
மானுடம் சூன்யம் ஆவதற்கோ, வெற்றிடம் ஆவதற்கோ காலம் என்றும் அனுமதித்ததில்லை. நிலைகெட்டிருக்கும் சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்கென்று, அவ்வப்போது அருட்தூதுவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே, எனையிந்த யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் என வள்ளலாரும் இதனை உறுதிப்படுத்துகின்றார். மகாகவி பாரதியும் எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தர் இந்த நாட்டில் என அழுத்தம் திருத்தமாக உரைக்கின்றார். வள்ளலார் வந்த வழியிலும், பாரதி நடந்த பாட்டையிலும் தொடர்ந்து நடந்தவர்தாம், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.
காலம் காலமாக இந்திய மக்கள் புண்ணியத்தைத் தேடி இராமேசுவரத்திற்கு வந்தனர். ஆனால், வைய மக்கள் கால்கள் நோகக்கூடாதென்று, புண்ணியமே ஒரு முடிவெடுத்து 15.10.1931 அன்று, ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் என்னும் வடிவத்தில் இந்த மண்ணுக்கு வந்து சேர்ந்தது.
கலாமின் குடும்பம், பற்றாக்குறையின் கைகளில் பட்டுவாடா செய்யப்பட்டதால், எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே புளியங்கொட்டைகளைப் பொறுக்கி விற்று (இரண்டாவது உலகப்போர் நடந்த காலம்) ஓரணா சம்பாதித்ததையும், பின்னர் வீட்டுக்கு வீடு தினமணி செய்தித்தாள் போட்டதையும் அவரே கீழ்வருமாறு வருணிக்கிறார். "பத்திரிகைகளில் தினமணிக்கு ஏக கிராக்கி. என் அண்ணன் சம்சுதீன் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்கு முன்பு அதிலுள்ள படங்களைப் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொள்வேன். யுத்தம் பற்றிய செய்திகளை எல்லாம் எனக்கு ஜலாலுதீன் சொல்லுவார். பிறகு நான் அதைப்பற்றி தினமணியின் செய்தித்தாள்களில் படித்துப் பார்ப்பேன். இராமேசுவரத்தில் இரயில்கள் நிற்பதை திடீரென்று நிறுத்திவிட்டார்கள். இராமேசுவரம் இருப்புப் பாதையில், ஓடும் இரயிலிலிருந்து பத்திரிகைகளைக் கட்டுக்கட்டாக வீசுவார்கள். நான் அவற்றை எல்லாம் பிடித்து வாங்கி, அண்ணன் சம்சுதீனிடம் சேர்ப்பேன். அண்ணனிடம் வாங்கியதுதான் என் முதற் சம்பளம்' என்பதாகச் சுய சரிதையில் விவரித்துள்ளார். பழமையை மறவாதவர்கள், என்றும் தம் நிலையில் தாழ மாட்டார்கள் என்பதற்குக் கலாம் அவர்களின் வாழ்க்கை, ஓர் உரைகல்.
கலாம் உயர்நிலைப் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்திருந்தாலும், உயராய்வுக்கு (எம்.ஐ.டி.) வருகின்றபோது அவருக்குச் சோதனைகள் காத்திருந்தன. வெற்றிப்படிகளில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளில், மலர்களைக் காட்டிலும் முட்களே அதிகமாக இருந்தன. எம்.ஐ.டி.யில் முதுநிலை ஆய்வுத் திட்டம் ஒன்றைப் பெற்று, அதற்குக் கிடைத்த உதவித் தொகையில்தான், அவருடைய எதிர்காலம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் அவருடைய ஆய்வின் வளர்ச்சியைப் பார்வையிட்ட பேராசிரியர், "கலாம், உன்னுடைய அறிக்கை எனக்கு நிறைவைத் தரவில்லை. நாளை காலைக்குள் ஒரு விமானத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் விவரித்துக்காட்டும் வரைபடத்தை வரைந்து தராவிட்டால், உன்னுடைய உதவித்தொகை நிறுத்தப்படும்' என்ற ஏவுகணையை ஏவிவிட்டுப் போய்விட்டார்.
எல்லையில்லாத மன நெருக்கடிக்கு ஆளானாலும் ஒரு பழைய கவிதையைத் தேடிப்பிடித்துப் படித்தார். "உனது எல்லா நாட்களிலும் தயாராய் இரு. எவரையும் சம உணர்வோடு சந்தி. நீ பட்டறைக் கல்லானால், அடி தாங்கு. நீ சுத்தியானால் அடி' எனும் கவிதை நாடி நரம்புகளை அக்கினியாய் முறுக்கேற்றியது. மறுநாள் அப்பணியைச் செவ்வனே முடித்துத் தந்து, மேற்பார்வையாளரின் பாராட்டையும் பெற்றார். எது அவரைக் காயப்படுத்தியதோ, அதுவே அவரைச் சகாயப்படுத்தவும் செய்தது.
1958-இல் விமானப் படையில் விமானியாகப் பணியாற்ற வேண்டும் எனும் எண்ணத்தில் டேராடூனுக்கு நேர்முகத்திற்குச் (இண்டர்வியூ) செல்லுகிறார். தெருவரைக்கும் வந்த நல் வாய்ப்பு, வாசற்படியை மிதித்தவுடன் கதவைச் சாத்திக் கொண்டது. எட்டு இடங்களுக்கு இவர் ஒன்பதாவதாக இடம் பெற்றதுதான் காரணம்.
என்றாலும், சோர்வடையாமல் ரிஷிகேசத்திலுள்ள சிவானந்தர் ஆசிரமத்திற்குள் நுழைகிறார். அங்கு அவர் பெற்ற அனுபவத்தை, "கங்கையில் நீராடி ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடன் அதிர்வலைகளின் வலுவான தாக்கத்தை உணர்ந்தேன். கருணை பொங்கும் முகத்தோடும், ஊடுருவிப் பார்க்கும் விழிகளோடும் புத்தரைப் போலக் காட்சியளித்த சுவாமி சிவானந்தரிடம் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னுடைய முஸ்லிம் பெயர், அவரிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. நான் வாயைத் திறப்பதற்கு முன்பே, என் துயரத்தின் மூலக் காரணம் பற்றி வினவினார்' என விவரிப்பதிலிருந்து, கோபுரங்களுக்கு வேற்றுமைகள் தெரிவதில்லை என்ற உண்மையை அறியலாம்.
கலாம் 1981-இல் பத்மவிபூஷண் விருது பெற்று, இராமேசுவரத்திற்குள் நுழைகிறார். மசூதி தெருவில் ஜலாலுதீன் அவரை வரவேற்று நிற்கிறார். பள்ளி வாழ்க்கையில் கற்பித்த பட்சி லட்சுமண சாஸ்திரிகள் கலாமின் நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்குகிறார் தொடர்ந்து அருட்தந்தை சாலமன் புனித சிலுவையை ஏந்தி ஆசீர்வதிக்கின்றார். மேலும், கலாம் தம்முடைய வெற்றிக்குக் காரணமானவர்களாக மூன்றுபேரை அடிக்கடி சொல்லுவார். (1) விக்ரம் சாராபாய், (2) சதீஷ் தவன், (3) பிரம்ம பிரகாஷ். 40 பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டயங்களையும், பாராட்டுக்களையும் பெற்றபோதெல்லாம், தம்மைச் செதுக்கிய சிற்பிகளை அவர் மறந்ததே இல்லை.
ஆலமரத்தின் கிளைகள் வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டே போனாலும், அதன் விழுதுகள் பூமியை நோக்கித்தான் பயணிக்கும். அதுபோல கலாம் அவர்கள் ஏவுகணை உலகத்திலும், ராக்கெட் உலகத்திலும் விண்ணளவு புகழ் பெற்றாலும், அவருடைய இதயம் அடித்தளத்து மக்களை நோக்கித்தான் கசித்து கொண்டிருந்தது. 2020-இல் குடிதண்ணீர் பஞ்சமில்லாத தேசத்தை உருவாக்க வேண்டுமென்று, தண்ணீரைத் தேசியமயமாக்க வேண்டும் என்றார்.
கலாம் வாழ்க்கையில் மகத்தான மாறுதலை ஏற்படுத்தியது, சுவாமிஜி பிரமுக் அவர்களுடைய தரிசனம் ஆகும். (பாப்ஸ் சுவாமிநாராயண் சம்பிரதாய ஆசிரமத்தின் குருநாதர்). நிவேதிதாவின் தரிசனம் மகாகவி பாரதியிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அந்த மாற்றத்தை பிரமுக் சுவாமிஜியின் தரிசனம், கலாமிற்குத் தந்தது எனலாம். அக்குருஜியே தம் வாழ்க்கையின் முடிந்த முடிவான குருஜி எனக் கலாம் எழுதுகின்றார். அக்குருநாதரைக் கலாம் 14 ஆண்டு கால இடைவெளியில் எட்டுமுறை சந்தித்து ஆத்ம விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார். கலாம் எழுதிய கடைசி நூல்: ‘The Transcendence : My Spiritual Experiences with Pramuk Swamiji’ என்பதாகும். பாரத ரத்னா கலாம் தம் மறைவுக்கு ஒரு மாதத்திற்கு முன் எழுதப்பட்ட நூல் இது.
