மலாயாவிற்கு தமிழர்கள் புலம்பெயர்ந்த வரலாற்றோடு மலேசிய மண்ணில் எழுப்பப்பட்ட கோயில்களின் வரலாறும் இரண்டறக் கலந்து இருக்கின்றது.
மலேசியாவின் பெருநகரங்கள் சிறு நகரங்கள் தோட்டங்கள் என எல்லா இடங்களிலும் மாரியம்மன் கோயில்களைக் காணலாம்.
எளிய மக்களின் தெய்வம் மாரியம்மன். பஞ்சத்தில் அடிபட்டு உயிர் வாழ்வதற்காகத் தங்கள் சுற்றத்தாரையும் உறவுகளை விட்டு மிகத் தூரமான இடங்களுக்குப் பயணம் செய்த தமிழ் மக்கள் தங்கள் பயணத்தில் அவர்களோடு கொண்டு சென்றது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கை மாரியம்மன் என்ற தாய் தங்களைக் காப்பாற்றுவாள் என்ற ஓர் அடிப்படையான நம்பிக்கை.
மாரியம்மன் ஆலயங்களை எளிய தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த எல்லா நாடுகளிலும் தீவுகளிலும் நாம் இப்போதும் காணலாம்.
அப்படி ஒரு கோயில் தான் இந்த ராஜமாரியம்மன். தொடக்கத்தில் எளிய மாரியாத்தாவாக இருந்த அம்மன் படிப்படியாக இன்று அழகிய கோபுரங்களுடன் கூடிய ராஜமாரியம்மனாக வளர்ச்சி கண்டிருக்கின்றாள். ஜோகூர் மாநிலத்தில் தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாடு உயர உயர மாரியம்மன் கோயிலும் மேம்படுத்தப்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிற கோயில்களை விட இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால் இவர்கள் ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். தமிழர்களின் மரபு மையமாக இது அமைகிறது. கடந்த நூற்றாண்டில் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வந்த கப்பல்கள் பற்றிய தகவல்களும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு வரலாற்று ஆர்வலர்கள் இத்தகைய காணொளிகளைப் பார்க்கும்போது 200, 300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து பிழைப்பதற்காகச் சென்ற மக்கள் இன்று தங்கள் வாழ்க்கையில் முன்னேறிப் பல நாடுகளில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் காணொளிக் காட்சியாக அறிந்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திற்கு நான் சென்றபோது செய்யப்பட்ட பதிவு.
-- சுபா