பழநி கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களின் திட்டமதிப்பீடு கண்காட்சி நடந்தது. இதில் மெக்கானிக் துறையைச் சேர்ந்த மாணவர்கள் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் விதைகளை நேர்த்தியாக மண்ணில் புதைக்கும் 'சீடு டிரில் மெஷின்', மலைப்பகுதியில் 'ஆட்டோ பிரேக் சிஸ்டம்' மற்றும் பெட்ரோல், டீசல் இல்லாமல் 'பெடலிங்' மூலம் மின்சாரம் தயாரித்து 'பேட்டரி'யில் இயங்கும் “பெடலிங் கார்' ஆகியவற்றை தயாரித்துள்ளனர்.இதேபோல எலக்ட்ரானிக் ரோபோட்டிக் துறையைச் சார்ந்த மாணவர்கள் நுாலகங்களில் பயன்படுத்தும் வகையில் 'ரோபோ லைப்ரேரியன்' இயந்திரம் தயாரித்துள்ளனர். இதன் மூலம் புத்தகங்களை எளிதாகவும், அதன் இருப்பிடம் மாறாமல் அடுக்கவும் முடியும் என செய்முறை விளக்கம் அளித்தனர்.கார்மென்ட் துறை சார்பில் பெண்கள் 30 வினாடிகளில் அணியும் வகையில் சேலையை தயாரித்துள்ளனர். அதற்கு 'ஒட்டிக்கோ, கட்டிக்கோ' என பெயரிட்டுள்ளனர். இயற்கை சாயம் தயாரித்தல், கருவேல பட்டை, பட்டுத்துணியில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மற்றும் இ.சி.இ., துறை மாணவர்கள் அலைபேசி மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் மோட்டாரை இயக்கும் இயந்திரம், சீதோஷ்ண நிலையை கண்டறியும் கருவிகள் தயாரித்து உள்ளனர்.
ரோபோ இயந்திரம் தயாரிப்புகுழுவைச் சேர்ந்த மாணவர் வின்சென்ட்அமலதாஸ் கூறுகையில், “இன்று நுாலகங்கள் பலவும் கணினிமயமாகி வருகின்றன. ஒவ்வொரு புத்தகத்திற்கும் தனி ஐ.டி., கொடுத்து அத்தகவலை செனசார் மூலம் இயங்கும் வகையில் ரோபோவின் 'சிப்'பில் பதிவு செய்து வைத்தால் இது சாத்தியமாகும். இதனால் மனித தேவை குறைவதுடன், நுாலகத்தில் அமைதியை பராமரிக்க முடியும், என்றார்.
இம்மாணவர்களை முதல்வர் கந்தசாமி, துறைத்தலைவர்கள் இ.சி.இ., ராஜமாணிக்கம், எலக்ட்ரானிக் ரோபோட்டிக் துறை ராஜசின்னகருப்பணன், கார்மென்ட் துறை கிருஷ்ணமூர்த்தி, கைடுகள் மகேந்திரன், மனோகரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.