27.07.2015 அன்று ஷில்லாங் நிர்வாகவியல் உயராய்வு மையத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட மறைவு, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரு பூகம்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிம்பொனிக் சக்கரவர்த்தி பீத்தோவன் எப்படித் தம்முடைய பியானோவில் தலை வைத்தபடி மறைந்தாரோ, அப்படித்தான் கலாம் மாணவர்கள் மத்தியில் தலை சாய்த்தார். வீட்டுக்கு வீடு செய்தித்தாள் போட்ட ஒரு மாமனிதரின் மறைவை, உலகத்தின் அத்தனைச் செய்தித்தாள்களும் கண்ணீரால் அச்சிட்டன. தமக்கென்று ஒரு தொலைக்காட்சிப் பெட்டிகூட இல்லாதவரின் மரணத்திற்கு அத்தனைத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் அழுது தீர்த்தன. அவரால் அனுதினமும் மீட்டப்பட்ட வீணை, விதவை ஆயிற்று. பெருந்தலைவர்களின் மறைவுக்கு டெல்லியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மக்கள், முதல்முறையாக இராமேசுவரத்தை நோக்கி பயணித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, "தம்முடைய அறிவியல் சாதனைகளின் மூலம் இந்தியாவை மிக உயரமான இடத்திற்கு அழைத்துச் சென்றவர் கலாம். அவரது மறைவு ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்' என்றார்.
அவருடைய மறைவைக் கண்ணீரில் மட்டும் கரைத்துவிடாமல், நிலைத்து நிற்கக் கூடிய ஓர் அஞ்சலியைச் செலுத்தியது, தமிழக அரசு. அவருடைய பிறந்த நாளாகிய அக்டோபர் 15-ஆம் தேதியை இளைஞர்களின் மறுமலர்ச்சி நாளாக அறிவித்தது. வியத்தகு சாதனைகளை நிகழ்த்தும் இளைஞர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூபாய் ஐந்து லட்சம், ஒரு சவரன் தங்கத்துடன் வழங்கப்படும். காற்றுள்ளவரை, இராமேசுவரம் கடற்கரை மணல் இருக்கும்வரை, இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம் எனும் கீதம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
தன்னம்பிக்கை கதை
மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.
மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.
“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.
உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.
அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.
உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.
“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.
அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.
அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.
அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.
“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”
மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.
இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.
நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். 👍👍👍👍👍



