சிறப்பு முகாமில் இருந்து வெளியேற்றி திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் பட்டினிப் போராட்டம்!
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மேல் வழக்குகள் இருந்தாலும் , இல்லையென்றாலும் இவர்களை தமிழக காவல்துறை விடுவிப்பதில்லை. தங்களை விடுவிக்கக் கோரி ஈழத் தமிழர்கள் பல முறை பட்டினிப் போராட்டம் நடத்தி உள்ளனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகதமிழர் நலன் சார்ந்த கட்சிகளும் பல முறை முற்றுகை போராட்டம் செய்துள்ளன. அதன் பின் இரண்டு மூன்று பேர்களை காவல்துறை விடுதலை செய்யும். பின்பு ஐந்து அல்லது ஆறு பேர்களை சிறப்பு முகாமில் கொண்டு வந்து அடைத்து விடும் .
இந்நிலையில் சென்ற வாரம் வழக்கத்திற்கு மாறாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து ஐந்து நபர்களை காவல்துறை வெளியேற்றி அவர்களை திருச்சி சிறைச் சாலையில் அடைத்து வைத்தது. வெளிநாட்டு வாழ் மக்களின் சட்டப்படி ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்து வைக்கக் கூடாது. அவர்களை சிறப்பு முகாம்களில் தான் அடைத்து வைக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு , இந்த ஈழத் தமிழர்களை சிறப்பு முகாம் என்று சொல்லி சட்டவிரோதமாக திருச்சியில் உள்ள துணை சிறையில் அடைத்து வைத்துள்ளது. மேலும் இவர்களை சிறைவாசிகளை போலவே நடத்த உத்திரவிட்டுள்ளது. சிறப்பு முகாம்களில் உறவினர்கள் வந்து பார்வையிடலாம். அலைப்பேசி கணினி கருவிகளை பயன்படுத்தலாம். சிறையில் இதற்கெல்லாம் அனுமதி இல்லை. மேலும் அவர்களின் உணவை கூட கிண்டி கிளறி சோதனையிட்ட பின்பே ஈழத் தமிழர்களுக்கு தரப்படுகிறது. கழிவறைக்கு செல்லும் போது கூட காவல்துறையினர் கூடவே வருகின்றனர். இப்படியாக முகாம்வாசிகளை சிறைவாசிகளாக பாவிக்கிறது காவல்துறை,
இந்த கொடுமைகளை கண்டித்தும் , தங்களை திறந்தவெளி முகாமிற்கும் மாற்றும் படியும் கோரிக்கை வைத்து சாகும்வரை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்த ஈழத் தமிழர்கள் . அவர்கள் பெயர்கள் வருமாறு சௌந்தராஜன், ஈழ நேரு, செல்வராஜா, தவதீபன் மற்றும் இலங்கை நாதன். இவர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை பட்டினிப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
ஈழத் தமிழர் நலனில் உண்மையான அக்கறை தமிழக அரசுக்கு இருக்குமே எனில் முதலில் இந்த சிறையில் இருந்து ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது .