பிரம்மா இங்கு சிவபெருமானை வழிபட்டதால், பிரம்மபுரீஸ்வரருக்கு சன்னதி உள்ளது. இதுவும் முக்கிய தெய்வம், இதனாலேயே இக்கோவில் அதன் பெயரைப் பெற்றது.
இன்றைய பேச்சு வழக்கில் சட்டநாதர் கோவில் என்று பொதுவாகக் குறிப்பிடப் பெறுகிறது. மகாபலியை மகாவிஷ்ணு ஜெயித்த போது, அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்பதால், சிவன் விஷ்ணுவின் தோலை அணிந்து பிரம்மபுரத்தில் குடியேறினார். மகாவிஷ்ணு இனி இல்லை என்று எண்ணி, தன் தலையில் பூ அணிவதை நிறுத்தினாள் மகாலட்சுமி. இன்றும் ஒரு வழக்கப்படி, இந்தக் கோவிலுக்குச் செல்லும் பெண்கள் பூக்களை அணியக்கூடாது, ஆண்கள் சட்டை அணியக்கூடாது.
இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமனது பிரம்ம தீர்த்தம் ஆகும். நான்கு புறங்களிலும் நான்கு பெரிய கோபுரங்கள் சூழ பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது இக்கோவில்.
18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோவில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது, இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டை நாதரைத் தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சார்த்தி, வடை மாலை அணிவித்துப் பாசிப் பருப்புப் பாயசம் நைவேத்தியம் செய்யப் பெறுகிறது.
உரோமச முனிவர் கயிலை சென்று சிவனை நோக்கி தவம் செய்து “இறைவா! பக்தர்களின் குறை தீர்க்க தென்திசையில் தேவியுடன் எழுந்தருளி கயிலை தரிசனம் தரவேண்டும்” என வேண்டினார். ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. இதில் ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக் கொண்டார். வாயுவால் மலையை அசைக்கக் கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளின்படி ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க, வாயுவின் வேகத்தினால் ஒரு சிறு பகுதி பெயர்ந்தது. இறைவன் அருளால் அந்தச் சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்குக் கொண்டு வந்து சேர்ந்தன.
காலவித்து என்னும் மன்னனுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. கயிலை சென்று இறைவனை வணங்கினால்தான் புத்திர பாக்கியம் கிடைக்கும் எனப் பெரியவர்கள் கூறினர். அந்த மன்னன் சின்னக் கயிலையான சீர்காழிக்கு வந்து இறைவனை வணங்கிக் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றான்.
இக்கோவில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக் கோவிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜைகள் நடக்கிறது. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காகச் சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்கச் செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தலத்து இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. நடு அடுக்கில் உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரைத் “தோணியப்பர்” என அழைக்கின்றனர். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் ‘தோணிமலை’ என்கின்றனர்.
இந்தப் பேரண்டத்தைச் சுற்றி வளைந்து கிடக்கும் பெருங்கடல் ஊழிக்காலத் தில் பொங்கி எழுந்து அண்டத்தையே அழித்தபோது, உமாமகேசுவர் பிரணவத்தைத் தோணியாகக் கொண்டு கடலில் மிதந்து, இத்தலத்துக்கு வந்து தங்கித் திரும்பவும் அண்டத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது நம்பிக்கை. இரணியனது உயிர் குடித்த நரசிங்கம் அகங்கரித்துத் திரிந்தபோது அதனை அடக்கி, அதன் எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் தரித்த வடுக நாதரே சட்டைநாதர் என்று தலவரலாறு கூறும். இது சிவனது பைரவ மூர்த்தங்களில் ஒன்று. இவரையே ஆபத்துத்தாரணர் என்று மக்கள் வணங்குகின்றனர். என்று தலபுராணம் கூறுகிறது. இதே சட்டைநாதர் முத்துச் சட்டைநாதர் என்ற பெயரோடும் கோவிலின் வலம்புரி மண்டபத்தில் யோக ஸ்தானத்தில் அஷ்ட பைரவர் உருவிலும் காட்சி கொடுக்கிறார்.
