pasu vathai

113 views
Skip to first unread message

Haranprasanna

unread,
Oct 8, 2012, 2:46:47 AM10/8/12
to marat...@googlegroups.com

பசுவதை தடையைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இன்று பார்த்தேன். ஆலயம் தொழுவோர் சங்கம் சார்பாக எடுக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படத்தை இயக்கியவர்கள் பத்ரி (பத்ரி சேஷாத்ரி அல்ல) மற்றும் ராதா ராஜன்.

ஆலயம் தொழுவோர் சங்கத்தின் சார்பாக முதலில் பலர் பேசினார்கள். ஆலயத்தின் பல்வேறு சொத்துகள் இன்று அரசால் எப்படி கபளீகரம் செய்யப்படுகின்றன என்றெல்லாம் எடுத்துரைத்தார்கள். ஹிந்து ஆலயங்களை அரசிடமிருந்து மீட்டு அவற்றை ஹிந்து அமைப்புகளிடம் கொடுப்பதே ஒரே வழி என்றெல்லாம் சொன்னார்கள். ஹிந்து ஆலயங்களில் நடைபெறும் எல்லாமே தர்மத்துக்கு எதிரானதாக இருப்பதாகவும் அதனை சரியான முறையில் செய்ய ஹிந்து அமைப்புகளால் மட்டுமே முடியும் என்றார்கள். அரசு செய்யும் தவறுகளைத் திருத்துவதைவிட ஹிந்து அமைப்புகளிடம் ஹிந்து ஆலயங்கள் வருவதே முக்கியமானது என்பதே இச்சங்கத்தின் நோக்கம் என்பது புரிந்தது. இதில் தவறு காண இடமில்லை. ஏனென்றால் எல்லா அரசுகளுமே ஆலயங்களின் சொத்துக்களைத் தங்கள் பினாமி சொத்துகளாகத்தான் பாவிக்கின்றன. ஆனால் ஹிந்து அமைப்புகள் வசம் வரும் ஆலயங்களில் பராமரிக்கப்படும் முறைகள் எவ்வகையிலும் சாதி ஏற்றத்தாழ்வு சாராததாக இருக்கும் உறுதியை ஹிந்து அமைப்புகள் வழங்கவேண்டும். அரசு தரப்பில் நடக்கும் குறைகளை எதிர்கொள்ளவாவது முடியும். தனிப்பட்ட நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளின் கைகளில் வரும் ஆலயங்களில் நடக்கும் அத்துமீறல்களை எதிர்கொள்வது நிச்சயம் சவாலான ஒன்றே.

பின்னர் பசுவதை பற்றிய, கேரளாவுக்கு இறைச்சிக்காகக் கடத்தப்படும் மாடுகளைப் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. பசு என்றாலே அது எருமை எல்லாவற்றையும் சேர்த்தே குறிக்கும் என்று சொல்லப்பட்டது. இதிலிருந்தே எனது குழப்பம் தொடங்கிவிட்டது. பசுவதை பற்றிய ஒரு தெளிவின்மை எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு ஆன்மிக ஹிந்துவாக என்னால் நிச்சயம் பசுவதையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஓர் சக ஹிந்துவாக, மாட்டிறைச்சி சாப்பிடுவர்களைக் கேவலமாக நினைக்கவும் என்னால் முடியாது. எனவே இதுகுறித்த குழப்பம் எப்போதும் எனக்கு உண்டு. இந்த ஆவணப்படம் அந்தக் குழப்பத்தைப் பன்மடங்கு கூட்டிவிட்டது என்றே சொல்லவேண்டும்.

பசுவதைத் தடை என்பதை ஹிந்து அமைப்புகள் இன்னும் தெளிவாக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஒட்டுமொத்த பசுக்கொலை தடை என்று தொடங்கினால் அது வெற்றி பெறும் வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இருக்காது என்றே உறுதியாகத் தோன்றுகிறது. ஒட்டுமொத்த பசுவதைத் தடை என்பது, பல்வேறு சாதிகளின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக ஆகிவிடும் என்பதால் இதனை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. தலித்துகள், பழங்குடிகள் உள்ளிட்ட, மாட்டிறைச்சியை உண்ணும் உணவுப் பழக்கம் உடைய சாதிகளின் பங்கேற்பில்லாமல் இப்பசுவதை எதிர்ப்பை மேலே கொண்டு போகவே முடியாது. எத்தனையோ தலித்துகள் இன்றும் பசுவதையை ஏற்பதில்லை. உண்மையில் பசுவதை எதிர்ப்பு அவர்கள் மூலம் அவர்களில் இருந்தே தொடங்கவேண்டும். அம்பேத்கர், தலித்துகள் இறந்த பசுக்களின் தோலை உரிப்பதிலிருந்தும், அவற்றின் இறைச்சியை உண்பதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என நண்பர் ஒருவர் சொன்னார். இங்கிருந்தே நாம் தொடங்கவேண்டும். பசுவதை (அதாவது பசுவைக் கொல்லுதல்) என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதை அம்பேத்கர் ஏற்காததன் சூட்சுமம், தலித்துகள் மற்றும் பழங்குடிகள் பற்றிய அவரது பார்வையில் உள்ளது. இதே பார்வையே நேருவுக்கும் இருந்திருக்கவேண்டும்.

