தமிழ் வளர்ச்சித்துறையின் சேலம் மாவட்ட 'தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கமும் கருத்தரங்கமும்' சிறுமலர் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
இந்நிகழ்வுக்கு கிட்டத்தட்ட ௦௦ 400 க்கும் மேற்பட்ட காவல்துறை, அரசு துறை,கல்வித்துறை என அரசு ஊழியர்கள் பங்கு பெற்றனர் இதில் சேலம் மண்டல துணை தலைவர் உயர்திரு ராசேந்திரன் பிழையின்றி தமிழில் எழுதுவது குறித்து கருத்துரை வழங்கினார்.
’’1956 அக் 27 அன்று தமிழ் ஆட்சிமொழி சட்டம் அமுலுக்கு வந்தது; இதற்க்கு காரணம் நமது தந்தை பெரியார். இதற்கு முன் திருச்சி குளித்தலையில் மாபெரும் மாநாடு நடந்தது. அதில்தான் தமிழ் ஆட்சிமொழி ஆகவேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. அது பெரியாரால் இயற்றப்பட்டது. அதன்பின் முதல்வராக இருந்த அய்யா காமராஜரிடம் இதை கொண்டு போனார் அய்யா பெரியார்.

'இதை அமுலுக்கு கொண்டு வருவது என் தாய்க்கு செய்யும் சேவையை போல கருதி செய்கிறேன்' என ஆர்வத்துடன் சட்டமாக்கினார் காமராஜர். 1957 இல் இச்சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றது.
ஒரு காலத்தில் ராஜ ராஜ சோழன்,ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்கள் தமிழ் இனத்தை ஆண்டார்கள். தமிழ் உணர்வை ஆளவில்லை. வேதனைதான்.
அவற்றில் சிலவற்றை காண்போம்.
தமிழில் பிழை வரும் முக்கிய எட்டு எழுத்துக்கள் 'ந, ன,ண, ர,ற,ல,ள,ழ '
இவை தான். அதன்பின் ஒற்றெழுத்து பிழைகள் அதாவது சந்திப்பிழை வருமிடம்.
" க்,ப்,ச்,த் " ஆகியவை.
பிழைகள் இல்லாமல் எப்படி எழுதலாம்?
' ற ' முன்னாடி ஒலித்தால் பின்னாடி ரெண்டு சுழி 'ன ' தான் போடணும்
உதாரணம்: 'வருகின்றான்' என்ற வார்த்தை ' ட' முன்னாடி 'ண' கர ஓசை ஒலித்தால் மூணு சுழி 'ண' தான் போடவேண்டும்
உதாரணம்: 'வேண்டும்', 'கண்டும்',
'த' முன்னால் 'ந' கர ஓசை ஒலித்தால் நாம் 'ந' தான் போடவேண்டும்
உதாரணம்: 'அணிந்தான்' 'அந்தணன்'
இதெல்லாம் சின்ன எடுத்துக்காட்டுகள் தான்.
ஒருமுறை நான் நமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் ரசியா கிரெம்ளின் மாளிகை போயிருந்தேன். அங்கு மேலே அவர்கள் தாய்மொழியில் எழுதி இருந்தனர். அடுத்து சீன மொழியில் எழுதப்பட்டு இருந்தது. எங்கள் அண்டை நாடு என்பதாலும் சீனர்கள் இங்கு நிறைய இருப்பதாலும் எழுதினோம் என்றனர்.
அதற்கு அடுத்து உலகை தொடர்பு கொள்ள என சொல்லி ஆங்கிலத்தில் எழுதி இருந்தனர். நான்காவது மொழியை கண்டு நான் கண் கலங்கிவிட்டேன்.
உலகில் ஆறு மொழிகள் தான் தொன்மையானது . 'கிரேக்கம், லத்தின், எபிரேயம், சீனா, தமிழ், சமஸ்கிரதம் ' என்ற ஆறு மொழிகள் இதில் நான்கு வழக்கில் இல்லை தொன்மையான இலக்கிய, வரலாற்று வளம் மிக்க மொழியில் எழுத எண்ணினோம் .
அதில் எங்களுக்கு உலகின் முக்கிய 642 மொழிகளில் சரியான மொழியாக 'தமிழ்' தான்தென்பட்டது. அதற்கு சிறப்பு செய்யவே தமிழில் 'கிரெம்ளின் மாளிகை' என எழுதினோம் என்றார்.
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.
சிந்தியுங்கள்........தமிழர்களே......"
