பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட பின்னும் தன்னை இதுவரை சிறப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்படாததை கண்டித்து, அரசாங்க ஆணையைசெயல்படுத்த கோரி பூந்தமல்லி சிறப்புமுகாமில் சந்திர குமார் இன்று முதல் மீண்டும் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
ஈழத்திலிருந்து இறுதி யுத்தத்திற்கு பின் அகதியாக தமிழகம் வந்த சந்திரகுமார் எந்த வித அடிப்படை ஆதாரமுமின்றி 09.06.2010 அன்று பொய் குற்றச்சாட்டில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவருக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட நிலையில். கியூ பிரிவு போலீசார் இவரை நீதிக்கு புறம்பாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் 17.06.2010 அன்று அடைத்தனர்.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறப்புமுகாமில் இருக்கும் அனைவரையும் திறந்தவெளி முகாமிற்கு மாற்றக்கோரி சந்திரகுமார் கடந்த மார்ச் 27 அன்று உண்ணாவிரதம் தொடங்கினார். உண்ணாவிரதம் இருந்த இவரை சந்திக்க இவரது மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவரது மனைவியும் முகாம் வாசலில் தனது இரண்டு குழந்தைகளோடு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். முகாம் வாசலில் உண்ணாவிரதம் இருந்த சந்திரகுமாரின் மனைவியை அவரது இரண்டு குழந்தைகளோடு கைது செய்த காவல்துறையினர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர். இதை கேள்விப்பட்ட சந்திரகுமார் 42 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இதனால் இவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையிலும் தனது கோரிக்கையிலிருந்து சற்றும் பின்வாங்காத சந்திரகுமார் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார்.
14 நாட்கள் தொடர்ந்த உண்ணாவிரதத்தையடுத்து மக்கள் சிவில் உரிமை கழகத்தின்(PUCL) தேசிய செயலாளர் டாக்டர் சுரேஷ் அவர்கள் சந்திரகுமாரை சிறப்புமுகாமிர்க்கு சென்று சந்தித்தார். அவரின் கோரிக்கையை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவரளித்த வாக்குறுதியை அடுத்து சந்திரகுமார் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
பூந்தமல்லி சிறப்பு முகாமில் கடந்த 3 ஆண்டுகளாக சட்டவிரோதமாக அடைக்கப்பட்டிருந்த சந்திரகுமார் கடந்த மே 18 தேதி PUCL அமைப்பின் தீவிர முயற்சிக்கு பின் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டு அதற்க்கான ஆணையும் அவரிடம் அளிக்கப்பட்டது.
ஆனால் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டும் அவர் இதுவரை சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யப்படவில்லை. எனவே அரசாங்க ஆணையைசெயல்படுத்கோரி சந்திரகுமார் இன்று முதல் மீண்டும் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.