நான் கணிதம் பயின்றவன் - பயிற்றுவித்தவன். தமிழ் மீது ஆர்வம் உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, என் கல்லூரித் தமிழ்த்துறை நண்பர்களைத் தவிர வேறு தமிழறிஞர் தொடர்பு எனக்கில்லை.
என்னுடைய பத்துப்பாட்டு நூல்களின் வழியாக, மதுரை, தமிழண்ணல் அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது. என்னுடைய தொடரடைவுகளின் வழியாக தமிழறிஞர்கள் ஜெயதேவன், இராம.கி, பாலகிருஷ்ணன் அவர்களின் நட்பும் கிடைத்தன. மற்றபடி, என் தமிழ்த் தொடர்புகளின் வட்டம் மிகச் சிறியது.
இந்நிலையில், ஒருநாள் எனக்குத் தொலைபேசியில் பெயரில்லா ஓர் அழைப்பு வந்தது. பெரும்பாலும், அது விளம்பரமாகவோ, தவறான அழைப்பாகவோ இருக்கும். எனவே, ஆர்வமின்றி “ஹலோ” என்றேன். எதிர்முனையிலிருந்து “ஐயா, நான் ஞானசுந்தரம் பேசுகிறேன்” என்றது குரல். முதலில் ஒன்றும் புரியவில்லை. 1962-’64 – இல் என்னுடன் M.Sc கணிதம் பயின்ற நண்பன் ஞானசுந்தரம் நினைவுக்கு வந்தார். அவர் என்னை “ஐயா” என்றும் கூப்பிடமாட்டார். இறைவன் அருள். சட்டென்று எனக்கு ஒரு பெயர் நினைவுக்கு வந்தது. ‘தெ.ஞானசுந்தரம்’. கம்பன்கழக மேடைகளில் அவர் பேச்சுக்களைக் கேட்டுள்ளேன். எல்லாம் ஒரு சில நொடிகளுக்குள்.
”ஐயா, நீங்க தெ.ஞானசுந்தரம் ஐயாவா?” என்றேன், தயக்கத்துடன்.
“ஆமாம், ஐயா” என்றார் அவர்.
“ஐயா, உங்களப் பத்தி நெறயா கேள்விப்பட்டிருக்கேன். இப்போ நீங்களே கூப்பிட்டது ரொம்ப மகிழ்ச்சி ஐயா” என்றேன்.
ஒரு பெரிய தமிழ்க் கடலுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு என் நெஞ்சை அடைத்தது.
“ஐயா, என்ன வேணும்” என்றேன் பணிவாக.
அவர் அடுத்த சில நிமிடங்களுக்கு என் தொடரடைவுகளை வெகுவாகப் பாராட்டினார். மிக அதிகமாகத் தான் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். தமிழுக்கு நான் செய்திருக்கும் மிகப் பெரிய தொண்டு என்று என்னைக் கௌரவித்தார்.
முடிவில், “ஐயா, தங்களைப் போன்ற மிகப் பெரிய தமிழறிஞர்களின் பாராட்டைப் பெறுவது எனக்குக் கிடைத்த பெரும் பேறு” என்று நிறைந்த நெஞ்சுடன் நன்றிகூறினேன்.
என்னுடைய தமிழ்ச்சுற்று மிகப் பெரியதாக ஆகிவிட்டதாக உணர்ந்தேன்.
என்னுடைய கைபேசியில் அவர் பெயரைப் பெருமையுடன் பதிந்துகொண்டேன்.
நேற்று மாலை கிடைத்த அந்த துயரச் செய்தி என் வட்டத்தை மீண்டும் சுருக்கிவிட்டது.
என் கைபேசியில் அந்தப் பெயருக்கு இனி வேலையில்லை.
கண்ணீர் மல்க, அவருக்குக் கைகூப்பி அஞ்சலி செலுத்துவதைத் தவிர வேறு என்ன செய்வது?
ப.பாண்டியராஜா