புராணத்தின் படி, பிரளயத்தின் போது, சிவன் பார்வதியுடன் சேர்ந்து 64 கலைகளை, அவற்றைக் காப்பாற்ற ஒரு தெப்பத்தில் (தோனி) எடுத்துச் சென்றார். எனவே இக்கோவிலில் உள்ள அவரது பெயர்களில் ஒன்று தோணியப்பர். மூன்றாவது புராணத்தில், சிவன் மூன்று உலகங்கள் மீது தனது சொந்த ஆதிக்கத்தைக் காட்டி விஷ்ணுவின் ஆணவத்தைத் தணித்ததாகக் கூறப் பெறுகிறது, மேலும் சிவன் இங்கு சட்டநாதர் என்று வணங்கப் பெறுகிறார். சட்டநாதருக்கு ஒரு மாற்றுப் புராணம் உள்ளது.
பிரம்மபுரீஸ்வரர் சன்னதி தரைமட்டத்தில் இருக்கும் போது, சட்டநாதர் மற்றும் தோணியப்பர் சன்னதிகளைக் கோயிலில் உள்ள பல்வேறு படிக்கட்டுகளில் ஏறிச் சென்று காணலாம். (தலைஞாயிறு குற்றம் பொருந்த நாதர் கோவிலில் மூன்று நிலைகளில் கட்டப் பெற்ற சட்டநாதர் சன்னதியும் உள்ளது.)
வாயுவை வெல்வதற்காக ஆதிசேஷன் தன் பேட்டைகளை விரித்து கைலாசத்தை மூடினான். வாயுவால் ஒரு கல்லைக்கூட அசைக்க முடியாததால், தேவர்கள் ஆதிசேஷனிடம் அவனது கவசம் ஒன்றைத் தூக்கும்படி வேண்டினார்கள். அப்படிச் செய்தபோது, வாயு இங்கு வந்த கைலாசத்தின் ஒரு பகுதியை ஒரு சிறிய மலையாக உடைத்து, அதன் மீது கோவில் கட்டியதாக ஒரு செய்தி உள்ளது.
இந்தக் கோயில் ஒரு மாடக் கோவில் ஆகும். கோயில் மூன்று தளங்களைக் கொண்டதாக இருக்கிறது. பெரிய பகுதியில் இறைவன் தோணியப்பர், சட்டைநாதர் எல்லாம் உள்ளனர். வட பக்கத்தில் திருநிலை நாயகி கோயில் உள்ளது. அக்கோவிலின் முன் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தக் கரையிலேயேதான் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டிருக்கிறார். இரண்டு கோவில்களுக்கும் இடையில் மேற்குக் கோடியில் ஞானசம்பந்தருக்குத் தனித்ததொரு கோவில் உள்ளது.
கோவிலில் நுழைந்து ஆஸ்தான மண்டபத்தைக் கடந்தால் கருவறையில் லிங்க உருவில் பிரமபுரி ஈசுவரரை காண இயலும். அவருக்கு வலப்பக்கத்தில் மகா மண்டபத்தில் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக இருக்கின்றார். இந்த உற்சவர் சின்னஞ்சிறு குழந்தை வடிவில், பால்வடியும் முகத்தோடு இருப்பார். இவர் கையிலே வழக்கமாக இருக்கும் பொற்றாளம் இராது. இடது கையில் சிறு கிண்ணத்தோடு இருப்பார். வலது கையோ தோடுடைய செவியனாம் தோணி புரத்தானைச் சுட்டிக் காட்டும் வகையில் இருக்கும்.
இந்த மாடக் கோவிலின் மேற் பிராகாரத்தில் விமானம் வடிவில் உள்ள கட்டு மலைமீது எளிதாக ஏறலாம். அங்கே அந்த மலை மீது குருமூர்த்தமான தோணியப்பர் பெரிய நாயகி உடன் காட்சி அளிக்கிறார். அவருக்கும் மேல் தளத்திலே, மலை உச்சியிலே தென் திசை நோக்கியவராயச் சட்டைநாதர் நிற்கிறார். தோணியப்பரும் சட்டைநாதரும் சுதையாலான திருவுருவங்களே.
இங்குள்ள திருஞானசம்பந்தரின் கோவிலில் செய்யப் பெறும் அர்ச்சனையானது முருகப்பெருமானுக்கு உரிய அஷ்டோத்தரத்தைச் சொல்லிச் செய்யப் பெறுகிறது. காரணம் முருகனது அவதார மூர்த்தமே ஞானசம்பந்தர் என்று கருத்து உள்ளதே காரணம்.
