சுவாமி : ஆபத்சகாயேஸ்வரர், லிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர்.
அம்பாள் : பெரியநாயகி, பிருகந்நாயகி, நாயகியம்மை.
மூர்த்தி : நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, வள்ளி – தெய்வயானையுடன் முருகர், சந்திரசேகரர், நடராஜர், சிவகாமி, ஆடிப்பூர அம்மன்.
தீர்த்தம்: வருண தீர்த்தம், அக்னி தீர்த்தம் (இரண்டும் ஒன்றே).
தல விருட்சம் : எலுமிச்சை.
வழிபட்டோர் : வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர்கள்.
ஆகமம்/பூஜை:
காமீகம்
புராணப் பெயர்: திருஅன்னியூர்
ஊர்: பொன்னூர்
கோவிலின் சிறப்புகள்:
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 22 ஆவது ஆலயம். சங்க காலத்தில் அன்னி, அன்னி மிஞிலி ஆகிய பெருமக்கள் வாழ்ந்து வந்த ஊர் இது. இவர்களது பெயரால் அமைந்த ஊர் இது. .
மன்மதனை எரித்த சிவபெருமானை வேண்டி அவரது மனைவி ரதிதேவி தன் கணவன் உயிருடன் வர வேண்டி தவம் இருந்த தலம் . தவத்திற்கு மெச்சி மன்மதனை மன்னித்து உயிர்கொடுக்க இருவரும் தம்பதிகளாய் வழிபாடு செய்த தலம். இங்கு இரண்டு தக்ஷிணாமூர்த்தி சன்னதிகள் அருகருகே அமைந்துள்ளன.
இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவரது மற்றொரு பெயர் அக்னிபுரீஸ்வரர். பங்குனி மாதத்தில் 5 நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம்.
தலச்சிறப்பு :
இத்தலம் கிழக்கு முகம் கொண்ட சிறிய கோவிலாக அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே உள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம். இந்த தீர்த்தத்தை காம சரஸ், சூரிய புஷ்கரணி, வருண தீர்த்தம் என்ற பெயர்களிலும் அழைக்கிறார்கள்.
இத்தலத்திற்குக் கோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய ஒரு தோரண வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலின் மேல் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. முகப்பு வாயிலுக்கு எதிரில் வருண தீர்த்தம் (அக்னி தீர்த்தம் என்றும் இதற்குப் பெயர் உண்டு) உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் ஒரு சிறிய விமானத்துடன் கூடிய நந்தி மண்டபம் உள்ளது. அடுத்து இறைவன் கருவறைக்குச் செல்லும் மற்றொரு நுழைவு வாயிலும் உள்ளது. இந்த இரண்டாவது நுழைவு வாயில் மேற்புரத்திலும் அழகிய சுதை வேலைப்பாடுகள் கொண்ட உருவங்கள் காணப்படுகின்றன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை முன் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் பிருகந்நாயகி சந்நிதி உள்ளது. அம்பாள் பிராகாரத்தில் அக்கினிக்குக் காட்சி தந்த ஆதிமூல லிங்கம் உள்ளது. கருவறை அர்த்த மண்டபத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார்.
கருவறையில் ஆபத்சகாயேஸ்வரர் லிங்க உருவில் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் ஆபத்சாகயேஸ்வரர் பெறும் ஆபத்துகளையும் நீக்க வல்லவர். இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இத்தல இறைவன் அக்னிபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி பூஜை செய்பவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஆண்டுதோறும் பங்குனி மாதம் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 5 நாட்கள் இத்தல இறைவன் மீது சூரிய ஒளி படும் நிகழ்ச்சி நடைபெறும். ஆகையால் இத்தலம் பாஸ்கர ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் சிவபெருமானை, ரதி வழிபட்ட வைபவமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. அம்பாள் பெரியநாயகிக்கு தனி சன்னதி உள்ளது. ஒரே மகாமண்டபத்தைக் கொண்டு சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும் அமையப் பெற்றுள்ளது.
