(அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. சிந்து, வைகை, சரசு மூவரும் திருவான்மியூர் கடற்கரை மணலில் அமர்ந்து பேசுகிறார்கள். )
வைகை:
மெரினா 'பீச்'ல எல்லாம் இப்படி அமைதியா உட்கார்ந்து பேசமுடியாதுக்கா. அதுவும் ஞாயித்துக்கெழம வேற.
சிந்து:
ஆமா வைகை, அதுனால தான் இங்க சந்திச்சு பேசலாம்னு சொன்னேன். சரசு கூட மெரினா, பெசன்ட் நகர் பீச்சுக்கு எல்லாம் போயிருக்காளாம். திருவான்மியூர் 'பீச்'க்கு வந்தது இல்லையாம் !
சரசு:
வைகை அக்கா... நீங்க "வைகை அரசியல்" பத்தி கொந்தளிப்பா பேசுறதுக்கு இந்த மாதிரியான "அமைதியான" இடம் தான் பொருத்தங்க்கா!
வைகை: (சிரித்துக்கொண்டே…)
ரொம்ப தெளிவாகிட்ட சரசு… சிந்து அக்கா மாதிரியே ‘ஏத்திவிட்டு கூத்து பாக்க’ பழகிட்ட. நடத்து... நடத்து... வைகையை பத்தியும் மதுரயப் பத்தியும் ஆயிரந்தடவ பேசச்சொன்னாலும் பேசுவேன் நானு...
சிந்து:
அதுலயும் குறிப்பா சரசுவ நாம கீழடிக்கு கூப்ட்டு போறதுக்கு முன்னால "வைகைன்னா என்னா .. மதுரைன்னா என்னா"ன்னு அவளுக்கு தெளிவா சொல்லிறனும். அப்ப தான் நாம எல்லாம் எதுக்காக நேரத்த செலவழிச்சு " சிந்து முதல் வைகை வரை" அது இதுன்னு... அதுலயும் குறிப்பா இப்ப ஏன் பேசுறோம்ங்றது புரியும்.
வைகை:
சரிக்கா. சரசு... நான் முதல்ல வைகையை பத்தி சொல்றேன். இடையிடையில “பஞ்ச்” டயலாக்லாம் பறக்கும்! பதட்டப்படக் கூடாது. இப்பயே சொல்லிட்டேன்.
சரசு:
சரிக்கா!
வைகை:
சரசு… நான் போன்ல சொன்ன மாதிரி நீயி சங்க இலக்கியம் பத்தின அடிப்படையான விஷயங்களை இணையத்தில படிச்சிட்டேன்னு சொன்ன!
சங்க இலக்கியம் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் எவ்வளவு முக்கியமானதுன்னு ஒனக்கு புரிஞ்சிருக்கும். சங்க இலக்கியம் தான் "வேரு"! மத்ததெல்லாம் "வேறு"!
சரசு:
ஆமாக்கா... புரியிது...
வைகை:
சங்க இலக்கியம் காவிரி, பெண்ணை, கங்கை ன்னு பல ஆறுகளைப் பத்தி பேசுனாலும் அதிக தடவை குறிப்பிடுறதும்; அது மட்டும் இல்லாம "தலையில தூக்கி வச்சு" ஆடுறதும் வையை ஆற்றை மட்டும் தான்.
சங்க இலக்கியம் வைகையை "வையை" ன்னு தான் 81 தடவை குறிப்பிடுது. ஒரே ஒரு தடவை தான் "வைகை" ன்னு சொல்லுது. காலப்போக்கில வைகைங்ற பேரு நிலைச்சிருச்சு.
சிந்து:
அப்பிடியா..
வைகை:
சரசு... " தமிழ் வையை தண் அம் புனல்" னு வையை ஆற்றை "தமிழ் ஆறு" ன்னு சங்க இலக்கியம் சொல்லுது. இந்த மாதிரி " இந்தி" ஆறு " குஜராத்தி ஆறு" " சம்ஸ்கிருத ஆறு" ன்னு எங்கயாச்சும் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி யாராச்சும் எழுதி கேள்விபட்ருக்கியா சரசு...
சரசு:
கேள்விப்பட்டது இல்லக்கா...ஆனா நீங்க இத மூனாவது தடவையா சொல்றீங்க அக்கா...
வைகை:
ஆயிரம் தடவை சொல்லுவேன் சரசு. "கூந்தல் இருக்கிறவ அள்ளி முடியத்தான்" செய்யிவா சரசு. அதுலயும் மதுரை மல்லிகைப்பூவ வச்சு...சும்மா கும்முன்னு...