இக்கோவிலில் நாற்பத்து ஏழு கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழ மன்னர்களது கல்வெட்டுகளோடு வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டுகளும், கிருஷ்ணதேவராயரது கல்வெட்டுகளும் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளிலிருந்து பல பழக்க வழக்கங்களும், நில அளவை முறைகளும், தலம் மூர்த்தி இவைகளின் அமைப்புகளும் விளக்குவதாக உள்ளன. “இராஜராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேசம் திருக்கழுமலம்” என்ற நீண்ட பெயரில் இத்தலம் குறிப்பிடப் பெற்றிருக்கும். வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் முதலிய சோழ மன்னர்கள் ஏற்படுத்தியுள்ள நிபந்தங்கள் கணக்கில் பல இவன்றிம்மூலம் அறியவருகிறது.
இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். எனவேதான் காசியில் பாதி காழி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்புப் பூஜை உண்டு.
சோழவள நாட்டில் சீகாழிபதியில்சிவபாத இருதயர் என்னும்வேதியர் தம்பதிகளுக்கு ஆளுடைய பிள்ளையார் என்று (தெய்வீக) குழந்தை யாக பிறந்து சீரும் சிறப்போடும் வளர்ந்து வரும் நாளில் தந்தையார் நீராடும் பொருட்டு சீகாழி திருக்கோயிலுள் உள்ள திருக்குளத்திற்கு அடைந்தார் குளக்கரையில் பிள்ளையாரை அமரச் செய்து சிவபாத இருதயர் நீருள் மூழ்கி குளித்துக் கொண்டிருந்தா். சிறிது நேரமாக தந்தையாரைக காணாமையால் முற்பிறப்பின் நினைவு மூளப்பெற்று திருக்கோயில் கோபுரத்தை பார்த்து ” அம்மே, அப்பா ” என்று அழைத்து அழுதார் பிள்ளையார்.
அந்நிலையில் அம்மையப்பராக எழுந்தருளிய சிவபொருமான் திருக்குள்த்தின் கரையை அடைந்து “”அழுகின்ற பிள்ளைக்கு முலைப்பாலைப்பொன் கிண்ணத்தில் ஊட்டுக ” என அம்மையிடம் பணித்தருளனார். அம்மையும் அவ்வாறே திருமுலைப்பாலை பொற்கிண்ணத்தல் கறந்துருளிசிவஞானமாகிய அமிழ்தத்தை குழைத்து பிள்ளையார் கையில் கொடுத்து அவரது அழுகையை தீர்த்து பால் அடிசிலை ஊட்டியருளினார்.
இவ்வாறு பால்மணம் மாறா இளம்பருவத்திலேயே பிள்ளையார் அம்மையப்பரால் ஆடுகொள்ளப் பெற்றமையால் ஆளுடைய பிள்ளையார் எனவும் எவரும் பெறற்கரிய சிவஞானம் பெற்றமையால் திருஞான சம்பந்தர் ” எனவும்போற்றப் பெறுவாராயினார்,
இறைவன்அருளால் ஞானம்உண்ட ஆளுடைய பிள்ளையாரை சேக்கிழார் பெருமானர்
” சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு ஞானம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் ” என்கிறார் தன் பெரியபுராண சம்பந்தர் புராணத்தல்
தவ ஸ்தன்யம் மன்யே த⁴ரணித⁴ர கன்யே ஹ்ருத³யத:
பய: பாரா வார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
த³யாவத்யா த³த்தம் த்³ரவிட ஶிஶு ராஸ்வாத்³ய ஸததம்
கவீநாம் ப்ரௌடா⁴நா மஜநி கமநீய: கவயிதா
என்பது பிரபலமான சௌந்தர்யலஹரி ஸ்லோகம். இது தமிழில்,
அன்னைநின் குயங்கள் பயந்திடு மமுதை
அகத்தெழு ஞானவா னந்தந்
துன்னிரு நதியாந் துதிகலை வாணி
தோற்றமாய்ச் சொல்லுவது அல்லால்
பின்னையொன் றெனுமோ, பிராட்டிநின் பீரம்
பேணிய பைந்தமிழ்ப் பிள்ளை
பன்னுறு பனுவற் பாவலர் மணியாய்
மனங்கவர் பாவலோ னெனில.
என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
பர்வதராஜ குமாரியே, உனது திருமுலைப்பாலானது வித்தியாமய பாற்கடலாய் பெருகுகிறது என்று நினைக்கின்றேன். ஏதனாலெனில், கிருபை மிக்கவளான உன்னால் கொடுக்கப் பெற்ற திருமுலைப் பாலைப் பருகி தமிழ்க் குழந்தையான ஞானசம்பந்தப் பிள்ளை புலமை மிகுந்த இசைத்தமிழ்ப் புலவர்களில் தலைமகனாக ஆகி விட்டார்!