இத்தலத்தில் அருகருகே இரண்டு தெட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கிறது. இதில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பெற்றுள்ளது. இவரது காலுக்குக் கீழே நந்தியும் உள்ளது. இவரிடம் வேண்டிக் கொண்டால் கல்வியில், சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. இத்தல இறைவனை வருணன், அரிச்சந்திரன் வழிபட்டுள்ளனர். பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் அருள்பாலிகின்றனர். தந்தையான சூரியனுக்கு அருகில் இருந்தாலும், இங்கு சனி, சுபசனீஸ்வரராகவே உள்ளார். எனவே, சனி தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள சனீஸ்வரனிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு ஆகும். ஆதிசங்கரருக்கு தனி சன்னதி உள்ளது. திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் உள்ளன. அதில் ஒன்று காவிரி வடகரைத் தலம், மற்றொன்று காவிரி தென்கரைத் தலம். காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர் இன்றைய நாளில் பொன்னூர் என்று அழைக்கப்பெறுகிறது.
தல வரலாறு : பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன், தேவர்களைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தினான். இதனால் தேவர்கள், தாரகனிடமிருந்து தங்களைக் காத்தருளும்படி சிவபெருமானிடம் வேண்டச் சென்றனர். ஆனால் அச்சமயம் சிவபெருமான் யோகத்தில் இருந்தார். தேவர்கள் மன்மதனின் உதவியால் சிவபெருமானின் யோகத்தைக் களைத்தனர். கோபம் கொண்ட சிவபெருமான், மன்மதனை எரித்து விட்டார். மனம் கலங்கிய மன்மதனின் மனைவி ரதிதேவி, சிவபெருமானிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள். சிவபெருமான் உரிய காலத்தில் மன்மதன் உயிர் பெற்று வருவான் என்று கூறினார். கணவன் விரைவில் உயிர் பெற்று வர வேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவபெருமானை எண்ணித் தவமிருந்து வழிபட்டாள் ரதிதேவி. மன்மதன் சிவபெருமான் அருளால் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனுக்கு மீண்டும் வாழ்வு அளித்தார். பிறகு, இத்தல இறைவனை மன்மதன் ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
மயனின் மகளைத்தான் சூரியன் மணந்து கொண்டான். தன் மகளை இழிவுபடுத்தியதால், மயன் சூரியனின் கையை வெட்டினான். கை வெட்டுண்ட சூரியனைப் பார்த்து அவனது மனைவி கதறினாள்; கண்ணீர் விட்டாள். தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் சென்று வேண்டினாள். இழந்த தன் கணவனின் கையை மீண்டும் பெறுவதற்கு வழி சொல்லுமாறு மன்றாடினாள்.
அவரோ, பூலோகத்தில் இருக்கும் திருஅன்னியூர் சென்று, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி அத்தலத்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் இழந்த கையை சூரியன் மீண்டும் பெறலாம் எனக் கூறினார். அதன்படி, சூரியனும், அவர் மனைவியும் திருஅன்னியூர் வந்தனர். ஆலயத்தின் எதிரே உள்ள தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட்டனர். சூரியன் தனது கையை மீண்டும் பெற்றார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரியன் ஆண்டுதோறும், பங்குனி மாதம் ஐந்து நாட்கள் தனது பொற்கதிர்களால் இறைவனை ஆராதித்து வருகிறார். காலை 6 மணி அளவில் இத்தலத்து இறைவனைச் சூரியன் வழிபடும் காட்சியைக் காண பக்தர்கள் கூடுவார்கள். இதனால் அந்த ஐந்து நாட்களும் காலை 4.30 மணிக்கே ஆலயம் திறக்கப்பெற்ற, இறைவனுக்கும் இறைவிக்கும் காலை நேர ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. பின் காலை ஆறு மணிக்கு சூரியன் இறைவனைத் தன் குளுமையான பொற்கதிர்களால் பூஜை செய்யும் காட்சி தொடங்குகிறது. இந்த அற்புதமான சூரிய பூஜையை, அந்நாட்களில் தினசரி ஏராளமான பக்தர்கள் தரிசித்து பரவசம் அடைவது இன்றும் கண்கூடாகக் காணும் காட்சியாகும்.
