ஒரு பெரிய கம்பெனியோட முதலாளி அவர் ஒரு அம்பத்தஞ்சு வயசுன்னு வச்சுக்கோங்களேன். அவர் ஆஃபீஸ்ல அவரைக் கண்டாவே எல்லாருக்கும் சிம்ம சொப்பனம். ஒரு முறை அவசர வேலையாக அவரைத் தேடி ஆஃபீஸ்ல இருந்து மேனேஜர் ஒருத்தர் வந்தார். அவர் வந்த நேரம் முதலாளி தன்னோட பேரனை முதுகில வச்சு ஆனை அம்பாரின்னு பாடிட்டு இருந்தார். மேனேஜருக்கு ஒரே ஆச்சரியம். என்னது இது ஆஃபீஸ்ல சும்மா சிங்கமாட்டம் இருக்கிறவரு இங்க இப்படி இருக்காரேன்னுட்டு. அவர்ட்டயே கேட்டுட்டார். சார் எப்படி இப்படி உங்களால முடியுதுன்னு கேட்டார். அதுக்கு அந்த முதலாளி சொன்ன பதில் என்ன தெரியுங்களா. வீட்டுக்கு வந்ததும் மனசைக் கழட்டி வச்சுடுவேன்னாராம்.
அதெப்படிங்க மனசை கழட்டி வைக்கறது ? அதென்ன கழுத்துல போட்டிருக்கிற செயினா ? இல்லை கைல கட்டி இருக்கிற கடிகாரமா ? அது ஒரு மனப் பயிற்சி. தான் இருக்கும் இடத்துக்கு ஏற்ற மாதிரி மனதைப் பக்குவப் படுத்திக் கொள்ளுவது. அதாவது ஒரு டாக்டர் அறுவை சிகிச்சை செய்யும் அதே மனநிலையிலே எப்போதும் இருந்தால் என்னாகும் ? அல்லது ஒரு காவல் துறை அதிகாரி தன் குழந்தையிடம் சென்று குற்றவாளிகளிடம் நடப்பது போல விறைப்பாக நடந்துக் கொள்ள முடியாதில்லையா ? அது தான். பொதுவாகவே சிலருக்கு இந்தத் தன்மை இருக்கும். ஆனால் சிலர் இருக்காங்கங்க. எப்போதும் கஞ்சிய குடிச்சுட்டு விறைப்பாகவே இருப்பாங்க. அப்படி இலகுவான மனநிலை இல்லை என்றால் அது மன நோயில் சென்று முடியும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.
புரட்சி புரட்சி என்று இருப்பவர்களாகட்டும் இலக்கியம் இலக்கியம் என்று இருப்பவர்களாகட்டும். அஞ்சு வயசு குழந்தையை வைத்து " புரட்சி ஓங்குக" என்று போதிப்பதும், " ஜீரோ டிகிரி" கதையை சொல்லுவதும் என ஒரு விளிம்பில் வாழ்க்கையை கடத்துபவர்கள் தேவையான நேரத்தில் மனதைக் கழட்டி வைக்கா விட்டால் அது பின்னாளில் அவருக்கும் குழந்தைக்குமே பாதிப்பாக முடியும் என்பது மனோதத்துவ அறிஞர்களின் கூற்று. அதே நேரத்தில் நல்ல விஷயங்களை மனதில் விதைத்து வைத்தால் அவை வளர்ந்து விருட்சமாகி பலன் தரும் என்கிறார்கள். அதாவது எதுவாக நீ மாற நினைக்கிறாயோ அதுவாகவே நீ மாறிப் போவாய் என்று சொல்வார்களே அது தான்.
சீதையும் பற்றி ஒரு செவி வழிக் கதை உண்டு. வனவாசத்தின் போது ஒருமுறை ஸ்ரீராமனும் சீதா பிராட்டியாரும் தனித்திருக்கையில் மரத்தின் மீது ஒரு பட்டுப் பூச்சிக் கூட்டைப் பார்த்தாராம். அந்தக் கூட்டில் இருந்து புழுவாக இருந்தது வெளியே பூச்சியாய் பறந்து சென்றது. அதைப் பார்த்ததும் சீதா பிராட்டியார் அழ ஆரம்பித்துவிட்டாராம். ஸ்ரீராமனுக்கு என்ன ஏது என்று தெரியாமல் கொஞ்சம் சிரமப் பட்டு பிராட்டியாரை சமாதானம் செய்து என்ன காரணம் என்று கேட்டாராம். அப்போது பிராட்டியார் சொன்னாராம்..
"பட்டுப் புழு, தான் பட்டுப் பூச்சியாக வேண்டும் என்று சதா நினைத்துக் கொண்டிருந்ததால் அது பூச்சியாகி இப்போஇது பறந்து விட்டது "
"ஆம் அதற்கென்ன இப்போது"
"என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள் .. சதா ஸ்ரீராமா என்று உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் நான் ஒரு நாள் நீங்களாகவே மாறிப்போய்விடுவேனே அதனால் தான் எனக்கு அழுகை வந்துவிட்டது"
"அப்படியும் ஏதும் பிரச்சினை வராது, காரணம் நான் சதா சீதா சீதா என்று உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் நானும் சீதாவாகி இருப்பேன். ஆக மொத்தத்தில் நம் வாழ்வில் எந்த மாற்றமும் இருக்காது"
இதுவல்லவா உண்மையானக் காதல்?