கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி
— தேமொழி கார்ல் சாகன் (1934-1996), ஒரு புகழ்பெற்ற அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர், அண்டவியல் ஆய்வாளர். சிக்கலான அறிவியல் கருத்துக்களை எளிய முறையில் தெளிவிக்கக்கூடிய வகையில் உரையாற்றக் கூடிய வல்லமை பெற்றிருந்த அறிவியல் உரையாளராக அறியப்பட்டதால் மக்களிடம் அவர் உரைகளுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.
கார்ல் சாகனின் ஆலோசனையின் பேரில், 1990 பிப்ரவரி 14 அன்று விண்கலம் வாயேஜர் -1 புவியின் சுற்றுப்புறத்தை விட்டு சூரிய மண்டலத்தின் விளிம்புகளுக்குப் புறப்படும்போது, புவியை இறுதியாக ஒருமுறை சுற்றிவந்து படம் எடுத்தது. புவியின் இந்த வெளிர் நீலப் புள்ளி உருவப்படத்தைப் படம்பிடித்தபோது வாயேஜர்-1 விண்கலம் சுமார் 4 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தது, சிதறிய ஒளிக்கதிர்களின் இடையே சூரியனுக்கு மிக அருகில் படம் எடுத்ததன் விளைவாக, இப்படத்தில் பூமி, ஒரு சிறிய ஒளிப் புள்ளியாக, 0.12 பிக்சல் அளவுள்ள வெளிர் நீலப் புள்ளியாகத் தெரிகிறது.


கார்ல் சாகன் எழுதிய "பேல் ப்ளூ டாட்: எ விஷன் ஆஃப் தெ ஹியூமன் ஃப்யூச்சர் இன் ஸ்பேஸ்" (
Pale Blue Dot: A Vision of the Human Future in Space by Carl Sagan) என்ற நூல் அதிகம் விற்பனையான நூல்களுள் ஒன்று. இது விண்வெளி ஆய்வின் தேவையை வலியுறுத்தியது. கார்ல் சாகனின் 'வெளிர் நீலப் புள்ளி: விண்ணை நோக்கிய பார்வையால் உணரும் மனிதர்களின் எதிர்காலம்' என்ற இந்த நூலின் கருத்து மிகவும் பரவலாக வாசிக்கப்படு பாராட்டப்படும் ஒரு கட்டுரை.
அதன் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. நாம் விண்வெளிக்குச் சென்று அங்கிருந்து புவியைப் பார்த்தால், அது ஒரு சிறிய புள்ளியாகத் தான் தெரியும்…
“மீண்டும் அந்தப் புள்ளியைப் பாருங்கள். அதோ அங்கே. அதுவே நம் வீடு. அதுவே நாம் இருக்குமிடம். அங்குதான் நீங்கள் விரும்பும் அனைவரும், நீங்கள் அறிந்த அனைவரும், நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்ட அனைவரும், இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்கையை அங்கேயே வாழ்ந்தார்கள்.
நமக்கு மகிழ்ச்சியும் துயரமும் தரும் அனைத்தும், நம்பிக்கை தருவதற்குத் தோன்றிய ஆயிரக்கணக்கான மதங்கள், கொள்கைகள், பொருளாதாரக் கோட்பாடுகள், வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்ந்த முன்னோர்கள் அனைவரும், ஒவ்வொரு வீரரும் கோழையும், ஒவ்வொரு பண்பாட்டை ஆக்கியவரும் அழித்தவரும், ஒவ்வொரு அரசரும் உழவரும், காதலிக்கும் இளவயது இணையர்கள் அனைவரும், ஒவ்வொரு தாயும் தந்தையும், வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொரு குழந்தையும், கண்டுபிடிப்பாளர்களும் ஆய்வாளர்களும், ஒவ்வொரு வாழ்வியல் நெறி வழிகாட்டியும், ஒவ்வொரு ஊழல் அரசியல்வாதியும், ஒவ்வொரு ‘சூப்பர் ஸ்டார்’ பிரபலங்களும், ஒவ்வொரு ‘உயர்வாக மதிக்கப்பட்டத் தலைவர்களும்’, ஒவ்வொரு புனிதரும் பாவியும் என நம் மனிதயின வரலாற்றில் வாழ்ந்த அனைவரும் அந்தச் சூரிய ஒளிக்கதிரில் மிதக்கும் தூசித் துகள் போலத் தெரியும் அந்தச் சிறு புள்ளியில்தான் வாழ்ந்தார்கள்.
