மலையகத் தமிழரின் ஆன்மா கோ.நடேசய்யர்

17 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 2, 2022, 5:45:12 PM12/2/22
to மின்தமிழ்
மலையகத் தமிழரின் ஆன்மா கோ.நடேசய்யர்

19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில்  நிகழ்ந்த மிகப்பெரிய வணிகம், தொழிலாளர் ஏற்றுமதி! சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ்பேரரசு, தன்
காலனி நாடுகள் மற்றும் தீவுகளுக்குத் தமிழர்களைக் கூலிகளாக அனுப்பிக் கொண்டிருந்தது. அவ்வாறு தமிழர்கள்  அதிகளவில் சென்றிறங்கிய நாடுகளுள்  இலங்கையும் ஒன்று.
கொடிய விலங்குகள் உலவிய மலையகக் காடுகளில் இறக்கிவிடப்பட்ட அடிமைத்தமிழர்கள்  தங்களின் உடல், ஆவி ஆகிய இரண்டையும் தேயிலைக்கு உரமாக்கி, இலங்கையைப் பொன்விளையும் பூமியாக மாற்றினர்.

nadesaiyar.jpg
ஆனால் மண்ணைப் பொன்னாக்கிய தமிழர்களின் வாழ்க்கையோ அம் மலையகப் பள்ளத்தாக்கின் இருளைப்போல சூன்யத்தைப் பூசிக்
கொண்டிருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை தொடர்ந்த அவ்விருளைக் கிழித்து மலையகத் தமிழர்களின் வாழ்க்கையில் வீசிய ஒளிக்கீற்று, அடிமை இந்தியாவின் புத்திரர்களைத் தன் கவிதையால் நிமிர வைத்த பாரதியாரைப் போன்று, தன் எழுத்தாலும், பேச்சாலும் இலங்கையின் மலையகத் தமிழர்களின் அடிமைத்தளைகளைப் பிளந்த மலையக பாரதி, கோதண்டராம நடேசய்யர் .

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணில் 1887 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ந் திகதி பிறந்தார். தஞ்சை மண்ணிலேயே வளர்ந்த
நடேசய்யர், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஆற்றல் மிக்க புலமையுடையவர் . 1910 ஆம் ஆண்டிலேயே வங்கி நிர்வாகம், ஆயில்
எஞ்ஜின்கள், இன்சூரன்ஸ் ஆகிய துறைகளில் தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டவர் . ஆங்கிலேயர்களுக்கு எதிராக வர் த்தகத்தில் தமிழர்களும்
தடம் பதிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், 1914இல் வணிகர்களுக்காக ‘வர் த்தகமித்திரன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, நடத்தினார்.

தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கங்களை உருவாக்கினார். அச்சங்கத்தின் கிளை ஒன்றைத்
தோற்றுவிக்க இலங்கைத் தலைநகர்  கொழும்புக்குச் சென்றவர் , அங்கே மலைநாட்டில் இந்தியத் தமிழர்கள் அடிமைகளாகத் தேயிலைச் செடிகளோடு சேர்ந்து நடப்பட்டிருப்பதைக் கண்டு மனம் கொதித்து, இலங்கையிலேயே நிரந்தரமாகத் தங்கினார்.

1920 ஆம் ஆண்டு தொடங்கி 1947 ஆம் ஆண்டு மறையும் வரை நடேசய்யரின் ஆன்மா, மலையகத் தமிழர்களுக்காகவே கலங்கரை விளக்கமாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. யாருமே நுழைய முடியாத ‘முள்வேலியிட்ட மலையகத் தோட்டங்களில்’ ஒரு புடவை வியாபாரியாக வேடமிட்டுச் சென்று, தோட்டப்புறத் தமிழர்களைச் சந்தித்த தீரம் நடேசய்யருக்கு உண்டு.

மலையகத் தமிழர்களின் மோசமான வாழ்க்கைச் சூழலுக்குக் காரணம், கல்வியறிவின்மையும், விழிப்புணர் வின்மையுமே என்பதைக் கண்கூடாக நடேசய்யர்  கண்டார்.

