மாயக்கண்ணாடி - விமர்சனம்
சேரன், நவ்யா நாயர், ராதாரவி, வினோத்ராஜ், பிரகாஷ், உமாபதி நடிப்பில் இளையராஜாவின் இசையில் துவாரகநாத்தின் ஒளிப்பதிவில் கதை, திரைக்கதை எழுதி சேரன் இயக்கியுள்ளார். செல்லம்மை செல்லுலாய்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளவர் அரு. சுப்ரமணியம்.
இந்தச் சமுதாயத்தில் சிலரிடம் மட்டும் பணம் குவிகிறது. உழைப்பு குறைவு ஆனாலும் பகட்டான வாழ்க்கை வாழ்கிறார்கள். சிலர் எவ்வளவு உழைத்தாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது. அனுபவித்து மகிழ ஆயிரம் வசதிகளும், இன்பங்களும் கண் சிமிட்டி அழைக்கின்றன. ஆனால் அதற்கு தேவையான காசு பணம் கையில் கிடைப்பதில்லை. சில கூட்டம் மட்டும் ஏராளமாக சம்பாதிக்கிறது. தாராளமாக அனுபவிக்கிறது. இது எப்படி? இதுதான் இன்றைய நடுத்தர மக்கள் மத்தியில் நிலவும் மில்லியன் டாலர் கேள்வி.
ப்ளஸ் டூ படித்த சேரன் ஒரு ப்யூட்டி சலூனில் வேலை பார்க்கிறார். அவருக்கும் அங்கு பெண்கள் பிரிவில் வேலை பார்க்கும் நவ்யா நாயருக்கும் காதல். நடுத்தர வர்கத்துக் காதல். உலகை அனுபவிக்க மனம் துடித்தாலும் வசதி இடம் தரவில்லை. ஒரு வருடத்தில் இரண்டு லட்ச ரூபாய் சம்பாதித்துக் காட்டினால் தன் பெண்ணை கட்டிக் கொடுப்பதாக நவ்யாவின் தந்தை கிடுக்கிப் பிடி போட... சேரனுக்கு அலைபாயுது மனசு. எப்படி பணம் சம்பாதிப்பது? எதைச் செய்தால் வசதியாவது? எப்படியோ எதையாவது செய்து உயர வேண்டும் என்று அரிக்கிறது மனசு.
துடிக்கிற வயசு. கையிலிருக்கும் தொழிலை மறந்துவிட்டு விலகி வேறு பாதையில் செல்ல முயல்கிறார். இன்யூரன்ஸ் ஏஜென்டாக முயற்சி. திரை நடிகராக முயற்சி.. இப்படி விரைவில் பணம் கொட்டும் என்று வெவ்வேறு களங்களில் இறங்க... அங்கங்கே பல தடைகள் போராட்டங்கள், சிக்கல்கள், விளைவு? தோல்விகள்.
கடைசியில் அம்மாவுக்கு ஆபரேஷன். ஒன்றரை லட்சம் பணம் புரட்ட வேண்டும். பணத்துக்காகத் தத்தளிக்கிறார். ஒரு கரம் தூக்கி விடுகிறது. ஆனால் அதற்கான விலை சட்டவிரோத காரியம் செய்ய வேண்டும். கஞ்சா கடத்தல். தானே தேடிச் சிக்கிய வலை. இந்தத் திரைமறைவு தொழிலில் இறங்கி வேலை பார்க்கும் சேரன், போலீஸில் சிக்குகிறார். சிறைத் தண்டனை. இறுதியில் திருந்தி திரும்பி வருகிறார்.
வேலையை விட்டுப் போன இடத்திலேயே வாய்ப்பு கேட்டு கெஞ்சுகிறார். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்கும் ஊசலாட்டம் இல்லாத மனநிலையுடன் சேரன், தெரிந்த பாதையில் தெளிவாக நடக்க ஆரம்பிக்கிறார். மீண்டும் முடி திருத்தும் வேலை. மறுபடியும் ஜிகினாக்கள் ஆசையாய் கண் சிமிட்டுகின்றன. அசைந்து கொடுக்காத மனநிலையுடன் அவற்றை அலட்சியம் செய்து வாழ்க்கையைத் தொடர்கிறார் சேரன்.
கற்பனையைக் கொண்டும், பல படங்களைப் பார்த்தும் படமெடுப்பவர்கள் மத்தியில் வாழ்க்கையைப் பார்த்து அப்படியே பதிவு செய்கிறவர் சேரன். மாயக்கண்ணாடியிலும் அதையே செய்திருக்கிறார். சாதாரணமான கண்ணாடி உள்ளதை உள்ளபடி பிம்பமாகக் காட்டும். ஆனால் மாயக்கண்ணாடி நிஜத்தைக் காட்டாது. பிம்பத்தை மாற்றிக் காட்டும். அதை நிஜ உருவமென நம்பினால் துன்பத்தையே அடைய நேரிடும் என்று கூறியிருக்கிறார்.