பகவத்பாத சங்கரரால் அருளப்பெற்ற இச்சுலோகத்தில் அவர் சீர்காழியில் ஞானசம்பந்தருக்கு மூன்றாம் வயதில் அம்மையும் அப்பரும் வந்து ஞானப்பாலூட்டிய அற்புதத்தை வியந்து பாராட்டுகிறார். தம் அடியவர்கள் பொருட்டு உருவம் தாங்கி வரும் அம்மையப்பரின் திருவுருவம் எம்போன்றோரது என்பு,தசை,குருதி முதலியவற்றால் உருவானதன்று. உடனே தோன்றி மறைந்து விடத்தக்க திவ்யசரீரம் என்பர். இவ்வாறு அருள் வடிவம் தாங்கி எழுந்தருளும் அம்பிகையின் ஸ்தனபாரங்களுக்கு முறையே பரஞானம்(கடவுள் அறிவு), அபரஞானம் (உலகியலறிவு) என்று பெயர் கொடுப்பர் சைவசித்தாந்திகள். இத்தகைய அறிவுகள் உயிர்களுக்கு ஞானஸ்வரூபியான தேவியின் திருவருளாலேயே விளக்கம் பெறுவனவாகும்.
தேவியின் திருவுருவம் ஞானசொரூபம் என்பது ‘சக்தி தன் வடிவே தென்னிற் றடையிலா ஞானமாகும்’ என்ற சிவஞானசித்தியார் வாக்கால் அறியலாம். காளிதாசனுக்கு தாம்பூலமுண்பித்தும் முத்துத்தாண்டவருக்கு பாலடிசில் தந்தும் கல்வி கலை ஞானம் தோற்றுவித்த உலகன்னை சத்புத்திராவதாரமாகிய ஞானசம்பந்த மூர்த்திக்கு சிவாக்ஞைப்படி பொன்வள்ளத்துப் பாலமுதம் உண்பித்தலின் மூலமாக சிவஞான விளக்கமும் அருள்வாக்குச் சித்தியும் நல்கினார்.
முன்பொரு காலத்தில் ஆதிபரமாச்சார்யரான தட்சணாமூர்த்தியின் சந்நதியில் ஸநத்குமாரர் என்ற பெயருடன் விளங்கி ஞானோபதேசம் பெற்ற ஸ்கந்தமூர்த்தியே தென்னாட்டில் சைவசமயத்தினதும், செந்தமிழினதும் வீழ்ச்சி கண்டு அருந்தவச்செல்வரான சீர்காழிச் சிவபாதவிருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் தம் அம்சமாக திருவவதாரம் செய்தார் என்பது சைவமரபு. ஸ்கந்தமூர்த்தியே ஸநத்குமாரர் என்பது,
‘பகவான் ஸநத் குமாரஸ் தம் ஸ்கந்த இத்யா சக்ஷதே!
தம் ஸ்கந்த இத்யா சக்ஷதே!’
என்ற சாந்தோக்கிய உபநிஷத வாக்கியத்தாலும் அறியப்பெறுவதாக ஆன்றோர் கூறுவர்.
திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரவர்கள் தமது ‘சித்த மார்க்கம்’ என்ற நூலில் சித்தர் கூட்டம் என்ற பகுதியில் ‘ஸ்ரீ கைலாய கிரியில் மௌனகுருவாக ஒருவர் குருமார்களுக்குத் தலைவராக விளங்குகிறார் எனவும், அவரெதிரில் நான்கு பிரதான சிஷ்யர்கள் இருக்கிறார்கள் எனவும், அவர்களைச் சேர்ந்த குருமார் கூட்டமொன்றுள்ளதெனவும், அவசியம் நேரும் போது அவர்களிலொருவர் உலகு நோக்கி வந்து அறம் வளர்த்துச் செல்வரெனவும்…’ எழுதியுள்ளார். சைவாகமப்படி பல்வேறு கிரியைகளிலும், யாகங்களிலும் சப்தகுருமார் பூஜிக்கப்படுகிறார்கள்.