அப்துல் கலாம்..! ராமேஸ்வரத்தில் தொடங்கி ராஷ்டிரபதி பவன் தொட்டு ராமேஸ்வரத்திலேயே முடிந்த சரித்திரப் பயணத்தின் 'கழுகுப் பார்வைக் காட்சிகள்’ இங்கே...

15-10-1931 அன்று ராமேஸ்வரத்தில், ஜைனுல்லாபுதீன் - ஆஷியம்மா தம்பதிக்குப் பிறந்தார் அப்துல் கலாம். மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. கலாம்தான் கடைக்குட்டி.

குட்டிப்பையன் கலாம், புளியங்கொட்டைகளைச் சேகரித்து மார்க்கெட்டில் விற்றால், தினம் ஓர் அணா கிடைக்கும். அதிகாலைகளில் பேப்பர் பாய். தன் உழைப்பினாலேயே தன் படிப்புச் செலவுகளைச் சமாளித்தார்.

நான்காம் வகுப்பு... கணக்கு ஆசிரியர் ராமகிருஷ்ண ஐயர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, பாதி வகுப்பில் கலாம் தெரியாமல் நுழைய, மற்ற மாணவர்கள் முன்னிலையில் பிரம்பால் அவரை விளாசிவிட்டார் ஆசிரியர். சில மாதங்களுக்குப் பின்னர் கலாம் கணக்கு பாடத்தில் 100-க்கு 100 எடுக்க, ஒட்டுமொத்த பள்ளி மாணவர்கள் முன்னர் கலாமைப் பாராட்டினார் அதே ஆசிரியர். 'முந்தைய அவமானத்தை இந்தப் பாராட்டு அகற்றியது’ என்பார் கலாம்.

ராமநாதபுரம் ஸ்வார்ட்ஜ் உயர்நிலைப் பள்ளியில் அய்யாதுரை சாலமன், கலாமுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். 'ஒருவர், வாழ்க்கையை தாம் விரும்பியபடி அமைத்துக்கொள்ள முடியும் என்பதை அவருடன் பழகியபோது கற்றுக்கொண்டேன்’ என்பார் கலாம்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டமும், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி-யில் விமான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பொறியியல் பட்டமும் பெற்ற பின், டெல்லியில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக 250 ரூபாய் மாதச் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்கிறார். அங்கு இருந்து பெங்களூர் விமான வடிவமைப்பு வளர்ச்சி அமைப்புக்கு அனுப்பப்படுகிறார். அங்கு கலாம் அங்கம் வகித்த குழுவினர் அசாத்திய முயற்சியாக 'நந்தி’ என்ற விமானத்தை உருவாக்கினார்கள். பரிசோதனை முயற்சியாக உருவாக்கப்பட்ட அந்த விமானத்தை கலாம் இயக்கினார்.

நண்பரின் தூண்டுதலால், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (DRDO) வேலைக்கு விண்ணப்பிக்கிறார். விக்ரம் சாராபாய் நடத்திய நேர்முகத் தேர்வில் விஞ்ஞானியாகத் தேர்வாகிறார். பணியில் சேர்ந்த பின் திருவனந்தபுரத்தில் ராக்கெட் ஏவுதளத்தை நிறுவும் பணியில், விக்ரம் சாராபாய் தலைமையில் பணிபுரிகிறார். அதுவே இப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையமாகச் செயல்படுகிறது.

ராக்கெட் தொழில்நுட்பம் பற்றிய ஆறு மாதப் பயிற்சிக்காக அமெரிக்காவின் நாசாவுக்குச் சென்று வந்தவர், ராக்கெட் தயாரிக்கும் குழுவில் விக்ரம் சாராபாயுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார். இஸ்ரோவுக்குப் பணிமாறுதல் செய்யப்பட்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வருபவர், 'எஸ்.எல்.வி’ திட்டப் பணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.