சிந்து:
சரி...சரி... அள்ளி முடி! பூ வையி... பொட்டு வையி...இப்ப மேட்டருக்கு வா!
வைகை:
அக்கா வையை "நாலுல ஒரு" நதி இல்லக்கா. அது ஒரு மொழியாறு! காதல் கரைபுரண்டு ஓடும் தமிழ் வாழ்வியல் ஆறு! தமிழர்களின் பண்பாட்டு அரசியலை உரக்கப்பேசிய ஆறு! ஏன்னா அது வெறும் ஆறு இல்ல அக்கா! அது வரலாறு!
சிந்து:
செம "பஞ்ச்" வைகை! சரி... நீயி எதை வச்சு சங்க இலக்கியம் வையையாற்றை முன்னிலைப்படுத்தி "பண்பாட்டு அரசியல்" பேசுதுன்னு சொல்ற!
வைகை:
சொல்றேன் க்கா. சங்க இலக்கியங்களில் இடம் பெறும் பரிபாடல், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை எல்லாம் ஒப்பீட்டு அளவுல "மேல் அடுக்கு" அதாவது "Upper layer" இலக்கியங்கள் தான். சங்க இலக்கிய காலத்திலேயே வடதிசையில் இருந்து நான்மறை எனப்படும் வேதங்களை அடிப்படையாகக் கொண்ட வைதீக கருத்துகள் தமிழ் மண்ணை வந்தடைந்து விட்டன. அதாவது, வேதங்களை கற்றுணர்ந்த "அந்தணர்" என்று பொதுவாக அறியப்பட்ட"பார்ப்பனர்களும்" தமிழ் நிலத்தை வந்து அடைந்து விட்டார்கள்!
சரசு:
எதை வச்சு இப்படி சொல்றீங்க அக்கா!
வைகை:
ரொம்ப சுருக்கமா சொல்றதா இருந்தா இப்படி சொல்லலாம் சரசு. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன் கல்விப் பரவலாக்கம் குறித்த" சமூகநீதி" பேசி தமிழ் வளர்த்தான்னா, " பல்யாக சாலை முதுகுடுமி" ங்ற இன்னொரு பாண்டிய மன்னன் யூபம் நட்டு, தீபம் காட்டி யாகம் வளர்த்திருக்கிறான். அப்பவே தமிழ்நாடு பல்வேறு பண்பாட்டுத் தளங்களில் இயங்க தொடங்கிருச்சு. அது மட்டுமல்ல. சங்க இலக்கியங்களில் "அந்தணர்" " அந்தணன்" என்ற சொல்லாட்சி 45 முறையும் "பார்ப்பான்" " பார்ப்பனன்" " பார்ப்பனர்" போன்ற சொல்லாட்சிகள் 20 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளதுன்னா பாத்துக்கங்களே...
சிந்து:
இது ரொம்ப முக்கியமான " பாயிண்ட்". ஆனா சங்க இலக்கியம் வையை ஆற்றை மையப்படுத்தி என்னா பண்பாட்டு அரசியல் பேசுச்சுன்னு சொல்ற!
வைகை:
சிந்து அக்கா... சங்க இலக்கியம் வையை ஆற்றை அறிமுகம் பண்ற "ஸ்டைல" பாருங்க அக்கா!
விருப்பு ஒன்று பட்டவர்கள் திடீரென்று சந்தித்ததும் தயக்கம் நாணம் இதெல்லாம் சுக்குநூறா ஒடைஞ்சு தறிகெட்டு பாய்வது போல் வையை கரையை உடைத்துப் பாய்ந்ததாம்!
"முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்து என வரைச் சிறை உடைத்ததை வையை வையைத் திரைச் சிறை உடைத்தன்று கரைச் சிறை அறைக எனும் உரைச் சிறைப் பறை எழ ஊர் ஒலித்தன்று"
சரஸ்வதி ஆற்றை பத்தி வேதங்களோ... கங்கை ஆற்றை பத்தி புராண இதிகாசங்களோ இப்படி சொன்னது உண்டாக்கா! ஆறு என்பது மக்களின் பயன்பாடு சார்ந்தது. முதல்ல குடிக்கிறதுக்கு; குளிக்கிறதுக்கு. ஆறு என்பது சமூகப் பொருளாதார வாழ்வியல் சார்ந்தது அக்கா! "பிண்டம்" குடுக்கிற "ஸ்பாட்" இல்லக்கா...
