சி சர்வதேச நிகழ்வாக தரமுயர்கிறது. தமிழ்நாட்டு நூலகத்துறையும் பல்வேறு மாற்றங்களுக்குத் தயாராகியிருக்கிறது என அறிகிறேன்.

அதைப் போலவே முதன்மைச் செயலர் திரு. த. உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் வழிகாட்டலில், தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுக்க புத்தகக் கண்காட்சி இயக்கத்தை நடத்தி, இன்று அரசு உதவியோடும் பதிப்பகங்கள், இலக்கிய அமைப்புகள் முயற்சியோடும் தமிழ்நாட்டில் சுமார் 40 புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றுவருவதை நாம் அறிவோம்.

இந்த அரசின் முயற்சியில் உலகின் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி வரைபடத்தில் நமது சிங்காரச் சென்னையும் இடம்பெறவேண்டும் என விரும்புகிறேன். செஸ் ஓலிம்பியாடைத் தொடர்ந்து மற்றுமொரு பன்னாட்டு நிகழ்வாக இது அரங்கேறவேண்டும்.

ஊர் திரும்பியவுடன் அரசின் முடிவுகளைப் பொறுத்தும் தொடர்ந்தும், நிறைய பகிர்கிறேன். துறைசார்ந்த பலரையும் தொடர்புகொள்ளவிருக்கிறோம்.

நேரம் கிடைத்தால், பிராங்க்பர்ட்டிலிருந்து சில குறிப்புகள் எழுதுகிறேன். அல்லது, வந்த பிறகு எழுதுகிறேன்.

- அன்புடன், ஆழி செந்தில்நாதன்

தேமொழி

unread,
Dec 5, 2022, 5:23:26 PM12/5/22
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/photo/?fbid=10162295390609046&set=a.10150667243234046


publisher.jpg
முதல் வெற்றி.

International Publishers Association உலகின் மிகப்பெரியப் புத்தகப் பதிப்புச் சங்கங்களின் கூட்டமைப்பு. பல நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்களின் சங்கங்களின் உலகளாவியக் கூட்டமைப்பு அது. அது வெளியிடும் உலகப் புத்தகக் கண்காட்சிகளின் பட்டியல் என்பது மிகவும் கவுரவமான ஒன்று. எல்லாப் புத்தகக் கண்காட்சிகளும் அதில் இடம்பெற்றுவிடுவதில்லை.

இப்போது சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி CIBF அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது என்ற செய்தியை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த தமிழநாடு அரசு குழு இந்த அமைப்பைச் சந்தித்தும் உரையாடியது. எங்கள் புதிய முயற்சிக்கு IPA இன் ஆதரவு வேண்டும் என்று கோரினோம்.

பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகளுக்குப் போக விரும்பும் பதிப்புத்துறையினர் தங்களுடைய ஆண்டுத் திட்டமிடலுக்கு IPA இணையத்தளத்தில் இடம்பெறும் இந்தப் பட்டியலையே பயன்படுத்துவார்கள். அந்த வகையில் இப்போது உலகளாவிய பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி வரைபடத்தில் சென்னை இடம்பெற்றுவிட்டது!

அதுமட்டுமல்ல, நாள்காட்டிக் கணக்கில் பார்த்தால், நமது புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதமே வருவதால், பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகளின் காலண்டரில் முதல் இடம் சென்னைக்கு!

உலகளாவிய புத்தகப் பதிப்புலகத்தினர் தங்களுடைய ஆண்டின் முதல் கண்காட்சியைச் சென்னையிலிருந்து தொடங்கட்டுமே. தை பிறந்தால் அவர்களுக்கும் வழி பிறக்கட்டுமே!

சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி வெற்றிபெற கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். International Publishers Association இன் பட்டியலில் இடம்பெற்றது, பெரும் மகிழ்ச்சியையும் அதைவிடப் பெரிய பொறுப்புணர்வையயும் தந்திருக்கிறது.

சொல்வதைச் செய்யும் அரசு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தமிழ்நாட்டு அரசு. எனவே நம்பிக்கையோடு உழைப்போம். 

தேமொழி

unread,
Dec 5, 2022, 5:27:13 PM12/5/22
to மின்தமிழ்


அயல்நாட்டில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் & பதிப்பாளர்களுக்கு மாபெரும் வாய்ப்பு

2023, ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில், தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ள பன்னாட்டு புத்தகக் கண்காட்சி யில்
அமெரிக்கா - கனடா, ஐரோப்பா, அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்காக தனித்தனியாக அரங்குகள் அமைத்து, தமிழக அரசு அதை இலவசமாக வழங்க உள்ளது.

இந்த அரங்குகளில் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த தமிழ் படைப்பாளர்களின் படைப்புகளை காட்சிக்காக வைக்கலாம். அதோடு உலக புத்தகக் கண்காட்சிக்கு வரும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் மற்றும் உள்நாட்டு பதிப்பாளர்களிடம் உங்கள் நூல்களுக்கான பதிப்புரிமையை விற்கலாம். பிறகு தகுதியான நூல்களுக்கு அயல் மொழிகளில் வெளியிடுவதற்கான கிராண்ட் ( Grant- புத்தக வெளியீட்டு மானியம்) கேட்டு விண்ணப்பித்துப் பெறலாம். இதன்மூலம் இலக்கிய மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் நடப்பதோடு, சிறந்த
வணிக வாய்ப்புகளும் உருவாக உள்ளன.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

உங்கள் நூல்கள் இடம்பெற வேண்டுமானால் நூல்களை நாங்கள் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதோடு நீங்கள் சார்ந்த நாடுகளின் பிரதி நிதிகளாக பங்கேற்கலாம்.

உங்கள் விருப்பம் எதுவானாலும், +91 9940446640* என்ற எமது வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் அனுப்புங்கள்.

#chennai_international_bookfair
#CIBF
#CIBF2023

இப்படிக்கு

புலம்பெயர் தமிழர்களுக்கான அரங்குகள் ஒருங்கிணைப்புக் குழு

செந்தில்நாதன்*l
(ஆழி பதிப்பகம்)
கோ.ஒளிவண்ணன் (எமரால்ட் பதிப்பகம்)
மு.வேடியப்பன்
டிஸ்கவரி புக் பேலஸ்

V.P. ராஜ்
தேனீ பதிப்பகம்
Reply all
Reply to author
Forward
0 new messages