1976-ம் ஆண்டு அப்துல் கலாமின் அப்பா ஜைனுல்லாபுதீன் 102-வது வயதில் காலமானார். அவரது இழப்பு அப்துல் கலாமை உலுக்குகிறது. அந்த இழப்பில் இருந்து மீள, தன்னை ஆராய்ச்சிப் பணிகளில் மூழ்கடித்துக்கொள்கிறார்.

1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.எல்.வி முதல்முறையாக ஏவப்படுகிறது. ஏவப்பட்டு 317 விநாடிகள் பறந்த ராக்கெட், எதிர்பாராதவிதமாக வெடிக்கிறது. தோல்வியைக் கண்டு கலங்காமல், அந்த அனுபவம் தந்த பாடத்துடன் மிகத் தீவிரமாகப் பணிபுரிந்து 1980-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இரண்டாவது முறையாக எஸ்.எல்.வி ஏவுகிறார்கள். வெற்றி! சகாக்கள், கலாமைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, கலாமைப் பாராட்டி 'பார்லிமென்ட் ஹவுஸ் அனெக்ஸ்’ கூட்டத்தில் உரை நிகழ்த்தவைக்கிறார்.

எஸ்.எல்.வி வெற்றிக்காக, 1981-ம் ஆண்டு குடியரசு தினத்தில் பத்ம பூஷண் விருது பெறுகிறார்.

1982-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுக்கூடத்துக்கு ( Defence Research and Development Laboratory ) இயக்குநராகப் பொறுப்பேற்கிறார். 1988-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலாம் தலைமையிலான குழு 'பிருத்வி’ ஏவுகணையை வெற்றிகரமாக ஏவுகிறது. 'தேசத்தின் ராக்கெட் அறிவியலில் இது ஒரு சகாப்தம். எதிர்கால ஏவுகணைத் திட்டங்களுக்கு இதுவே முன்னோடி’ என நெகிழ்கிறார் கலாம்.

1989-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'அக்னி’ ஏவுகணை செலுத்துவதற்கான நாள் குறிக்கப்பட்டு, சில தொழில்நுட்பக் கோளாறுகளால் அது தள்ளிவைக்கப்படுகிறது. இரண்டாவது முறையாக மே மாதம் 'அக்னி’யை ஏவும் கவுன்ட்டௌன் முடிய 10 விநாடிகள் இருக்கும்போது புதிய கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு, திட்டத்தை ஒத்திவைக்கிறார்கள். கலாம் அணியினரை, ஊடகங்கள் வரிந்துகட்டிக் கிண்டலடிக்கின்றன. சக விஞ்ஞானிகள் சோர்ந்தபோது, 'நான் முதலில் எஸ்.எல்.வி ஏவும்போது அது கடலில் விழுந்தது. நீங்கள் செய்த 'அக்னி’ உங்கள் முன்புதான் உள்ளது. நாம் சாதிப்போம்’ என உற்சாகப்படுத்துகிறார்.

மூன்றாவது முறையாக மே 22-ம் தேதி 'அக்னி’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. கிண்டலடித்தவர்களே கலாமைப் பாராட்ட, அமைதிப் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தார் கலாம்.

'அக்னி’ ஏவுகணை வெற்றிக்காக, 1990-ம் ஆண்டு குடியரசு தினம் அன்று கலாமுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் நாள் கலாமுக்கு வயது 60. பணி ஓய்வுபெற்றதும், வறுமையில் வாடும் திறமையான குழந்தைகளுக்காக, பள்ளி ஒன்றை தனது நண்பர் பேராசிரியர் பி.ராமராவுடன் இணைந்து தொடங்கத் திட்டமிடுகிறார். பள்ளிக்கு 'ராவ்-கலாம்’ எனப் பெயர் சூட்டலாம் எனத் தீர்மானித்திருந்தார். ஆனால், இந்திய அரசு அவரைப் பணியில் இருந்து விடுவிக்காததால், பள்ளி தொடங்கும் திட்டத்தைத் தள்ளிப்போடுகிறார்.

