புத்தகம் எனும் போர்வாள்
— முனைவர். ம.இருதயராஜ்நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது (1992) அறிவொளி இயக்கம் தமிழ்நாடு முழுதும் பேரெழுச்சியோடு நடத்தப்பட்டது. எழுத்தறிவிக்கும் இயக்கம் அது. கிராமம் முழுதும் எழுத்தறிவில்லாமல் இருப்போரைச் சந்தித்து கையெழுத்துப் போடும் அளவிற்காவது அவர்களை மாற்றும் பேரணியில் மாணவர்கள் பலர் இருந்தனர், நானும் இருந்தேன். அதில் எழுப்பப்பட்ட முழக்கமான "புத்தகம் கையில் எடுத்துவிடு அதுவே உன் போர்வாள்;" இம்முழக்கம் அப்போதும் சரி இப்போதும் சரி எனக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. அம்முழக்கத்தால் அறிவு வயப்பட்டு நான் படித்த புத்தகங்கள் பல. அந்த ஈர்ப்பின் காரணமாக இத்தலைப்பை வைப்பதில் பெரு வியப்பும் உண்டு. ஒரு சிறு சொல் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
புத்தகம் தரும் புத்தாக்கம் என்றுமே தனிச்சிறப்பு. புத்தகம் என்பது தீயை விட ஆற்றல் வாய்ந்த வார்த்தைகளையும், போரினை எதிர்கொள்ளும் துணிவினையும் தரும் எழுத்துக்களைத் தாங்கி நிற்கும் ஒரு போர்வாள் அன்றி வேறென்ன சொல்ல முடியும். வாளின் கூர்மையும், சொல்லின் கூர்மையும் ஒன்றுதான். ஆதலால் புத்தகம் எனும் போர்வாள் இருமுனையும் கூர்மை கொண்டது. புத்தகமானது அதை எழுதியவரையும் தாக்கும். அதைப் படிப்பவரையும் தாக்கும். அந்தத் தாக்கம் பயனுள்ளத் தாக்கமாய் இருக்க வேண்டும் என்பதே பலரின் நோக்கம். பேருக்காக, புகழுக்காக, பணத்துக்காக எழுதுவதைத் தாண்டி, ஓர் உன்னத நோக்கத்துக்காக எழுதும் பலரால்தான், இந்த உலகம் வளமையோடு வாழ்கிறது.
"புத்தகம்" என்பது அறிவு, மெய்யறிவு, தேடல் போன்றவை மூலம் அக வலிமையையும், "வாள்" என்பது அந்த அறிவைக் காத்து நம்மை மெய்ப்பிக்கத் தேவையான புற வலிமையையும் குறிக்கிறது. இரண்டையும் சேர்த்து புத்தகம் எனும் போர்வாள் எனும் போது இருபெரும் ஆற்றல் நமக்குள்ளே ஊற்றெடுப்பதை நாம் உணரலாம்.
புத்தகங்கள் எப்போதுமே அறிவு, மெய்யறிவு மற்றும் கற்றலின் ஆற்றல் வாய்ந்த அடையாளமாக இருக்கிறது. வரலாற்றின் வழியே நாம் பயணித்தால், பேரறிவு கொண்டவர்கள் சொன்ன சொற்கள் எல்லாம் எழுத்தாக நம்மிடம் தவழுவது (பழங்காலத்தில் ஓலை, தற்போது புத்தகம்) புத்தகத்தின் வடிவில்தான். மனித உடல் நிலைத்தன்மை கொண்டதல்ல, ஆனால் அவனது அறிவும், அறிவின் வழி வந்த சிந்தனைகளும் என்றென்றும் நிலைத்தன்மை கொண்டது. எப்போதோ வாழ்ந்த பலரை நாம் மறந்துள்ளோம், ஏன் இரண்டு தலைமுறைக்கு முன் உள்ள நம் உறவினரையே மறந்து விட்டோம். ஆனால் அறிவால் உலகளந்த அனைவரும் நம் கண்முன் இன்றும் உறவாடுவது எழுத்தின் வழி வந்த புத்தகத்தால்தான். புனித நூல்கள், அறிவியல் நூல்கள், மெய்யியல் (தத்துவ) நூல்கள், மற்றும் இலக்கியப் படைப்புகள் அனைத்தும் "புத்தகம்" என்ற புதையலில் (கருவூலத்தில்) அடங்கும். பல வரலாறுகளில், பண்பாடுகளில், சமயங்களில் புத்தகம் (புனித நூல்) உண்மையின், நெறிமுறையின், அறிவின் மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் ஆதாரமாக மதிக்கப்படுகிறது.
