காலையில் அம்மாவிடம்
பிஸ்கட், சிப்ஸ்களை டப்பாவில் அள்ளிக்கொண்டு, வீட்டினருகில் நிற்க்கும் பள்ளிக்கூட
பஸ்ஸில் செல்ல ஆசையில்லை எனக்கு,
நேற்று தண்ணீர் ஊற்றி வைத்த சோற்றில்,
மோர் ஊற்றி, இரண்டு சிறுவெங்காயம்
வைத்த, பித்தளை தூக்கு சட்டியை
தூக்கிக்கொண்டு, வாசலில் நிற்க்கும்
சூசையுடனும், இன்னும் அம்மாவுடன்
ஐந்து காசுக்கு வாக்குவாதமிடும்,
செல்வனுடனும் செல்ல ஆசை,
பஸ்ஸில் அமர்ந்திருக்கும்
டீச்சரை பார்த்ததும் பம்மிக்கொண்டு
பள்ளிவரை தலை குனிந்து செல்ல
ஆசையில்லை எனக்கு,
ஆடுகள் திண்ற காட்டு துளசிசெடியின்
மணத்தில், சப்பாத்தி கள்ளியின்
சிவந்த பழத்தை உதடுகளில் பூசி,
உல்லாச நடை பயில ஆசை,
அம்மா கொடுத்த வாட்டர் பாட்டிலில்
தண்ணீர் குடிக்க போய், அது பஸ்ஸின்
ஆட்டத்தில் யூனிபாமில் பட்டு
ஈர உடையுடன் டீச்சரிடம் தீட்டு வாங்க
ஆசையில்லை எனக்கு,
நடேசன் தாத்தாவின் தோட்டத்தில் ,
பம்புசெட்டின் மூலம் சின்ன,
வாய்க்காலில் பாய்ந்து வரும் ,
அமிழ்தமதை மாடுபோல்,
முட்டி போட்டு கையிருந்தும்
வாயினால் உறிஞ்சி குடிக்க ஆசை,
பக்கத்தில் அமர்ந்திருக்கும்,
சைலேசின் வீட்டில் அவர்கள் ,
அப்பா புதிதாக டீவீ வாங்கி ,
வந்த கதையை கேட்க ,
ஆசையில்லை எனக்கு ,
அடியே நேத்து எங்கப்பா,
டவுனிலிருந்து சுவீட்டு வாங்கி வந்தாருடீ,
சும்மா சூப்பார இருந்துச்சி ,
சயந்திரம் வா தரேன் பள்ளீயோடத்துக்கு ,
கொண்டுபோனா டீச்சர் தீட்டும்னு ,
எங்க அம்மா சொல்லுச்சி ,
என்று சொல்லும் நன்பனுடன்,
செல்ல ஆசை,
டை சரியாக கட்டாததால்,
10 பைனும் சூ பாலீஸ் போட்டு ,
வராததால் 10 பைனும் போடும் ,
ஸ்போட் டீச்சரிடம் பயில ,
ஆசையில்லை எனக்கு ,
டேய் டவுசர் பட்டனை
போடுடா செருப்பை வகுப்பரையின் வாசலின்
முன்பு போடாம ஓரமா
போடுன்னு எத்தனை தடவை
சொல்ரது என பிரம்பெடுத்து
மிரட்டும் பி டீ வாத்தியாரிடம்
மீண்டும் படிக்க ஆசை
நகரத்தில் ஆங்கிலம் படிக்க ஆசைதான்
ஆனால் தமிழ் பேசினால்,
100 ரூபாய் பைன் என்று சொல்லும்,
வட்டிக்கடைக்கார கூட்டம் நடத்தும்,
காண்வென்டில் படிக்க ஆசையில்லை,
மாலையில் தலைமை ஆசிரியர்,
எங்களை புங்கை மர நிழலில்,
அமர்த்தி அங்கு மேய்ந்து ,
கொண்டிருக்கும் ஆடுகளை ,
மேய்ப்பவர்களுக்கும் ,
புரியும் படி சொல்லித்தரும் ,
அருமை ஆங்கிலம்
எனது கிராமத்திலேயே தமிழின்
மூலம் படிக்க ஆசை ,
ஆசை ஆசையாய் இருக்கிறது
ஆனால் அவைகள் என்னோடு
மூழ்கிவிடுமோ என்று கவலையாய் இருக்கிறது
ஏனெனில் தமிழகத்தில் தமிழ்கடவுளின்
கோவிலில் தமிழ் படித்தால் தீட்டு வந்து
விடுமென்கிறார்கள் எனக்கு அங்கு சென்று
ஞான சம்பந்தர் கொடுத்த
மெய்ஞானத்தமிழ் படிக்க ஆசை