1998-ம் ஆண்டு மே மாதம், பொக்ரான் பாலைவனத்தில் இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்துகிறது. அந்தத் திட்டத்தில் தொழில்நுட்ப, நிறுவன மற்றும் அரசியல்ரீதியாக மிக முக்கியப் பங்காற்றினார் கலாம். 'இந்தியா அணுசக்தி நாடாக உருமாறிய அதிர்வை உணர்ந்த அந்தத் தருணம்தான், நான் இந்தியனாகப் பிறந்ததற்குப் பெருமைப்பட்ட தருணம்’ என எப்போதும் அந்த நாளைக் குறிப்பிடுவார் கலாம்.

மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்ததால், இதய அறுவைசிகிச்சைக்கு இந்தியாவில் ஏக செலவு பிடிப்பதாக இருந்தது. இந்த நிலையில் மருத்துவர் சோம ராஜுவுடன் சேர்ந்து கலாம் 'கரோனரி ஸ்டென்ட்’ உபகரணத்தை உருவாக்கினார். அது சிகிச்சைக்கான செலவை 55 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகக் குறைத்தது. அந்த உபகரணத்துக்கு 'கலாம் - ராஜு ஸ்டென்ட்’ என்றே பெயரிட்டார்கள்.

கால் இழந்த மாற்றுத்திறனாளிகள், செயற்கை மூட்டின் உதவியுடன் நடப்பார்கள். ஆனால், அது அதிக எடையுடன் இருப்பதால், நடக்க மிகவும் சிரமப்படுவார்கள். கலாம் தலைமையிலான குழுவினர், எடை குறைந்த செயற்கை மூட்டுகளைத் தயாரித்தனர். அதனால் 4 கிலோ செயற்கை மூட்டு 400 கிராமாக எடை குறைந்தது. 'மாற்றுத்திறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்த அந்தக் கண்டுபிடிப்புதான் வாழ்க்கையில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த கண்டுபிடிப்பு’ எனப் பூரிப்பார் கலாம்.

1999-ம் ஆண்டு வெளியான ‘WINGS OF FIRE’ என்ற கலாமின் சுயசரிதை, இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதுவே 'அக்னிச் சிறகுகள்’ என, தமிழில் வெளியானது.

இந்தியா முழுக்க இளைஞர்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் பெரும் நன்மதிப்பைப் பெற்றிருந்த கலாமை, நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக்க முடிவெடுத்தது பா.ஜ.க அரசு. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் அமைச்சர்கள் புடைசூழ இந்திய நாடாளுமன்றத்தில் வேட்புமனு தாக்கல் செய்த கலாம், 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனார். குடியரசுத் தலைவர் பணிகளுக்கு இடையே நாடு முழுக்க இளம் மாணவர்களைப் பெரும் அளவில் சந்தித்து உரையாடி, 'கனவு காணுங்கள்’ என உற்சாகமூட்டினார். 'இந்தியா 2020’ குறித்த கனவுகளையும் விதைத்தார்.
2004-ம் ஆண்டு தன் 73-வது வயதில், மிக உயரமான போர்முனைப் பகுதியான சியாச்சின் பனிப்பிரதேசத்தில் உள்ள, கூமர் ராணுவ முகாமுக்குச் சென்றார் கலாம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் அமைந்த மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவும் போர்முனை அது. நாட்டின் முதல் குடிமகனே தங்களைத் தேடி வந்தது, ராணுவத்தின் கடைசி வீரர் வரை உற்சாகமூட்டியது.

தன் 75-வது வயதில் 'ஐ.என்.எஸ் சிந்துரக்ஷக்’ என்ற கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் மூன்று மணி நேரம் பயணித்தார் கலாம். அப்போது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி, மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கச் செய்த கடற்படை அதிகாரிகளை வெகுவாகப் பாராட்டினார்.

