தமிழில் வழங்கப்படும் பிறமொழிச்சொற்களை எழுதும் முறை

14 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 27, 2026, 2:27:21 PM (23 hours ago) Jun 27
to மின்தமிழ்
பார்க்க: https://www.facebook.com/photo/?fbid=27666778336267293&set=a.278177815554048

- கவிஞர் மகுடேசுவரன்

write Tamil.jpg
பிறமொழிச் சொல்லொன்று தமிழ்ச்சொல்போன்றே தமிழில் வழங்குமானால் அதற்குச் ‘தற்சமம்’ என்று பெயர். தானே தமிழ்ச்சொல்லுக்குச் சமம். கமலம், கீதம், கருணை, ஆரோக்கியம் போன்ற சொற்களைப் பாருங்கள். இவற்றைப் பிறமொழிச் சொற்களென ஒருவர் இனங்கண்டு சொன்னால்தான் தெரியும். இல்லையேல் தமிழ்ச்சொல் என்றே கருதியிருப்போம். இத்தகைய பிறமொழிச் சொற்கள்தாம் தற்சமச் சொற்கள்.

தமிழுக்குள் இல்லாத பிறமொழி ஒலிப்பைக்கொண்ட பிறமொழிச் சொற்கள் தமிழுக்கேற்ற வடிவத்தைப் பெற்ற பிறகே தமிழில் வழங்கலாகும். அவற்றைத் தற்பவச்சொற்கள் என்போம். நஷ்டம், ஜாமம், விஷம், வேஷம், பாஷை, கிருஷ்ணன் போன்ற சொற்களைப் பாருங்கள். இவற்றிலுள்ள பிறமொழி ஒலிப்பு தமிழில் இல்லை. அவற்றுக்கேற்ற வகையில் தமிழில் மாற்றி ஒலிப்போம். அவ்வாறே எழுதுவோம். நட்டம், சாமம், விடம், வேடம், பாடை, கிருட்டிணன் என்று எழுதுவோம். இவ்வாறு மாற்றம் பெறுவதுதான் தற்பவம்.

தமிழ் எழுத்துகள் ஒலிப்புகள் மட்டுமின்றித் தமிழ்ச்சொல்லுக்கேயுரிய இலக்கண அமைப்பின்படி இல்லாத பிறமொழிச் சொற்களும் தமிழுக்கேற்றவாறு மாற்றம் பெற்ற பிறகே வழங்கப்படும்.

தமிழின் தனிச்சிறந்த இயல்புகளில் ஒன்று - ஒரு சொல்லின் முதலாம் எழுத்து தனிக்குறிலாக இருக்கையில் இரண்டாம் எழுத்தாக ர் என்ற மெய்யெழுத்து வாராது. அப்படி வந்தால் அவற்றைப் பிறமொழிச்சொற்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம்.

கீழ்க்கண்ட சொற்களைப் பாருங்கள் :

சர்க்கரை, அர்ச்சனை, கர்ப்பம், தர்மம், வர்மன், சர்ப்பம், மர்மம்.

மேற்கண்ட சொற்களில் முதலெழுத்து குறிலாக இருக்கையில் அடுத்து வரும் இரண்டாமெழுத்து ர் என்ற மெய்யாக இருக்கிறது. இத்தகைய சொல்லமைப்பில் இருந்தாலே அவை பிறமொழிச் சொற்களாம். தமிழில் இவ்வாறு ஒரு சொல் அமையாது.

இவற்றைத் தற்பவமாக்கித்தான் தமிழில் வழங்கவேண்டும். அதனால் என்ன செய்கிறோம் ?
ர் என்ற மெய்யெழுத்தினை ரு என்ற உயிர்மெய்யாக்கிவிடுகிறோம்.

சருக்கரை, அருச்சனை, கருப்பம், தருமம், வருமன், சருப்பம், மருமம்.

தர்மம் என்றால் வடசொல். தருமம் என்பது அதன் தற்பவத் தமிழ்வடிவம். தர்மபுரி என்று எழுதாமல் தருமபுரி என்று எழுதுவதன் அடிப்படை இதுதான். தருமபுரம் மடம்.

தர்மன் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள படத்தலைப்பு தருமன் என்றிருந்தால் தமிழ்த்தன்மை பெற்றிருக்கும். தருமன் என்னும்போது தருபவன் என்கின்ற தமிழ்ப்பொருளையே, தமிழ்வழியாகவே கொள்ளமுடியும். தரும் செய்கைதானே தருமம் !

அண்மைக்காலமாக இத்தகைய அடிப்படைகள் எவையும் தமிழில் வழங்கப்படும் பிறமொழிச்சொற்களில் பின்பற்றப்படா நிலையைக் காண்கிறோம். சொற்களை மிகச்சரியாக ஆளவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம்.

- கவிஞர் மகுடேசுவரன்
Reply all
Reply to author
Forward
0 new messages