என்றைக்கோ எழுதிவைத்த திருக்குறளும் இன்னம் பல அரிய நூல்களும், எழுதியவரின் அறிவின் வீச்சு இன்று நம்முடன் உறவாடுவது புத்தகத்தின் வழிதான். பள்ளியேறிப் படிக்காத பலரும் படிக்காத மேதையாக உயர்ந்ததும் இந்தப் புத்தகத்தால்தான். படிப்பைத் தாண்டிய வாசிப்பை நமக்கு உணர்த்தி நம்மை இருக்கும் நிலையிலிருந்து அடுத்தடுத்த நிலைக்கு உயர வைப்பதும் புத்தகம்தான். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
என் வாழ்க்கையில் புத்தகத்தின் வழி நடந்த ஒரு நிகழ்வைச் சொல்ல ஆசைப்படுகிறேன். அது ஒரு மாலை நேரம், சென்னைக் கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கிப் பயணிக்கும் தொடர் வண்டியில் எனது வேலை முடிந்ததும் பயணித்து, நான் தங்கி இருந்த தியாகராய நகரை (மாம்பலம்) அடைவது வழக்கம். அந்தப் பயணத்தை அருகில் இருப்பவரோடு உரையாடுவது அல்லது புத்தகங்களைப் படிப்பது என்று கடத்துவது என் விருப்பச்செயல். ஒருநாள், நான் பயணித்த பெட்டியில் என்னோடு ஒருவர் அருகில் அமர்ந்தார், ஏறக்குறைய 55 வயது மதிக்கத்தக்க ஒருவர், அவரது தோற்றமானது ஒரு பெரிய அலுவலகத்தில் நல்ல வேலையில் இருக்கிறார் என்பதை அவர் சொல்லாமல் எனக்குச் சொல்லியது. நானோ அவரைக் கண்டும் காணாமல் கையில் வைத்திருந்த பேரறிஞர் அண்ணாவின் வேலைக்காரி மற்றும் கல்கியின் பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகத்தை அங்கும் இங்குமாக புரட்டிக்கொண்டு இருந்தேன். அவர் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தார்.
நான் அவரோடு பேச முயன்ற அதே தருணத்தில் அவரே என்னிடம் பேசிவிட்டார். இரு புத்தகத்தைப் பற்றி மிகச் சிறப்பாக என்னிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார். இரு புத்தகத்திலும் உள்ள எங்கள் இருவருக்கும் பிடித்த கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசப்பேச எங்களிடையே இருந்த இறுக்கம் காணாமல் போய், இயல்பான நிலைக்கு வந்துவிட்டோம். ஏறக்குறை நெடுநாள் பழகிய நட்பு போலப் பேச ஆரம்பித்து விட்டோம்.
நாங்கள் இருவரும் இறங்கும் இடம் வருவதற்கு முன் விடைபெறலாம் என நினைப்பதற்கு முன் அவரிடம், உங்களிடம் ஒன்று சொல்கிறேன் நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். பார்ப்பதற்குப் பகட்டாக இருக்கும் நீங்கள், அறிவு சார்ந்து பேசும் நீங்கள், ஏன் இப்படி நிலை மறந்து குடித்துள்ளீர்கள் (அவர் குடித்திருந்தார், ஆனால் தெளிவாகப் பேசினார்). நீங்கள் குடிக்காமல் என் அருகில் அமர்ந்திருந்தால் இன்னும் நிறைய பேசியிருக்கலாம் என்றேன். முடிந்தால் குடியை நிறுத்துங்கள் என்று சொன்னதும், அவரிடம் இருந்து பதிலேதும் இல்லை. தேவையில்லாமல் ஏதும் பேசிவிட்டோமோ எனும் மனக் கலக்கத்தில் இறங்கி விட்டேன். நாட்கள் கடந்தது. மாதங்கள் கடந்தது. அவரை மாலைநேரத் தொடர் வண்டியில் பார்க்கவே முடியவில்லை. இறங்கும் போது எனது அலைபேசி எண்ணை வாங்கி இருந்தார், அவரது எண்ணை வாங்க மறந்து விட்டேன். ஒரு கட்டத்தில் நானும் அவரைப் பற்றி நினைப்பதை மறந்தே விட்டேன்.