ஆவணப்படத்தைப் பற்றிய ராதா ராஜன் நேரு மீது குற்றம் சாட்டும் தொனியில்தான் பேசினார். அவரது குற்றம் சாட்டுதல் அவரது பார்வையிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் ஒரு பெரிய இயக்க முன்னெடுப்பு ஒருவரது அல்லது சிலரது தனிப்பட்ட பார்வையில் ஏற்படும் புரிதலை அடிப்படையாகக் கொண்டு நடக்கமுடியாது என்பதே உண்மை. எனவேதான் காந்தி பசுவதைத் தடை என்பது தனிப்பட்ட மனிதரின் மனங்களில் நிகழும் மாற்றமாக இருக்கவேண்டும் என்றார் போல. சட்டத்தின் மூலமாக இதனைச் செய்யமுடியாது. செய்தால் அது ஹிந்து மதத்தில் சாதி ரீதியான பிளவை இன்னும் ஆழமாக்கும். 

அது மட்டுமல்ல. நேரம் பார்த்துக் காத்திருக்கும் கிறித்துவ மதம் பரப்பும் குழுக்களுக்கு பந்தி விரிப்பது போல் ஆகிவிடும். நேரு அரசின் போது பசுவதைத் தடைச் சட்டம் வருவதை அரசில் இருந்த அத்தனை முஸ்லிம்களும் வரவேற்றார்கள். ஆனால் நேரு பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவில்லை. மாறாக ஒரு குழுவை நியமித்து அதன் கருத்துகளைக் கேட்டார். அக்கருத்துகளையும் செயல்படுத்தவில்லை. இந்திராவின் ஆட்சிகாலத்திலும் பசுவதைத் தடைச் சட்டம் குறித்து ஒரு குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் கோல்வல்கரும் இருந்தார். இது பற்றிய மேலதிகத் தகவல்களைப் படிக்கவேண்டும். இந்த ஆவணப்படத்தின்படி, இக்குழுவின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. வாஜ்பாய் அரசிலும் இன்னொரு குழுவிடம் கருத்துக் கேட்கப்பட்டதாம். அக்குழுவின் கருத்துகளும் வெளியிடப்படவில்லை போல. வாஜ்பாயும் நேரு போல் அம்பேத்கர் போல் சிந்தித்திருக்கவேண்டும். 

பசுவதைத் தடைச் சட்டம் என்பது, உயிர்க்கொல்லாமை என்பதை ஒட்டி சிந்திக்கக்கூடிய ஆளவுக்கு மேம்போக்கானதல்ல. நிச்சயம் ஆழமானது. இந்தியாவில் சிறிய சிறிய குழுக்களாக இருந்தாலும் பல்வேறு நுண்மைகளுடன் வேர்கொண்டிருக்கும் பல்வேறு சாதிகளின் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் ஒட்டியது. அதைக் கணக்கில் கொள்ளாமல் நாம் பேசமுடியாது. அந்த சாதிகளின் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஒரு மக்கள் இயக்கமாக பசுவதைத் தடையை மேலே கொண்டு போகவும் முடியாது. இந்த ஆவணப்படம் வெளியீட்டின்போதே இச்சாதிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் பசுவதை தடை பற்றிய மன மாற்றத்தை நோக்கி நாம் முன்னேற முடியும். பசுவதை எக்காரணம் கொண்டும் ஏற்காத என்னைப் போன்றவர்கள்கூட, ஹிந்து தர்மத்துக்குள் இருக்கும் பல சாதிகளின் கண்ணோட்டங்களைப் பார்க்க யோசிக்கும்போது, அந்த அந்த சாதிகளின், அதுவும் பசுக்கொலை ஒரு பெரிய தவறல்ல என்று நினைக்கும் சாதிகளின் ஆதரவைப் பெறுவது எத்தனை சிக்கலானது என்று புரிந்துகொள்ளலாம். இவர்களை நோக்கியே நாம் பசுக்கொலையைப் பேசவேண்டும்.

முஸ்லிமகள் சில இடங்களில் பசுக்கொலையை ஹிந்துக்களுக்கு எதிரான சிம்பலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பதிலுக்கு பன்றி இறைச்சி நல்லது என்பதுபோன்ற ஹிந்துக்குரலையும் கேட்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் விட, பசுவதை என்பது ஹிந்துக்களுக்குள்ளான பெரிய பிரச்சினையே அன்றி ஹிந்து முஸ்லிம் பிரச்சினை அல்ல என்று ராதா ராஜன் சொன்னார். இது சரியானதே. எப்போது அது ஹிந்துக்களின் தோல்வியாகிறதோ, அப்போது நாம் அனைத்து ஹிந்துக்களிடமும் அதாவது அனைத்து சாதிகளிடமும் இருந்து நம் பேச்சைத் தொடங்கவேண்டும். அதற்கு முதலில் நாம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதன் பெயரில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிப் பேசவேண்டும். இல்லையென்றால், ‘எங்களைக் காப்பாத்தவே நாதியில்லை. இதில் மாடுகளைக் காப்பாத்துறது அதைவிட முக்கியமா போச்சா?’ என்ற குமுறலுக்கு பதில் இல்லாமல் ஓடி ஒளியவேண்டியிருக்கும்.

