Muthamizh Vendhan
unread,May 27, 2013, 7:04:31 AM5/27/13Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Sign in to report message as abuse
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Muthamizh Vendhan
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, வரும் 28.05.2013 செவ்வாய் அன்று காலை 10 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் முன், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
வரும் 2013 சூன் மாதத்திலிருந்து தமிழக அரசின் 3200 தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் முதல் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, இதுவரை தமிழில் நடத்தப்பட்டு வந்த அறிவியல், சமூகவியல் ஆகிய பாடங்கள் இனி ஆங்கில மொழியில் நடத்தப்படும்.
10.05.2013 அன்று நிதிநிலை அறிக்கையின் கல்விமானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு விடையளித்துப் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அவர்கள், 3200 பள்ளிகளில் மட்டுமல்ல, பெற்றோர்கள் விரும்பினால் எல்லாப்பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்குவோம் என்று அறிவித்தார்.
ஆங்கிலத்தை மொழிப் பாடமாக(Language) கற்பிப்பதை நாம் ஆதரிக்கிறோம். அம்மொழியைச் சிறப்பாகக் கற்பிக்க ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இப்போது பெரும்பாலும் வரலாறு, பொருளியல், கணக்கு, வணிகவியல் ஆகியவற்றைப் படித்த இளநிலைப் பட்டதாரிகளோ அல்லது முதுகலைப் பட்டதாரிகளோ தான் ஆங்கில ஆசிரியராக உள்ளார்கள்.
கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களை ஆங்கில வழியில் படிக்கும் போது மாணவர்களுக்கு மனனம் செய்யும் சுமை ஏற்படுகிறதே தவிர, இயல்பாக அவற்றைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழி மூலம் கல்வி கற்பதே சிறந்த வழி என்று உலகெங்கும் கல்வி இயல் வல்லுநர்களும் குழந்தை உளவியல் வல்லுநர்களும் கூறுகிறார்கள். சற்றொப்ப எல்லா நாடுகளிலும் தாய்மொழி வழியிலேயே தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்விவரை, கற்பிக்கிறார்கள்.
தமிழ் தவிர இதரப் பாடங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும்போது, கிராமப்புற மாணவர்கள், அட்டவணை வகுப்பு மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மற்றும் பெண்கள் இயல்பாகப் புரிந்து கொள்ளாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் சுமைக்கு ஆளாவார்கள். இவர்கள் நகர்ப்புற, மற்றும் முன்னேறிய வகுப்பு மாணவர்களோடு போட்டியிட முடியாமல் பின்தங்கி விடுவார்கள். தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி, மனப்பாதிப்பு அடைவார்கள். இதனால் கூடுதல் மதிப்பெண் பெற முடியாமல் பின்தங்கி விடுவார்கள்.
எனவே தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் திணிப்பதைக் கைவிட வேண்டும்.
பெற்றோர்கள் தமிழ்வழி வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்காமல், ஆங்கில வழி வகுப்புகளுக்காக தனியாரின் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அதனால் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாமல் அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை உள்ளது என்று தமிழக அரசு, ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதற்கான காரணத்தைக் கூறுகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் முடிவை எதிர்த்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் பின் வரும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது .
1. 1 முதல் 12 வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
2. அரசுப்பள்ளிகளின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும். தண்ணீர்க்கும் துப்புரவிற்கும் தட்டுப்பாடில்லாத கழிவறைகள், விளையாட்டுத் திடல் போன்றவை வேண்டும். விளையாட்டு, ஓவியம், இசை போன்ற துறைகளுக்குத் தனித்தனி ஆசிரியர் வேண்டும்.
3. மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற தொழிலியல் படிப்புகளின் மாணவர் சேர்க்கையில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். ஏனெனில் அவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.
மேற்கண்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஆங்கில வழி வகுப்புகளைப் பெருமெடுப்பில் அரசுப் பள்ளிகளில் தொடங்கினால், கிராமப்புற, அட்டவணை வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாகப் பெண்கள் பாதிக்கப்படுவர். அத்துடன் தமிழ் மொழியின் அழிவுக்கும் அது வழி கோலும் என்றும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
28.05.2013 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சைதை சிவா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கச் செயலர் தோழர் தியாகு, தமிழர் கழகத் தலைவர் புதுக்கோட்டை இரா.பாவாணன், தமிழ்த் தேச மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்நேயன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய இயக்கத் தோழர் செ.ப.முத்தமிழ் மணி, தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் ப.வேலுமணி, தமிழ்த் தேசக் குடியரசு இயக்க அமைப்பாளர் தோழர் சிவ.காளிதாசன், தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், கவிஞர் இன்குலாப், தலைநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் புலவர் த.சுந்தரராசன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மக்கள் கல்வி இயக்க அமைப்பாளர் பேராசிரியர் பா.கல்விமணி, உலகத் தமிழ்க் கழக சென்னை மாவட்டத் தலைவர் புலவர் பா.இறையெழிலன், சேவ் தமிழ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கசேந்திர பாபு, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற அமைப்பாளர் திரு. சீ.தினேசு, தமிழர் குடியரசு முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம.செயப்பிரகாசு நாராயணன், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, தமிழ் மீட்புக் கூட்டமைப்பு திரு. அ.சி.சின்னப்பத்தமிழர், திருவள்ளுவர் வாழ்வியல் மன்ற அமைப்பாளர் கவிஞர் செவ்வியன், எண்ணம் அறக்கட்டளை திரு. கா.தனசேகரன் உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.
இப்போராட்த்தில், தமிழ் மீதும் கல்வி மீதும் அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டுமென தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.