சிந்து:
அடடே ... அபாரம் வைகை!
வைகை.
ஆமாக்கா. வைகையில வெள்ளம் வந்ததும் " ஆம்பள பொம்பள" " "காதலன் - காதலி", " கணவன் - மனைவி" ; "ஊர்க்காரய்ங்க - பரத்தையர்" னு "குண்டக்க மண்டக்க" "ஜாலியா" குளிச்சிருக்காய்ங்க அக்கா. இதையும் பரிபாடல் தான் சொல்லுது.
இதே மாதிரி தான் கலித்தொகை... அகநானூறு... வையை நதியை "காதல் - இன்பம்" ங்ற பின்னணியில முன்னிறுத்துது. கூட்டி கழிச்சு கணக்கு பாத்தா அது தானக்கா வாழ்க்கை!
சிந்து:
அகநானூறு என்னா சொல்லுது வைகை? என்னா சரசு! "சவுண்ட"யே காணோம். கேக்கிறியா... நீ கேக்குறது தான் முக்கியம்.
ஒன்னோட சொந்தக்காரய்ங்க கிட்ட குறிப்பா ஐ.ஐ.டி யில வேலை பார்க்கிற " பண்பாட்டு விஞ்ஞானிகள்" கிட்ட எடுத்துச் சொல்லனும். இப்ப தமிழ்நாட்டில இருக்கிறவிங்க கேனப் பயலுக இல்லைன்னு...
சரசு:
"சூப்பரா" கேக்றேன்ங்கா... எல்லாம் முன்ன பின்ன கேள்விப்படாத புது "மேட்டர்" க்கா!
வைகை:
"மை எழில் உண்கண் மடந்தையொடு வையை/ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து" ன்னு - ( அகம்- 256) ; "பெரு நீர் வையை அவளொடு ஆடி - ன்னு ( அகம் 296) அகநானூறு " அலப்பறை" யா பதிவு பண்ணுதுக்கா. "அகம்" னாலே " லவ்" வு தானக்கா...
சிந்து:
அது சரி வைகை... மதுரைக்காரய்ங்க ஆத்தங்கரையே கதி ன்னு கெடந்து "தண்ணியில மெதந்து" "லவ்" பண்ணி இரூக்காய்ங்க.... இதுல என்னா "பண்பாட்டு அரசியல்" இருக்கு?
வைகை:.
சரியான கேள்வி அக்கா. பரிபாடல் என்னா சொல்லுது ன்னு கேளுங்க.
வையை ஆற்றங்கரைக்கு வேதங்களை கற்று உணர்ந்த அந்தணர்கள் வந்து ஒரு "சர்வே" பண்றாய்ங்க... அப்ப அவிய்ங்களோட ரியாக்ஷன பரிபாடல் பதிவு பண்ணுது. அது தான் பண்பாட்டு அரசியல்.
சிந்து:
இன்டரஸ்டிங்கா இருக்கே. என்னா ரியாக்ஷன் குடுத்தாங்க..
வைகை:
பரிபாடல் சொல்லுது:
மெலியர் அல்லாத வலியவர் புதுப்புனலுக்குள் பாய்ந்து விளையாட, மணப்பொருள்களாகிய சாறும், சந்தனம், குங்குமம் ஆகியவற்றின் குழம்பும், வாசனை நெய்யும், பூக்களும் மணக்கும்படியாக நிகழ்கின்றது வையையாறு வருகின்ற முறை; பல்வேறு மணம் கமழ ஓடுகின்ற ஆற்றினைக் கண்டு மனமழிந்து வேறுபட்டுப்போன நீர் என்று எண்ணி, அந்த மணப்பொருள்களைக் கழுவிய கலங்கல்நீரைக் கண்டு வேதங்களை விரும்பும் அந்தணர் கலங்கினர் மருண்டுபோய்... நின்றார்கள்.
வையை ஆத்து தண்ணி முழுக்க விடலைப் பயலுகளும் விடலை பொம்பள புள்ளைகளும் சந்தனம், நறுமண மூலிகை எண்ணெய பூசிய ஒடம்போடு "மாணாங் கண்ணியா" நீந்திக் குளிச்சதுல ஆத்து தண்ணி முழுக்க வழுவழுன்னு கொழ கொழன்னு பிசுபிசுப்பா இருக்கு! இத அந்தணர்கள் பார்த்து "அரட்டி" யாகிறாய்ங்க..
சரசு:
அப்புறம் என்னா ஆச்சுக்கா....
வைகை:
அப்பறம் என்னா சப்பரம் தான்.