ஆவணப் படம் தொடர்பாகச் சொல்லவேண்டுமானால், இந்த ஆவணப்படம் மனதை உலுக்கக்கூடியதாக, உயிரை அறுக்கக்கூடியதாக இல்லை. சாதாரணமாக நாம் பார்த்து பார்த்து மரத்துப் போய்விட்ட, வண்டிகளில் கூட்டம் கூட்டமாக அள்ளிச் செல்லப்படும் மாடுகளையே காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய அரங்கத்தில் பலர் இதனைப் பற்றிப் பேசி, அதற்குப் பிறகு பார்க்கும்போதுகூட ஒரு மெல்லிய பாவம் மட்டுமே தோன்றுகிறது. நாம் மனமும் மூளையும் மழுங்கடிக்கப்பட்டுவிட்ட என்னைப் போன்ற மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியானால் அதை உடைக்கிற உளியின் சக்தியும் அதற்கு இணையான, அதைவிட அதிகமான வலு கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வலு இந்த ஆவணப்படத்தில் இல்லை. ப்ரீச்சிங் டூ தி கன்வர்டட் வகைக்கு மட்டுமே சில உச் உச் த்ஸொ த்ஸொ வரும். மற்றவர்கள் இதனை எளிதாகப் பத்தோடு பதினொன்றாகக் கடப்பார்கள். இப்படிச் சொல்வதால், இந்த ஆவணப் படத்தின் பின்னாலுள்ள உழைப்பை, தியாகத்தை நான் கண்டுகொள்ளவில்லை என்பது அர்த்தமல்ல. இதில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் என் கோடி வணக்கங்கள். ஆனால் உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று மட்டுமே சொல்லவருகிறேன். 

மற்ற சாதிகளின் கருத்துக்களோடு, இது மக்களுக்கான இயக்கம் என்று சொல்ல வைக்கிற வகையிலான ஆவணப்படமே பசுவதைத் தடை குறித்த முக்கியமான ஆவணப்படமாகத் திகழமுடியும். அதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும் என்று நம்புவோம். ஆவணப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

புதுகை அப்துல்லா

unread,
Oct 8, 2012, 3:05:25 AM10/8/12
to marat...@googlegroups.com
// ஆலயத்தின் பல்வேறு சொத்துகள் இன்று அரசால் எப்படி கபளீகரம் செய்யப்படுகின்றன என்றெல்லாம் எடுத்துரைத்தார்கள். ஹிந்து ஆலயங்களை அரசிடமிருந்து மீட்டு அவற்றை ஹிந்து அமைப்புகளிடம் கொடுப்பதே ஒரே வழி என்றெல்லாம் சொன்னார்கள். 

//

ஹிந்து ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் குறிப்பிடும் போது ஹிந்து அடிப்படைவாத இயக்கங்கள் ஒவ்வொருவரும் மறவாமல் சொல்லும் மற்றொரு வாதம் "தேவாலயங்கள்,பள்ளிவாசல்கள் போன்றவை அந்தந்த மதங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது ஹிந்து ஆலங்களில் அரசுக்கு என்ன வேலை?"  இதில் கிருஸ்துவ ஆலயங்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்ய வஃபு போர்டு என்று ஒரு வாரியம் உண்டு. அதற்கு ஒரு வாரியத் தலைவரும் உண்டு..அமைச்சரும் உண்டு.( அறநிலையத் துறை அமைச்சர் போல). தனக்கு ஆதாயம் இல்லாத இடத்தில் இப்படி அமைச்சர் நிர்ணயிக்கும் அளவிற்கு அரசுக்கு என்ன வேலை? ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு தனது பட்ஜெட்டில் வரி நீங்கலாகக் கிடைத்த வருவாயைக் குறிப்பிடும் பகுதியில் வஃபு மூலம் ( பள்ளிவாசல்கள்,தர்ஹாக்கள் மூலம்) கிடைத்த தொகையைக் குறிப்பிடும். பள்ளிவாசல்கள் இஸ்லாமியர்களின் கையில் முழுவதுமாக இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். கிளப்பிவிடும் தகவல் 100% தவறு. கோவில்களின் நிலைதான் பள்ளிவாசலுக்கும்..




--
m.m.abdulla
93813-77888


தமிழால் இணைவோம்
Reply all
Reply to author
Forward
0 new messages