'Kaya - Story of Champa in Korea' கொரிய-தமிழ் மொழி இரண்டுக்கும் இடையிலான மொழியியல், பண்பாட்டியல் மற்றும் பொருளாதார தொடர்புகள் வரலாற்றுத் தொடர்புகள் ஆகியவற்றை மையப்படுத்தி வந்திருக்கின்ற முதல் நூல் என்று பெருமைப்படத்தக்க வகையில் இதனைக் கூறலாம். இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் கண்ணன் நாராயணன்.
2006 ஆம் ஆண்டு தொடங்கி கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கூகுள் மின்தமிழ் மடலாடல் குழுமத்தில் தொடர்ந்து எழுதி வந்தார் கண்ணன். ஆரம்ப காலகட்டத்தில் இந்தக் கருத்து பெரிதாக வரவேற்கப்படவில்லை என்றாலும் இடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையேயான தொடர்புகள் பற்றி சில முயற்சிகள் தொடங்கப்பட்டன.
அவற்றுள் சில ஆய்வுத் தரமற்ற வகையிலும் கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டும் பின்னப்பட்ட வகையில் உருவான சில நூல் முயற்சிகள். இவை ஆய்வுலகத்திற்கு எவ்வகையிலும் பயன் தர முடியாது வெறும் கற்பனை படைப்புகளாகவே வெளிவந்து கரைந்து போயின. ஒரு சிலர் கடல் மற்றும் ஆமைகள் ஆகியவற்றை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஆய்வுத் தரத்தைப் பின் தள்ளிவிட்டு உணர்ச்சிப் பூர்வமான தகவல்களை மட்டுமே முன்னிறுத்தி தமிழ் மொழிக்கும் கொரிய மொழிக்குமான தொடர்புகளைத் தமிழ்ச் சூழலில் முன்னெடுத்தனர். அது ஆழமான ஆய்வுகளுக்கு வழி வகுக்காமல் உணர்ச்சிக் கொந்தளிப்பு, உணர்ச்சிப்பிரவாகம் என்ற வகையில் எழுந்து அடங்கிப் போகும் நிலையிலேயே இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இரு ஆண்டுகளுக்கு முன்னர் மலர்விழி பாஸ்கரன் (மாயா) 'செம்பா' என்ற தலைப்புடன் ஒரு நாவலை வெளியிட்டிருந்தார். தமிழ் மரபு அறக்கட்டளை மின்தமிழ் மடலாடல் குழுமத்தில் கலந்துரையாடப்பட்ட இத்துறை சார்ந்த கலந்துரையாடல் ஏற்படுத்திய ஈர்ப்பும் ஆர்வமும் அவருக்கு இந்த நாவலை மிகச் சிறப்பாக எழுதி வெளியிடக் காரணமாக இருந்தது. அது ஒரு அருமையான படைப்பும் கூட.
இந்த நிலையில் டாக்டர் கண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது தொடர் வேண்டுகோளுக்கிணங்க தனது கொரிய அனுபவங்களைத் தமிழில் ஒரு நூலாகக் கொண்டு வந்தார். இதனை ஆழி பதிப்பகத்தார் வெளியீடு செய்தனர். அது இன்று நல்ல முறையில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு நூலாக இருக்கின்றது.
அந்த வகையில் தொடர்ச்சியாக இப்பொழுது டாக்டர் கண்ணன் இரண்டு நூல்களை உருவாக்கி சாதனை செய்திருக்கின்றார். அதில் ஒன்று ஆங்கிலத்தில் மற்றொன்று கொரிய மொழியான ஹங்குல் மொழியில்.
நேற்று (ஆகஸ்ட் 25, 2023) மாலை இந்த நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு பெற்றேன். நேற்று இரவும் இன்று காலையும் 170 பக்கங்கள் அடங்கிய இந்த நூலை வாசித்து முடித்தேன். இது எதைப் பற்றிப் பேசுகின்றது என்பதைச் சுருக்கமாக வழங்குகின்றேன்.
ஏன் இந்த நூல் உருவாக வேண்டும் என்பதற்கான ஆசிரியரின் விளக்கம், பண்டைய கொரிய வரலாறு. அதில் இந்தியத் தாக்கம், இரண்டு மீன்கள் சின்னம், காயா-பாண்டிய தொடர்புகள், கொரிய பௌத்தம், தமிழுக்கும் கொரிய மொழிக்குமான மொழியியல் தொடர்புகள், பண்பாட்டுத் தொடர்புகள் மற்றும் இது தொடர்புடைய மேலும் சில கட்டுரைகள்.
கொரியாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள பொருளாதார தொடர்புகள் பற்றிய கட்டுரை மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது. கடந்த ஆண்டுகளில் கொரிய கார் நிறுவனங்களும் ஆய்வு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தனது நிறுவனங்களை ஏற்படுத்திய முயற்சிகள் பற்றியும் கொரியா சென்று உயர்கல்வி கற்கச் சென்று பிறகு அங்கே பணிபுரிகின்ற தமிழர்கள்... இத்தகைய பொருளாதாரத் தொடர்புகள் இந்தியாவிற்கும் கொரியாவிற்குமான ஒப்பந்தங்கள் ஆகியவற்றை இந்த அத்தியாயங்கள் பேசுகின்றன.
பாண்டியப் பேரரசின் தொடர்புகள், ஆய் குல இளவரசியாக செம்பா கொரியா சென்று அங்குத் தனது சந்ததியினரை உருவாக்கிய தொடர்புகள்... மீன் சின்னங்கள் எவ்வாறு கொரியப் பண்பாட்டில் இடம்பெறுகின்றன ஆகியவை சிறப்பாக அமைந்திருக்கின்றன. இதற்கு அடுத்ததாக வருகின்ற கொரிய நெடுங்கணக்கு பற்றிய அத்தியாயம் நம்மை வியக்க வைக்கிறது. தமிழ் நெடுங்கணக்கிற்கும் கொரிய எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்புகள் என்னை வியக்க வைத்தன. காரணம் கொரிய எழுத்துக்கள் நமக்கு நன்கு பரிட்சியமான தொல் தமிழ் எழுத்தான தமிழி போன்று உருவத்தில் அமைந்திருப்பதும் எழுத்துக்கள் சொற்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் என்பதுதான். இவை ஆய்வாளர்களுக்கு அடிப்படை தரவுகளை வழங்கி மேலும் விரிவான ஆய்வுகளைச் செய்வதற்கு அடிப்படை களத்தை உருவாக்கித் தருகின்றன.
ஆய்வுப்பூர்வமான தகவல்கள் மட்டுமின்றி அவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள உதவும் வகையில் தேவைக்கேற்ற வகையில் புகைப்படங்களையும் நூலில் இணைத்திருக்கின்றார்கள். இவை வாசிப்பை எளிதாக்குகின்றன.
இந்த நூலை வாங்குபவர்கள் ஆங்கில நூலையும் கொரிய மொழி நூலையும் இணைத்தே வாங்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. கொரிய மொழி நமக்குத் தெரியாது என்றாலும் கூட இந்த நூல் நம் இல்லங்களில் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் உலகிற்கு இது ஒரு மாபெரும் முயற்சி. தமிழைப் பற்றி கொரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வந்திருக்கின்ற கொரிய நூலை நம் வீட்டில் வைத்திருக்கும் போது நமது குழந்தைகளும் வீட்டிற்கு வருகின்றவர்களும் இவற்றை எடுத்துப் பார்த்து இச்செய்தியை உரையாடலுக்கு உட்படுத்த இது நல்ல வாய்ப்பாக அமையும். ஆங்கில நூலின் விலை ரூபாய் 300/- கொரிய மொழியில் வந்துள்ள நூலின் விலை ரூபாய் 500/-. இரண்டையும் பெறுவதற்கு 800 ரூபாய் செலுத்தி எமரால்ட் பதிப்பகத்தில் இருந்து நூலைப் பெற்றுக் கொள்ளலாம்.
நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது இந்த நூலை மொழிபெயர்த்த தமிழ் பெண்மணி பவானி அவர்கள் கொரிய மொழியிலேயே உரையாற்றினார். அதுமட்டுமின்றி நிகழ்ச்சிக்கு வந்திருந்த கொரிய மொழி ஆசிரியர்கள் கலந்துரையாடல் நேரத்தில் கேள்வி கேட்டு தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள். தமிழ் உலகிற்கு இத்தகைய செயல்பாடுகள் மிக மிக ஆரோக்கியமானவை.
உலக மொழிகளில் தமிழின் மொழிவளமும் வரலாறும் பண்பாடும் எழுதப்பட வேண்டும். அதற்கு இந்த முயற்சி வரவேற்கத்தக்க ஒரு நல்ல முன்முயற்சி. இதனைச் செயல்படுத்திய நூலாசிரியர் டாக்டர் கண்ணன் நாராயணன் அவர்களுக்கும் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் எமரால்டு பதிப்பகத் தோழர் ஒளிவண்ணன் மற்றும் அவர்களது பதிப்பகக் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த முயற்சியில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்ட இன்கோ அமைப்பிற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முனைவர் க. சுபாஷிணி
26.8.2023

---------------------------------------------------------------------------------------------------------------------