பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்துக்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்று, பி.இ., இடம் கிடைத்தும் கல்விக் கட்டணம் செலுத்த இயலாமல் 100க்கும் அதிகமான மாணவர்கள் தவித்து வருகின்றனர். படிப்பைத் தொடர முடியாததால், விரக்தியில் தற்கொலை செய்யும் நிலையில் தவிக்கின்றனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் கவுன்சிலிங் மூலம் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் 5,000 ரூபாய் செலுத்தினால் போதும்; இடம் கிடைத்து விடும் என்று நம்பி மாணவர்கள் வருகின்றனர். ஆனால், இங்கு வந்த பிறகு தான், கவுன்சிலிங்கில் 5,000 கட்டிய 13 நாட்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட கல்லூரியில் 21 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்ற உண்மை மாணவர்களுக்குத் தெரிகிறது.
அதன் பிறகு, கல்லூரி கொடுக்கும் நம்பகச் சான்றிதழை வங்கியில் கொடுத்தால், உயர்கல்விக்கான கல்வி உதவித் தொகை கிடைக்கும் என்ற நடைமுறை புரிகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய கிராமப்புற குடும்பத்தினர், 13 நாட்களுக்குள் குறிப்பிட்ட தொகையை கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இதனால், அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும், கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியில் சேர முடியாமல் தவிக்கின்றனர். அரசின் கனிவுப் பார்வை விழுந்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,000க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற 100 மாணவர்கள், இந்த ஆண்டில் பி.இ., இடம் கிடைத்தும், பணம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து வெளிச்சம் அமைப்பின் தலைவர் ஷெரின் கூறியதாவது: எங்கள் அமைப்பின், "ஹெல்ப் லைனிற்கு' கடந்த இரண்டு மாதங்களில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்விக்காக உதவித்தொகை வேண்டி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 17க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். பெண் குழந்தைகளின் நிலை இதை விட மோசம். அவர்கள் படிப்பதை பெற்றோரே எதிர்க்கின்றனர். மாணவர்கள் விரக்தியில் சான்றிதழை கிழித்துப் போடுகின்றனர். இவ்வாறு ஷெரின் கூறினார்.
நன்றி : தினமலர்