தண்ணியாடா இது... இதுல மனுஷன் "ஸ்நானம்" பண்ணுவானாடா அப்பிடீன்னு குளிக்க மறுக்கிறாய்ங்க...
ஆம்பள பொம்பள எச்சிலா இருக்குற இந்த வையை ஆத்து தண்ணியில கை நனைக்கவே கூடாதுன்னு பயந்துகிட்டு வாய் கூட கொப்புளிக்காம போறாய்ங்க ஐயர்மார்!
இந்த பரிபாடல் வரிகளை வாசிச்சு காமிக்கிறேன் கேளுங்க....
"மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று
அந்தணர் தோயலர் ஆறு
வையை தேம் மேவ வழுவழுப்பு உற்று என ஐயர் வாய்பூசுறார் ஆறு"
சரசு:
என்னாக்கா இவ்ளோ நடந்திருக்கு.
வைகை:
சங்க இலக்கியம் தமிழ் வையை பக்கக்தில இருக்கிற திருப்பரங்குன்றம் ங்ற சூழலை வச்சே "காதல்" என்ற கம்ப சுழற்றுது.
வேதம் படிச்ச அறிஞர்களைப் பார்த்து பரிபாடல் பேசுது!
நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது:
காதற் காமம், காமத்துச் சிறந்தது;
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி......
.....தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார், இக் குன்று பயன்"
சரசு:
இதுக்கு அர்த்தம் என்னாக்கா...
வைகை:
சொல்றேன்...
"வேதங்களை விரித்துரைத்து அவற்றின் நல்ல புகழை உலகுக்கு விளக்கும் மெய்யான மொழியினையுடைய புலவர்களே! கேளுங்கள் சிறந்ததொன்றை; காதலோடு கூடிப் பெறுகின்ற காம இன்பமே, காம இன்பங்களுள் சிறந்தது, அது விருப்பமுடையவர் இருவர் மனமொத்துப் பெறுகின்ற உடற்சேர்க்கையே! ஊடலினால் சிறப்புறுவது கற்புக்காமம்
இத்தகைய தள்ளிவிடமுடியாத அகப்பொருளின் இயல்புகளையுடைய தண்ணிய தமிழ்ப் பண்பாட்டை ஆராயாதவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். இந்தத் திருப்பரங்குன்றத்தில் எந்தப் பயனையும் அடைய மாட்டார்கள்."
சிந்து:
வேதம் படிச்சவிங்கள கூப்பிட்டு காதலை பத்தி ஏன் பேசனும் வைகை!
வைகை:
இது ஒரு எதிர்வினை ன்னு நினைக்கிறேன் ங்க்கா..
காதல், காதல் திருமணம், தனது இணையை தானே தேர்ந்தெடுக்கும் சம பாலுரிமைங்றது தமிழ் வாழ்வியலின் திணை சார்ந்த வாழ்வியலின் அடிப்படை! ஆனா வடமொழி சார்ந்த பண்பாடு
எட்டு வகையான திருமண முறைகள் பற்றி பேசுது! விரும்பாத பொம்பள புள்ளய வலுக்கட்டாயமா தூக்கிட்டு போற திருமணம் கூட அதுல அடங்கும்....
சிந்து:
வையை ஆறு பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்!
வைகை:
ஆமாக்கா...
அப்படியாப்பட்ட வையை ஆற்றோட பெயரை "வைகை"ன்னு எழுதுனது கூட பரவாயில்லை. அந்த வைகை ங்ற "திரிபான" பெயருக்கு பின்னாடி ஒரு விளக்கம் குடுத்தாயங்க பாருங்க அக்கா! அது தான் வேதனையா இருக்கு...
போகுதுன்னு அதோட விடாம வைகை நதிக்கு சிவகங்கை , சிவஞான தீர்த்தம், வேகவதி, கிருதுமால் நதி அப்படி இப்பிடி ன்னு கூடுதலா நாலு பேரு வச்சாய்ங்க பாருங்க அந்த கொடுமைய எங்க போய்ச் சொல்றது...
சரசு:
என்னாக்கா திடீர் திருப்பமா இருக்கு!
சிந்து:
வைகை, சரசு இன்னிக்கு இவ்வளவு தான். வைகை நதிக்கு என்னா என்னா விளக்கம் குடுத்தாய்ங்கன்னு இன்னோரு நாள் பேசலாம். இப்ப "வறுத்த கடலை" வாங்கிச் சாப்பிடலாம்!
வைகை, சரசு இருவரும்:
சரிக்கா....