-என்றபடியே தன் உரையை முடித்தார். (நீண்ட உரையின் முக்கிய பகுதிகளே இவை" )
அடுத்து மதுரை மண்டல உதவி தலைவர் உயர்திரு பசும்பொன் பேச வந்தார். அவர் தமிழ் மொழி குறித்து முக்கியஅரசாணைகளை பட்டியலிட்டார்.
'நேற்று குசராத் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது 'அரசு வெளியிடும் அறிக்கைகள் தாய் மொழியில் தான் இருக்கவேண்டும் ' என்று, மேலும் 'இந்தி மொழி தேசிய மொழி அல்ல' என்றும் தீர்ப்பிட்டனர். இது நாடு முழுதும் பொருந்தும். இந்த செய்தியோடு நாம் கருத்துக்களுக்கு செல்வோம்.
'ஒரு சர்வாதிகாரியை போல அதிகாரம் எனக்கு இருந்தால் எல்லா தாய் மொழியையும் இந்திய பயிற்று மொழி ஆக்கி விடுவேன் ' என்றார் மகாத்மா காந்தி.
அந்தளவுக்கு தாய்மொழி அவசியத்தை உணர்ந்தவர். பாரதி நினைவு நாளிற்கு எழுதிய கடிதம் தமிழிலேயே எழுதி 'மோ .க .காந்தி' என தலைபெழுத்து முதற்கொண்டு தமிழிலேயே எழுதி கையெழுத்து இட்டு இருந்தார். அந்தளவுக்கு மொழி தூய்மைக்கு முக்கியத்துவம் தந்தவர் காந்தி.

இந்திய, தென்னிந்திய, சிங்களம் முதற்கொண்ட மொழிகளின் நெடுங்கணக்கு தமிழில் இருந்தே தொடங்குகிறது என்றும் குறிப்பிட்டார். ஆனால் நாம் நம் தமிழை மறந்துவிட்டோம் தமிழ் வளர்ச்சி என்பது ஊர் கூடி தேர் இழுக்கும் செயல்' அதற்கு நாம் போட்ட அரசாணைகளை கடைபிடிப்பதே முதற்கட்டமாய் இருக்கும் 21.6.1978 அரசாணை தமிழில் எழுத வேண்டும் என போடப்பட்டுள்ளது.
1998 இல் போடப்பட்ட அரசாணை தலைப்பெழுத்துக்கள் தமிழில் இடவேண்டும் என உள்ளது. எண்: 371 30.10.86 ஆணை படி கடித போக்குவரத்து தமிழில் தான் இருக்கவேண்டும் என்றும் 13.2.1964 அரசாணை எண் 225 படி பொதுமக்களுக்கு அரசு அறிவிப்புகள் தமிழில் இருக்கவேண்டும் என சொல்கிறது.
19.10.1978 அய்யா பெரியார் நூற்றாண்டை ஒட்டி போடப்பட்ட அரசாணை எண் 1875 படி எழுத்து சீர்திருத்தம் முறையில் எழுத வேண்டும்.
இவை ஓரிரு உதாரணங்கள்தான் இந்த அரசாணைகள் மீறப்பட்டால் ஆட்சிமொழி திட்டத்தின் படி எண் 24 06.01.1982 இல் போடப்பட்ட ஆணை படி துறை ரீதியாக இவர்கள் மேல் அதாவது மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்' . ஆக தமிழ் மொழியில் பேசினால் குறை என்று தாழ்வு மனப்பான்மையை ஒழிக்க வேண்டும் ஆங்கிலம் என்பது மொழி. அது அறிவல்ல அங்கு இங்கிலாந்தில் படிப்பறிவற்றவர் கூட ஆங்கிலத்தில் தான் பேசுகிறார் . அதனால் அவர் அறிவாளி என்று அர்த்தம் ஆகாது எனவே நாம் தாய் மொழியில் பேசி பழகி நம் மொழியை வளர்க்க வேண்டும் மொழி வளர்ச்சியில்
1.புத்தாக்கம் இருக்க வேண்டும்
2.தளப்படுத்த வேண்டும்
3.எழுத்து சீர்திருத்தம் வேண்டும்
மூன்றும் இருந்தால் மொழியை வளர்க்கலாம்
மொழியை வளர்க்க நாம் இனி தமிழிலிலேயே பேசுவோம், தமிழிலிலேயே எழுதுவோம் தமிழ் வளர்ப்போம்" என்றார் உணர்ச்சியோடு.
- சே. த. இளங்கோவன், சேலம்