ஒலியின் வேகத்தைவிட இரு மடங்கு வேகத்தில் பறக்கக்கூடிய 'சுகோய்-30’ என்ற போர் விமானத்தில் பயணித்தார். தரையில் இருந்து சுமார் 25 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 1,200 கி.மீ வேகத்தில் பறந்து தரை இறங்கிய பின்னர், 'புவியீர்ப்பு விசையின் மூன்று மடங்கு தாக்கத்தை இந்தப் பயணத்தில் உணர்ந்தேன்’ எனக் குழந்தையாகக் குதூகலித்தார்.
வெளிறிய நிற ஆடைகள்தான் கலாமுக்குப் பிடிக்கும். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் 'பந்த் கலா’ ரக சூட் (கழுத்தை மூடியபடி இருக்கும் சூட்) அணிந்தார். கழுத்தை இறுக்கிய காலர், அவருக்கு அசௌகரியமாக இருந்திருக்கிறது. அதனால் கழுத்து அருகே சற்று இடைவெளிவிட்டு தனக்கு சூட் தைக்கும்படி கூறினார். அதுவே கழுத்தில் பொத்தான் இன்றி இடைவெளி விடப்படும் ஃபேஷனுக்கு 'கலாம் கட்’ எனப் பெயர் கொடுத்தது.
2007-ம் ஆண்டில் ராயல் சொசைட்டியின் 'கிங் சார்லஸ் II ’ விருது, 2011-ம் ஆண்டில் அமெரிக்காவின் ‘IEEE Honorary Member ship’ அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன. 2012-ம் வருடம் இந்தியாவில் ஊழலை ஒழிக்க இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு,
‘What can i give movement?’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார் கலாம்.
கலாமின் காலை உணவு, ஓர் இட்லி கொஞ்சம் சாம்பார். மதியம் சாம்பார் சாதம், கொஞ்சம் காய்கறிகள். மதிய உணவில் இரண்டுக்கும் மேற்பட்ட காய்கறிகள் இடம்பெற்றால், 'இன்னைக்கு ஏதாவது விசேஷமா?’ எனச் சிரித்துக்கொண்டே கேட்பார். ஒரு வேளை உணவையும் தவிர்க்க மாட்டார்; ஒரு பருக்கை உணவையும் வீணாக்க மாட்டார்.
கலாமை, எப்போதும் திருமணம் குறித்த கேள்விகள் துரத்தின. 'என் கனவும் நம்பிக்கையும் வேறு. எனக்கு என ஒரு குடும்பம் உண்டானால், மனதில் சுயநலம் உண்டாகும். லட்சியமா... குடும்பமா என்றால் குடும்பத்தையே ஆதரிக்க வேண்டியிருக்கும். ஆக, நான் இறுதி வரை இப்படியே இருக்கத் தீர்மானித்தேன்’ என்பார்.
ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் செயல்பட ஆர்வமாக இருந்தார். ட்விட்டரில் தலாய்லாமா, நரேந்திர மோடி, அமிதாப் பச்சன், வி.வி.எஸ்.லட்சுமண், இஸ்ரோ, நேஷனல் ஜியாகிரபிக் சேனல் என மிகச் சில நபர்களையும் நிறுவனங்களையும் மட்டுமே ஃபாலோ செய்தார்!
2015-ம் ஆண்டு ஜூலை 27, மாலை 6:35. மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் ஐ.ஐ.எம் கல்வி நிறுவன மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கிச் சரிந்தவரை, உடனடியாக மருத்துவமனைக்குச் எடுத்துச் சென்றார்கள். சிகிச்சை பலன் அளிக்கவில்லை. 'நீங்கள் என்னவாக நினைவுகொள்ளப்பட வேண்டும்’ எனக் கேட்டால்,
'ஓர் ஆசிரியராக’ என்றே சொல்லும் கலாம், மாணவர்கள் மத்தியில் ஓர் ஆசிரியராகவே மறைந்தார்.
இந்தியப் பிரதமர் முதல் கடைக்கோடி குடிமகன் வரை ராமேஸ்வரத்தில் திரண்டு நிற்க, 2015-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி பேக்கரும்பு என்ற இடத்தில், கலாமின் உடல் விதைக்கப்பட்டது!