பரந்த பிரபஞ்ச அரங்கில் பூமி என்பது மிகச் சிறிய மேடையே. இந்த ஒரு சிறு புள்ளியின் ஒரு மூலையில் வாழ்பவர்கள், தாங்கள் சென்ற இடத்தில் தம்மைப் போலவே இருக்கும் உலகின் மற்றொரு மூலையில் வாழ்பவர்களுக்கு இழைத்த முடிவில்லா கொடூரங்களை எண்ணிப் பாருங்கள். அவர்கள் ஒருவரையொருவர் அடிக்கடி எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்கிறார்கள், எவ்வளவு ஆவலுடன் ஒருவரையொருவர் கொல்லத் தயாராக இருக்கிறார்கள், எவ்வளவு தீவிரமான வெறுப்பை அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நினையுங்கள். பெருமையும் வெற்றியும் அடைய வேண்டும் என்று, இந்தப் புள்ளியின் ஒரு சிறு பகுதியினைத் தற்காலிகமாக ஆதிக்கம் செய்யும் ஆசையில், எத்தனை தளபதிகளும் பேரரசர்களும் இரத்த ஆறுகளை மண்ணில் ஓட்டவிட்டார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
நம்முடைய தோரணைகள், கற்பனையான நமது முக்கியத்துவம் என்ற உணர்வு, பிரபஞ்சத்தில் நமக்கு ஒரு தனிச் சிறப்பிடம் இருக்கிறது என்று கருதும் அறியாமை ஆகியவற்றை எல்லாம் இந்த வெளிர்நீலப் புள்ளி சவாலுக்கு உள்ளாக்குகிறது. இந்தப் பரந்த, அனைத்தையும் சூழ்ந்த பெரிய அண்டவெளி இருளில், நம் பூமி ஒரு தனிமையான சிறு துகள் மட்டுமே. இந்தப் பரந்த அண்ட வெளியில் நம்மிடமிருந்து நம்மையே காப்பாற்ற வேறு எங்கிருந்தாவது உதவி வரும் என்பதற்கு எந்த ஓர் அறிகுறியும் இல்லை.
இதுவரை உயிர் வாழத் தகுதியான உலகமாக அறியப்பட்ட ஒரே இடம் இந்தப் பூமி தான். வேறு எங்கும், நாம் எதிர்நோக்கும் குறைந்த அளவு எதிர்காலத்தில், மனித இடம் குடியேற வேறிடம் ஏதும் கிடையாது. ஆமாம். வேறு கோள்களுக்குச் சென்று வரமுடியும், —ஆனால் குடியேற இன்னமும் வாய்ப்பில்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இப்பொழுது வாழ நமக்கு இருக்கும் ஒரே இடம் இந்தப் பூமிதான்.
வானியல் உண்மைகள் மனிதரிடம் பணிவு மனப்பான்மையை, பண்பை உருவாக்கும் அனுபவம் என்று சொல்லப்படுகிறது. நாம் காணும் நமது சிறிய உலகின் இந்தத் தொலைதூர உருவத்தை விட மனித அகந்தையை அறியாமையை உணர்த்தும் சிறந்த சான்று வேறொன்றும் இல்லை.
எனக்கு இது, நாம் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பையும், இதுவரை நாம் அறிந்த ஒரே இல்லமான இந்த மங்கலான வெளிர் நீலப் புள்ளியைப் பாதுகாத்து, மதித்து, நேசிக்க வேண்டிய கடமையையும் வலியுறுத்துகிறது.”
— கார்ல் சேகன், பேல் ப்ளூ டாட்: எ விஷன் ஆஃப் தெ ஹியூமன் ஃப்யூச்சர் இன் ஸ்பேஸ்உதவிய தளங்கள் :
காணொளி:
https://youtu.be/tgQ1PtkZvGUதகவல்:
https://www.planetary.org/worlds/pale-blue-dot;
Carl Sagan (1934-1996),
https://science.nasa.gov/people/carl-sagan/நன்றி:
தமிழணங்கு-பிப்ரவரி 2026;
பக்கம்: 19-21
கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி
- தேமொழி