தோட்டப்புறத் துரைமார்களிடமும், கங்காணிகளிடமும் சிக்குண்டு, துன்பக்கேணியில் கிடந்த தமிழர்களின் அகக்கண்களைத் திறக்கவும் அவர் சூளுரைத்தார் . 1921 ஆம் ஆண்டு ‘தேசநேசன்’ என்ற நாளிதழைத் தொடங்கினார். நடேசய்யரின் ‘தேசநேசன்' இதழே, இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ். இந்தியத் தொழிலாளர்களின் துயரத்தை முதன்முதலாக ஆய்வு செய்து வெளியிட்ட சிறப்பு தேசநேசன் இதழுக்கு உண்டு. தோட்டப்புறத் தமிழர்களின் துன்ப வாழ்க்கையையும், அவர் களை அடிமைப்படுத்திய கரங்களையும் தேசநேசன் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டிய நடேசய்யர், கொழும்பு நகரில் வாழ்ந்த இந்தியத்  தமிழர்களின் வேதனைகளை விவரிப்பதற்காகவே, ‘தி சிட்டிசன்’ என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார்.

நடேசய்யரின் பத்திரிகை எழுத்துகளும், பேச்சுகளும் ஆங்கிலேய அரசைத் திணறடித்தன. இலங்கையில் இந்தியத் தொழிலாளர்களைக்
காப்பாற்றும் விதமாகத் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்த முன்னோடியும் நடேசய்யரே. இறக்குமதி செய்து வைத்திருந்த அடிமைகளை, சகமனிதர்களாக மாற்றி வந்த நடேசய்யரை நாடு கடத்திவிட அரசு பலமுறை முயற்சி செய்தது. 1924 ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களின் வாழ்வில் ஒரு பொன்னாளாகும். மலையகத்தில் உழன்ற தமிழர்களுக்காக, தாம் பிறந்த பொன்னாட்டைத் துறந்து, வந்த நடேசய்யருக்குப் பரிசாக சட்டமன்ற உறுப்பினர்  பதவியைத் தமிழர்கள் அளித்தனர். அன்று தொடங்கி, 1947 ஆம் ஆண்டு வரை இடையறாது சட்டமன்றத்தில் ஒலித்த நடேசய்யரின் உரைகள் அனைத்தும் அற்புதமான அரசியல் இலக்கியமாகும்.

அரசியல் தலைமையையும், எதிரிகளையும் நடுங்க வைத்ததோடு, தமிழர்களின் வரலாற்றைக்  குறிப்பிடும் கருவூலமாகவும் இவ்வுரைகள்
இன்றும் இலங்கைப் பாராளுமன்ற ஆவணக் காப்பகத்தில் மிளிர்ந்துகொண்டிருக்கின்றன. ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.க.வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நடேசய்யர் , திரு.வி.க. வழியிலேயே 1924-ஆம் ஆண்டில், இலங்கையில், ‘தேசபக்தன்’ என்ற இதழைத் தொடங்கினார். அரசியல் உலகில் மிக செல்வாக்குடன் இருந்த போதும், தேசபக்தனில் எழுத நடேசய்யர்  தவறியதேயில்லை. நடேசய்யரின் இதழியல் சாதனைகளைக் குறிப்பிட வேண்டுமென்றால், 1921இல் பாரதியார்  இந்தியாவில் விட்டுச் சென்ற இடத்தை இலங்கையில் நடேசய்யர்  நிரப்பினார்
என்பதே உண்மை.

தோட்டத் தொழிலாளர் களின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை உருவாக்குவதற்காகவே, 1930இல் மலையகத்தின் கோப்பித் தோட்டத்தின்
அடிவாரத்தில் குடியமர்ந்தார். தோட்டங்கள்தோறும் சென்று மக்களிடையே உரையாற்றி அம்மக்களை அடிமைத் தனத்திலிருந்து தட்டியெழுப்பினார்.  நடேசய்யரின் இப்பெரும் பணியில் தோள்கொடுத்த பெருமை, அவரின் மனைவி மீனாட்சி அம்மையையே சாரும். தோட்டத் தொழிலாளர் களை விழிக்கச் செய்ததோடு, தமிழையும் அவர்கள் செழிக்கச் செய்தனர் . நூற்றாண்டுகளுக்கு மேலாக அம்மலைக்காட்டில் கூனிக்குறுகி நடந்த அந்த ஏழைத் தமிழ்க் கூலிகள் கம்பீரமாக நடை போட்டுச் செல்ல வேண்டும் என்று முதன்முதலாகப் பாடிய பேரான்மாக்கள், நடேசய்யரும், மீனாட்சியம்மை ஆகிய இருவரே.

தொழிலாளர்களுக்காக இருவரும் பாடிய ‘தொழிலாளர்  சட்டக்கும்மி’ பாடல்கள் தொழிலாளர்களின் இதயத்தில் மின்னலாகப் பதிந்து, அம்மலை
முகடுகளில் எல்லாம் எதிரொலித்தன. ‘தேசபக்தன்’ இதழின் முகப்பில் புதிய மலையக ஆத்திசூடிப் பாக்களை எழுதி நடேசய்யர்  வெளியிட்டார் . மகாகவி பாரதியின் பாடல்களை இலங்கை முழுவதும் பரவச் செய்த பெருமை நடேசய்யரையே சாரும். பாரதி பற்றிய செய்திகளைத் தேடித்தேடி வெளியிட்டது தேசபக்தன் நாளிதழ். தோட்டத் தொழிலாளர் களை ஏமாற்றும் கங்காணிகளையும், துரைமார்களையும் கேள்விக்குள்ளாக்கிய நடேசய்யரின் பாடல்கள், அத்தொழிலாளர்களின் வாழ்க்கையைக் காட்டும் தேசியகீதமாகத் திகழ்ந்தது.

நடேசய்யரின் வீரமிக்க உரைகளும், எழுத்துகளும் அதிகாரவர்க்கத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார் த்தன. ‘இலங்கைத் தீவில் இந்தளவிற்குத் தேசத்துரோகம் செய்தவர்  வேறு எவருமில்லை’ என்று இலங்கை காவல்துறை அரசுக்கு எழுதி அனுப்பியதென்றால், அய்யரின்
நெஞ்சுரத்துக்கு வேறென்ன சான்று வேண்டும்!

தேசநேசன் (1922-23), தேசபக்தன் (1924-29), தொழிலாளி (1929), தோட்டத்தொழிலாளி (1947), உரிமைப்போர் , சுதந்திரப்போர் , வீரன் சுதந்திரன் முதலிய தமிழ் இதழ்களும், சிட்டிசன் (1922), ஃபார்வர் ட் (1926), இந்தியன் ஒப்பினியன் (1936), இந்தியன் எஸ்டேட் லேபர்  (1929) முதலிய ஆங்கில இதழ்களையும் வெளியிட்ட மாபெரும் இதழாளராக நடேசய்யர்  திகழ்ந்தார். அத்துடன், வெற்றியுனதே, இந்தியா-இலங்கை ஒப்பந்தம், தொழிலாளர் சட்டப்புத்தகம், கதிர் காமம், அழகிய இலங்கை உள்ளிட்ட பதினான்கு நூல்களையும் அவர்  படைத்துள்ளார். தொழிலாளர் சட்டப்புத்தகம் என்னும் நூல் ஒவ்வொரு தொழிலாளியின் கைகளிலும் இருந்ததுடன், அவர்கள்பெற வேண்டிய உரிமையையும் பட்டியலிட்டது.

இலங்கை மலையக இலக்கியத்தின் தொடக்கம் என்று நடேசய்யரின் படைப்புகளை உறுதியாகக் குறிப்பிடலாம். மலையகத் தமிழர்களின் மனசாட்சியாகத் திகழ்ந்த நடேசய்யர் , இற்றைக்கு 75 வருடங்களின் முன்னர் , 1947 ஆம் ஆண்டு நவம்பர்  7ந் திகதி காலமானார். நடேசய்யர்  என்னும் மானுடத்தென்றல் தொட்டுப்பார்க்காத சிகரங்கள் இலங்கையில் இல்லை. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைத்
தடம் மாற்றிப் பயணிக்கச் செய்த தகைமையாளர்  நடேசய்யர்.

நடேசய்யர்  என்னும் தமிழ்ச்சுடர்  மட்டும் பாதம் பதிக்காமல் இருந்திருந்தால், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மேலும் கசப்பாகவே இருந்திருக்கும், அவர்களின் தேயிலைப் போலவே!

நன்றி - வானவில்
https://manikkural.files.wordpress.com/2022/11/vaanvil-141-142-143_2022.pdf

தொடர்பு மின்னஞ்சல் முகவரி: sunva...@gmail.com
‘வானவில்’ இதழுக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்புபவர்களும்,
இதழ்களைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்களும் மற்றும் அனைத்துத் தொடர்புகளுக்கும் மேலுள்ள மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.
இணையத்தளம்: https://manikkural.files.wordpress.com/
இந்த இணையத்தளத்தில் இதுவரையில் வெளிவந்த
அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம்.

Reply all
Reply to author
Forward
0 new messages