ஒருநாள் அதே மாலை நேரம், ஓர் அலைபேசியிலிருந்து அழைப்பு வந்தது. பேசியதோ பெண் குரல். நீங்கள் இருதயராஜா எனக் கேட்டதும், ஆம் நீங்கள் யார் எனக் கேட்டேன். இரண்டு மாதத்துக்கு முன்னாடி தொடர் வண்டியில் வரும்போது ஒருத்தரிடம் (பழனிச்செல்வன்) பேசினீர்கள் , அவருடைய மனைவி நான் (கார்த்திகா) என்றார். இந்த வாரம் சனிக்கிழமை எங்கள் வீட்டுக்கு வர முடியுமா? எனக் கேட்டதும். சரி வருகிறேன் என்றேன். சனிக்கிழமை அவர் வீட்டுக்குச் சென்றதும், அவர் ஒரு பெரிய வங்கியில் மேலாளராகப் பணிபுரிகிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவர்களுக்குத் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது, குழந்தை இல்லை.
சரி இதெல்லாம் நம்மிடம் ஏன் சொல்கிறார்கள் என உள்ளுக்குள்ளே எண்ணிக்கொண்டு இருந்தேன். சற்று நேரத்தில், தம்பி உங்களுக்கு மிக நன்றி. என் வீட்டுக்காரர் இப்பொழுது குடிக்கிறதில்ல. நீங்க அவரிடம் சொன்ன மறுநாளில் இருந்த குடியை நிறுத்தி விட்டார் என்றதும், அவரது முகத்தைப் பார்த்தேன். அழாத குறையாக என்னையே பார்த்தார். எங்கள் இருவரையும் இணைத்தது புத்தகம்தான். இதுபோல பல புத்தக நண்பர்கள் கதை உண்டு. நல்ல புத்தகம் நல்ல நண்பர்களை நமக்கு அடையாளம் காட்டும். நான் இப்போது எழுதி வரும் தொடர் கூட பல நல்ல மனிதர்களிடம் என்னைக் கொண்டு சேர்த்துள்ளது. பலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதுபோல நீங்களும் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள், அது யாருக்கோ எங்கோ பயன்படும்.
"புத்தகம்" மற்றும் "வாள்" ஆகியவற்றின் சேர்க்கையான இந்தச் சொற்றொடர், அறிவும், அதிகாரமும் இணைவதைக் குறிக்கிறது. இங்கு "போர்வாள்" என்பது, அறிவின் செயல்முறைப் பாதுகாப்பைக் குறிக்கிறது. அறிவையும், உண்மையையும் காக்க, அறிவுரமும் வேண்டும். நெஞ்சுரமும் வேண்டும். வரலாற்றில், பல தருணங்களில் அறிவு பாதுகாப்புடன் காக்கப்படவேண்டியதாக இருந்தது இப்போதும் இருக்கிறது. மேலும், உண்மையைத் தேடுவதில் மோதல் ஏற்படுகிறது. இச்சூழலில் அறிவோடு கலந்த நெஞ்சுரமும் அவசியம். ஆதலால் புத்தகம் எனும் போர்வாள் பல போர்களை வெல்லட்டும்.
புத்தகம் நம் அகம் திறக்கும், புத்தகம் தரும் புத்தாக்கத்தால் நமக்கு நல்ல சுகம் கிடைக்கும். புத்தகம் கையில் எடுப்போம், புது யுகம் படைப்போம்.
முனைவர். ம.இருதயராஜ்,
மனிதவளத்துறை தலைமை மேலாளர்.
தொடர்புக்கு:
hr.ir...@gmail.com