இந்திரனும், பிரம்மாவும் சிவபெருமானை நோக்கி பல தவங்கள் செய்தனர். யாகங்கள் செய்தனர். ஒரு முறை யாக குண்டத்தில் இருந்த உணவை, ருசியாக இருந்தது என்பதால் அக்னி பகவான் அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டார். இதனால் அக்னி பகவானை நோய் பற்றிக்கொண்டது. அவரது உடல் மெலிந்து போனது. அக்னி பகவானின் மனைவி சுவாகா தேவி, தேவ ர்களின் குருவான பிரகஸ்பதியிடம் சென்று, தன் கணவனின் நிலையை எடுத்துக்கூறினாள். பிரகஸ்பதி கூறியபடி திரு அன்னியூர் வந்தனர் இருவரும். தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், இறைவியையும் வழிபட்டனர். இறைவன் தலவிருட்சமான எலுமிச்சை மரத்தடியில் எழுந்தருளி அக்னி தேவனுக்கு அருள்புரிந்து, அவரது நோயை குணமாக்கினார். எலுமிச்சை மரத்தடியில் எழுந்தருளியதால் இறைவன் ‘விகு சாரண்யேசுவரர்’ எனப் பெயர் பெற்றார். இவர் ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் தனி மண்டபத்தில் கீழ்திசை நோக்கி அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
தலப் பெருமை:
இரட்டை தெட்சிணாமூர்த்தி:
இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இவருக்கு அக்னிபுரீஸ்வரர் என்றும் பெயர் உண்டு.
முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி பூஜை செய்பவர்கள் இங்கு சுவாமியிடம்
வேண்டிக்கொள்கிறார்கள். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. கார்த்திகை
மாதத்தில் சுவாமியை, ரதி வழிபட்ட வைபவமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. அம்பாள் பெரியநாயகிக்கு தனிச்
சன்னதி இருக்கிறது.
ஆடிப்பூரம், ஆவணி மூலம் நட்சத்திரத்தன்று திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாளுக்கு வளையல் கட்டிப் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அருகருகே இரண்டு தெட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கிறது. இதில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பெற்றுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது. இவரிடம் வேண்டிக் கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாகப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பவர்கள், இவ்விரு தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்கிறார்கள்.
பொதுத் தகவல்:
இத்தலத்தில் சுவாமியை வருணன், அரிச்சந்திரனும் வழிபட்டுள்ளனர். பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் இருக்கின்றனர். தந்தையான சூரியனுக்கு அருகில் இருந்தாலும், இங்கு சனி, சுபசனீஸ்வரராகவே இருக்கிறார். எனவே, சனி தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம். ஆதிசங்கரருக்கும் சன்னதி உள்ளது.
தேவாரம்:
மன்னி யூரிறை சென்னி யார்பிறை
அன்னி யூரமர் மன்னு சோதியே
வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர் கந்த மாமலர் சூடுங் கருத்தினர் சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர் அந்த ணாளர்கள் கண்டீர் அன்னியூரரே.
திருவிழா:
மகாசிவராத்திரி, வைகாசிவிசாகம், திருக்கார்த்திகை
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து காளி வழியாக மணல்மேடு செல்லும் வழியில் 11.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து காரிலோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம்.
தங்கும் வசதி:
மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 10.00 மற்றும் மாலை 5.00 – 7.00
கோவிலின் முகவரி:
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருஅன்னியூர் (பொன்னூர்), பாண்டூர் அஞ்சல், நீடூர் வழி, மயிலாடுதுறை மாவட்டம் 609203.
தொலைபேசி:
ரவிகுருக்கள்: 04364 -250758, 250755, 9994686973
|
https://www.youtube.com/watch?v=xcYveXiPHvA
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu