| ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்! அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம் பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம் நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம் பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டிரோ! | |||||
| புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள் தன்னி லேபொது வான வழக்கமாம் மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர் மாத வப்பெரி யோருட னொப்புற்றே முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம். | |||||
| நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்னி உரைப்பது கேட்டிரோ! | |||||
| உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஓது பற்பல நூல்வகை கற்கவும் இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே திலக வாணுத லார்நங்கள் பாரத தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம் விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம். | |||||
| சாத்தி ரங்கள் பலபல கற்பராம் சவுரி யங்கள் பலபல செய்வராம் மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம் காத்து மானிடர் செய்கை யனைத்தையும் கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம் ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ! - மகாகவி WITH REGARDS, DR .V.S.SREEBALAJI, PROF/HEAD, DEPT OF MECH ENGG, DR NGP IT, CBE 8903544998, 9894674531 | |||||