குறள் கூறும் உண்மையான நண்பனின் பத்து செயல்பாடுகள்
— சொ.வினைதீர்த்தான்
நல்ல நண்பனின் பத்துச் செயல்பாடுகள்:
1. பகைவனின் செயல் நம்மை அண்டாதவாறு அரிய காப்பாக விளங்குபவன் நண்பன். இன்று வறுமை பகை; அறியாமை பகை; நோய் பகை! இவை நண்பனைச் சேராதவாறும் உற்ற இடத்துப் போக்குகிற மருந்தாகவும் விளங்குவான்; காப்பான்! ( குறள் 781)
2. நண்பனிடம் அறமற்ற அழிவு தருகிற செயல் கண்டபோது முற்பட்டுச் சென்று கண்டித்துத் திருத்துவான் (குறள் 784)
3. முகமும் அகமும் மலர உணர்வால் ஒன்றுவான். (785, 786)
4. நல்ல நண்பன் தன் தோழ்மையாளன் கெட்ட வழியில் சென்று நடப்பதைத் தடுப்பான் (குறள் 787)
5. நல்ல வழியில் நடக்க வழி காட்டுவான் (அதே 787)
6. கெடுதல் வந்துற்றபோது உடனிருந்து தான் பாதிக்கப்பட்டாலும் தானும் அனுபவித்து அல்லல் அகற்றுவான் (அதே 787)
7. நண்பனின் துயரைத் தீர்க்க மிக விரைந்து செயல்படுவான் ஆடை நெகிழ்கிறபோது முந்திச் சென்று மானம் காக்கிற கையின் செயல் போல! (788)
8. தோழன் தன் செயலில் அறத்தால், மனத்தால் தளர்ந்தபோது தாங்கிப் பிடிக்கிற, துயர் தீர்க்கிற ஊன்றுகோலாய் நல்ல நண்பன் விளங்குவான். (789)
9. நட்பால் தான் புகழப்பட வேண்டும், பெருமையடைய வேண்டுமென்ற சிறுமைக் குணமின்றி நண்பன் சிறப்படையச் செயல்படுகிறவன் உண்மை நண்பன்! (790)
10. நல்ல நண்பனின் செயல்கள் படிக்கப் படிக்கப் பயன் அளிக்கிற நூல் போல நாளும் நாளும் வளர்கிற மதி போல தொடர்ந்து வளர்ந்து முழுமையாக விளங்கும்! (குறள் 782, குறள் 783)