மதுரையின் கடை வீதி
கோடு போழ் கடைநரும், திருமணி குயினரும்,
சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும்,
பொன் உரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்,
செம்பு நிறை கொண்மரும், வம்பு நிறை முடிநரும்,
பூவும் புகையும் ஆயும் மாக்களும்,
எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி,
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி! (மதுரை. 511-518)
மாங்குடி மருதனார்
பொருள்:
சங்கினை அறுத்து வளையல் செய்பவர்களும், அழகிய மணிகளில் துளை இடுபவர்களும்,
பொன்னினால் அணிகலன்களைச் செய்பவர்களும்,
பொன்னைக் கல்லில் தேய்த்து அதன் தூய்மைத்தன்மை காண்பவர்களும், துணி விற்பவர்களும்,
கச்சுகளை விற்பவர்களும், செம்பினை எடையிட்டு வாங்குபவர்களும்,
மலர்களையும் நறுமணப் புகைப்பொருள்களையும் நன்றாக ஆராய்ந்து வாங்குபவர்களும்,
நுண்மாண் நுழைபுலத்துடன் ஓவியம் தீட்டும் ஓவியக் கலைஞர்களும்
பிற கலைஞர்களும் வணிகர்களும் கூடிநிற்கும் இடம் மதுரையின் கடைவீதி.
Those who make fine bangles from conch shells,
The goldsmiths that make bright jewels from gold,
Those who trade in clothes, those who buy copper by the weight,
Those who stitch fine garments and those who could paint pictures,
All these craftsmen and traders
Are found in the market streets of Madurai.