திடீரென்று வரும் வசதிகளுக்குப் பின் பல தவறுகள், குற்றங்கள் இருக்கக் கூடும். அவை நிலைக்காத வாழ்க்கை ஆகிவிடும். பெரிய பணக்காரர்களின் பின்னணியில் நிழல் உலகம் இருக்கும். அதைச் செய்ய அசாத்திய துணிவு வேண்டும். எந்நேரமும் சிறை செல்ல வேண்டிய சவாலும் அவமானப்பட வேண்டிய அவசியமும் இருக்கும். அந்த திகில் வாழ்க்கை, நடுத்தர வர்கத்து மனசாட்சிக்கு சாத்தியமில்லாதது என்று அழகாகச் சொல்லியிருக்கிறார்.
பறந்தவன் கீழே விழுந்து விடக் கூடும். ஆனால் நடந்தவன் ஊர் போய்ச் சேர்ந்து விடுவான் என்பது மெல்ல முன்னேறி உயரும் சேரனின் நண்பன் பாத்திரம் மூலம் சொல்லப்பட்டு உள்ளது.
அப்படியானால் நடுத்தர வர்க்கம் உயரவே முடியாதா... ஏழைகள் ஏற்றம் காணவே முடியாதா? முடியும். வெறும் நம்பிக்கை வாழ்க்கையாகாது. முயற்சி வேண்டும், உழைப்பு வேண்டும் தளராத மனம் வேண்டும். கொள்கையில் லட்சியத்தில் தெளிவு வேண்டும் என்றும் கூறுகிறார் சேரன்.
படத்தின் நாயகனாக ஒரு முடித்திருத்தும் தொழிலாளி. இப்படிப்பட்ட தளத்தை கதைக் களத்தை தேர்ந்தெடுத்த சேரனின் துணிவுக்கும், தெளிவுக்கும் ஒரு சல்யூட். முடி திருத்தும் கலைஞராக வாழ்த்திருக்கிறார் சேரன். முதலாளி ராதாரவியும் நடிப்பில் தான் சாதாரவி அல்ல என நிரூபித்துள்ளார். அலட்டாத நடிப்பால் சேரனின் நண்பனாக வரும் டீ மாஸ்டரும் நினைவில் நிற்கிறார்.
அடிக்கிற பந்தெல்லாம் சிக்சராக்கும் பேட்ஸ்மேன் போல அனைவரது கவனத்தையும் அள்ளிக் கொண்டு போகிறார் நவ்யா நாயர். அப்பப்பா என்ன யதார்த்தமான நடிப்பு. சேரனுடன் டூ வீலரில் சுற்றும் போது இளமை துறுதுறுப்பு. மாளவிகாவுக்கு முடி அலங்காரம் செய்யும்போது படபடப்பு, முதலில் சினிமாவில் தலை காட்டிவிட்டு வரும் சேரனிடம் கேட்கும் ஆர்வம், துடிதுடிப்பு, தன் அப்பாவிடம் திருமணம் வேண்டாம் என்று கூறும்போது கோபம், ஆத்திரம், அழுகை, கையாலாகாத்தனம் என எல்லா வெளிப்பாடுகளுக்கும் சபாஷ் சொல்ல வைக்கிறார்.
படம் பார்க்கும்போது திரைப்படத்துக்கான செயற்கையான திருப்பங்கள் இல்லாமல் கதையை அதன் போக்கில் நகர்த்தி நடந்து போக வைத்திருக்கிறார் இயக்குநர். எனவே ஓர் ஆற்றைப் போல வளைந்து செல்கிறது. அதுவே இயல்பாக இனிமையாக இருக்கிறது.
சரியான தளம் கிடைத்தால் புகுந்து விளையாடுவார் என்று இளையராஜா நிரூபித்து இருக்கிறார். மாயலோகம், கொஞ்சம் கொஞ்சம், ஏலே எங்க வந்த, உலகிலே அழகி நீதான், காசு கையில் இல்லாட்டா என ஐந்து பாடல்கள். பஞ்சபாண்டவர்களாக ஐந்து கவிஞர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். சுகம்.
சரத்குமார், ஆர்யா, மாளவிகா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்கள்.
இயல்பான பாங்கில் திரைக்கதை நெய்திருக்கிறார். கையில் கத்தரிக்கோல் வைத்திருப்பதாலோ என்னவோ பல காட்சிகள் நலுக்குத் தெறித்தாற் போல உள்ளன. சேரனின் பேனாவும் கூர்மையாகியுள்ளது. பல இடங்களில் பளிச்சிடும் வசனங்கள் தெரிக்கிறது. வாழ்க்கை என்பது ஆயிரங்கால் மண்டபம் அதை ஒரே கல்லால் எழுப்ப முடியாது. ஏழையின் கனவு நிறைவேற மூன்று தலை முறை காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் ராதாரவி பேசும் வசனங்கள் ஒளிவிடுகின்றன.
இன்றைய இளைஞர்களின் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஊசலாடும் உணர்வுகளுக்கு ஒரு பிரேக் போட்டு, கருத்து சொல்கிறார் சேரன். அகலமாக சிந்திப்பதைவிட ஆழமாக சிந்தித்துக் கவனத்தைக் குவித்தால் வெற்றி வரும் என்கிற இயக்குநர் சேரனை நிச்சயம் பாராட்டலாம்.