அவர்களுள் ஸ்கந்தர் என்ற குமரனும் ஒருவர். இவ்வாறு ஸநத்குமார- ஸ்கந்த அவதாரமாக ஞானசம்பந்தரைக் கொண்டால், அவர் பொருட்டு அம்மையும் அப்பனும் எழுந்தருளி ஞானப்பால் தந்தருளியமை வியப்பன்று. அவ்வாறன்றி, ஞானசம்பந்தரை பூர்வ ஜன்மங்களில் சரியை, கிரியை, யோக நிலைகளை முடித்து ஞானநிலை அடையும் தகுதியோடு பிறந்த பக்குவான்மா எனக்கொள்ளினும், அகிலாண்ட நாயகி பாலமுதளித்து ஞானோதயம் பெறச் செய்தல் நிகழக்கூடிய அற்புதமே ஆகும். இவ்வாறு தேவியருள் பெற்றவர்கள் அநேகராவர்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஞானக்களஞ்சியமாயும், அதிமதுரவாக்விலாசம் உடையவராயும் அன்னை காளியின் அருளாலேயே விளங்கினார் என்பது அவர் வரலாற்றால் அறியலாம்.
தகுதி மிக்க பக்குவ ஆன்மாக்களுக்கு இறைவனும், இறைவியும் வெளிப்படையாக வந்து அருள்பாலித்தலினால் ஞானம் உண்டாகும் என்று திருமூலர் பெருமானும் கூறுகின்றார்.
‘சத்தியினோடு சயம்புவும் நேர்படில்
வித்தது வின்றியே எல்லாம் விளைந்தன’
‘நின்றனன் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய உள்ளொளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே’
என்பதனாலே, அம்மையும் அப்பரும் எதிரில் வந்த மாத்திரத்தில் ஜீவான்மாவை மறைத்திருந்த திரோதானசக்தியான மாயை நீங்கி விட சர்வக்ஞானமும் ஆன்மாவிடத்தில் பிரகாசிக்குமாம். இங்கு ஞானசம்பந்தருக்குப் பாலூட்டல் என்பது குரு மந்திரோபதேசம் செய்வது போன்ற வெளித்தோற்றமான ஆத்மசுத்தி கிரியை என்பர். இவ்வாறு பரசிவபெருமானுடைய அருள்நோக்கின் வண்ணம் அம்பாளின் அருள் கடாட்சமும், திருக்கண் நோக்கும், மெய் தீண்டலும், திவ்விய பிரஸாத உணவும், ஞானசம்பந்தப் பெருமானின் தடையற்ற ஞானவிளக்கத்துக்குக் காரணம் என்பர். இதனால், சேக்கிழார் பெரிய புராணத்தில்,
‘சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாக்கும் பாங்கினிலோங் கியஞானம்
ஊவமையிலாக் கலைஞான முணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தா ரந்நிலையில்’
என்று குறிப்பிடும் வகையில், மாஞானப் பெருங்கடலாக விளங்கியதோடு, தேனினுமினிய சித்தார வித்தாரக் கவி பாடும் செந்தமிழ் முதபெரும் புலவனாயும் ஞானசம்பந்தரை ஆக்கி விட்டது அம்மையின் அருட்பிரசாதமே ஆகும். கட்டுரை ஆரம்பத்திலே சொன்ன ஸ்லோகத்தின் நிறைவு ‘கமநீய: கவயிதா’ என்னும் வாக்காகும். சுகல வித்யா ஸ்வரூபிணியான அம்மையின் அருளால் வாக்விலாசமுண்டாகும். வாக்கில் இனிமை பிறக்கும்.
அஞ்சொன் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொன் மடமொழிச் சீரூடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித் தன் சேவடி போற்றுவார்க்
கின் சொல் அளிக்கும் இறைவி யென்றாரே
என்ற (திரு)மந்திரப்பாடலும் இதற்கு ஆதாரமாகும்.
இது சம்பந்தரின் அவதார ஸ்தலம் என்பதால், சுந்தரர் இதை புனித பூமியாகக் கருதி, கோவிலுக்குள் நுழையாமல், வெளியில் இருந்து பாடி, திருக்கோலக்காவுக்குச் சென்றார். கணநாத நாயனார் சீர்காழியில் வாழ்ந்தவர்.
சீர்காழி அஷ்ட பைரவ ஸ்தலம் என்று அழைக்கப் பெறுகிறது.
புராணங்களின்படி, பிரம்மதேவனுக்கு தான் என்னும் அகந்தை (கர்வம்) ஏற்பட்டதாம். அதனால், மஹாபலி சக்கரவர்த்தியை நரகத்திற்கு அனுப்பிவிட்டாராம். இதன் காரணமாக தகாத விளைவுகள் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் விதமாக சிவபெருமான் வேடன் உருவத்தில் வந்து பிரம்மதேவனின் அகந்தையை அழித்து, தனது தவறை உணர்ந்துகொள்ளச் செய்தாராம். இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தது இத்தலத்தில்தான் என்பதால், இத்தலத்திற்கு, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் என்ற பெயர் ஏற்பட்டது. பிரமபுரம் (பிரமாபுரமேவிய பெம்மான்).
இறைவன் மூங்கில் வடிவமாகத் தோன்றியதால் வேணுபுரம் என்று அழைக்கப்படுகிறது.
சூரனுக்குப் பயந்த தேவர்களுக்குப் புகலிடமாக விளங்கிய தலமாதலின் – புகலி.
குருவான வியாழன் வழிபட்டு, குருத்துவம் பெற்றமையால் – வெங்குரு.
ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீர்காழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் “தோணிபுரம்” என்றும் போற்றப்படுகிறது.
பூமியைப் பிளந்து சென்ற இரணியாக்கனைக் கொன்ற வராக மூர்த்தி வழிபட்டதால் – பூந்தராய்.
தலைக்கூறாகிய ராகு பூசித்ததால் – சிரபுரம்.
புறா வடிவில் வந்த அக்கினியால் சோழ மன்னன் நற்கதியடைந்தமையால் – புறவம்.
சண்பைப் புல்லால் மாய்ந்த தம்குலத்தோரால் வந்தபழி தன்னைப் பற்றாதிருக்க, கண்ணபிரான் (திருமால்) வழிபட்டதால் – சண்பை.
தில்லைப் பெருமானுடன் வாதாடிய குற்றம்போக, காளி இங்கு வந்து வழிபட்டதால் – ஸ்ரீகாளி (சீகாழி),
மச்சகந்தியைக் கூடிய கொச்சையாம் பழிச்சொல் நீங்கப் பராசரர் பூசித்ததால் – கொச்சை வயம்.
உரோமச முனிவர் இத்தலம் அடைந்து பூசித்ததால் ஞானோபதேசம் பெற்று (சிவபோகம் நுகரச்செய்யும்) உலகில் உயிர்களது மலங்கழுவும் வரம் பெற்றதனால் – கழுமல வள நகர் என பெயர் பெற்றது.
| கோவில் ஊர் நடுவே நான்கு கோபுர வாயில்களுடன் அழகுற விளங்குகிறது. கணநாத நாயனார் தொண்டுசெய்து வாழ்ந்த தலம். இத்திருக்கோவிலின் இறைவன் – பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர். இறைவி – பெரியநாயகி, திருநிலைநாயகி. தலமரம் – பாரிசாதம். தீர்த்தம் – பிரம தீர்த்தம் முதலாகவுள்ள 22 தீர்த்தங்கள். பிரமதீர்த்தமே பிறவற்றினும் மேலானது. இக்கரையில்தான் ஞானசம்பந்தர், ஞானப்பாலையுண்டார். ‘திருமுலைப்பால் உற்சவம்’ இன்றும் சித்திரைப் பெருவிழாவில் இரண்டாம் நாள் விழாவாக நடைபெறுகின்றது. ‘திருமுலைப்பால் உண்டார் மறுமுலைப்பால் உண்ணார்’ என்பது இப்பகுதியில் சொல்லப்படும் மொழியாகும். இறைவன் திருமேனிகளுள் அடிப்பாகத்திலுள்ள பிரமபுரீஸ்வரர் பிரமன் பூசித்தது –இலிங்கவடிவம். இடைப்பகுதியிலுள்ள தோணியப்பர் (ஞானப்பால் தந்தவர்) குரு வடிவம். சட்டை நாதர் சங்கமவடிவம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. மாவலியிடம் சென்று மண்கேட்டுப் பெற்ற மகாவிஷ்ணு, செருக்குற்றுத்திரிய, வடுகநாதர் சென்று தம் திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பிலடித்து வீழ்த்தினார். இலக்குமி மாங்கல்ய பிச்சை கேட்க அவ்வாறே அருள்செய்ய மகாவிஷ்ணு உயிர்பெற்றெழுந்து வணங்கினார். தம் தோலையும் எலும்பையும் அணிந்து கொள்ளமாறு அவர் வேண்ட, இறைவனும் எலும்பை கதையாகக்கொண்டு, தோலைச் சட்டையாகப் போர்த்து அருள் செய்தார். இவ்வடிவமே சட்டைநாதர் வடிவமாகும். |

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu
